பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

அன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்?

வாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன? மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம்? இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி? அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனைத்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
சமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.

3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)

அன்பு நடுவருக்கு மீண்டும் வணக்கம்.

நடுவரே இன்றைய வீட்டுச்சூழல் எப்படி இருக்கிறது? பெரும்பாலும் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை என்று ஏகத்துக்கும் செல்லம் கொடுத்து ஏமாற்றம்னா என்னன்னே தெரியாமல் வளர்த்து விடுகிறார்கள். வீட்டுக்குள் கேட்டதெல்லாம் கிடைக்கும் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆனால் வெளியே அது நடக்குமா? அப்போ வெளியுலகை எதிர்கொள்ளும் பக்குவத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து தயாராக்குவது யார் பொறுப்பு? பெற்றோர் பொறுப்புதானே! அதில் தவறும் பெற்றோரைக் கொண்ட இளம்தலைமுறையினர்தான் சிறு ஏமாற்றம் என்றாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

இதில் சில பெற்றோர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் என் மகன்(ள்) "சொல் பொறுக்காத சுந்தரன்(ரி)" என்று. அட ஒரு சொல் ஒரு பேச்சு கேட்காமல் இந்த உலகில் வாழ்ந்து விட முடியுமா நடுவரே?! இப்போ வருவாங்க என் அருமை எதிரணியினர் சமூகம் சொல்வதால்தானே அவன் மனமுடைந்து போகிறான் அதனால் சமூகச்சூழல்தான் காரணம்னு சொல்லி கொடி பிடிப்பாங்க :). நம்பிடாதீங்க நடுவரே! உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமோ?! அப்போ அந்த சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை கொடுத்து வளர்க்காத பெற்றோர்தானே முதல் காரணம்.

இப்படி கேட்டதெல்லாம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை வளர்ந்து ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலை முடிவை நாடுவதோடு மட்டும் நில்லாமல் ஒரு படி மேலே போய் தான் கேட்டதை கொடுக்காதவரையும் கொல்லும் அல்லது துன்புறுத்தும் மனநிலைக்கும் ஆளாகிறார்கள்.

செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தோழமை உணர்வுடன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலில் வளர்க்கப்படும் குழந்தை எந்த சூழலிலும் தற்கொலை முடிவை நாட மாட்டார்கள். ஒட்டு மொத்த உலகமே எதிர்த்து நின்றால் கூட துணிவுடன் போராடுவார்கள். அந்த துணிவையும் மனவலிமையையும் ஊட்ட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. அது இல்லாத வீட்டுச்சூழல் உள்ள குழந்தைகள்தான் தற்கொலை முடிவை நாடுகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே எங்க போயிட்டீங்க? சீக்கிரம் வாங்கோ... இரண்டு அணியும் வெயிட்டிங்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே... சொல்லிட்டு போய் 2 நாளா எங்க போனன்னு கேட்டுடாதீங்க :) இப்பவும் உங்ககிட்ட வருவதாக சொல்லிட்டோம்னு தான் வந்துட்டேன்.

என் மகன் இப்படி வருவான், என் மகள் இப்படி வருவாள்னு அவங்களை கருவில் சுமக்கும் போதே ஆசையை நெஞ்சில் சுமக்கிறார்கள் பெற்றோர்கள். அவங்களை பொறுத்தவரை அவங்களுக்கு எதுல ஈடுபாடு அதிகமோ அந்த துறை... அல்லது எதுல ஃபுசர் நல்லா அமோகமா இருக்கும்னு அவங்களுக்கு தோன்றுதோ அந்த துறை தான் தன் பிள்ளைக்கு சரின்னு முடிவு பண்ணிடுவாங்க. அதுக்கு மார்க் அவசியம் ஆச்சே.... ஏன்னா இப்ப பாதிக்கு மேல இஞ்சினியரிங் அல்லது மெடிகல் தானே வாழ்க்கையா இருக்கு. மார்க் வேணும்னா? வாங்க வைக்கும் பள்ளியும், டியூஷனும் வேணுமே. இதெல்லாம் பெற்றோர் தானங்க முடிவெடுத்து சேர்க்கறாங்க?

ஒன்னுமே வேண்டாம் உதாரணம் ஒன்னு சொல்றேன் கேளுங்க... சில பள்ளிகளில் (மிகச்சில பள்ளிகள்... விரல் விட்டு எண்ணிடலாம்) LKG அட்மிஷன்க்கு இண்டெர்வியூ வைக்கிறாங்க :( சத்தியமா... நம்புங்க. டொனேஷன் 3 லட்சம். ஃபீஸ் அது பல ஆயிரம். இப்படி பட்ட பள்ளியில் பிள்லைகளை சேர்க்க பெற்றோர் கியூல நிக்கறாங்க. கேட்டா... “பேஸ்மண்ட் ஸ்ட்ராங்கா இருந்தா பின்னாளில் பில்டிங் பற்றிய பயம் இல்லையே”னு சொல்றாங்க. இது போல் பள்ளிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரை கொம்பாம்!!! அதில் பிள்ளை படிக்கிறது என்று சொல்வதில் பெற்றோருக்கு ஒரு பெருமை. இங்க பிரெச்சனை சமூகம் இல்லைங்க... சமூகத்தில் சாதாரணமா அதிகப்பணம் வாங்காத தரமான பள்ளிகள் பல உண்டு. ஆனால் இங்கே ஏன் கூட்டம் இவ்வளவு?? பெற்றோர் எதிர் பார்ப்பும், பந்தாவும் தாங்க காரணம். சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிச்ச எங்களால் இப்படி ஒரு பெரிய பள்ளியில் பிள்ளைகளுக்கு அட்மிஷன் வாங்கும் அளவுக்கு முன்னுக்கு வர முடிந்திருக்கிறதே... அந்த பள்ளி எந்த வகையில் தரம் குறைந்தது என எந்த பெற்றோரும் சிந்திப்பதில்லை. சரி விடுங்க.

இந்த ஓடி விளையாடி மகிழ்ச்சியா திரிய வேண்டிய வயசுலையே இப்படி 6 மணிக்கு கிலம்பி ஸ்கூல் பஸ்ஸில் தூங்கிகிட்டே போய் பல கிலோமீட்டர் தாண்டி இருக்கும் பள்ளியில் காலை உணவும், மதிய உணவும் சாப்பிட்டு, படித்து, தூங்கி, விளையாடி, மீண்டும் அசந்து போய் பல கிலோமீட்டர் பயணம் செய்து வீடு வந்து சேரும் பிள்ளைகளால்... மாலை முழுதும் எங்க விளையாட முடியும். பாரதியார் தப்பா பாடிட்டு போயிட்டார். இப்பலாம் பிள்ளைகள் ரிலேக்ஸ் பண்றது கூட சம்மர் கேம்ப்பில் தான்... வெய்யில் நேரம் பிள்ளைகள் நோய் படாமல் வீட்டில் பாதுகாப்பா இருக்கட்டும்னு லீவ் விட்டது போய் ஸ்கூலில் கத்துக்காத விஷயத்தை எல்லாம் கத்துக்க வைக்க தான் இப்ப லீவ். :(

தன் பிள்ளை மல்டி டேலண்டட் என்று சொல்வதில் சில பெற்றோருக்கு ஒரு ஆனந்தம்... இதுக்காக அதுகளை பாவம் தூங்க, சாப்பிட கூட மிஷின் மாதிரி தான் பழகுறாங்க. இதெல்லாம் சமூகம் மேல் உள்ள பிழை இல்லை நடுவரே... சமூகம் என்ற அமைப்பில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு... நமக்கு வேண்டியதும் இருக்கு, வேண்டாததும் இருக்கு... எதை நாம் தேர்வு செய்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது.

இப்படி சிறு வயதில் இருந்தே மிஷின் போல வளரும் பிள்ளைகள் மனதளவில் என்றுமே ஆரோக்கியமாக இருப்பதில்லை. அவர்கள் போட்டியான உலகில் போட்டி மனப்பான்மையோடு தான் வளர்க்கப்படுகிறார்கள் பெற்றோர்களால். கவனிங்க... பெற்றோறால் தான்... சமூகத்தால் அல்ல. 12வதுல இந்த பள்ளியில் படிச்சா மெடிகல் கண்டிப்பா என சேர்க்கும் பெற்றோர் தன் பிள்லை ஒரு மதிப்பெண் கம்மியா வாங்கினா மனசு படும் பாடு... சொல்ல முடியாது. அது அப்படியே பிள்ளையிடம் தான் பாயும். அந்த பிள்ளையால் வாங்க முடியுது உன்னால் எப்படி வாங்க முடியாமல் போச்சு?? உன் கூட தானே அவனும் படிக்கிறான்?? அவனுக்கு கிடைச்ச எது உனக்கு கிடக்காம போச்சு? உனக்கு என்ன குறை வெச்சேன்? கேட்டதெல்லாம் வாங்கி தந்தேன்... நல்லா படிச்சா என்ன குறைஞ்சு போச்சு?? இப்படி பிள்ளைக்கு செய்ததை கூட சொல்லி காட்டும் பெற்றோர் உலகில் அதிகம். இது சம்பாதிக்க துப்பில்ல, தண்டச்சோருன்னு வளர்ந்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளையை திட்டுற மாதிரி. மனசை ரொம்ப பாதிக்கும்.

ஒன்னும் இல்ல நடுவரே... தன் பிள்ளை மார்க் கம்மின்னாலும் தட்டி கொடுத்து பரவாயில்லை... உன்னால் முட்ஞ்சதை செய்திருக்க... என்ன படிக்க விரும்புறன்னு கேட்டு பாருங்க நடுவரே... அந்த பிள்ளை பெற்றவர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடும், மனமும் நொந்து போகாமல் அடுத்த முறை பெற்றோரை பெருமை படுத்த என்ன செய்யலாம்னு சிந்திக்கும், சாதிக்கும். அப்படி பட்ட பெற்றோர் இருந்தால் சமூகம் எப்படி தன்னை தாழ்த்தினாலும் தன் பெற்றோருக்காக வாழ்ந்து பெருமை தேடி தருவார்கள் பிள்ளைகள். சமூகத்தின் முன் தன் தலை குனியும் என்று எண்ணி பெற்றோர் கரித்து கொட்டினால்... சமூகத்தை விட வீட்டில் எப்படி அசிங்கப்பட நேரிடுமோ, திட்டு விழுமோ, அடி விழுமோ என்று அஞ்சி உயிரை விடும் பிள்ளைகள் அதிகமாக தான் செய்யும்.

நடுவரே... எல்லா இடத்திலும் எல்லாரும் சிறப்பா எல்லாம் செய்ய முடியாது. உங்களுக்கு நல்லா வருவது எனக்கு வராது, எனக்கு நல்லா வருவது உங்களுக்கு வராது. அப்படி தான் படிப்பும்... பள்ளியில் படிக்கும் 60 மாணவர்களும் மருத்துவம் சேர இயலாது... எல்லாரும் முதலாவதா வர முடியாது. மாநிலத்தில் முதல் மதிப்பெண் ஒரு பிள்ளை தான் வாங்கும்... எல்லா பெற்றோரும் அது தன் பிள்ளையா இருக்கனும்னு ஆசைப்பட்டா?? நடக்குற விஷயமா? தன் பிள்லையிடம் உள்ள திறமையை கண்டரிந்து வழி நடத்தினலே பிள்ளைகள் வருங்காலம் ஜொலிக்கும்... பெற்றோர் இதை உணர்ந்து கொண்டால் தற்கொலை எண்னிக்கை குறையும், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

இத்தோட என் முதல்கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாதத்தை முடிச்சுக்குறேன் நடுவரே :) கோவிக்காதீங்க... உடல் நல குறைவால் தொடர்ந்து பங்கு பெற முடியல. முடிஞ்சா அவசியம் வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க சுமி வாங்க . வரும்போதே பாட்டோட பட்டையகிளப்பிட்டில்ல வாரீக.

//வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விடுகின்றனர்... //பார்த்தீர்களா இந்த மண்ணில் நல்ல குழந்தையாக பிறந்த மாணாக்கர்களை இந்த நிலைக்கு கொண்டுவிட்டது வளர்ப்புதானே? காசு பணம் சொத்து சேர்த்து வைப்பதைவிட குழந்தைகளை வாழ்வில், சமுதாயத்தில் வரும் பிரட்சினைக்களை சமாளிக்கும் தகுதியுடையவர்களாக வளர்ப்பதே இன்றைய தேவை.

//வீட்டுக்குள்ள பெத்தவங்க பிள்ளைகளுக்கான அங்கீகாரத்தை தரலேன்னா சமூகத்துல மட்டும் எப்படி நடுவரே அது கிடைக்கும்?//அப்படிக்கேளுங்க.

//முக்கியமா மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதால், தங்கள் பிள்ளைகளின் சுய மதிப்பீட்டை தாங்களே குறைப்பது மட்டும் அல்லாமல் தாழ்வு மனப்பான்மையை வேறு ஏற்படுத்தி விடுகின்றனர்//
சொன்னா புரிஞ்சாத்தானே.

//அவர்களுக்கு நாளடைவில் படிப்பு என்ற சொல்லை கேட்டாலே எட்டிக் காயின் கசப்பும் அதன் மேல் வெறுப்பும் ஏற்படுவது போல செய்துவிடுகின்றனர்.//அத்தோடயா நிக்குது புள்ளைங்க வீட்ட விட்டு ஓடியில்ல போகுது. அப்புறம் குய்யோ முறையோன்னு அழுதென்ன ஆகும்?

//பெற்றோரின் அதிகப்படியான பேராசையால், வெறுப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் பிள்ளைகள், இறுதியில் தற்கொலையை நாடுகின்றனர்//குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போதே பெற்றோர்களை ஆயிரம் முறை இவ்வாக்கியத்தை எழுதிவரச்சொல்லனும்.இதுக்கு எதிரணி என்ன பதில் தருமென்று பார்ப்போம்.

//இந்த ச்மூகமே எதிர்த்தாலும் தன் குடும்பத்தாரோட ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் ஒருவனால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்//ஆமாங்க ஆமாங்க இதை மறுக்கமுடியுமா?

அருமையான வாதங்களை உங்கள் பாணியிலே அள்ளி விட்டிருக்கீங்க. அதே போல இன்னும் எதிர்பார்க்கிறேன்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

//பெரும்பாலும் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை என்று ஏகத்துக்கும் செல்லம் கொடுத்து ஏமாற்றம்னா என்னன்னே தெரியாமல் வளர்த்து விடுகிறார்கள். வீட்டுக்குள் கேட்டதெல்லாம் கிடைக்கும் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆனால் வெளியே அது நடக்குமா? அப்போ வெளியுலகை எதிர்கொள்ளும் பக்குவத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து தயாராக்குவது யார் பொறுப்பு? பெற்றோர் பொறுப்புதானே! அதில் தவறும் பெற்றோரைக் கொண்ட இளம்தலைமுறையினர்தான் சிறு ஏமாற்றம் என்றாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.//தான் பட்ட துன்பம் பிள்ளைகள் படக்கூடாது என கண்மூடித்தனமான பாசத்தினால் பிள்ளைகளுக்கு மனதளவில் எதிர்ப்பு சக்தியை இல்லாமலேயே செய்துவிடுகிறார்கள்.இதனால் பிள்ளைகளுக்கு கிடைப்பது பெற்றோரை எதிக்கும் சக்தியே.

//பெற்றோர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் என் மகன்(ள்) "சொல் பொறுக்காத சுந்தரன்(ரி)"//ஆஹா இந்த பெருமைபேச்சு அழிவுக்குதான் வழிவகுக்கும். சமுதாயத்தின் அங்கமாக வளர்க்கப்படவேண்டியவர்கள் கொம்பாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாளை எந்த கொம்பு பெரிது என போட்டிவளர்ந்து ஒருவருக்கொருவர் குழிபறித்து மடியவேண்டியதுதான்.

//ஒரு படி மேலே போய் தான் கேட்டதை கொடுக்காதவரையும் கொல்லும் அல்லது துன்புறுத்தும் மனநிலைக்கும் ஆளாகிறார்கள்.//பள்ளிகளில் இப்போதெல்லாம் இந்த புல்லி (Bully)களிடமிருந்து மாணவர்களை பாதுகாப்பதும் பெரும் தலைவலியா இருக்கே

//செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தோழமை உணர்வுடன் பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலில் வளர்க்கப்படும் குழந்தை எந்த சூழலிலும் தற்கொலை முடிவை நாட மாட்டார்கள்//இதுக்கு மேலே என்ன சொல்ல.எதிரணிக்கு சவாலான கருத்து. அருமை கவிசிவா இன்னும் பல கருத்துக்களோட வாங்க

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனிதா உங்கள் வாதத்தை படித்தேன் அருமை விரைவில் அலசலை பதிவிடுகிறேன். புது நடுவருக்கு அடிக்கடி குளிர்சுரம் வந்துடுது (மனசிலதான் மனசிலதான்):-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நடுவரே,இந்த காலத்தில்இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வில்லை என்றால் அதன் முடிவு நிச்சயமாக தற்கொலை தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நடுவரே சமூகம் அப்படின்னா என்ன? பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு சமூகம், இன்னும் சொல்லப் போனால்குடும்பம் தான் சமுதாயத்திற்கு அடித்தளம் தன்னை அன்பாகவும் புரிந்துகொண்டும் வழி நடத்தும் ஒரு குடும்பச் சூழல் ஒருவனுக்கு கிடைக்குமானால் அவன் இமயத்தையே அசால்ட்டா தொடுவான் நடுவரே, இல்லைனு வெச்சுக்கங்க எங்க கோயம்பத்தூருக்கு பக்கத்துல இருக்கிற வெள்ளியிங்கிரிமலையை கூட தொட முடியாது.
இப்போ சமூகத்துல எல்லா துறையிலேயும் ஜெயிச்சவங்கள கேட்டு பாருங்க , எல்லொரும் உனக்கு இது வேண்டாத வேலைன்னு சொன்னாங்க ,ஆனா என் பேமிலி தான் என்னை, என் கனவை புரிஞ்சுக்கிட்டு எனக்கு மாரல் சப்போர்ட் செய்தாங்க.அதனால் தான் என்னால் பல உயரங்களை தொட முடிஞ்சுதுன்னு சொல்லுவாங்க. அப்போ ஒரு இமாலய வெற்றியை பெற்றுத்தரும் ஒரு குடும்பமும் அந்த சூழலும் தானே நடுவரே அவன் ஒரு நொடியில் எடுக்கும் துயரமான முடிவுக்கும் காரண்மாக இருக்க முடியும்? சமுதாயச் சூழல் எப்படி காரணமாக இருக்க முடியும்?
நடுவரே ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணங்கள் உண்டு.
குடும்ப சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கறை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)(தேர்ந்தெடுக்கிற கடமை பெற்றோருக்கு தாங்க)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்.இதுல எல்லா விசயங்களுமே குடும்பத்தை ஒட்டியே வருது பாருங்க நடுவரே... இதெல்லாம் கரெக்டா இருந்தாவே ஆட்டோமேட்டிக்கா ( சில விதிவிலக்குகளும் உண்டு) அவன் ஜெயிப்பான், இதெல்லாம் சரியா இல்லாம அவனப் போட்டு நொய் நொய்ன்னு டார்ச்சர் கொடுத்தா அவங்களுக்கு ஒரேயடியா அவன் டாட்டா காட்டிட்டு போயிடுவான்...:(
இந்த உலகத்தில் மிகவும் பொறுப்புமிக்க ஒரு பணி என்பது ஒரு நாட்டிற்கு பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ , ஜனாதிபதியாகவோ இருப்பதில்லை நடுவரே. ஒரு குழந்தைக்கு சிறந்த பொறுப்பு மிக்க பெறோராக இருப்பது தான் சிறப்பும், சிரமும் ஆன வேலைங்க.ஆனால் சில குடும்பங்களில் இந்த விசயத்தை தெரிந்தே மறக்கறாங்களா இல்ல தெரியாம இந்த ச்ந்தர்ப்பத்தை கைநழுவவிடறாங்கான்னு எனக்கு தெரியல நடுவரே.
ஒரு குழந்தை பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம் அவன் வாழ்நாள் முழுவதும் கூட வருவதில்லை.பெற்றோரிடம் கற்றுக் கொள்ளுவது தான் அவன் வாழ்வின் இறுதிவரை வரும், பெத்தவங்ககிட்ட கிடைக்கும் அன்பும் அரவனைப்பும் ஒருவருடைய வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் ஆணிவேர் நடுவரே, இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை ஏற்படும், அப்புறம் அதனோட முடிவும் தவறானதாக தான் இருக்கும், பிள்ளை பெறுவதும் , அவர்களை ஒரு நலல் குடும்பச் சூழலில் வளர்ப்பதும் சிறு பிள்ளை விளையாட்டு இல்லை நடுவரே அது ஒரு தவம். அதனை சரியாக செய்யும் பட்சத்தில் அவன் எல்லோராலும் ( சமூகத்தால்) மதிக்கபடுவான், இல்லாத பட்சத்தில் ...... உங்களுக்கே தெரியும் நடுவரே. அன்பும் அரவணைப்பும் இல்லாத குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகள்மட்டும் அல்ல பெரியவர்களுமே பிற்காலத்தில் கொலை மட்டும் அல்ல 'தற்'கொலையும் செய்வார்கள் எனக் கூறி இப்பொதைக்கு விடை பெறுகிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நமது அறுசுவையின் பட்டிமன்ற புது நடுவரை காணவில்லை...;), கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு
//சன்மானம் எல்லாம் கொடுக்கிற அளவுக்கு வசதி இல்லைங்க..;)// நன்றி வார்த்தைகளாக தெரியப்படுத்தப்படும்...;) ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குளிர்சொரம் வந்தாலும் பரவாயில்லனு தைரியமா நாட்டாமை சீட்டுல உட்கார்ந்த நடுவருக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்

அருமையான தலைப்பு.என்னோட அணி ‘சமுகமே நு பேச வந்திருக்கேன்..

எதிர் அணி சொல்லறாங்க குடும்ப சூழல்னு .அது எப்படிங்க...எல்லா பெற்றோரும் நினைக்கறது என்னங்க நாம கஷ்ட பட்ட மாதிரி நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கனும்னு எண்ணத்தை முன்னிருத்திதாங்க...

ஆனா சமுகம்ன்றது நம்மல அப்படியா நடத்துது...எப்ப கீழ விழுவான் கேலி பண்ணி பரிகாசம் பண்ணுது...

சிறு கடும்சொல்லையும் தாங்காத பூஞ்சை மனசு குழந்தைங்க இந்த சூழ்நிலைல தவறான முடிவு எடுக்குதுங்க..

மாணவர்கள் வெறும் படிப்பால மட்டும் தான் இந்த முடிவு எடுக்கறாங்களா.இல்லை நடுவரே..
அவங்களுக்கு எல்லா விஷயமும் பிரச்சனைதான்..நாம அழகா இல்ல ...நாம வளரல ..அழகுன்றது என்ன .சிகப்புத்தோல் பொட்டுக்குனு இருக்கறது..அப்பத்தான் தன்னம்பிக்கை வளரும் ,எல்லாரும் மதிப்பாங்க இப்படியான எண்ணங்களை அவங்களுக்கு உருவாக்கறது யாரு..தொலைக்காட்சில வர விளப்பரம்ங்கள் தான்.சமுக பிரச்சனைல தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்குது..

இன்னும் கொஞ்சம் வாதத்தோட அப்பாலிக்கா வரேன் நடுவரே....

Be simple be sample

நடுவரே மீண்டும் வணக்கமுங்கோ!

சமூகம் கேலி பண்ணுது தொலைக்காட்சி விளம்பரங்கள் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை குறைக்குது அப்படி இப்படீன்னு ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளை அடுக்கறாங்க எதிரணியினர்.

சமூகம்னா நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும் கெட்டதை அகற்றி நல்லதை தேர்ந்தெடுக்கும் கலையை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டியது பெற்றோர். அந்தப் பொறுப்பிலிருந்து தவறும் குழந்தைகள்தான் தன்னம்பிக்கை இழக்கிறார்கள்.

இன்று எத்தனை பெற்றோர் வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் வளர்க்கிறார்கள்? நல்ல புத்தகங்கள் சமூகத்தில் கொட்டிக்கிடக்கிறது நடுவரே! அதை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை வலர்ப்பது பெற்றோர் கடமைதானே!

எத்தனையோ நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன, அதை எல்லாம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தாமல் அழுதுவடியும் சீரியல்களையும் வன்முறை கார்ட்டூன்களையும் காண்பிப்பது யார் தவறு? தொலைக்காட்சியில் வன்முறை தூண்டும் விதமாக கார்ட்டூன்கள் வருகிறது என்றால் அதை வேண்டாம் என்று பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் கடமை பெற்றோருக்கு இருக்க வேண்டாமா?

இன்று எத்தனை குடும்பங்களில் பிள்ளைகளோடு ஒரு வேளை உணவாவது சேர்ந்து அமர்ந்து அளவளாவி சாப்பிடுகிறார்கள்? டீவியில் கண்ணை வச்சுக்கிட்டே தட்டில் என்ன இருக்குன்னு கூட தெரியாமல் அள்ளி வாயில் போட்டுக்கொள்ளும் பழக்கம்தானே அதிகம் இருக்கிறது. அவரவர் அன்றைக்கு நடந்த விஷயங்கள் சந்தித்த நபர்கள் பற்றி கலந்துரையாடினால் அங்கே ஒரு நட்பு பிணைப்பு உருவாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த சூழல் இல்லாத வீடுகளில்தான் பிள்ளைகள் முடிவெடுக்கத் தடுமாறி தற்கொலை முடிவை நாடுகிறார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்