அப்பா! - இமா

அமைதியாக உறங்கிக் கிடக்கிறார் அப்பா. மடிக்காமல் கால் நீட்டி, நெஞ்சின் மேல் கைகளைக் கோர்த்து... எப்பொழுதும் இப்படித்தான் முகடு பார்க்க உறங்கிப் பார்த்திருக்கிறேன்.

செயற்கைப் பற்களைக் கழற்றி தலையணை அடியில் வைத்துவிட்டுப் படுப்பார். ஆதாரமில்லாது வலதுபுற மேலுதடு சற்று உள்ளே விழுவதனால் ஏற்படும் இடைவெளி வழியே சன்னமாகக் மூச்சுக்காற்று வெளியேறுகையில் உதடு உதறி 'புர்... புர்ர்...' என்கும்.

அப்போதெல்லாம் ஊரில் அதிகம் பேருக்குச் செயற்கைப் பற்கள் இருந்ததில்லை. பல் கெட்டால் பொக்கை வாய். அது வயதிற்கான அடையாளம் என்பதாக, ஒரு வகையில் அவர்களுக்கு மரியாதையைக் கொடுப்பதாக இருந்தது. இவருக்கு சிறுவயதிலிருந்தே செயற்கைப் பற்களோடுதான் சீவியம் போல. "படிக்கும் வயதில் கிரிக்கட் மட்டை பட்டுப் பறந்தது நான்கு ஒன்றாக," என்பார் பெருமையாக.

வீட்டுக்கு வரும் குழந்தைகளை அருகே கூப்பிட்டு வைத்துக் கொள்வார். "பற்களை விழுங்கட்டுமா?" என்பார். நாவுக்குக் கீழ் அடக்கிக் கொண்டு வாயைத் திறந்து காட்டுவார். பிறகு "முளைக்க வைக்கிறேன் பார்," என்பார். மாட்டிக் கொண்டு வாயைத் திறந்து காண்பிப்பார். திறந்த வாய் மூடாமல் பார்ப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு அவரைப் பிடித்துப் போகும்.

ஒரு தடவை பற்கள் காணாமற் போயின. இரண்டு நாட்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் கிளறியாயிற்று. எலி கொண்டு போனது என்று நினைத்திருக்க, துணி துவைக்கும் நாள் அன்று உதறிய தலையணையுறை உள்ளே இருந்து பொத்தென்று வந்து தரையில் விழுந்தது அது.

இப்போது பற்கள் அணிந்தபடி இருப்பதால் உதடு அமைப்பாகத் தெரிகிறது. கண்ணாடியும் அணிந்து... இல்லை அணிவிக்கப்பட்டு இருக்கிறார். பார்வையே இல்லாது போனதன்பின் கண்ணாடி எதற்காக? அதுவும் ஒரு அடையாளம்தான். அவரது அடையாளம். இப்போது என் அடையாளமாகவும் ஆகி இருக்கிறதோ! நானும் கண்ணாடி அணிகிறவளாக இருக்கிறேன்.

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. வேறு வேலை இல்லை. இப்படியே சுவரில் சாய்ந்து அப்பாவைப் பார்த்தபடி அமர்ந்திருக்கலாம். பழையவற்றை அசைபோடலாம், மனம் போனபடி எண்ணங்களை ஓடவிடலாம் - சுற்றி இருப்பவர்கள் என்னைத் தனித்திருக்க விட்டால்.

அழுகிறார்கள் எல்லோரும், என் எண்ண ஓட்டம் தடைபடுவது போல அப்பா தமக்கு செய்த நன்மைகளையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள்.

சிலது உண்மையா என்று சந்தேகம் வருகிறது. வியப்பாக இருக்கிறது. இப்போ எதைச் சொன்னாலும் சூழ உள்ளவர்கள் கவனிப்பார்கள் என்பதற்காகச் சொல்லும் வார்த்தைகள் இவை. இதில் எப்படிப் பிரபலம் பெற நினைக்கிறார்கள் இவர்கள்? என்ன லாபம் இனி? அப்பாவுக்குக் கேட்கப் போவதில்லை. அவர் மகிழ்ந்து போய் எதுவும் செய்து விட மாட்டார். இருந்த போதானால் ஏதாவது லாபம் இருந்திருக்கும்.

எனக்குச் சொல்லிக் கொள்ள நினைக்கிறார்களா? இவர்கள் அவரோடு மனத்தாங்கலாயிருந்த சமயங்களில் பேசிய கொடுஞ்சொற்கள் எல்லாம் என் மனதில் நினைவிருக்கிறதை இவர்கள் அறிவார்களா? ஏமாறப் போவதில்லை நான்.

படிப்பு முடித்த ஆரம்பத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பயிலுனராக வேலைக்கமர்ந்தேன். அலுவலகத்தில் மொத்தம் ஆறே ஆறு பேர். இடைவேளைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது ஏதாவது பேச்சு வரும். இயல்பாக இணைந்து கொள்வேன். திடீரென்று ஒரு நாள் மேலாளர் கேட்டார், "ஏன் வினோதினி, எப்பவும் உங்கட அம்மாவைப் பற்றித்தான் கதைக்கிறீங்கள். அப்பாவைப் பற்றி ஒன்றுமே இன்றுவரை சொன்னதில்லை. அப்பா..."

கொஞ்சம் சுருக்கென்றது. திகைத்தேன். என்ன சொல்ல! நான் நினைத்துக் கொண்டு தவிர்த்ததில்லை. ஆனால் பேசும் சந்தர்ப்பம் வரவில்லை. அப்படியா அல்லது பேசத் தோன்றவில்லையா? பேச எதுவுமில்லையா? பேசப் பிடிக்கவில்லையா? எனக்குள் ஒரே சின்ன ஆராய்ச்சி. நிச்சயம் தவிர்த்திருக்கிறேன்; நினைக்காமலே தவிர்த்திருக்கிறேன்.

முதலில்... அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். தப்பாக ஊகித்து வைக்கப் போகிறார்கள். "அப்பா..." என்று இழுத்த இழுப்பில் தொக்கி நின்ற கேள்வி அதுதான். அதைச் சொல்லி, பிறகு எப்படியோ மீதிக் கேள்விகளையும் சமாளித்து முடித்தேன். அதன்பின் அலுவலகத்தில் யாருமே அப்பா பற்றிக் கேட்டதில்லை. நானும் நினைத்தேன், மற்றவர்களிடம் பேசும் போது அம்மாவுக்குச் சமமாக அப்பாவைப் பற்றியும் பேசவேண்டும் என்று. இன்று வரை இயன்றதில்லை.

பலருக்கும் நல்லவராக இருந்தார் என் அப்பா. எனக்கு மட்டும் ஏன் அதிகம் சிறப்பாகத் தோன்றவில்லை! நான் தவறாகப் புரிந்துகொண்டேனா? என் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல அப்பா இருக்கவில்லையா?

சமயங்களில் அவர் செய்யும் காரியங்கள் மிக முற்போக்காகத் தெரியும். பல சமயங்களில் ஏமாந்து போவேன். வலியோடு கூடிய ஏமாற்றங்கள் அவை. அனுபவித்தால் மட்டும் புரியும் அழுத்தமான வலிகள். சாதாரண பாமரத் தந்தை கூடப் புரிந்துகொள்வார் தன் பெண்ணை. இவருக்குப் புரிய வேண்டியது புரியாது. அல்லது புரியாதது போல, தான் நினைப்பது சரியென்பதாக நடப்பார். நடந்தாரா, நடித்தாரா? முற்போக்காக இருப்பதாகக் காட்டி தன் கடமைகளைக் கௌரவமாகத் தட்டிக் கழித்தாரா?

கடமைகள் பற்றிப் பேசாது விடலாம். வேறு விதமான ஒரு அனுபவம் இது. ஒரு தடவை கிணற்றடியில் குளித்துக் கொண்டு இருக்கிறேன். கிணற்றைச் சுற்றிலும் கிடுகுத் தட்டி மறைப்பு, சின்னதாக ஒரு சீமெந்துத் தொட்டி. கிணற்று நீர் இறைத்து தொட்டியை நிரப்பி உள்ளே அமர்ந்து குளிக்கப் பிடிக்கும் எனக்கு. கொழுத்தும் மதிய வெயிலில் மேற்சட்டையில்லாமல் இடையில் மட்டும் உள்ளாடையோடு தொட்டியில் ஊறிக் கொண்டிருக்கும் ஆறு வயதுச் சிறுமி.

அது ஒரு தியான நிலை. ஒரு இளவரசி தனித்து நடத்தும் பூக்குளியல். அவ்வப்போது மெல்லிதாய்க் காற்று தொட்டுப் போகும். சட்டென்று முருங்கை என் மேல் பூவுதிர்க்கும். சின்னச் சிட்டு கிணற்றுக் கட்டில் உட்கார்த்து, "ஊறுகிறாயா மகளே! நாளை தும்மல் வரும். மறுநாள் இழுப்பு வரும். விரைவாய் உலர்த்திப் போ." என்று தலை சரித்துச் சரித்து எச்சரிக்கும். தலைக்கு மேல் தட்டான் நாலு சுற்றுச் சுற்றிப் போய் கிணற்றுக் கயிற்றில் நிற்கும். தலை நிமிர்த்திப் பார்த்தால் மேலே சிறிதும் பெரிதுமாய் மேகங்கள். சிலது சர்ரென்று வேகமாக, சிலது ஊருவது போல, சிலது செம்மறி போல, சிலது... இடுப்புப் பட்டியைப் பிடித்து உலுக்கும் என் வகுப்புத் தமிழாசிரியை போல.

ரசித்து உள்ளங்கை கூட்டி நீர் சேர்த்து வெயில் காய்ந்திருக்கும் முகத்தில் வீசி வீசி... சுகம் அது. அனுபவித்துப் பார்த்திருக்கிறீர்களா? விலையுயர் பளிங்குக்கல் பதித்த குளியலறையில் கிடைக்காது இந்த சுகம்.

பேச்சுக் குரல் சிந்தனையைத் தடைப்படுத்த, சுதாரிக்கும் முன்னம் அப்பாவும் யாரோ ஒரு நண்பரும் என்னெதிரே. உடம்பு வெட்கி கூசிப் போயிற்று. என்ன இது! ஒரு பெண் குளிக்கிறேனே! இப்படி வரலாமா? பார்க்கலாமா? சுர்ரென்று தலைக்கு மேல் வந்த கோபத்தில், "அப்பா!!!" "நான் குளிக்கிறது தெரியேல்லயா?" இரைந்து கத்த அவரும் கோபமானார். மற்றவர் முன்னால் அவமானப்பட்டதாக உணர்ந்து சட்டென்று சொன்னார் காரமாக, "நீ என்ன கன்னிப் பெண்ணா?" என்ன சொல்கிறார் என்று தெரிந்து சொன்னாரா? எனக்குப் புரியாது என்று சொன்னாரா?

கன்னிப்பெண்! ஆங்கிலத்தில் 'Virgin' என்கிற வார்த்தைதான் அன்று அவர் பயன்படுத்தியது. சரியான வார்த்தை கோபத்தில் நினைவுக்கு வரவில்லையா? அல்லது என்னை நோக வைக்கவென்று தெரிந்துகொண்ட வார்த்தையா?

எதுவாயினும்... வார்த்தையின் அர்த்தம் சாட்டையாய் அடிக்க அதிர்ச்சியில் உறைந்து, மனதால் அடிக்கிணற்றில் விழுந்து முழுவதாக நீர் என்னை உட்கொண்டது போல காணாமற் போனேன் முழுவதாய்.

நான் இருப்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பாட்டுக்கு கட்டு, பூச்சு, வளைந்த கல், தூண், கப்பி என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். உண்மையில் நான் இல்லை; உடம்பு முழுக்க கூச்சப் புழு நெளிய கைகொண்டு மெய் பொத்தி உறைநிலையில் உயிரற்ற சின்னச் சிலையொன்றுதான் அங்கே இருந்தது. அந்த நொடியில்... நான்... இறந்து போனேன்.

பெண் என்றால் பெண்தானே! சின்னவள், பெரியவள், குழந்தை, கிழவி... எவ்வயதானாலும் பெண். வயதுக்கு வராவிட்டால் மட்டும் மற்றவர் பார்க்கலாமா? என்ன அப்பா இவர்! வந்தவர் பார்வை தப்பாக இல்லாவிட்டாலும்... எனக்கு என்று உணர்ச்சிகள் இல்லையா? அதற்கு மதிப்பு இல்லையா?

அவர்கள் வெளியேற மடை திறந்த வெள்ளமாய் கண்ணில் நீர் பெருகியது. ஓவென்று அழுதேன். தலை பயங்கரமாக வலித்தது. உடம்பைத் துவட்டத் தோன்றாமல் ஈரத்துணியோடு போர்வைக்குள் முடங்கி உறங்கிப் போனேன்.

அன்று முதல்... பிடிக்கவில்லை அப்பாவை. உள்ளே ஒரேயடியாக வெட்டிக் கொண்டது உறவு. புரிந்துகொள்ள இயலாவிட்டால்... என்னை ஏன் பெறவேண்டும்! என் பிஞ்சு நெஞ்சுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே பிடிக்காமற் போயிற்று.

"பேர் விபரம் எல்லாம் சரியா வந்திருக்கா என்று ஒருக்காப் பார்த்துத் தாறீங்களோ வினோ. சரியெண்டால் பேப்பருக்கு அனுப்பலாம்." பக்கத்து வீட்டு கௌரி அங்கிள் தான் கணனியில் வடிவமைத்து எடுத்து வந்த மரண அறிவித்தல் கடதாசியை என் முன்னே மெதுவே நீட்டுகிறார். அம்மா காலமாகி ஆண்டு மூன்றாகிவிட்டது. வீட்டில் நான் ஒரே குழந்தை, இப்போ இருபத்தேழு வயது. மணமாகவில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை.

அப்பாவைப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அவருக்கும் என்னைப் புரியவில்லை. எல்லாம் அப்படியே இருக்கட்டும். ஒட்டுதல் இல்லையானாலும் அவர் என் அப்பா. கோபமும் எதுவும் இல்லை. பாசம் இருக்கிறது உள்ளே. ஒரு நடுநிலையான பாசம். என் ரத்தம், ஊற்றெடுத்த ஆரம்பம் அவர் என்கிற பாசம். எனக்கு இன்றைய அடையாளம் கொடுத்தது அவர்தானே. என் மரணம் வரை அவர் மகள்தான் நான். மற்றவர் மத்தியில் அவருக்கு உள்ள சிறப்பான இடம் என்றும் நிலைத்திருக்கட்டும். எதற்காகவும் யாரிடமும் அவரை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

நினைவுகளுக்கு தற்காலிகமாக ஒரு காற்புள்ளி வைத்துவிட்டு கையூன்றி எழுகிறேன். கால் விறைத்துக் கிடக்கிறது. மாற்றிப் போடாமல் அமர்ந்திருப்பேன் போல. ஊன்றினால் உணர்ச்சி கெட்டு விழுத்தப் பார்க்கிறது.

மரத்துப் போன காலின் உள்ளே ஊசியாகக் குற்றி ரத்த ஓட்டம் அதனைச் சரியாக்க முயற்சிக்கிறது. நானும் அடுத்து என்னவென்று பார்க்கவேண்டும். இந்த எண்ணங்களைத் தூக்கித் தூரப் போட்டு என் வாழ்க்கையைச் சரிசெய்யவேண்டும்.

Comments

அருமையா எழுதி இருக்கீங்க :) உங்க எழுத்து எப்பவும் போல... அந்த இடத்துக்கு நம்மை கூட்டிட்டு போயிடுது. நேரில் காட்சிகள். கிணற்றடி குளியலெல்லாம் சிறு வயது கொண்டாட்டம்... நினைவுபடுத்தியது. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதை நல்லா இருக்கு :) தமிழ் படிக்க படிக்க இனிமையா இருக்கு :)
இன்னும் பலகதைகள் படைக்க வாழ்த்துக்கள் இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இமா,கதை அருமை,தொடரட்டும் உங்கள் பணி

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

இமா, சூப்பர். மகளின் உணர்ச்சிகளை சொன்ன விதம் அருமை.
வாணி

ஹாய் இமா
வாசந்தியின் கதையை படித்த உணர்வு தோன்றுகின்றது.
ஓர் இளவரசி தனித்து நடத்தும் பூக்குளியல்..வர்ணனை அழகு.
உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்து இருக்கீங்க
..இன்னும் நிறைய கதை படைக்க வாழ்த்துக்கள்தோழி.

ரொம்ப ரொம்ப அருமைங் , அழகான வர்ணனைகள், வாழ்த்துக்கள் மா :-)

நட்புடன்
குணா

வார்த்தை கோர்வைகளும்,அப்பா மரணித்து படுத்துருக்காருங்கறதும் சொல்லிருக்கறது ஒரு அழகு..அருமையான படைப்பு.இமாமா

Be simple be sample

இமா நான் என்னையே மறந்து விட்டேன்.
ஒரு வார்த்தையில் ஒரு தலைமுறையின் பிரிவு.
அற்புதம்.
மனதின் உரையாடல்கள் அருமை.
இது கதையா? நிஜமா?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//சிறு வயது கொண்டாட்டம்... // ;) சின்ன வயசு வனி எப்பிடி இருப்பீங்க என்று இப்போ தெரிஞ்சு போச்சு. ;)) நன்றி வனி.

//தமிழ் படிக்க படிக்க இனிமை// மிக்க நன்றி அருள். :-)

நன்றி சுபா.

உங்களைப் போல எழுத வராது எனக்கு. உங்கள் பாராட்டுக் கிடைத்தது சந்தோஷம் வாணி.

//வாசந்தியின் கதையை படித்த உணர்வு // ;))) ஹச்சும்! ;) சும்மா ஐஸ் வைக்கப்படாது நிகிலா.

தவறாமல் எல்லாப் படைப்புகளுக்கும்! ;) கருத்துச் சொல்லி ஊக்கப்படுத்தும் குணாமகனுக்கு என் அன்பு நன்றிகள்.

//வார்த்தை கோர்வைகளும்// நன்றி ரேவதி.

//மனதின் உரையாடல்கள் // :-) சும்மா தோன்றியதை எல்லாம் தட்டி வைத்தேன் தாமரை. //இது கதையா? நிஜமா?// ;)))) நிச்சயம் கதைதான். எங்க அப்பாவுக்கு 82 வயது. அம்மா செபா (77) கூட வாக் போய்ருப்பாங்க இப்போ. ;))

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கருத்துச் சொல்லி இருக்கிறீங்க. சந்தோஷமாக இருக்கு. 'லாஜிக் இடிக்குது,' என்று ரகசியமாகச் சொன்ன நட்புக்கும் என் அன்பு நன்றிகள். ;)

‍- இமா க்றிஸ்

அழகான வார்த்தைகளுடன் கதை ரொம்ப அருமையா இருக்கு ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல கதை... மகளிடம் பழகும் பொழுது தந்தை என்ற அதிகாரம் இல்லாமல், பெண் என்ற நினைவில் கண்ணியம் வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது அப்பாக்களுக்கு.

அன்புடன்
THAVAM

மிக்க நன்றி கனி. :-)
நான் பாட்டுக்கு எழுதிட்டுப் போய்ருறேன். வந்து அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்றீங்க. ம்.. ;) நன்றி தவம்.

‍- இமா க்றிஸ்

இமா,

மிக அழகான கதை. என்னை பொறுத்தவரை கதை என்பது அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை படிப்போருக்கு தூண்ட வேண்டும். அதை 'அப்பா' மிக அழகாக செய்து விட்டார்.

தலைப்பும் சரி கதைக்களமும் சரி, மிக அருமை. காட்சிகளை கண்முன் காண நேர்ந்தது.

மேலும் பலப்பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

உங்க‌ கதையில் உணர்வுகள் பேசுகின்றது. நான் உங்க‌ கிட்ட‌ இருந்து நிறைய‌ கத்துக்கனும்

ம்... இதை நம்பவா வேணாமா? அங்க போட்ட கொமண்ட்டுக்கு பழிவாங்க இல்லையே சுதர்ஷினி!! ;)

நன்றி பவி. இப்போதான் பார்த்தேன். :-)

‍- இமா க்றிஸ்