நீலப் போர்வை போர்த்தி துயிலில் ஆழ்ந்திருந்தாள் கடல்கன்னி. உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையாய் அலையோசை. தன் பிம்பத்தை கடல் கண்ணாடியில் சரி பார்த்த அம்புலி, வானவீதியில் தன் உலாவலைத் தொடங்கியிருந்த மாலை வேளை. எதிரில் இருந்த அழகில் மனம் லயிக்காமல் வெறுமனே கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.
"இயற்கை அழகு சலிக்கிறதே இல்லை"
"ம்" தோழி சந்தியாவின் பேச்சு காதில் விழுந்ததற்கு அறிகுறியாக வெறுமனே உம் கொட்டினாள் தாரிணி.
"இங்க வந்தும் உம்முனுதான் இருப்பியா? அங்க பாரு! அவங்கதான் நீ சொன்ன பாட்டியா"
"ஆமாம் அவங்கதான்"
"இது என்ன புது பழக்கம் தாரிணி"
"வசந்த்தான் சொல்லிக் கொடுத்தார் சந்தியா”
"விசேஷமான நாட்கள்ல வருஷம் முழுக்க நமக்காக உழைக்கிறவங்களுக்கு நம்மால முடிஞ்சதை செய்யனும் தரூ. அவங்க முகத்தில தெரியற சந்தோஷத்தில நமக்கு ஏற்படற நிறைவு இருக்கே, அது அந்த நாளோட சந்தோஷத்தை பல மடங்காக்கிடும் தரூ"
கணவன் நினைவில் உள்ளம் உருகி விழிகள் தளும்பத் தொடங்கியது தாரிணிக்கு. தினசரி போடும் சிறுவனுக்கும், பூக்கார பாட்டிக்கும் தவறாமல் உதவி வரும் கணவனை நினைத்து பெருமிதம் கொண்ட மனது, சமீபமாக இருவருக்குள்ளும் ஏற்பட்டு விட்ட இடைவெளியால் வாடியது.
"வசந்த் பேச்சை எடுத்தாலே உருகிட்டு, எதுக்கு அவர் கூட எப்ப பார்த்தாலும் சண்டை போடறே தாரிணி"
“கெட்டூகெதர்" பழைய நட்புகளை சந்தித்து, ஆடிப்பாடி, பேசிக் களித்து அளவலாவது மகிழ்ச்சியான ஒன்று! என் வாழ்விலோ என் நிம்மதியைப் பறித்த ஒன்றாக மாறிவிட்டது!!
"தாரிணி"
"எல்லாம் அந்த சரிதாதான் சந்தியா! எப்ப பார்த்தாலும் போன் பண்றா! எனக்கு சுத்தமா பிடிக்கலை! அவளைப் பார்த்தா எனக்கு நல்லவளாவும் தெரியலை! இவருக்கு சொன்னா புரியவே மாட்டீங்குது"
"சண்டை போடறதை விட்டுட்டு, பொறுமையா, அன்பா சொல்லிப் பார் தாரிணி"
"ம். இன்னைக்கு இந்த விஷயத்தை பேசி முடிக்காம விட மாட்டேன்"
இன்று சீராகச் சுழலும் குடும்பத்தின் சக்கரங்கள் சகதியில் சிக்கி மீளாமல் தவிப்பதற்கு "கெட்டூகெதர்" இந்நிகழ்வும் ஒரு காரணம் ஆகி விட்டது!
ஆணோ, பெண்ணோ நட்பை புதுப்பித்து அளவு கடந்து அளவலாவி அல்லலுற்று நோகாமல், காதலைப் புதுப்பித்து தன் நிலை மறந்து அவல நிலை காணாமல் வாழ்ந்திருத்தலே முறையாகும்! உயர் நெறியாகும்!
"மல்லிப் பூ! மல்லிப் பூ! முழம் பத்து ரூவா!"
அந்தக் குரல் தாரிணியின் கவனத்தை ஈர்த்தது. அவரிடம் செல்வதற்காக எழுந்தவள் அவரே தன்னை நோக்கி வருவதைக் கண்டு மீண்டும் மணலிலேயே அமர்ந்தாள். வேக எட்டுக்களை வைத்து அவளிடம் வந்தவர் பூக்கூடையுடன் அருகில் அமர்ந்தார்.
"நல்லா இருக்கீங்களா பாட்டி, தாத்தா எப்படி இருக்கார்"
"எங்களுக்கென்ன நல்லாயிருக்கோம். நீயேன் ராசாத்தி வாடுன ரோசா பூவாட்டம் இருக்கே"
என் வசந்தன் என்னை நீங்கி நின்றால், வாட்டம்தானே என் விதி!!
"பாப்பா"
"நான் நல்லாதான் இருக்கேன் பாட்டி! உங்களை பார்க்கத்தான் வந்தேன்! இதை வாங்கிக்கங்க பாட்டி"
"என்ன பாப்பா! எதுக்கு ஸ்வீட்டு, புதுத்துணி எல்லாம்.. தீவாளிக்கு இன்னும் நாள் இருக்கே"
"எங்களுக்கு நாளைக்கு கல்யாண நாள் பாட்டி"
"பாட்டி இங்க வாங்க" யாரோ ஒருவர் அழைக்க.
"சித்த இரு கண்ணு! வந்துடறேன்"
யாரோ ஒரு கணவன் தன் மனைவிக்கு பூ வாங்கிக் கொடுக்க, தாரிணியின் மனதில் ஓர் ஏக்கம் விஸ்வரூபம் பெற்று நின்றது.
"மல்லிகைப்பூ ஒரு முழம் கொடுங்க பாட்டி"
"அஞ்சு முழம் கொடுங்க பாட்டி"
"அச்சோ வசந்த்! அவ்வளவு பூவை ஆபிஸ்சுக்கு வைச்சுட்டு போக முடியாது"
"அப்படியே ஒரு ரோஜாவும் கொடுத்துடுங்க பாட்டி"
"வசந்த்!! அடி வாங்கப் போறீங்க"
"உனக்கு பிடிச்ச யெல்லோ கலர்தான் வாங்குவேன் தரூ"
கலைந்து விட்ட தேன்கூடாய் சுழன்றெழுந்தது வசந்தனின் நினைவுகள்! மணலில் இருந்து எழுந்த தாரிணி ஆர்ப்பரிக்கும் அலைகளிடம் நெருங்கி நின்றாள்.
அலைகள் அவள் மனதை தேற்றத் தவறியது. இங்குதான் இருவரும் கை கோர்த்து கால் நனைப்போம், கதை பல பேசி, நிலவு வந்த பிறகே வீடு திரும்புவோம். யாரோ கை பற்றி இழுத்ததில் திடுக்கிட்டுத் திரும்பினாள் தாரிணி.
"வசந்த்!!"
"கடல்கிட்ட என்ன ரகசியம் பேசிட்டிருக்க" வசந்தனின் மலர்ந்த முகம் தாரிணியின் முகத்திலும் மலர்ச்சியை வரவழைத்தது.
“தூது சொல்லிட்டு இருக்கேன்”
“என்ன தூது” என்றான் அறியாதவன் போல்.
"கைபிடித்து காதல்
சொல்லியவன்
காணோமடி தோழி!
மருதாணி விழிகள்
மண் சேரும் முன்பு
எனை வந்து சேர
தூது செல்லடி தோழி!”
தாரிணி விளையாட்டாக எதுவும் சொல்வாள் என்ற வசந்தன் நினைப்பு பொய்யாக, அவள் தோள்களில் அழுந்தக் கரம் பதித்தான் வசந்தன்.
“சாரி தரூ! சாரிடா”
கணவன் முகம் வாடுவதைக் கண்டு தன்னையே திட்டிக் கொண்டாள் தாரிணி. காலந்தோறும் காதல் புரியும் விந்தை இதுவல்லவோ?
“எவ்வளவு நாளா நடக்குது வசந்த்”
“என்ன தரூ”
"என் ஃப்ரெண்டுனு சொல்லிட்டு ஒருத்தி உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்காளே! அது! சந்தியா சொல்லிதானே வந்தீங்க”
"ம். சந்தியாதான் நீ இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கேன்னு சொன்னாங்க”
"நாளைக்கு நம்ம முதல் கல்யாண நாள் வசந்த்! இப்ப இருக்கிற நிலைமைக்கு...”
"எப்படி இருக்குமோனு கவலைப்படறயா தரூ? நமக்குள்ள இனிமேல் சண்டையே வராது தரூ! வீட்டில போய் பேசிக்கலாம் வா"
"பாட்டியை சாப்பிடக் கூப்பிட்டு, சந்தியாவை அவ வீட்டில விட்டுட்டு, அப்புறம்தான் பேசமுடியும்"
"ஓகே பேபி" நெடு நாட்களுக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
"என்ன டிபன் செய்யறே தரூ"
"அடை, வெங்காயச் சட்னி"
"நான் வெங்காயம் நறுக்கி தரட்டுமா"
"இல்லை வசந்த்! இன்னைக்கு வேலை எதுவும் இல்லை! நானே செஞ்சுக்கறேன்"
"தரூ"
"என்ன வசந்த்"
"சாரி"
"எதுக்கு"
"நீ சரிதாவை பத்தி சொன்னப்ப நான் கேட்கலை... உன்னை கஷ்டப்படுத்திட்டேன்.. சாரி தரூ"
வெங்காயத்தை வைத்துவிட்டு சமையலறை மேடையில் அமர்ந்திருந்தவனின் அருகில் தானும் அமர்ந்து தன் கரத்தை அவன் கரத்தோடு பிணைத்துக் கொண்டாள் தாரிணி.
"நாம எப்பவும் தானே சண்டை போடறோம் வசந்த்"
"அது வேற தரூ! அந்த சண்டை சுவாரஸ்யமா இருக்கும்! இப்ப மனசுல அமைதி இல்லாம.."
"விடுங்க வசந்த்! நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! அதான் பிரச்சனைக்கு காரணம்! உங்க இளகின மனசை அவ தனக்கு சாதகமாக்கிட்டா”
"இன்னைக்கு அவ பிரெண்டு கிட்ட பேசிட்டிருந்ததை கேட்டதுக்கு அப்புறம்தான் அவளோட உண்மையான முகம் எனக்கு தெரிஞ்சுது! ஏதேதோ பொய் சொல்லி என்கிட்ட நிறைய பணம் வாங்கிட்டா தரூ"
"வாங்கிக்கலாம் வசந்த்! கவலைப்படாதீங்க"
"நான் உன் பேச்சை கேட்டிருக்கனும்"
"நான் உங்களை சந்தேகப்படறேன்னு நினைச்சிருப்பீங்க"
"இல்லை"
"அப்புறம்"
"நீ பொஸஸிவ் பிசாசாச்சே! அதான்.. கோபப்படறேன்னு நினைச்சேன்"
"நான் பிசாசா" என தாரிணி கண்ணை உருட்ட.
"ம். என்னோட அழகான காதல் பிசாசு"
"காதல் பிசாசுக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க"
"இப்போதைக்கு இதை மட்டும் வச்சுக்கோ" என அவள் கன்னங்களில் முத்திரைப் பரிசளித்தான் வசந்தன். தாரிணி நிம்மதியோடு அவன் தோள்களில் சாய அவளை அணைத்துக் கொண்டான் அக்கணவன். இடையிட்ட மேகம் மறைந்து காதல் வானம் பளீரிட்டது.
Comments
நன்றிகள்!!
எனது கதையை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும்,அறுசுவை குழுவினருக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எனது காதல் வானிலே உங்கள் மனதில் உலா வந்ததா என்றறிய காத்திருக்கிறேன்.
விடுமுறை கழித்து வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
திங்களன்று சந்திப்போம்.நன்றி.வணக்கம்.
அன்புடன்
நித்திலா
நித்திலா
உங்க எழுத்து அழகு எப்போதும் போல. கவிதை நடையில் அழகான காதல் கதை. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹாய் வனி,
மீண்டும் உங்களை என் கதை பக்கத்தில் காண்பதில் மகிழ்ச்சி,நன்றி வனி.
சுட்டெரிக்கும் பாதையில் நிழல் போல் வந்து குளிர்வித்ததற்கு மிகவும் நன்றி வனி.
//உங்க எழுத்து அழகு எப்போதும் போல. கவிதை நடையில் அழகான காதல் கதை//
உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி வனி.உங்கள் வாழ்த்திற்கும் என்னுடைய நன்றிகள்.
உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
நித்திலா
நன்றிகள்!!
இன்று வரை என் கதைகளை வெளியிட்டு வரும் அட்மின் அண்ணாவிற்கும்,
அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் கதைகளுக்கு ஆதரவு அளித்த அனைத்து தோழிகளுக்கும் எனது நன்றிகள்.
உங்கள் அன்பிலும்,ஆதரவிலும் மிகவும் மகிழ்ந்தேன்.எனக்கு நிறைய தோழிகள்
கிடைத்தீர்கள்.உங்கள் அன்பிற்கு மீண்டும் எனது நன்றி.
வாசித்து வரிவரியாய் பகிர்ந்து என்னை உற்சாகப்படுத்தி எழுதச் செய்த வாசக
நெஞ்சங்களுக்கு என்றும் என்னுடைய நன்றிகள்.
என் கதையை வாசித்தவர்களுக்கும்,பதிவிட்டவர்களுக்கும்,ஓட்டளித்து தங்கள்
கருத்தை பதிவு செய்தவர்களுக்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்.வணக்கம்.
அன்புடன்
நித்திலா
காதல் வானிலே
நித்தி,
நலம் தானே!, மிக அருமையான கதை நித்தி. ஆரம்பத்தில் வரும் இயற்கை வர்ணனை அழகோ அழகு.
அன்புடன்
பவித்ரா
பவி
ஹாய் பவி,
என் அன்புத் தோழியை என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் :)
நான் நல்லாயிருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?
ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்க பதிவை பார்க்கிறதுக்கு,நன்றி பவி.
இந்த கதையால் ஏற்பட்ட வருத்தத்தை உங்க பதிவு நீக்கிடுச்சுனுதான்
சொல்லனும்.ரொம்ப நிறைவாயிருக்கு நன்றி பவி.
//மிக அருமையான கதை//ரொம்ப சந்தோஷம்டா,ரொம்ப ரொம்ப நன்றி பவி.
//ஆரம்பத்தில் வரும் இயற்கை வர்ணனை அழகோ அழகு//
கவனிச்சு குறிப்பிட்டு சொன்னதுக்கு ரொம்ப,ரொம்ப நன்றிடா.
ரொம்ப சந்தோஷமாயிருக்கு,வருகைக்கும்,பதிவுக்கும் ரொம்ப நன்றி பவி :)
அன்புடன்
நித்திலா
ஹாய்நித்திலா
ஹாய் தோழி நலமா கதை அருமைப்பா இயற்கை வர்ணனை நீங்க அதன் ரசிகை என்பதை தெளிவுபடுத்துகிறது இந்த கதை[போல்]இன்று பலர் காதல் வாழ்வில் நிஜமாகி உள்ளது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
பெரோஸ்
ஹாய் பெரோஸ்,
நான் நல்லாயிருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன்.
ரொம்ப சந்தோஷமாயிருக்குடா.
//கதை அருமைப்பா// ரொம்ப சந்தோஷம்டா,நன்றி தோழி.
//இயற்கை வர்ணனை நீங்க அதன் ரசிகை என்பதை தெளிவுபடுத்துகிறது//
உண்மைதான் பெரோஸ்,இயற்கை அழகு,பேரழகு.
//இந்த கதை[போல்]இன்று பலர் காதல் வாழ்வில் நிஜமாகி உள்ளது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்//
கதையை சரியாக புரிந்து கொண்டு,பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப ரொம்ப
நன்றிமா.சில உண்மை சம்பவங்களின் தாக்கமே இக்கதை.
உங்கள் வரவாலும்,பதிவாலும் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.
எனது எண்ணிலடங்கா நன்றிகள் தோழி :)
அன்புடன்
நித்திலா
ஹாய்தோழி
ஹாய் நித்திலா நன்றிப்பா என்னை நினைவுகொண்டுள்ளதுக்கு.நீண்ட நாள்கள் ஆகிவிட்டது தோழிகள் மறந்தது போல் தோன்றியது என் பழைய பெயர் ஏதும் வருவது இல்லை புதியதாக பதிவு பன்னியுள்ளேன்
ஹாய் நித்தி கதை ரொம்ப
ஹாய் நித்தி
கதை ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு பா,
//உறக்கத்தில் சிரிக்கும் குழந்தை,,
தன் பிம்பத்தை கடல் கண்ணாடியில் சரி பார்த்த அம்புலி//
வர்ணனை அற்புதமா வந்திருக்கு நித்தி
தாரிணி பேரு ரொம்ப க்யூட்
கதை ரொம்ப நெஞ்சை தொடுவதாக உள்ளது நித்தி
i like this lovable story the
i like this lovable story the combination of oodal and koodal
வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram
பெரோஸ்
ஹாய் பெரோஸ்,சாரிடா லேட்டா ரிப்ளை பண்றதுக்கு :(
நீங்கள் என் தோழி ஆயிற்றே,என்றும் என் நினைவில் இருப்பீர்கள் :)
வருத்தம் வேண்டாம்,தொடர்ந்து வாருங்கள்.பேசுவோம்.
அன்புடன்
நித்திலா
நிக்கி
ஹாய் நிக்கி,
ரொம்ப ரொம்ப சாரி,லேட்டா ரிப்ளை பண்றதுக்கு :(
சாரிக்கு அப்புறம்,நிறைய நிறைய தேங்க்ஸ்.எனக்கு எப்பவும் ஆதரவா இருக்கீங்க.
//கதை ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு பா// ரொம்ப சந்தோஷம்டா.நன்றி நிக்கி.
எனக்காக இரண்டு பக்கமும் பதிவு போட்டிருக்கீங்க,ஸ்பெஷல் தேங்க்ஸ் டியர் :)
வர்ணனையை கவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு ரொம்ப நன்றி நிக்கி.
தாரிணி பேர் நிக்கிக்கு பிடிச்சிருக்கா,தேங்க்ஸ்டா.
//கதை ரொம்ப நெஞ்சை தொடுவதாக உள்ளது//
உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மீண்டும் எனது நன்றிகள்டா.
வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப நன்றி நிக்கி :)
அன்புடன்
நித்திலா
சுனந்தா
ஹாய் சுனந்தா,
என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)
மிகவும் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள் :(
//i like this lovable story the combination of oodal and koodal//
மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி :)
புதிய வாசகியான உங்கள் வரவால் நிறைவடைந்தேன்.தங்கள்
வருகைக்கும்,கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)
அன்புடன்
நித்திலா
நித்திமா
ஹாய்டா எப்படி இருக்கே நலமா? ரொம்ப நாள்ளாச்சு நாம பேசி கதை சூபரா இருக்குடா ரமணிசந்திரன் கதை படிச்ச பீலிங்டா வாழ்த்துக்கள்
பாத்திமாம்மா
வாங்க பாத்திமாம்மா :)
உங்களை எனது கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் :)
நான் நல்லாயிருக்கேன்மா.நீங்க எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு,பார்க்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
நேரம் கிடைக்கும் போது வாங்க பேசலாம் :)
//கதை சூபரா இருக்குடா// ரொம்ப நன்றிமா :)
//ரமணிசந்திரன் கதை படிச்ச பீலிங்டா// உங்க செல்ல நித்தியை ரொம்பவே
பாராட்டறீங்க.உங்க அன்புக்கு ரொம்ப நன்றிமா :)
உங்க அன்பான வார்த்தைகள் கேட்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு,
ரொம்ப ரொம்ப நன்றிமா :)
உங்க வருகைக்கும்,கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்மா :)
தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்.
அன்புடன்
நித்திலா