முருங்கைக்கீரை குழம்பு

தேதி: November 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

முருங்கைக் கீரை - ஒரு கட்டு
பாசிப்பருப்பு - அரை கப்
முருங்கைக்காய் - 2
உப்பு - ருசிக்கேற்ப
வறுத்து அரைக்க:
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5 அல்லது 6
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
முருங்கைக் கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும். துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும். பச்சரிசியை பொரியவிடவும்.
மிளகாயை வறுக்கும்போது, சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். வறுத்த அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும்.
ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். விரும்பினால், கத்தரிக்காயும் சேர்க்கலாம்.
குக்கரில் பாசிப்பருப்புடன், சுத்தம் செய்த முருங்கைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் கீரை பருப்பு கலவையுடன், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த முருங்கைக்காய் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து ஒரு கொதிவிடவும். கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து சேர்த்து இறக்கிவிடவும்.
சுவையான முருங்கைக்கீரை புளியில்லாக் குழம்பு தயார். சூடான சாதத்துடன், கலப்பருப்பு, நெய் சேர்த்து, குழம்பு ஊற்றி சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள கூழ் வடகம் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான முருங்கைக்கீரைக் குழம்பு நல்லாருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முருங்கைக்கீரை குழம்பு சூப்பர்... அம்மாவோட ஃபேவரிட் ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு உமா,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

அன்பு கனிமொழி,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆகா!!! சீதாவா இது??? நம்ம சீதாவா?? ;) என்னை நானே கடிச்சு பார்த்து தான் இது கனவில்லை நிஜம்னு தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு :v சூப்பரு சீதா. வெல்கம் பேக் (y)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான முருங்கைக்கீரைக் குழம்பு. எனக்கு முருங்கைக்கீரை ரொம்ப பிடிக்கும். கலப்பருப்பு என்பது என்ன?

அன்புடன்
ஜெயா

அன்பு வனி,

அறுசுவை என்னைக் கட்டி இழுக்கிறதே, என்ன செய்யறது?

நீங்க செய்வது போல - ஸ்பெஷல் உணவுகள், மற்ற மாநில, மற்ற நாட்டு உணவு வகைகள் எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது. வீட்டில் அன்றன்று சமைக்கும் உணவுகளை ஃபோட்டோ எடுத்து அனுப்பலாம் என்று அனுப்பினேன்.

பின்னால ரெஃபரன்ஸுக்கும் உதவுமே :)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜெயா,

துவரம்பருப்பை குழைவாக வேக வைக்கணும். வேக வைக்கும்போதே அத்துடன் ஒரு சிறிய பூண்டுப் பல்லும் சேர்த்து வேக வைக்கலாம்.

வெந்த பருப்பை நல்லா மசிச்சு, உப்பு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து, கடுகு உ.பருப்பு தாளிச்சு, பெருங்காயப் பவுடர் ஒரு சிட்டிகை பொரிச்சுப் போட்டு, கலந்து வைக்கணும்.

சுடு சாதத்தில், இந்த கலப் பருப்பு ஒரு கரண்டி, நெய் 1 ஸ்பூன் ஊற்றிப் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

துவரம்பருப்புடன் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்கலாம்.

பெரியவங்களுக்கும் சாதத்தில் பருப்பு நெய் சேர்த்து, அத்துடன் குழம்பு, ரசம், சாம்பார் எல்லாம் ஊற்றி, சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பருப்பு சாதத்துடன் கொஞ்சமாக குழம்பு, ரசம் சேர்க்கலாம்.

கடுகு பெருங்காயம் தாளிக்கலைன்னாலும் பரவாயில்லை, உப்பும் மஞ்சள் பொடியும் மட்டும் கூட சேர்த்துக்கலாம்.

தென் தமிழகத்தில் விருந்து சாப்பாட்டில் கண்டிப்பாக பருப்பும் நெய்யும் தனியாகப் பரிமாறுவாங்க.

இப்பல்லாம் காண்ட்ராக்ட் சமையல்/ஹோட்டலிலிருந்து வரவழைக்கும் சாப்பாட்டில் இந்தப் பருப்பு ஐட்டம் காணாமல் போயிடுச்சு.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி தெளிவான விளக்கம். நன்றி! நன்றி!!

அன்புடன்
ஜெயா

சீதாலஷ்மி மேடம் :) நான் அறுசுவைக்கு வந்தப்புறம் இப்பதான் உங்க குறிப்பு முகப்பில பார்க்கிறேன் :) குறிப்பு நல்லா இருக்குங்க:)
மேலே உங்க விளக்கத்தை பார்க்கவும் உப்புபருப்பு, புளிக்குழம்பு காம்பினேஷன் ஞாபகம் வந்திடுச்சு எனக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருட்செல்வி,

ரொம்ப நாள்தான் ஆகிடுச்சு, குறிப்பு கொடுத்து. இனி, அப்பப்ப குறிப்புகள் அனுப்பனும்னு நினைச்சிட்டிருக்கேன்.

உப்பு பருப்பு - சாதத்துடன் வெந்த பருப்பு, குழம்பு சேர்த்து சாப்பிடுவது தனி ருசிதான்.

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி