வேர்கடலை கார குழம்பு

தேதி: November 13, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முருங்கைக்காய் - நான்கு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பூண்டு - நான்கு பற்கள்
வேர்கடலை - ஒரு கையளவு
தேங்காய்துருவல் - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - கால் கோப்பை
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தையம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


 

தக்காளி, வெங்காயம், பூண்டை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்காயை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வேர்கடலையை வறுத்து தோலை நீக்கி விட்டு தேங்காய்ப்பூவைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.
பிறகு குழம்பு கூட்டும் சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு பொரியவிடவும். பிறகு வெந்தயம், வெங்காயம், பூண்டைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு தக்காளி, கறிவேப்பிலையைப் போட்டு மையாக வதக்கவும்.
தொடர்ந்து காய்யை போட்டு உப்பை சேர்த்து வதக்கி எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
முருங்கைக்காயின் வாசனை வரும் வரை வதக்கி புளியை ஊற்றி இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து காய்கள் வெந்தவுடன் அரைத்த வேர்கடலை விழுதை போட்டு கலக்கி விடவும். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் அரைக்கோப்பை நீரை ஊற்றி அடுப்பின் அனலை குறைத்து வைத்து வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து குழம்பை கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான கார குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மனோகரி மேடம்,
வணக்கம். கனடாவில் குளிர் எப்படி இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க. இந்த ரெசிப்பியில் முருங்கைக்காய்க்கு மாற்றாக என்ன சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும். இங்கு முருங்கைக்காய் கிடைக்காது?

நன்றி

இப்படிக்கு
இந்திரா

indira

அன்புச் சகோதரி இந்திரா நீங்க எப்படி இருக்கீங்க?நான் நல்ல சுகமாய் இருக்கின்றேன்.கனடாவில் குளிர் அதிகமாகத் தான் உள்ளது இப்படியே ஒவ்வொரு வருடமும் கூறியே பழகியும் விட்டது. மேலும் இது பண்டிக்காலம் என்பதால் மனதுக்கும் உற்சாகமாய் உள்ளது. இந்த குறிப்பில் முருங்கைக்கு பதிலாக கத்தரி,உருளை,அவரைகாய், முள்ளங்கி,முட்டகோஸ் என்று உங்களுக்கு பிடித்த காயை சேர்த்து செய்து பாருங்க இதுவும் நம்மூரின் பாரம்பரிய குறிப்பு தான் சுவையாய் இருக்கும். நன்றி.

வேர்கடலை கார குழம்பு- முள்ளங்கி வைத்து செய்தேன். சுப்பர் டேஸ்ட் மேடம். நார்மலா நான் முள்ளங்கி கார குழம்பு வைப்பேன். ஆனால், கடலை, வெந்தயம் (வெந்தய கார குழம்புன்னும் தனியா வைப்பேன்)சேர்ப்பதால் இது புது மாதிரியாகவும், நல்ல வாசனையுடனும் இருந்தது.
ஃப்ஸ்ட் ஸ்டெப்பில், வெந்தய வாசனையும், பைனல் ஸ்டெப்பில் கடலை வாசனையும் ரொம்ப நல்லா இருந்தது சமைக்கும் போது.

இப்படிக்கு
இந்திரா

indira

ரொம்ப நன்றி இந்திரா. இந்த குழம்பை முள்ளங்கியில் செய்திருந்தீர்களா,ஆமாம் அதுவும் நல்ல ருசியாக இருந்திருக்கும். முருங்கைக்காய் கிடைக்கும் போது அதையும் ஒரு முறை செய்து பாருங்க ஒகேவா, இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டமும் அனுப்பியது மகிழ்சியாக இருந்தது மிக்க நன்றி.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த குழம்பின் படம்

<img src="files/pictures/verkadala_kulambu.jpg" alt="picture" />

டியர் இந்திரா, இந்த குறிப்பும் நல்லா வந்திருக்கு பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகின்றது,தங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் படத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

மனோகரி அக்கா நேற்று இந்த காரகுழம்பு தான் செய்தேன்,அவரக்காயில் செய்தேன்,சுவையாக இருந்தது,நல்ல மனமாகவும் இருந்தது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

i tried this recipie, it came out very well, it goes well with rice and dosai, thanks for ur recipie madam.