தக்காளி பருப்பு குழம்பு

தேதி: November 17, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - ஒரு கையளவு
பழுத்த தக்காளி - இரண்டு
சாம்பார் வெங்காயம் - ஆறு
பூண்டு - நான்கு பற்கள்
காய்ந்த மிளகாய் - ஆறு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி - அரை நெல்லிக்காயளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

தக்காளியை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் பூண்டை உரித்து வைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாயைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதை தொடர்ந்து வெங்காயம், பூண்டு, புளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு வதக்கியதை ஊறிய துவரம் பருப்பில் கலந்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த விழுதை குழம்பு கூட்டும் பாத்திரத்தில் போட்டு கரைத்த தக்காளியை சேர்த்து கலக்கவும்.
பிறகு அதில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு இரண்டு கோப்பை நீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து தெளிந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி விட்டு பரிமாறலாம்.
அல்லது இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து கொட்டியும் பரிமாறலாம்.


பிள்ளை பேறு முடிந்தவுடன் முதல் முறையாக சேர்க்கும் பருப்பு குழம்பை இது போல் தான் ஆனால் தக்காளியை சேர்க்காமல் செய்து தருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து காய்களைச் சேர்ப்பார்கள். பிறகு தான் தக்காளியைச் சேர்ப்பார்கள். எதைச் சேர்த்து செய்தாலும் வறுத்த பருப்பு குழம்பின் சுவையே தனி தான்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோகரி அக்கா, இந்த வார அறுசுவை சமையல் குறிப்பில் செய்வதற்கு மீன் குழம்பை செய்ய முடியாததால் இந்த தக்காளி பருப்பு குழம்பு செய்தேன். சும்மா சொல்லக்கூடாது, இதன் சுவையே தனி தான். மிகவும் அருமையாக இருந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி உங்களுக்கு.

அன்பு தங்கை வானதி ரொம்ப நன்றிமா. நான் கூட இந்த குழம்பை செய்து ரொம்ப நாளாகிவிட்டது, நினைவூட்டியதற்கு நன்றி. சமயம் கிடைக்கும் பொழுது அந்த மீன் குழம்பை செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் பை டியர்.