தேதி: February 21, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாஸ்மதி அரிசி - அரை கிலோ (அ) 4 டம்ளர்
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 300 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
புதினா - 2 கைப்பிடி
வெள்ளை எள் - ஒன்றரை மேசைக்கரண்டி
வேர்க்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி
தயிர் - 100 மில்லி
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 50 மில்லி
பட்டை - ஒரு அங்குலத்துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
அன்னாசி பூ - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும். எள்ளையும், வேர்க்கடலையையும் கருகிவிடாமல் வாசம் வரும் வரை வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும். அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அடிகனமான பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் முழு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சிறிது வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைவாக வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கவும். சிக்கன் ஓரளவு வெந்ததும் தயிர், மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

பிறகு அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்துக் கிளறவும்.

ஒரு நிமிடம் வதக்கியதும் 8 டம்ளர் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடிவைக்கவும். (குக்கராக இருந்தால் மூடியை மூடி வெயிட் போட்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்).

அரிசி பாதி வெந்ததும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன்மீது குக்கரை வைத்து 'தம்' போடவும்.

10 நிமிடங்கள் கழித்து நெய், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறி இறக்கிவிடவும்.

சுவையான சென்னை சிக்கன் பிரியாணி தயார். எனது மகளுடன் பணிபுரியும் இஸ்லாமியர் ஒருவர் கொடுத்த குறிப்பு இது.

Comments
அடேங்கப்பா!!!
அடேங்கப்பா... எவ்வள்வு நாளுக்கு அப்பறம் உங்க குறிப்பு பார்க்குறேன்!! மிகுந்த மகிழ்ச்சி செல்வி. அவசியம் ட்ரை பண்ணிடுவோம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சென்னை செந்தமிழ்
சென்னை பிரியாணி அருமை :) வேர்க்கடலையும், எள்ளும் இதுவரை ப்ரியாணிக்கு போட்டதில்லை, நிச்சயம் அடுத்த முறை இது போல முயற்சிக்கிறேன் செல்விக்கா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
செல்வி மேடம்
செல்வி மேடம் பிரியாணி அட்டகாசம் படமே சொல்லுது, வேர்கடலை எள்ளுலாம் சேர்த்து செய்வது புதுசா இருக்கு. சண்டே பிரியாணி இதுதான் ஃபிக்ஸ்ட்.
செல்விக்கா
அருமை. ஆனால் இப்பத்தான் கேள்விபடுறேன், வேர்க்கடலை, எள்ளு எல்லாம் பிரியாணியில் சேர்ப்பது,செய்து பார்க்க வேண்டும், செல்விக்கா பகிர்வு என்றால் சும்மாவா!சூப்பர் அக்கா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
Selvi madam
செல்வி மேடம்,
எங்க வீட்ல எல்லோருமே பிரியாணி பிரியர்கள், அதனால வித்தியாச வித்தியாசமான பிரியாணி ரெசிப்பிகளைத் தேடிக் கொண்டிருப்பேன்.வேர்க்கடலை எனக்கு அலர்ஜி, அதற்க்குப் பதிலா பாதாம் சேர்க்கலாமா? மற்றுமோர் ரெசிப்பி கிடைத்ததில் மகிழ்ச்சி.
நன்றி மேடம்.
நன்றி அட்மின்!
என்னுடைய குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை டீமிற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.
நன்றி வனி!
அன்பு வனி,
எனக்குமே ரொம்ப நாளுக்குப் பிறகு எனது குறிப்பை இங்கே பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க வனி.
அன்புடன்,
செல்வி.
அருட்செல்வி
அன்பு அருட்செல்வி,
எனக்குமே வேர்க்கடலையும், எள்ளும் புதிதாகத் தான் இருந்தது. சரியான அளவு சேர்த்தால் சுவையும், மணமும் அள்ளும். அவசியம் முயற்சிக்கவும்.
அன்புடன்,
செல்வி.
தேவி
அன்பு தேவி,
கண்டிப்பாக பிரியாணி அட்டகாசமாகத்தான் இருக்கும். ஓகே, சண்டே பிரியாணி சாப்பிட்டுட்டு வந்து சொல்லுங்க;)
அன்புடன்,
செல்வி.
ஆசியா!!
அன்பு ஆசியா,
நலமா? எத்தனை நாளாச்சு பேசி? புதுமையாகத்தான் இருக்கும். ஆனால், நல்ல ருசியாக இருக்கும். நீங்க செய்யற விதங்களை விடவா?
நன்றி ஆசியா.
அன்புடன்,
செல்வி.
வாணி!
அன்பு வாணி,
எங்க வீட்டிலும் அப்படித்தான். சண்டே தவறினாலும், பிரியாணி தவறாது. வாரம் ஒரு பிரியாணியாக முயற்சிப்பது தான் வேலை :)
பாதாம் சேர்த்தால் டேஸ்ட் வேறு மாதிரி மாறிவிடும். அக்ரூட் கிட்டதட்ட வேர்க்கடலை சுவை வரும். முயற்சிக்கவும்.
அன்புடன்,
செல்வி.
செல்வி மேடம்
ரெசிபி சூப்பர்... நிச்சயம் ட்ரை செய்துட்டு சொல்லுறேன்... :) :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
செல்வி
செல்வி மேடம் பிரியாணி,வேர்கடலை எள்ளுலாம் சேர்த்து நான் செய்தது கிடையாது.அவசியம் செய்து பார்க்கிரேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
செல்விக்கா
செல்விக்கா,
யப்பா... எவ்வளவு நாளாச்சி உங்களோட பேசி... எப்படி இருக்கிங்க? உங்க சிக்கன் பிரியாணி குறிப்பு அருமையா இருக்கு. வேர்க்கடலை, வெள்ளை எள் எல்லாம் பிரியாணியில் சேர்ப்பது புதுசா இருக்கு. அடுத்தமுறை பிரியாணி செய்யும்போது, இந்த மெத்தெட்ல செய்து பார்க்கிறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
கனிமொழி
அன்பு கனிமொழி,
மன்னிக்கவும். இப்பதான் பதிவு பார்க்கிறேன். அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
அன்புடன்,
செல்வி.
முசி
அன்பு முசி,
அவசியம் செய்து பாருங்க. வித்தியாசமாக இருக்கும்.
அன்புடன்,
செல்வி.
சுஸ்ரீ
அன்பு சுஸ்ரீ,
மன்னிகவும். இப்பதான் பார்க்கிறேன். அடுத்த முறை இது போல செய்து பாருங்க. நல்லா இருக்கும்.
அன்புடன்,
செல்வி.