பக்கோடா குழம்பு

தேதி: March 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பக்கோடா செய்வதற்கு:
துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 8 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
பொரிக்க - ரீஃபைண்ட் ஆயில்
குழம்பு செய்வதற்கு:
பொரிக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
பச்சை மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 6 (அ) 7
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 3
தேங்காய்ப்பூ - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
ரீஃபைண்ட் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி - சிறிதளவு


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, பெருஞ்சீரகம், பொரிக்கடலை, கசகசா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்ப்பூ ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கியுடன் பெரிய வெங்காயம் ம்ற்றும் தக்காளியைப் போட்டு குழைய வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
நன்றாக ஆறியதும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய்ப் பொடி தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு பதத்தில் கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பெருஞ்சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். (ஹாட் பேக்கில் வெந்நீர் ஊற்றி ஊற வைத்தால் அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும்.) பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்த பக்கோடாக்களை குழம்பில் போட்டு பச்சை கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். சுவையான பக்கோடா குழம்பு தயார். சாதம், பிரியாணி, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா பக்கோடா குழம்பு சூப்பர் மா, இப்பவே செய்யனும் போல இருக்கு. நாளைக்கு எங்க வீட்டில் இந்த குழம்பு தானே. ஈஸியான செய்முறையும் கூட
அப்பாடா முதல் முறையா முதல் பதிவு கொடுத்துட்டேன்

ம்ம்... சம சூப்பரு ;) வித விதமா அசத்துறிங்க். ட்ரை பண்ணாம விடுவேனா?! கட்டாயம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழம்பு மணக்குது சீதாம்மா. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பகோடா குழம்பு சூப்பர் அம்மா இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

அன்பு தேவி,

முதல் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

டேஸ்ட் நல்லா இருக்கும் வனி, சப்பாத்தி, பிரியாணிக்குக் கூட பக்க உணவாக சாப்பிடலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

வித்தியாசமான் குழம்பு,செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இந்த மளிகை லிஸ்ட் கொஞ்சம் சின்னதாக்கப்புடாதா?? அது ஏன் இத்தாச்சோடிருக்கு?! :( படிக்கவே 1 மணி நேரம் வேணுமாக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது போன்ற‌ குழம்பெல்லாம் செய்ததே இல்லை. முயற்சி செய்கிறேன் சீதாமேடம்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சீத்தாம்மா,
நான் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருக்கேன், மோர் குழம்புல‌ வடை போட்டு சாப்பிட்டு இருக்கேன், பக்கோடா குழம்பு சாப்பிட்டதே இல்லைமா,ட்ரை ப‌ண்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு முசி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

என்ன‌ பண்றது, இந்தக் குறிப்பு சொல்லித் தந்தவங்க‌, இவ்வளவும் சேர்த்துதான் செய்யணும்னு சொல்லிட்டாங்களே:):)

பேசாம‌ குழம்பாகவே செய்து பார்சல் அனுப்பிடறேன், சரியா?!!!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

கிட்டத்தட்ட‌ மட்டன் டேஸ்ட் இருந்ததாக‌, சாப்பிட்டவங்க‌ சொன்னாங்க‌, செய்து பாருங்க‌, பிடிக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுபி,

நானும் இதை முதல் முறையாக‌ செய்து பார்த்தேன், பிடிச்சிருந்தது. செய்து பாருங்க‌, நல்லா இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா செய்தாச்சு சாப்பிட்டாச்சு காலியாச்சு. ரொம்ப நல்லா இருந்துச்சும்மா. நானே பக்கோடா பொரிக்கும் போதே கொஞ்சம் சாப்பிட்டேன். அய்யோ குழம்பில போடனுமேன்னு போட்டேன்மா இல்லனா காலி செய்திருப்பேன்.

இந்த பார்சல் அனுப்புறேன்னு ஏமாத்து வேலையெல்லாம் நோ நோ... நான் செய்து படங்காட்டிட்டு தான் அடுத்தவேலை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதைப் போல் தான் நானும் செய்வேன்,ஆனால் கடலை மாவு பக்கோடா சேர்ப்பேன்.
நல்ல கலர்ஃபுல் ஆக இருக்கு. படங்கள் அருமை

சீதாம்மா பக்கோடா குழம்பு செய்தேன் மட்டன் குழம்பு போலவே நல்லா இருந்தது, ஆனால் ஒரு மிஸ்டேக் ஆகிட்டு பக்கோடா போட்டதும் குழம்பு மொத்தமும் கெட்டியாகிட்டு குழம்பு எது பக்கோடா எதுன்னே தெரியல. என்ன தவறு நான் செய்திருப்பேன்னு உங்களால் யூகிக்க முடியுதாம்மா, சொல்லுங்கம்மா அடுத்த முறை மீண்டும் செய்யும் போது திருத்திக்குறேன்.

WOW!!! REALLY PAKODA KUZHAMBU SUPER! IT WAS MY FAVORITE! MY MUM MAKES IT.

அன்பு தேவி,

செய்து பார்த்து, பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

குழம்புக்கு அரைச்சுக் கரைக்கறப்பவே, தேவையான அளவு தண்ணீர் சேத்துக்கோங்க, ஏன்னா, பொட்டுக்கடலை சேர்க்கறதால, குழம்பு சீக்கிரம் கெட்டியாகிடும்.

அதே போல, பக்கோடாக்களை, நல்லா ஆறின பிறகு, குழம்பில் சேர்த்தீங்கன்னா, கரையாமல் இருக்கும்னு நினைக்கிறேன்.

செய்து பார்த்து, சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுஜாதா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

பக்கோடா குழம்பு ரொம்ப நல்லா இருந்தது நன்றி

பார்க்க, படிக்க ஆசையா இருக்கு. இப்போதைக்கு பார்த்து ரசிச்சுட்டு புக்மார்க் செய்து வைச்சுட்டு கிளம்புறேன். வீட்ல யாரும் இல்லை. இன்னொரு சமயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

//(ஹாட் பேக்கில் வெந்நீர் ஊற்றி ஊற வைத்தால் அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும்.)// ஐடியா நல்லாருக்கே! தாங்ஸ்.

ஆறவைச்சு இருக்கிற விதம் அழ..கு சீதா. ;)

‍- இமா க்றிஸ்