கைக்குட்டை - இமா க்றிஸ்

“அக்கா!! எங்கால இந்த லேஞ்சி??? நல்..ல வடி..வா இருக்கு,” எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறா தங்கா.

எல்லா உடுப்பையும் கட்டிலில பரத்தி வைச்சுக் கொண்டு நான் அலுமாரி துப்புரவாக்கிறன். இவ அறைக்குள்ள வந்த காரணம் எனக்கு நல்லாவே தெரியும். நான் பாவிக்காமல் பத்திரமா வைச்சிருக்கிறதில வடிவானது ஏதாவது இருந்தால் கிடைக்காதா என்கிற ஆசைதான். ஆறாம் வகுப்புப் படிக்கிற சின்னப் பொம்பிளைக்குச் சின்னச் சின்ன ஆசைகள், பாவம்.

“வேணுமெண்டால் எடுக்கிறதுதானே! இந்தாரும்.” அப்படியே பாவிக்காமல் புதிதாக இருந்த ஆறு கைக்குட்டைகளையும் எடுத்துக் கொடுத்தேன்.

"நீங்கள் ஆசையா வாங்கினது. வைச்சிருங்கோ. எப்பவாவது வேணுமெண்டால்... கட்டாயம்... வந்..து... கடன்ன்ன்.... வாங்குவேன்ன்ன்." நான் கொடுப்பதாகச் சொன்ன சந்தோஷமும் அதை வாங்க விரும்பாத சின்ன மனவருத்தமும் கலந்தது போல ஒரு சின்னச் சிரிப்போடு நீட்டி ராகம் இழுத்துவிட்டு என் கன்னத்திக் கிள்ளினாள் தங்கை.

"இல்ல, பரவாயில்ல. நீங்கள் எடுங்கோ. நான் வாங்க இல்ல. எனக்கு ஒரு கிஃப்ட்டாகக் கிடைச்சது அது."

"அப்பிடியெண்டால் கட்டாயமாக நீங்கள்தான் பாவிக்க வேணும். எனக்குத் தரக் கூடாது."

"இந்தாரும் பிடியும்," அப்படியே காகிதப் பையோடு தங்கை கையில் வைக்க, "இல்ல அக்கா! இது கடைகளில விக்கிற மாதிரி இல்லாமல் வித்தியாசமாக் கிடக்கு எண்டுதான் விசாரிச்சனான். எனக்கு வேணாம். பிறகு உங்கட ஃப்ரென்ட் என்ட கையில இதைப் பார்த்தால் துக்கப்படப் போறா." மறுத்தாள். தானாகவே பெண் தோழி கொடுத்ததாக ஊகித்து வைத்த தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

"பிடியும் தங்கா. இது உமக்கு என்ட கிஃப்ட். நீர் பாவிக்கிறது நான் பாவிக்கிறதுக்குச் சரி. இதுகள் என்னட்ட இருக்கிறதை விட உம்மட்ட இருக்கிறதுதான் இனி எனக்குச் சந்தோஷமா இருக்கும். நல்ல பிள்ளை மாதிரி வாங்கும், ம்!" என்று கையில் திணித்துவிட எனக்கு ஒரு முத்தம், பிறகு ஒரு குதி என்று சந்தோஷக் குவியலாக வெளியே ஓடிப் போனா.

இதற்கு மேல் எதற்கு எனக்கு அவை! நினைவுச் சின்னமா!

போன மாசம் அம்மாவின்ர ஆசியர் பயிற்சிக் கலாசாலைத் தோழி ஸ்டெலா மாமி தன்ர மகன் ஏதோ வேலைக்கு நேர்முகப் பரீட்சைக்கு வாறதெண்டும் தங்குறதுக்கு இடம் ஒழுங்குபடுத்தித் தர வேணுமெண்டும் கேட்டு கடிதம் போட்டு இருக்க இங்கயே தங்கலாம் எண்டு அம்மா சொல்லியிருந்தா.

அவர் வந்து வந்த வேலை எல்லாம் நல்லபடி முடிஞ்சு வேலையும் கிடைச்சாச்சுது. அந்த நாலைஞ்சு நாளும் எவ்வளவு சந்தோஷமா இருந்தன்.

என்ர பாட்டில வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தன் அதுக்கு முன்னால. வந்து சந்தோஷமாக் கதைச்சு... மனசில ஒரு ஆசை வளர்ந்து போச்சுது எனக்கு. முதலில நான் மட்டும் தான் இப்பிடி நினைச்சுக் கொண்டு இருந்தன் எண்டுதான் நினைச்சன்.

வெளிக்கிடுறதுக்கு முதல் நாள்.. “நான் காலம்பிற பஸ்ஸில போறன் மிதிலா. போய் உங்களுக்குக் கடிதம் போடுறன்.” எண்டார். இன்னதெண்டு விளங்காமல் ஒரு கலவரம் எனக்குள்ள. ஆனாலும் 'கடிதம் போடுவன்,' எண்டு சொன்னது ஒரு ஆறுதலாயும் நம்பிக்கையாயும் இருந்துது.

காலையில நான் எழும்பிப் பார்க்கேக்க என் தலகாணிக்குக் கீழ இந்த ஆறு லேஞ்சியும் இருக்குது. நடுவில ஒரு கடிதம்...

அன்பு மிதிலாவுக்கு,

போகும் முன் என் விருப்பத்தை அன்ரியிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். எப்படி எடுத்துக் கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை. நான் அம்மாவையே இங்கு வந்து கதைக்கச் சொல்கிறேன்.

எல்லாம் நல்லபடி நடக்கும்.

அன்புடன்
ஷியாம்

ஆசையாகக் கடிதத்தைப் படித்துவிட்டு பத்திரமாக எடுத்து வைத்தேன். வேலையில சேர வரேக்க திரும்பவும் எங்கட வீட்டிலதான் தங்கவேணும். இங்க வேற தெரிஞ்ச ஆக்கள் இல்லை அவங்களுக்கு. ஆனால் என்ன என்று தெரியேல்ல; ஆள் வரவே இல்லை. 'வேற நல்ல வேலை ஊரோட கிடைச்சிருக்குமோ! அப்பிடியெண்டாலும் கடிதம் போடுறதுதானே! இப்பிடி என்னை யோசிக்க வைக்கிறாரே!' என்று யோசிச்சுக் கொண்டு இருந்தன் நேற்று வரைக்கும்.

நேற்று ஒரு தபால் வந்தது அம்மாவுக்கு.

என்ன சொல்ல! அவருக்குக் வேறு நல்ல இடத்தில் கலியாணம். அழைப்பு வந்திருந்தது. இங்கதான் வேலை செய்யிறாராம், வேற எங்கயோ ரூம் எடுத்துத் தங்கிக் கொண்டு.

யார்ட்டயும் சொல்லி ஆறுதல் தேட முடியேல்ல. எதையாவது செய்து கவனத்தைத் திருப்பலாம் எண்டுதான் அலுமாரியைக் கிண்டத் தொடங்கினன்.

அப்பவும் அந்த அன்பளிப்பு கண்ணுக்கு முன்னால வந்து... பார்க்கப் பார்க்க என் அன்பு அழிந்து போனது ஞாபகம் வந்தது. பாவிக்க ஏலாது என்னால இனி. கையில எடுத்தாலே கண்ணில தண்ணி வந்தது. தூக்கி வீசுறது எப்பிடி! அதுதான் இவ்வளவு நாளும் சீலைகளுக்கு அடியில ஒளிச்சு வைச்சிருந்தனான். இப்ப வெளிய வந்திட்டுது.

எனக்குத் துக்கத்தைக் கொடுக்கிற ஒன்று இன்னொரு ஆளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கப் போகுது. நல்ல விஷயம்தானே! போகட்டும்! லேஞ்சியை மட்டும் சொல்லேல்ல நான்.

பின்னேரம் டியூஷன் முடிந்து வந்த தங்கை கைக்குட்டைகளைப் பிரிக்காமல் அப்படியே திருப்பிக் கொடுத்தாள், “அக்கா, லேஞ்சி ப்ரசண்ட் பண்ணக் கூடாதாம். ஃப்ரென்ஷிப் உடைஞ்சு போயிருமாம் எண்டு ஒரு ஃப்ரென்ட் சொன்னவ. இது உங்கள்ட்டயே இருக்கட்டும்,” என் முகத்தைப் பார்க்கவில்லை.

"இதையெல்லாம் நம்புறீரோ நீர்! மக்குப் பிள்ளை! அப்பிடி ஒண்டும் இல்லை. வைச்சிரும்," அரை நாள் உரிமையாக இருந்ததைப் பிரிய மனசில்லை என்று நான் நினைச்சது பிழை எண்டு கொஞ்சத்தில விளங்கினது. "இல்ல, தற்செலா ஏதாவது நடந்தால்!! எனக்கு என்ட அக்கா வேணும்," முகத்தைக் காட்டாமல் கட்டிலில் வைத்து விட்டுத் திரும்ப... சீமெந்துத் தரையில் ஒரு சொட்டுக் கண்ணீர்.

இழுத்து அணைத்துக் கொண்டேன். "என்ன தங்கா இது! உயிரே இல்லாத லேஞ்சி அது. ஃப்ரெண்ட்ஸ் சொல்ற லூஸ் கதையெல்லாம் நம்பிக் கொண்டு... அக்கா உம்மோட கோவிப்பனா? சரியான மக்குப்பிள்ளை!" விசும்பல் பதிலாக வந்தது. "நீங்களும் அதை உங்கட ஃப்ரெண்டிட்ட திருப்பிக் குடுத்திருங்க. எதுக்கு ரிஸ்க்!"

இதற்கு நான் என்ன பதில் சொல்ல!!

Comments

ரொம்ப நல்லா இருக்குங்க கதை.. கைக்குட்டையை வைத்து நல்ல செண்டிமெண்ட்..
ரொம்ப அருமைங் :-)

நட்புடன்
குணா

அன்பு இமா,
கைக்குட்டை சென்டிமெண்டை வைத்து நல்ல‌ கதை. தமிழ் நல்லா இருக்கு.
பாராட்டுக்கள் இமா.

அன்புடன்,
செல்வி.

கைக்குட்டை, பேனை எல்லாம் கொடுத்தா ப்ரென்ட்ஸிப் உடைந்திடும் என்று சொல்வாங்கதான், உண்மையா பொய்யா என்று தெரியாது ஆனாலும் அதை follow பண்ணிகொண்டுதானே இருக்கேன்.
நல்லா இருக்கு கதை, அழகா சொல்லிருக்கிங்கள்.

கதை மிகவும் அருமையாக இருக்கிறது. அந்த அன்பளிப்பு கண்ணீரைத் துடைப்பதற்காகத் தானோ?

இந்தத் தமிழைப் படிக்கப் படிக்க ஆசையாக இருக்கிறது...

கலை

கதை அருமையாக இருக்கு. கைக்குட்டை என்ற தலைப்பும் அருமை உங்கள் தமிழும் சூப்பர். படிக்க சுவாரசியமாக உள்ளது.

கதை அருமை அக்கா. அருமையான நடை. படித்தேன் ரசித்தேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கதை அருமை எழுத்து நடை அதை விட ரசிக்குபடியா இருந்துச்சு. கைக்குட்டைக்குள் காதலும் பாசமும்.

கைக்குட்டை கதை அழகான‌ தமிழ்ல‌ சொல்லி இருக்கீங்க‌ :)
இங்கயும் இது போன்ற‌ வழக்கம் உண்டு. கைக்குட்டை பரிசளிப்பு கிடையாது.

இன்னும் சொல்லப்போனா உணவு சமைப்பதில் கூட‌ சில‌ சாங்கியங்கள் கடைபிடிப்பதுண்டு. முதன்முறையாக‌ வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் பொண்ணு மாப்பிள்ளைக்கு, நான்வெஜ் உணவு சமைத்து பரிமாறக்கூடாது. அதற்காக‌ முதலில் ஸ்வீட் சாபிட்டு அப்பரம் சாப்பிடலாம், என‌ தற்பொழுது சாங்கியம் தளர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் வீட்டுக்கு வரும் உறவினருக்கு அரிசிபருப்பு சாதம் செய்யக்கூடாது என‌ மணமான‌ பொழுதே பெண்ணுக்கு அறிவுறுத்தி அனுப்புவர்.
எனக்கு தெரிந்து எங்கவீட்ல‌ அம்மா ஒருநாள் கூட‌ உறவினருக்கு இந்த‌ சாதம் சமைத்ததில்லை, ஏன் என்று கேட்டால், அப்பிடித்தான் என்ற‌ பதில் மட்டுமே கிடைக்கும்.

இன்னும் நிறைய‌ உண்டு, பிறகு அவ்வப்பொழுது சொல்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

:-) //இன்னும் நிறைய‌ உண்டு, பிறகு அவ்வப்பொழுது சொல்கிறேன்.// வேணாம். :-) இதையெல்லாம் நம்புறீங்களா!!!!

கைக்குட்டை பேனாவெல்லாம் முதல் மனிதனிடம் இருந்திராது. அனைத்தும் மனிதன் உருவாக்கியவை; இது போன்ற நம்பிக்கைகள் உட்பட. ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்களாக இருக்கும். ஆனால் அவர்கள் நம்பாத கருத்துகளையெல்லாம் நாம் உருவாக்கி ஏன் என்று தெரியாவிட்டாலும் பிடிவாதமாக நம்புவோம்!! ;)

எனக்கு கைக்குட்டை பேனா தந்த நட்புகள் எல்லோரும் இன்னமும் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். நம்பாதவர்களுக்கு எதுவுமே ஆவதில்லை. தற்செயலாக நடப்பவைகளுக்கும் காரணம் ஆராய்ந்து அவற்றை நம்பிக்கைகளாக்கிக் கொள்வதா!

//அப்பிடித்தான் என்ற‌ பதில் மட்டுமே கிடைக்கும்.//
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

சில விடயங்களுக்குக் காரணம் இருக்கும். சரியானது தெரிந்திராது. பலது... சும்மா உலவுது.

‍- இமா க்றிஸ்

//உண்மையா பொய்யா என்று தெரியாது// என் அனுபவம்... உண்மையல்ல அது.
//ஆனாலும் அதை follow பண்ணிகொண்டுதானே இருக்கேன்.// ம்.. நம்புகிறவர்களுக்குக் கொடுப்பதில்லை நானும். வீணாக அவர்களது நிம்மதியைக் கெடுப்பானேன்!

‍- இமா க்றிஸ்

அனைத்துக் கருத்துகளையும் படித்தேன். குணா, செல்வி, சுதர்ஷினி, கலை, பாலபாரதி, உமா, தேவி, அருள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

இமா
கடைசியில மிதிலா விஷயத்தில் கைக்குட்டை சென்டிமெண்ட் உண்மையாகிப் போச்சே.
கதை ரொம்ப நல்லாருக்கு இமா

ஹஹஹா.... நான் என்னில் சரிபாதிக்கே அடிக்கடி கைக்குட்டை வாங்கி தரனே ;) எனக்கும் சில நம்பிக்கைகள் உண்டு... இது போல அல்ல. அது போன்ற நம்பிக்கை இல்லாதவங்களுக்கு நான் அவற்றை தர யோசிப்பதும் இல்லை. நல்ல கதை, படிக்க நல்லா இருக்கு தமிழ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)) அதானே வனி! இதெல்லாம் உண்மை இல்லை. இன்னமும் அழகழகாக சிலது இருக்கு. என் தோழி கொடுத்ததும். நட்பு முன்பு இருந்தது போலவேதான் இருக்கு.

நிகிலா... கைக்குட்டை சென்டிமெண்ட் உண்மையாகிப் போகல. :-) அது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டும்தான். மிதிலா சொல்ல முடியாமல் போனது தங்கை இன்னும் அதிகமாக அந்தக் கருத்தைப் பிடித்துக் கொள்வார்களோ என்பதால்.

‍- இமா க்றிஸ்

நல்லதொரு கதை. நன்றாக எழுதியிருக்கிறீங்க. எனக்கும் நம்பிக்கையில்லை. கனநாளாச்சு ஊர்தமிழில் கதை படிச்சு.
//நம்பாதவர்களுக்கு எதுவுமே ஆவதில்லை// உண்மைதான்.

இது எப்ப! நீங்கள் வந்ததே தெரியேல்லையே! நன்றி அம்முலு. :-)

‍- இமா க்றிஸ்

ima.kaikkuttai sentiment enga frndship laum undu. story vrry nic.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

என் கணவருக்கு நான் தந்தது பார்கர் பேனா @ பிறந்தநாள் பரிசாக ,,எனக்கு அந்த நம்பிக்கை இருந்தாலும் கொடுத்தேன் ஆசையாக @

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..