தேதி: April 3, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சை தட்டக்காய் - கால் கிலோ
சுரைக்காய் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று
புளி - 50 கிராம்
வெல்லம் - ஒரு கோலி அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை மூடி
கறிவேப்பிலை - 10
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 6
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைப் பொடியாகவும், தாளிக்கக் கொடுத்துள்ள வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும்.

தட்டக்காயை உரித்துவிட்டு வேக வைக்கவும். (வேக வைத்தும் உரிக்கலாம்).

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டுப் பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து காய்கள் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

காய்கள் நன்கு வதங்கியதும் வேக வைத்த தட்டக்காய் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கொதிக்கவிட்டு குழம்பு திக்கானதும் இறக்கவும்.

சுவையான பச்சை தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு ரெடி. சாதம், தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கவும். இந்தக் குழம்பு வைத்த அன்றைய நாளைவிட அடுத்த நாள் இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்.

Comments
செல்வியக்கா
சத்தான குறிப்பு அக்கா. நான் தட்டைபயறு & கத்தரிக்காய் சேர்த்து சமைச்சிருக்கேன். இதையும் ட்ரை பண்றேன்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
செல்விக்கா
செல்விக்கா, பச்சை தட்டைபயிறு போட்டு குழம்பு வைத்ததில்லை, கட்டாயம் இது போல் செய்து பார்க்கணும். குறிப்பு பார்க்கும்போதே சுவையும் தெரியுது :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
செல்வி மேடம்
நல்ல சத்தான குழம்பு.தட்டைப் பயறு எனக்கு கிடைப்பதில்லை
சுரைக்காய்
அன்பு உமா,
கத்தரிக்காய் போலவே, சுரைக்காயும் சேர்த்து செய்யலாம். நல்லா இருக்கும். செய்து பாருங்க.
அன்புடன்,
செல்வி.
அருள்
அன்பு அருட்செல்வி,
நானும் இங்க வந்து பச்சை தட்டக்காய் நிறைய கிடைப்பதை பார்த்துத்தான் முயற்சித்தேன். நல்லா இருக்கவே, சீசனில் அடிக்கடி செய்வேன்.எத்தனை நாள்தான் உப்பு போட்டு அவிச்சு மட்டும் சாப்பிடறது?
அன்புடன்,
செல்வி.
வாணி
அன்பு வாணி,
காய்ந்த தட்டைப்பயறை ஊற வைத்து, வேக வைத்து அதிலும் செய்யலாம். அது ஒரு டேஸ்ட். இது ஒரு டேஸ்ட்.
அன்புடன்,
செல்வி.
அம்மா இது போல குழம்பு
அம்மா இது போல குழம்பு வெப்பாங்க... ஆனா தட்ட பயறுசேர்த்து... நல்ல குறிப்பு
பிரியா
அன்பு பிரியா,
நம்ம பக்கம் தட்டபயறு சேர்த்துத்தான் செய்வாங்க. இங்க தட்டக்காய் நல்ல நீளநீளமாகக் கிடைக்கும். அதுவும் இந்த வருடம் நல்ல விளைச்சல் போல. மலிஞ்சு கிடந்தது. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு முயற்சித்தேன். நல்லா இருந்துச்சு. நன்றி.
அன்புடன்,
செல்வி.