இட்லி

தேதி: April 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

இட்லி அரிசி - 4 கப்
முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
கல் உப்பு - 4 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)


 

அரிசியை நன்றாகக் களைந்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். உளுந்தையும் நன்றாகக் களைந்து, அத்துடன் வெந்தயத்தைச் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் உளுந்து அல்லது அரிசி இவற்றில் எதை வேண்டுமாலும் முதலில் அரைக்கலாம். (சிலர் க்ரைண்டர் சூடாகிப் போனால் உளுந்து மாவு பொங்கிவராது என முதலில் உளுந்தை அரைப்பார்கள். நான் முதலில் அரிசியைத் தான் அரைத்துள்ளேன்). க்ரைண்டரில் அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் வரை அரைக்கவும். தேவைக்கேற்ப நீர் விட்டு படத்தில் காட்டியுள்ள பதம் வந்ததும் அரிசி மாவை முழுவதும் வழித்து எடுத்துவிடவும். (சிலர் சற்று கொரகொரப்பாக அரைப்பார்கள். நைசாக அரைபட்டாலும் பரவாயில்லை).
பிறகு ஊறவைத்த உளுந்து மற்றும் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். (உளுந்துக்கு நீர் அதிகமாக ஊற்றாமல், கையால் தெளிக்க வேண்டும். உளுந்து அரைக்கும் போது நிறையவே நீர் தெளிக்க வேண்டும், அப்போது தான் மாவு பொங்க அரைபடும். எனவே ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து ஒரு கை அளவு நீர் தெளித்து ஓரத்தை வழித்துவிட்டு மூடிவிடவும். தேவையான நீரின்றி உளுந்து அரைத்தால் மாவு கெட்டியாக இருக்கும். இட்லியும் கெட்டியாக இருக்கும்).
உளுந்து மாவை வெண்ணெய் போல் நைசாக அரைக்கவும். மாவைக் கையில் எடுத்தால் அப்படியே கெட்டியாக நிற்பது போன்ற பதத்தில் (முட்டையின் வெள்ளைக் கருவை ப்ளெண்டரில் அடித்து எடுத்தால் அப்படியே நிற்பது போல்) இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால் பந்து போல மிதக்கும். இது தான் உளுந்து மாவுக்கு சரியான பதம். இந்த பதத்தில் உளுந்து மாவை வழித்து எடுத்து அரிசி மாவில் ஊற்றவும்.
மாவை முழுவதும் ஊற்றிய பிறகு பாத்திரத்தில் பாதி அளவு தான் மாவு இருக்க வேண்டும். (கேக் செய்யும் போது எந்த அளவில் கலவையை ஊற்றுவோமோ அதுபோல இருக்க வேண்டும். அப்போது தான் மாவு பொங்கி வந்தால் பாத்திரத்தைவிட்டு வெளியில் வழிந்து விடாமலிருக்கும்). தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கைகளால் அடித்துக் கரைக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைக்கும் போது பாத்திரத்தின் ஓரங்களில் படத்தில் உள்ளது போல நுரைத்து வரும். இதேபோல் அரிசி மாவும், உளுந்து மாவும் நன்றாகக் கலக்கும்படி அடித்துக் கலந்து கொள்ளவும்.
இப்போது மாவு தயார். இதை இரவு முழுவதும் புளிக்கவிடவும். குளிரான இடமாக இருப்பின் அவனில் வைத்து மூடிவிடலாம். சிலர் அவனில் பாத்திரத்தை வைத்து அதன் விளக்கைப் போட்டு வைப்பார்கள். வெதுவெதுப்பான இடத்தில் வைத்துவிட்டால் 8 மணி நேரத்தில் மாவு நன்றாக பொங்கி புளித்துவிடும்.
அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் பாதி அளவு வைத்திருந்த மாவு இப்படி முழுவதுமாக பொங்கி இருக்கும்.
மாவை அதிகமாகக் கலக்காமல், ஒரளவு நன்றாக கலந்துவிடவும். இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கரில் (விசில் இல்லாமல்) நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நீர் கொதிக்கத் துவங்கியதும், இட்லி தட்டில் துணியைப் போட்டு நீர் தெளித்து (நீரை அதிகமாக தெளிக்க வேண்டாம்) மாவை ஊற்றவும். இட்லி ஊற்றும் போது மாவை பாத்திரத்தின் ஓரத்திலிருந்து எடுத்து ஊற்றவும்.
கேக் செய்யும் போது முற்சூடு செய்த அவனில் வைப்பது போல், நீர் நன்றாக கொதித்து வந்ததும் இட்லித் தட்டை குக்கரில் வைக்கவும். (அரிசி, உளுந்து பிரிந்து தெளியாமல் இருக்க இது முக்கியம்).
குக்கரை மூடி அதிக தீயில் வைத்து ப்ரஷர் நன்றாக வரும் போது சற்று மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். நன்றாக வெந்திருக்கிறதா என்பதை கவனிக்கவும். இட்லியைப் பார்த்தாலே எவ்வளவு சாஃப்ட் எனத் தெரியும்.
சுவையான, பஞ்சு போன்ற நம்ம ஊர் ஸ்பெஷல் இட்லி தயார். இந்தக் குறிப்பை செய்து காட்டியவர் நம் அன்பு சீதாலஷ்மி. படங்கள் எடுத்தது வனிதா.

இட்லி மாவுக்கு சோடா உப்பு எதுவும் தேவையில்லை, அரைத்த மாவில் நீர் சேர்க்காமல் அப்படியே பயன்படுத்தலாம். இட்லி மிகவும் மென்மையாக பஞ்சு போல இருக்கும். உளுந்தை மட்டும் பதமாக அரைத்து எடுத்துவிட்டால் இட்லி கல் போல இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. மாவு அரைக்கும் போது நீர் அதிகமாகிவிட்டாலோ அல்லது உளுந்து அதிகமாகிவிட்டாலோ இட்லி அழுந்தியது போல இருக்கும்.

உளுந்து அதிகமாகினால் சில நேரங்களில் இட்லி நன்றாக வரும், தோசைக்கு தான் சற்று சரிவராது. ஆனால் நீர் அதிகமாகினால் வேறு வழியே இல்லை, மாவை தோசைக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வெந்தயமும் கட்டாயம் இல்லை. வெந்தயம் சேர்த்தால் வாசமும், தோசையின் நிறமும் நன்றாக இருக்கும்.

இட்லி வேகவைக்க 10 - 15 நிமிடங்கள் போதுமானது. அதிக நேரம் இருந்தாலும் இட்லி சாஃப்ட்டாக இல்லாமல் கெட்டியாக வரும். வெந்ததும் எடுப்பது தான் சரி. இட்லி தட்டில் எண்ணெய் விட்டு ஊற்றினால் குக்கரை விட்டு எடுத்து சிறிது ஆறிய பின்பு இட்லிகளை எடுக்கவும். சூடாக இருக்கும் போதே எடுத்தால் இட்லிகள் ஒட்டிக்கொண்டு சரியாகவராது. துணி போட்டு ஊற்றினால் துணியோடு தட்டில் கவிழ்த்து துணியின் மேலே சிறிது நீர் தெளித்து விட்டு, துணியை எடுத்தால் இட்லிகள் தட்டில் தனியாக வந்துவிடும்.

மாவு அரைத்த முதல் 2, 3 நாட்களுக்கு இட்லி நன்றாக வரும். அதன் பிறகு மாவை தோசைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இட்லி செய்யத் தெரிந்தவர்களுக்கு இதற்கு ஒரு ரெசிபியா எனத் தோன்றலாம். ஆனால், புதிதாக சமைக்கும் பலருக்கு வசப்படாத ஒன்று இந்த இட்லி மாவு அரைக்கும் பதம் தான். இந்த முறையில் அரைத்தால் உங்கள் இட்லிக்கும் நிச்சயமாக பாராட்டு கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு இட்லி தோச எல்லாம் உசுருங ஆனா எனக்கு இதலாம் செய்ய தெரியாது ஆமா இதே அளவில் கலந்து தோசை ஊற்றலாமா அடுத்து இட்லி மாவு கடையால் வாங்கி இட்லி சட்டியில் அவித்துல்லேன் இதற்கு கன நேரம் எடுக்குது

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மிகவும் பயனுள்ள குறிப்பு. எவ்வளவுதான் அரிசி , உளுந்து அளந்து ஊற வைத்து பக்குவமா அரைத்தாலும் எங்க இட்லி ஒன்னு கல் மாதிரி இருக்கும் இல்லைனா இட்லி துணியிலேயே இட்லி ஒட்டிக்கொள்ளும். இதனாலேயே இட்லி சுடவே மாட்டேன் தோசைதான் இந்த குறிப்பு எனக்கு ரொம்ப பயனுள்ள குறிப்பு. நன்றி சீதா அம்மா

அன்பு சீதாலஷ்மி,
நீங்கள் கூறியுள்ளது போல‌ நிறைய‌ பேருக்கு உதவும். கண்டிப்பாக‌ இட்லிக்கு மாவு அரைப்பதும் ஒரு கலைதான்.

அன்புடன்,
செல்வி.

அட நம்ம இட்லி,சீதாம்மா எனக்கு இட்லியே சரியா வராது,விரல் விட்டு எண்ணிடலாம் நல்லா சுட்ட நாளை .ரொம்ப தான்க்ஸ் இந்த ரெசிபிக்கு.இது எங்க சுட்ட இட்லின்னு எனக்கு தெரியுமே

Be simple be sample

ஸ்டெப் பை ஸ்டெப் தெளிவான படங்கள் சீதா மேடம்.ரைஸ் கேக்(இட்லி) செய்யும் முறையை கேக்கிற்க்கு ஒப்பிட்டு அருமையான விளக்கங்கள்.

சீதாம்மா வனிதா இரண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, இந்த இட்லிய நானும் வெவ்வேறு அளவில் வேற மாதிரி அரைச்சு என்னனமோ சேர்த்து அரைச்சி எல்லாம் முயற்சி செய்து பார்த்துட்டேன் ஒரு சில நேரம் நல்லா வரும் பல நேரம் சரியாவே வராது. நீங்க ரொம்ப தெளிவா விளக்கமா சொல்லி இருக்கீங்க, இந்த சண்டே இப்படி அரைக்க போறேன் அரைச்சுட்டு திங்கள் இட்லி எப்படி வந்ததுன்னு சொல்றேன். படங்கள் எல்லாமே புரியும்படியா தெளிவா இருக்கு.
நிச்சயமா நிறைய பேருக்கு இந்த குறிப்பு பயனுள்ளதா இருக்கும் நன்றி நன்றி

இட்லி அனைவருக்கும் பயனுள்ள‌ குறிப்பு.அடுத்த‌ முறை அரைக்கும் போது நீங்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன்.படங்கள் தெளிவு வனி.சீதாம்மா நல்ல‌ போதுமான‌ விளக்கத்துடன் செய்முறை சொல்லிருப்பது அனைவருக்கும் உபயோகமாக‌ இருக்கும்.நன்றி.

Expectation lead to Disappointment

ரொம்ப பயனுள்ள குறிப்பு சீதாம்மா. எனக்கு எப்பவும் இட்லி பிரச்சினையில்லாம வரும். இந்த முறையிலும் அரைச்சு செய்து பாக்குறேன். எல்லோருக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும். படங்களும் அருமை வனி. ஆமா.... நீங்க ரெண்டு பேரும் எப்ப ஒன்னா சேர்ந்து இட்லி சுட்டிங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சீதா... சாஃப்ட் சாஃப்ட் இட்லிக்கு மிக்க நன்றி ;)

மக்களே... எனக்கு இட்லி எப்பவும் சொதப்பும், இதுக்கு முன் என்னிடம் இருந்த தமிழ் சமையல் ஆட்கள் தான் மாவு போடுவாங்க, நான் அரைச்சு இட்லி செய்தா எங்க ஆள் அதாலயே அடிப்பேன்பார் ;) ஹஹஹா. கேக் பதம் தப்பாம வரும், ஆனா இட்லி!!! 3:) பெங்களூர் வந்த பின் அண்ணி தான் 2 முறை வந்து பதம் சொல்லிக்கொடுத்தார். அதன் பின் இட்லி ஓரளவு நல்லாவே வந்தது. அடிக்கடி மாவு போட ஆரம்பிச்சுட்டேன். அப்ப இருந்த கொஞ்ச நஞ்ச டவுட்டையும் சீதா வந்து தீர்த்து வெச்சுட்டாங்க. இப்போ பெர்ஃபக்ட்.

பத்து நாள் முன் சீதா பெங்களூர் வந்திருந்தாங்க, ஒரு 1 மணி நேரம் தான் இருக்க முடிஞ்சுது அவங்களால். இந்த இட்லி ரெசிபி அறுசுவையில் கொடுக்கனும்னே செய்தோம் இருவரும். வீட்டுக்கு வந்து புடவை எல்லாம் மாவை பூசிக்கொண்டு போனாங்க ;) நிறைய பேர் மாவு அரைக்கிறதுல டவுட் கேட்டு இழை போட்டிருக்காங்க, இது உதவும் என்ற எண்ணம். செய்து பார்த்து சொல்லுங்க :) கேக் கூட கம்பேர் பண்ணி எனக்கு பாடம் எடுத்ததும் சீதாவே தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே எடுத்து சாப்பிடனும் போல‌ இருக்கு!. பயனுள்ள‌ குறிப்பு.
எனக்கு இட்லி நன்றாக வரும். ஆனாலும், சில‌ சந்தேகங்கள்.
1.இட்லி சில‌ சமயங்களில் நடுவில் மட்டும் கொஞ்சமா கெட்டியா வருதுங்க‌, ஏன் அப்படி??
2.மாவு புளித்தவுடன் இட்லி ஊற்றினால், நன்றாக‌ வருது. அடுத்த‌ நாள் ஊற்றினால்(ஃப்ரிஜ்ல‌ வைத்து) தட்டையா,கெட்டியா வருது, ஏன்? (நான் இருக்கும் ஊரில் வெயில் காலம் மிகவும் குறைவு, அதனால‌, எனக்கு அப்படி ஒன்னும் ஆஹா,ஓஹான்னு எல்லாம் புளிக்காதுங்க‌.அவனில் பாத்திரத்தை வைத்து விளக்கைப் போட்டு வைத்தாலும்,கொஞ்சமா பொங்கும்.)

அன்புடன்
உஷா

அழகான செய்முறை ... விளக்கமான ரெசிபி ...கலக்கிடிங்க

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

நிறைய‌ பேருக்கு நல்ல‌ பயனுள்ள‌ குறிப்பு சீதாமேடம் &வனி :)
இட்டிலி எங்கூட்டு மக்கள் அனைவருக்கும் பிடித்த‌ உணவு. அதனாலயோ என்னவோ தெரில‌ ஓரளவுக்கு நல்லாவே சுடுவேன்.
இருந்தும் இதிலிருக்கும் சில‌ டிப்ஸ் இனிமே நானும் ஃபாலோ பண்ணப்போறேன்.
'ஓரளவிலிருந்து', 'மிக‌ நன்று' என்னும் கேட்டகிரிக்கு போக‌ வழி சொல்லியமைக்கு, மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அம்மா ஊளுந்து அதிக நேரம் ஊற வைக்ககூடாது சொல்லுராங்க அது சரியா நான் ஒரு மணி நேரம் ஊற வைப்பேன் இட்லி ஓரளவுக்கு வரும் நான் என்ன சொய்வது,,,

சீதா வந்து உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்வாங்க... நீங்க கேட்டதில் எனக்கு தெரிஞ்சது மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்தா கொஞ்ச நேரம் வெளிய வெச்ச்ருந்து ரூம் டெம்பரேச்சர் வந்ததும் ஊற்ற வேண்டும். உங்க ஊரில் அதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும் என்றால் அவனில் கொஞ்ச நேரம் லைட் போட்டு வைத்தே எடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு சீதா, அம்மா, அண்ணி எல்லாருமே அரிசி ஊற வைக்கும் போதே தான் உளுந்தும் ஊற வைக்க சொன்னாங்க. நல்லா வருது. பயப்படாம ஊற வைங்க. மொத்தமா எல்லாமே காலை 10 மணிக்கு ஊற வெச்சா மாலை 5 அல்லது 6 மணிக்கு ஆட்டலாம். 1 - 2 மணி நேரத்துக்குள்ள எல்லாம் முடிச்சு வெச்சு மூடி வெச்சா மறுநாள் காலை 7 க்குள்ள புளிச்சு நல்லா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையல் குறிப்பு என்பதற்கு மேல் நுணுக்கமாக விபரங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள். தி பெஸ்ட் எவர் இட்லி குறிப்பு. நிச்சயம் நிறையப் பேருக்கு உதவும்.

‍- இமா க்றிஸ்

நன்றி வனிதா அப்படியே செய்கிறேன் ,,,,

அன்பு ஜனாதுல்,

இதே அளவில் கலந்து, தோசையும் செய்யலாம். அரிசி, பருப்பு, ஊற‌ வைத்து, களைந்து, அதற்குப் பிறகு தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து செய்யணும்.

செய்து பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

அரிசி, பருப்பு, ஊற‌ வைத்து, களைந்து, அதற்குப் பிறகு தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து செய்யணும்.

இட்லிப் பானையில் தண்ணீர் ஊற்றி, அது நன்றாகக் கொதி வந்ததும், பிறகு, இட்லித் தட்டில் மாவு ஊற்றி, வேக‌ வைக்கணும்.

இட்லித் துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, சுருக்கம் இல்லாமல் இட்லித் தட்டில் போட்டு, மீண்டும் லேசாக‌ தண்ணீர் தெளித்து, அதற்குப் பிறகு, மாவை ஊற்றணும்.

இட்லித் துணியின் நடுவில் சின்னதா கட் செய்து, துளை போட்டுக்கோங்க‌.

இட்லி வெந்ததும், இட்லித் தட்டை விட‌ சற்று பெரிய‌ தட்டில், இட்லித் தட்டை
அப்படியே கவிழ்க்கணும்.

அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து, 5 விநாடி அப்படியே விட்டுடுங்க‌. பிறகு தட்டை மட்டும் எடுத்துட்டு, துணியின் மீதும் சிறிது தண்ணீர் தெளித்து, 5 வினாடிகளுக்கு அப்புறம், மெதுவாக‌ இட்லித் துணியை பிரித்து எடுத்தால், இட்லி ஒட்டிக்காம‌ வரும்.

தண்ணீர் தெளித்து, சில‌ வினாடிகள் ஸ்டாண்டிங் டைம் கொடுத்து, பொறுமையாக‌ எடுத்தால், இட்லி அழகாக‌ எடுக்க‌ வரும்.

செய்து பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு செல்வி மேடம்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

வனி வீட்டில் வனியே செய்த‌ இட்லிதான் இது. குறிப்பு எழுதினது, படம் எடுத்தது எல்லாம் அவங்கதான்.

அரிசி பருப்பு ஊற‌ வைச்சிருந்தாங்க‌. நான் அவங்க‌ வீட்டுக்குப் போய், மாவு மட்டும் அரைச்சுக் கொடுத்துட்டு வந்தேன்.

இந்தக் குறிப்பு அவங்க‌ பெயரில்தான் வந்திருக்கணும். பெருந்தன்மையாக‌ என் பெயரைப் போட்டு, அனுப்பியிருக்காங்க‌ வனி.

தாங்க்ஸ் வனி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

படங்கள், செய்முறை, விளக்கங்கள் எல்லாம் வனி செய்ததுதான். இட்லி மாவு அரைச்சுக் கொடுத்து, சும்மா டிஸ்கஸ் செய்தது மட்டும்தான் நான்.

அருமையாக‌ அனுப்பியிருக்காங்க‌. பாராட்டுகள் அனைத்தும் வனிக்கே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

அரிசி, பருப்பு, ஊற‌ வைத்து, களைந்து, அதற்குப் பிறகு தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து செய்யணும்.

செய்து பாத்தீங்களா, நல்லா வந்ததா?

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மீனாள்,

அரிசி, பருப்பு, ஊற‌ வைத்து, களைந்து, அதற்குப் பிறகு தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து செய்யணும்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

போன‌ மாசம், பெங்களூர் போயிருந்தபோது, வனி வீட்டுக்குப் போயிருந்தேன்.

முதலிலேயே பேசிட்டிருந்தோம், ஏதாவது டிஷ் செய்து பாக்கலாம்னு, அப்புறம் இட்லி செய்யலாம்னு தோணிச்சு.

வனி ரெடியாக‌ அரிசி பருப்பு ஊற‌ வச்சு வச்சிருந்தாங்க‌. நான் போனதும், கிரைண்டரில் அரைச்சுக் கொடுத்தேன். வனி ஃபோட்டோஸ் எடுத்தாங்க‌.

கொஞ்சம் டிஸ்கஸ் செய்தோம், அவ்வளவுதான். அழகாக‌ மறு நாள் இட்லி ஊற்றி, சூப்பராக‌ குறிப்பு எழுதி, என் பெயரில் அனுப்பிட்டாங்க‌!!!

பாராட்டுக்கள் அனைத்தும் வனிக்குத்தான்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

மாவு அரைக்கறதுக்கு ஹெல்ப் பண்ணினது, டிஸ்கஸ் செய்தது, மட்டும்தான் நான்.

நான் இந்தக் குறிப்பு அனுப்பியிருந்தா, அரிசி பருப்பு அளவு = ' நல்லா அரைச்சு, உப்புப் போட்டுக் கலந்து, மறு நாள் இட்லி ஊத்துங்க‌' அப்படின்னு சுருக்கமா(!) எழுதியிருப்பேன், அவ்வளவுதான்.

அருமையாக‌ ஃபோட்டோஸ் எடுத்து, இட்லி ஊத்தி, அழகாக‌ விளக்கங்கள் எழுதி, அனுப்பி, பெயர் மட்டும் என்னோடது போட்டுட்டீங்களே, ஏன் வனி ஏன்????

அதுவும் வெந்த‌ இட்லியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் = பாத்தவுடனே தோழிகள் கண்டு பிடிச்சிருப்பாங்க‌, ஃபோட்டோஸ் எடுத்தது நானில்லை என்று.

சான்ஸே இல்ல‌ வனி, ஹாட்ஸ் ஆஃப் டு யூ!!!

ஒரு மணி நேரம்தான் இருக்க‌ முடிஞ்சது, இன்னும் கொஞ்ச‌ நேரம் இருந்திருந்தால், இன்னும் சில‌ குறிப்புகள் ட்ரை பண்ணியிருக்கலாம், அடுத்த‌ தடவை நீங்க‌ எங்க‌ வீட்டுக்கு வாங்க‌, ஸ்பெஷலாக‌ ஏதாவது சிறப்பு உணவு சமைத்துத் தருகிறேன், ஓ.கே.வா.

பிரமாதமான‌ விளக்கங்களுடன் சிறப்பாக‌ அனுப்பி, சிறப்பித்ததற்கு மிகவும் நன்றி, வனி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உஷா செந்தில்,

அரிசி, பருப்பு, ஊற‌ வைத்து, களைந்து, அதற்குப் பிறகு தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து செய்யணும்.

இட்லி மாவு முதல் நாள் அரைச்சு, மறு நாள் ஊற்றுவதுதான் முதல் தரமான‌ இட்லி. அதற்கும் அடுத்த‌ நாள், ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து ஊற்றும்போது, அதே அளவு சாஃப்ட்னெஸ் இருக்காது. இப்பல்லாம் வேற‌ வழியில்லாமல், 3/4 நாளைக்கு வைத்து, உபயோகிக்கிறோம்.

ஃபிரிஜ்ஜில் மாவை வைக்கும்போது, கரண்டியை எடுத்துட்டு, மூடி போட்ட‌ பாத்திரத்தில் மூடி வைக்கணும்.

மறு நாள் இட்லி ஊற்றும்போது, தேவையான‌ அளவு மாவு மட்டும் வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மாவு எடுக்கும் குழிக்கரண்டியில் ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து, மாவில் நல்லாக் கலந்து ஊற்றிப் பாருங்க‌, ஓரளவுக்கு நடுவில் கெட்டிப்படாமல் சரியாக‌ வரும்.

அவனில் கூடுதலாக‌ பத்து நிமிஷம் வைத்துப் பாருங்க‌ உஷா, மாவு புளிக்கும், பொங்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

இந்த வம்பு தானே வேண்டாம்கிறது??? நீங்க எனக்கு சொன்னதை தவிற நான் கூடுதலா எதாவது எழுதி இருக்கேனா? குறைவா தான் எழுதி இருக்கேன்... சாரி சிலதுக்கு ஸ்பெல்லிங் தெரியல ;) ஹஹா. நீங்க கேக் பேக் பண்றது கூட கம்பேர் பண்ணி சொன்னதை என்னால் மறக்கவே முடியாது... அப்போ தான் சீதா கேக் செய்யாமலே கேக் செய்முறை பற்றி இம்புட்டு தெரிஞ்சு வெச்சிருக்காங்களேன்னு மனசுக்குள்ள பெருமையா நினைச்சுகிட்டேன் :P அம்மணி கையில் ஒரு அவனை கொடுத்தா கேக் குறிப்பு அட்டகாசமா வந்திருக்கும். இப்போ நீங்க சொன்ன துணியை பிழிந்து போடும் மேட்டரையும் அதுல சேர்க்கனும். நாளை டீம் மக்களை பிடிப்போம். ;) பாவம்... இம்புட்டு விளக்கத்தை பார்த்து ஏற்கனவே பயந்து போய் இருக்காங்க. இட்லியே வராத யாரவது ஒருவர் இந்த முறையில் செய்து சூப்பர்னு சொல்லிட்டா அதுவே பெரிய வெற்றி தான். [உண்மையில் அந்த வெற்றி ஏற்கனவே கிடைச்சுட்டுது, நான் செய்துட்டேன்ல ;)]

நீங்க செய்து காட்டி, நீங்க சொன்ன விளக்கத்தை தட்டுச்சு மட்டுமே நான் பண்ணதால உங்க பேரில் இருப்பது தான் நியாயம். அதை தான் செய்திருக்கோம். :) நிச்சயம் அடுத்த முறை இதை விட அதிகமா செய்து அசத்துவோம் சீதா. கிச்சனில் கோழி, மீனெல்லாம் வாங்கி தயாரா வைங்க... வனி வரேன்ல. ஹஹஹா. வனி வந்தா கிச்சனில் நீங்க இல்லாம இருக்கலாம்... ஆனா மேல சொன்ன கோழி மீன் இல்லாம இருக்கப்புடாது.

உஷாக்கு கொடுத்த விளக்கம் : நான் உங்க முறையில் அரைத்த மாவை 3, 4 நாள் வரை சோடா உப்பு சேர்க்காம தான் இட்லி ஊத்தறேன் சீதா... எனக்கு முதல் நாள் போலவே வருது சாஃப்டா. என்னாலயும் நம்பத்தான் முடியல. இட்லி செய்யும் போதெல்லாம் “இந்த இட்லி சுட்டது நான் தான், அதுக்கு மாவு அரைச்சதும் நான் தான்”னு பாடிக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சங்கீ செந்தில்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

இட்லி எங்க‌ வீட்டிலும் எல்லோருக்கும் அவசிய‌ உணவு.

இட்லியை சுட்டுடுவீங்களா, அச்சோ அது பாவம்:(, வேக‌ வைங்க‌:)

சும்மா ஜோக் = சிரிங்க‌ பாக்கலாம்:):)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஞ்சு,

அதிக‌ நேரம் ஊறினால், ஒண்ணும் ஆகாது. குறைந்தது 2 மணி நேரம் ஊற‌ வைக்கணும்.

காலையில் ஊற‌ வைத்து, சாயங்காலம் கூட‌ அரைச்சிருக்கேன். ஊற‌ வைத்ததுமே, நல்லாக் களைஞ்சுடணும். பிறகு, அரிசி, பருப்பு மூழ்கும் அளவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் ஊற்றி வைக்கணும்.

அரிசி பருப்பு ஊறினதும், அளவும் கூடும் இல்லையா, அதுக்காகத்தான் கூடுதல் தண்ணீர் ஊற்றி வைக்கணும்.

களையாமல் அப்படியே தண்ணீர் ஊற்றி வைத்தால், புளித்துப் போய் விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

நிறைய‌ பேர் என்கிட்ட‌ இட்லி எப்படி இவ்வளவு சாஃப்ட் ஆக‌ செய்யறீங்கன்னு கேப்பாங்க‌. வருஷக் கணக்காக‌ செய்வதால், பழகிடுச்சு. அதே சமயம், அவங்க‌ செய்யும்போது, எந்த‌ இடத்தில் சந்தேகம் என்று விளக்கமாக‌ சொல்லத் தெரிந்ததில்லை.

வனி வீட்டுக்குக் கூப்பிட்டப்ப‌, இதை யோசிச்சோம். விளக்கங்கள் சொல்லி, அருமையாகக் குறிப்பைத் தருவதில் வனி எக்ஸ்பர்ட். சோ, மத்தவங்களுக்கு எதில் சந்தேகங்கள் வரும் என்று யோசிச்சு, செய்முறை விளக்கங்கள் தந்துட்டாங்க‌ வனி.

தினமும் இட்லியா, போர் அடிக்கலியா என்று நிறையப் பேர் கேட்டிருக்காங்க‌.

எப்படி போர் அடிக்கும், இட்லிக்கு தொட்டுக் கொள்ள‌(பாருங்க‌, நீங்க‌ எவ்வளவு பொருத்தமான‌ பெயர் செலக்ட் செய்திருக்கீங்க‌, உங்க‌ ப்ளாக்குக்கு)பொட்டுக்கடலை சட்னி= இதிலும் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் என்று 2 வெரைட்டி, அப்புறம் இதிலேயே சின்ன‌ வெங்காயம்/பூண்டு சேர்த்து அரைச்சது, தேங்காய்த் துவையல்= ப‌.மி., சி.மி., 2 வெரைட்டி, கத்தரிக்காய் கொத்சு, இட்லி சாம்பார், தக்காளி சாம்பார், தக்காளி சட்னி(அரைச்சு, வெங்காயம் வதக்கி கொதிக்க‌ வச்சது), தேங்காய் சேர்க்காத‌ தக்காளி சட்னி, அரைச்சு வதக்கினது, வதக்கி அரைச்சது, அப்புறம் மிளகாய்த் துவையல் = பூண்டு சேர்த்தது, வெங்காயம் சேர்த்தது, புதினாத் துவையல், கருவேப்பிலைத் துவையல், பச்சைக் கொத்துமல்லித் துவையல், இதெல்லாம் போதாதுன்னு இட்லிப் பொடி இப்படி வித‌ விதமா தொட்டுக்க‌ வச்சு, சாப்பிட்டா போரே அடிக்காது.

அன்புடன்

சீதாலஷ்மி

;)) இட்லி என்றால் தொட்டுக்கொள்ள எதுவுமில்லாவிட்டாலும் போரடிக்காது இங்கே. //இப்படி வித‌ விதமா தொட்டுக்க‌ வச்சு, சாப்பிட்டா போரே அடிக்காது.// அதான் பயமே! ;-)) இன்றைக்கும் கேட்டாங்க. பேசாம கடைல போய் ஒரே ஒரு செட் மட்டும் வாங்கி வந்து சாப்பிடுங்க என்று சொல்லிட்டேன். :-) முடியும் போது தனி உளுந்து (ரவை / அரிசி இல்லாம. ப்ரோட்டீன் மட்டும்) இட்லி ரெசிபி ஒன்று சொல்லுங்க எனக்கு.

‍- இமா க்றிஸ்

இது பயனுள்ள குறிப்பு.நன்றி வனிக்கா,சீதாம்மா.

நல்லா விளக்கம புரியவைச்சீங்க மிக்க நன்றிம்மா…

அன்பு இனியா, அன்பு மஞ்சு,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இட்லி நீங்க‌ சொன்ன‌ முறையில் மாவு அரைத்து செய்தேன் . என்ன‌ அதிசயம் !என்மீதுள்ள கோபத்தால் வரமாட்டேன் என்று அடம் செய்த‌ இட்லி முதல் முறையிலேயே வனிதா சிஸ்டர் காட்டியுள்ளபடி பூ போல‌ வந்துவிட்டது. மிக்க‌ நன்றி இருவருக்கும்.!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!