பரோட்டா

தேதி: December 7, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (19 votes)

பரோட்டா என்றாலே பெரிய அளவில் கடைகளில்தான் செய்ய முடியும். வீடுகளில் செய்வது நன்றாக வராது. அல்லது நேரம் அதிகம் எடுக்கும் என்பது போன்ற தவறான எண்ணங்கள் பலரிடமும் இருக்கின்றது. இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் கடைகளில் கிடைக்கும் பரோட்டாக்களைவிட மிகவும் ருசியானவை. மிருதுவானவை. பெரும்பாலான கடைகளில் மிருதுதன்மைக்காக முட்டை சேர்ப்பார்கள். முட்டை சேர்க்காமல் இல்லங்களில் மிருதுவாக பரோட்டா தயாரிக்கலாம். அது எப்படி என்பதை இஸ்லாமிய சமையல்ராணி திருமதி. பைரோஜா ஜமால் அவர்கள் இங்கே விளக்குகின்றார். நீங்களும் உங்கள் இல்லங்களில் செய்து பாருங்கள்.

 

மைதா மாவு - அரை கிலோ
சீனி - ஒரு மேசைக்கரண்டி
பால் - முக்கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி


 

மைதா மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பெரிய எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு அதில் ஒரு மைதா உருண்டையை மையத்தில் வைத்து கைகளால் அழுத்தி சற்று வட்டமாக தட்டவும்.
பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.
மாவின் மேலே எண்ணெய் தேய்த்து, ஓரங்களைப் பிடித்து இழுத்து தட்டின் வளைவு பாகத்தில் மடித்து விடவும்.
பெரிதாக தட்டு முழுவதும் பரப்பியவுடன் ஒரு ஓரத்தினைப் பிடித்து மாவை தூக்கவும். கொசுவம் வைத்த துணி போல் வரும். அதனை அப்படியே சுற்றி 5 நிமிடம் ஊற விடவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சுருட்டி வைத்து ஊறவிடவும்.
5 நிமிடங்கள் ஊறியபிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டின் பின்புறம் வைத்து, சப்பாத்திக் கட்டையால் வட்டமாக தேய்க்கவும்.
இந்த முறை தேய்க்கும்போது மிகவும் அழுத்தக் கூடாது. சற்று மென்மையாக தேய்க்கவேண்டும். அதேபோல் சற்று தடிமனாகவே தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது.
ஒரு தோசைக்கல்லில் அல்லது வாணலியில் ஒவ்வொன்றாய் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமாக சிவந்து வரும் வரை திருப்பிப் போட்டு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் எடுத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தட்டில் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டவும். இப்படி செய்வதன்மூலம் பரோட்டா இழைஇழையாக வரும். இதனை சூடாக இருக்கும்போதே செய்யவேண்டும். முழுவதும் உடைந்து போய்விடாதவாறு பக்குவமாக செய்யவேண்டும். அனுபவத்தில் வந்துவிடும்.
இப்போது சுவையான பரோட்டா தயார். பரோட்டா சற்று ஆறியபின்புதான் சுவையாக இருக்கும். பரோட்டாவை எடுத்து வைத்தபிறகு அந்த சூட்டிலேயே இன்னமும் சற்று வெந்து மிருதுவாகும். ஆறிய பரோட்டாவை சூடான சால்னாவுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம்,பால் என்பது தேங்காய்ப்பாலா? பசுப்பாலா? இதனை கோதுமைமாவிலும் செய்யலாமா? நன்றி.

THuSHI

இங்கே பால் என்பது பசும்பாலைத்தான் குறிக்கின்றது. பரோட்டாவிற்கு மைதா மாவுதான் மிகவும் பொருத்தமானது. கோதுமை மாவில் இந்த அளவிற்கு விரித்து தேய்ப்பது கடினம். சுவையும் மாறுபடும்.

நன்றி அட்மின் உங்கள் கருத்துக்கு.

THuSHI

வணக்கம் திருமதி பைரோஜா அவர்களுக்கு. இப்பொழுது தான் தாங்கள் கொடுத்த அளவின் படி 12 பரோட்டாகளை செய்து முடித்தேன். நாளை மத்திய உணவிற்காக செய்தேன்.நேரமின்மையால் அரை மணி நேரம் தான் உருட்டிய உருண்டைகளை ஊறவைத்தேன். அருமையாக இருந்தது. நன்றிகள்.

புரோட்டா அருமையாக இருந்ததது.என்னுடைய பொண்ணுக்கு இதனை பன்னி கொடுத்தேன்.ரொம்ப சுவையாக இருந்தது என்று சொன்னாள்.நான் 2 மணிநேரம் ஊறவைத்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இதற்கு சால்னா செய்வது எப்படி?நன்றி பைரோஜா

ramba

உங்கள் பாராட்டுகளை திருமதி. பைரோஜா அவர்களிடம் தெரிவித்தோம். மிகவும் மகிழ்வுற்று அவரது நன்றியை தெரிவித்தார்.

பரோட்டா சால்னாவிற்கான செய்முறையை பிறகு ஒருநாள் படம் எடுத்து வெளியிடுகின்றோம். இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் புரோட்டாவிற்கான சிக்கன் குருமாவை அடுத்த குறிப்பாக வெளியிடுகின்றோம்.

நன்றி திரு.அட்மின். புரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா வின் ரெசிப்பியை உடனே படத்துடன் காட்டியமைக்கு மிக்க நன்றி.

ramba

நான் இந்த குறிப்பில் கொடுத்திருந்தபடி பரோட்டா செய்தேன் ஆனால், எனக்கு பரோட்டா கொஞ்ஜம் ட்ரையாக வந்தது. சாப்டாக வர என்ன செய்ய வேண்டும். நான் ஒரு மணிநேரம் மாவை ஊரவைத்தேன். மைதா மாவு 2 கப் உபயோகித்தேன். ஆனால் குறிப்பில் 1/2 கில்லோ என்று கொடுத்திருந்தீர்கள்.
மற்ற பொருட்கள் குறிப்பில் கொடுத்திருந்தபடி உபயோகித்தேன்.
நான் செய்த முறையில் என்ன தவரு என்று தெரியவில்லை. இதற்கு solution சொல்லுங்களேன்.

நன்றி,
சுகன்யா

நன்றி,
சுகன்யா

அரைக்கிலோ மைதாவிற்கு 2 கப்பிற்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். எனவே அதில் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. மாவு பிசைதல், வேக வைத்து எடுத்தல் இந்த இரண்டும்தான் பரோட்டாவின் மிருதுதன்மையை நிர்ணயிக்கின்றன.

மாவை நன்கு பிசையவேண்டும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தீர்கள் என்றால், ரப்பர் போல் விரிய வேண்டும். அறுந்து போகக் கூடாது. தேய்க்கும்போதும் கொஞ்சம் எண்ணெய் அதிகம் சேர்க்கவேண்டும். கடைகளில் மாவு பிசையும்போது ஒரு முட்டையை உடைத்து, கலக்கி ஊற்றி பிசைவார்கள். விரும்பினால் அதையும் முயற்சித்துப் பார்க்கவும்.

வேக வைக்கும்போது நிதானமான தீயில் வேகவிடவும். லேசான பொன்னிறம் வந்தவுடன் எடுத்து, இரண்டு கைகளாலும் பரோட்டாவின் இருபுறங்களை தட்டவும். இப்படிச் செய்வதினால் பரோட்டா இழை இழையாக பிரியும். பின்னர் அதில் உள்ள சூட்டிலேயே உட்புறமும் வெந்துவிடும். இதன் செய்முறையைப் பொறுத்த வரை வேறு ரகசியங்கள் எதுவும் கிடையாது. எல்லாமே முதல் முறையில் மிகச் சரியாக வந்துவிடுவது கிடையாது. அனுபவத்தில் வந்துவிடும். மனம்தளராமல் மேலும் இரண்டு மூன்று முறை முயன்று பார்க்கவும்.

பரோட்டாவை கோதுமை மாவிலும் செய்யலாம். அதற்கு சுருள் பரோட்டா என்று பெயர். ஒன்றுக்கொன்று சுவை வேறுபடும்.

அன்புடன்,
செல்வி.

திரு அட்மின் அவர்களுக்கு,
உங்களுடைய ஆலோசனையின் படி இந்த வாரம் முயற்சித்து பார்கிறேன். ரிஸல்ட் எப்படி என்று சொல்கிறேன். நான் எண்ணெய் கம்மியாக உபயோகித்தேன் என்று நினைகிறேன்.

நன்றி,
சுகன்யா

நன்றி,
சுகன்யா

பைரோஜா அவர்களுக்கு மிகவும் நன்றி. மிகவும் சுவையாக இருந்தது. என் கணவரிடம் பாராட்டை பெற்றேன். :) சமைக்க தூண்டும் "யாரும் சமைக்கலாம்" அறுசுவைக்கும் மிகவும் நன்றி.

linges

பைரோஜா அவர்களுக்கு மிகவும் நன்றி. பரோட்டா மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரிடம் பாராட்டை பெற்றேன்.

மிகவும் நன்றி.

linges

THIS PAGE METHOD OF PRINT

10 முறையாவது முன்னே முயற்ச்சி செய்து தோற்றுப் போயிருப்பேன்....நம்பிக்கையுடனே செய்து ருசித்தேன்..மிருதுவாக அருமையாக வந்தது..அதுவும் நல்ல நீளமாக கட்டை இல்லாமல் கைய்யால் வீசும் அளவு மாவு சரியாக இருந்தது...ஆனால் சுருட்டி வைத்தபின் 5 நிமிடம் முடிந்து செய்ததும் முதல் பரோட்டா சுருன்டது...நிறுத்தி 30 நிமிடம் கழித்து சுட்ட பொழுது அருமையாக வந்தது..மிக்க நன்றி அட்மின்..அவரிடன் கன்டிப்பாக எங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்

தளிகா:-)

இந்த பரோட்டா செய்து பார்த்தேன். சூப்பராக வந்தது! எல்லாம் பறந்து விட்டது. நான் மாவை 5 மணி நேரம் ஊறவைத்தேன். மாவை தேய்க்கும் போது சில இடங்களில் ஓட்டை விழுந்தது. அடுத்த முறை இன்னும் நன்றாக வரும் என நம்புகிறேன். அறுசுவைக்கும் திருமதி பைரோஜா அவர்களுக்கும் மிக்க நன்றி!!

மாலினி

கலா மாவை சப்பாத்தி போல் கெட்டியாக குழைத்தால் சரியாக வரமாட்டேன் எஙிறது..நல்ல மாவு லூசாக குழைத்தால் தான் மிக சூப்பராக பெரிய வட்டமாக வீச வருகிறது

தளிக யாகூக்கு வாங்க

Jaleelakamal

தங்களின் இந்த குறிப்பை செய்து பார்த்தேன்.ஆனால் நான் சோடாஉப்பு சேர்க்காமல் செய்தேன்.அவ்வளவு அருமையா இருந்தது.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.

பரோட்டா மிருதுவாக சுவையாக இருந்தது.நன்றாக வந்தது. பரோட்டா செய்வது இது தான் முதல்முறை. சிறிது பயத்தோடு தான் செய்தேன்.(பரோட்டா நானே வீட்டில் செய்வேன்னு நினைச்சு பார்த்ததேயில்லை)

இதில் சர்க்கரை சேர்ப்பது எதற்க்காக?நல்லா லேயரா வர என்ன செய்யனும்?
நல்ல குறிப்பு கொடுத்ததற்க்கு நன்றி.

தளிகா உங்க டிப்ஸ்க்கு நன்றி.மாவை நல்லா இளக்கமா பிசைந்து சுருட்டிய பின் 30 நிமிடம் கழித்து செய்தேன்.நன்றாக வந்தது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இன்று பரோட்டா தான் செய்தேன். தொட்டுக்க ஆமினாவின் சால்னா கோழிக்கு பதில் உருளை போட்டு செய்தேன், நல்ல சுவை. பரோட்டா அந்த அளவிற்கு வரவில்லை என்றாலும், சுவையில் குறை சொல்ல முடியாது, மேலே அட்மின் அண்ணா சொன்ன மாதிரி முதல் முறையிலேயே சரியா வந்திடாது இல்லையா, இன்னும் சில முறை முயற்சித்து பார்க்கிறேன். மிக்க நன்றி தங்களின் குறிப்பிற்கு.

அன்புடன்
பவித்ரா

its easy to cook i like parrota verymuch i try it

i made this today....it came very nice.. thanks alot...god bless