இனிப்பு சந்தவை

தேதி: April 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பாலுக்கு:
தேங்காய் - ஒன்று
சர்க்கரை - அரை ஆழாக்கு
ஏலக்காய் - 4
வெல்லப்பாகுக்கு :
வெல்லம் - 100 கிராம் (பொடி செய்தது)
எள் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2


 

புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி ஊறியதும் க்ரைண்டரில் போட்டு, இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைத்தெடுத்து, உப்புச் சேர்த்து கலந்துவிடவும். (மாவை புளிக்க விடக்கூடாது).
அரைத்த மாவை இட்லிகளாக ஊற்றி வேகவிடவும்.
சந்தவை பிழிவதற்காக ஒரு அச்சு இருக்கிறது. அது ஒரு ஸ்டாண்ட் போல இருக்கும். அதற்கு அடியில் ஒரு அகலமான பாத்திரத்தை வைக்கவும். இட்லி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடாமல் ஒவ்வொரு தட்டாக எடுத்து, சூடாக இருக்கும் போதே சந்தவை பிழியும் அச்சில் 2 இட்லிகளைப் போடடுப் பிழியவும்.
இதேபோல் மீதமுள்ள மாவிலும் இட்லிகள் ஊற்றியெடுத்து சந்தவை பிழியவும்.
லேசாக சூடு ஆறியதும் உதிர்த்தாற் போல் எடுத்து, ஹாட் பேக்கில் போட்டு வைக்கவும்.
தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். (தேங்காய் மிகவும் முற்றலாக இருந்தால் மட்டும் கெட்டியான பாலாக வடிகட்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்). தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். (கொதித்தால் மட்டும் போதும். திக்கான பாகு ஆகிவிடக் கூடாது).
வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து வெல்லப் பாகுடன் சேர்க்கவும்.
எள்ளைக் கழுவி கல் அரித்து வெறும் வாணலியில் வறுத்து நைசாகப் பொடி செய்து கொள்ளவும்.
சந்தவையுடன் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.
அல்லது சந்தவையில் எள்ளுப் பொடி தூவி, அதன் மேல் வெல்லப் பாகு ஊற்றி கலந்து சாப்பிடவும்.

மாவு அதிகமாக கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்கக் கூடாது. இட்லி சூடாக இருக்கும் போதே சந்தவை பிழிய வேண்டும். ஆறிவிட்டால் பிழிவதற்கு கஷ்டமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் அக்கா சூப்பர் குறிப்பு. எங்கிட்ட சந்தவை அச்சு இலையே!!! பார்த்ததும் செய்து பார்க்க ஆசையா இருக்கு. சந்தவை பிழிய வேற ஏதும் சாய்ஸ் இருக்கா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனக்கு இது மிகவும் பிடிக்கும்... ஆனா இப்ப செய்யரதே இல்லை... ரெடிமேட் தான்... ஆசையைதூண்டிட்டீங்க....

நான் இப்போதான் கேள்விபடுகிரேன்.நன்றாகயிருக்கிரது.அதை அப்படியே எனக்கு அனுப்புங்க செல்விமா.

நான் கேள்விபட்டதே இல்லை.நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முறுக்கு உரலில் பிழிய முடியுமா அக்கா? காரமா சாப்பிட என்ன குழம்பு நல்லாருக்கும். திரும்ப திரும்ப உங்க குறிப்பையே பார்த்துட்ருக்கேன். படங்கள் பார்க்கும் போது ஆசையை கண்ட்ரோல் பண்ண முடியல்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இனியா சொல்வது போல நான் இப்போதான் கேள்விபடுகிரேன்..இடியாப்பம் அச்சியில் புளிய முடியுமா.

அருமை அக்கா எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க,படங்கள் அத்தனையும் அழகு…

நானும் தான் கேள்விபட்டது இல்லை, எனக்கு பச்சரிசி மாவில் செய்வதுதான் தெரியும் இது மிகவும் புதுமையாக இருக்கு ருசியாகவும் இருக்கும் போல.

அன்பு செல்வி மேடம்,

ரொம்ப‌ நல்லா இருக்கு குறிப்பு. ஆனா, இந்த‌ அச்சு இப்ப‌ என்கிட்ட‌ இல்லை, கடையில் சேவை நாழி என்று கிடைக்கும்,அதில் செய்யலாம்னு தோணுது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,
ஆஹா! அவ்வளவு பிடிச்சிருக்கா? எனக்கும் இது ரொம்ப‌ இஷ்டம்.

முறுக்கு குழல் அழுத்தி பிழியாமல், சுற்றி பிழிவார்களே, தெரியுமா? அந்த‌ அச்சில் பிழியலாம். ஒரு ஒரு இட்லி தான் போட்டு பிழிய‌ முடியும். அடுப்பிலேயே தட்டு இருக்கட்டும். சூடு குறையவே கூடாது, அப்பதான் பிழிய‌ வரும் புழுங்கல் அரிசியை ஆட்டி செய்வதால் இதன் சுவை சூப்பராக‌ இருக்கும்.

அழுத்தி பிழியும் அச்சு என்றால் அழுத்த‌ கஷ்டமாக‌ இருக்கும். இன்னுமொன்று பிரஸ் செய்வது போல‌ இருக்குமே, அதிலும் பிழியலாம்.
நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

அன்பு பிரியா,
நம்ம‌ பக்கமெல்லாம் இப்பத்தான் ரெடிமேடாகவே கிடைக்குதே. மாலையில் சூடாக‌ பாக்கெட்டில் பழமுதிர் நிலையத்தில் இருந்தது. பார்த்தேன். இருந்தாலும் நாமே பிழிவதன் சந்தோஷமே தனி தான், இல்லையா?

அன்புடன்,
செல்வி.

அன்பு இனியா,
அப்படியா? எங்க‌ ஊர்ப்பக்கம் ரொம்ப‌ விஷேசமான‌ சிற்றுண்டி இது. திருமணமாகி முதன் முதலில் விருந்துக்கு வரும் மணமக்களுக்கு சந்தவை தான் முதலில் இலையில் வைப்பாங்க‌.
அமாவாசை அன்று இரவு டிபனுக்கு இதை செய்து ஆரத்தியில் போட்டு, திருஷ்டி சுற்றி ஊற்றுவாங்க‌.

அப்பவே அனுப்பிட்டேனே இனியா! இன்னும் வரலையா:)

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
இது ஊர் ஸ்பெசல். நன்றி முசி.

அன்புடன்,
செல்வி.

அன்பு நித்யா,
இடியாப்ப‌ அச்சில் பிழிய‌ கஷ்டம். அவ்வளவு சன்ன‌ கண்ணில் சூடாக‌ வராது. முறுக்கு அச்சில் செய்து பாருங்க‌. உமாவுக்கு விளக்கமாக‌ சொல்லி இருக்கேன், பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு மஞ்சு,
சேலம்னா கண்டிப்பாக் தெரிந்து இருக்கணுமே! மிக்க‌ நன்றிம்மா!

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
இதுக்கு குழம்பு தொட்டு சாப்பிட மாட்டோம். இனிப்புக்கு தேங்காய்ப்பால், வெல்லப்பாகு, பால், சர்க்கரை இப்படி சாப்பிடுவோம். காரம்... தாளிப்போம். அதுவும் வரும் உமா:)

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
பச்சரிசி மாவில் செய்வது இடியாப்பம். இது புழுங்கல் அரிசியில் செய்வதால் நிச்சயம் நீங்கள் சொல்வது போல‌ ருசியாக‌ இருக்கும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
சேவை நாழியில் செய்யலாம். முன்னெல்லாம் மரத்தில் இருக்கும். இப்ப‌ எவர்சில்வர்ல‌ வருது. எங்க‌ ஊர்ப்பக்கம் சுலபமாக‌ கிடைக்கும். இங்கே கிடைக்கவே இல்லை. நீங்க‌ கேட்டுப் பாருங்க‌. அங்க‌ கிடைக்கும்னு நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

இப்போத்தான் முதலா இதைப் பற்றிக் கேள்விப் படுகிறேன் செல்வி மேடம், இடியாப்ப அச்சில் வராதுன்னு சொல்லிட்டீங்க,என்னிடம் சுற்றி பிழியும் இடியாப்ப குழல் தான் உள்ளது, இடியாப்பம் போலவே சுவை இருக்குமா? வித்தியாசமா இருக்குமா?

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கும், டீமுக்கும் நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
இடியாப்பத்தை விட‌ ரொம்ப‌ சுவையாக‌ இருக்கும். நிறைய‌ பேருக்கு இதைப்பற்றி தெரியாது. எங்க‌ ஊர்ப்பக்க‌ ஸ்பெசல் இது. கொஞ்சமாக‌ அதில‌ செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

இட்லி செய்து பின் பிழிவது புதுசா தான் இருக்குங்க... இதுவரை செய்ததில்லை. நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ அப்படியா!பார்சல் கிடைத்தது தேவாம்மிர்தமாயிருந்தது.இதேபோல் எல்லாவற்றையும் அனுப்பிடுங்கம்மா.

நம்ம‌ ஈரோட்டு சைடு சந்தவை.. வீட்டுல‌ இட்லியை நாங்க‌ சிஸ்டர்ஸ் மூனு பேரும் சேர்ந்து பிழிவோம்.அது ஒரு காலம்.. இதை பார்த்து உசுப்பேறி வேற‌ வழியில்லாம‌ பார்த்த‌ உடனே கடையில் வாங்கி சாப்பிட்டேன். ஆனா இடியாப்பம். :( அவசரத்துக்கு என்ன‌ செய்ய.. வாழ்த்துக்கள்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு இனியா,
அப்படியா? அனுப்பிட்டா போகுது:)

அன்புடன்,
செல்வி.

அன்பு ரம்யா,
அப்பல்லாம் பிழிவது ரொம்ப‌ கஷ்டம். ஆனால், இப்ப‌ எவர்சில்வர் சந்தவை மறையில் பிழியறது ரொம்ப‌ சுலபம். அந்த‌ ஆசையில‌ தான் நானும் இடியாப்பம் வாங்குவேன். ஆனா, வெறுத்துடும். தேடினாலும் இங்கல்லாம் கிடைக்காது.

அன்புடன்,
செல்வி.

எனக்கு பிடித்த‌ உணவு இது.நான் வைத்திருக்கும் அச்சு என் தாத்தாவே செய்தது அதில் அச்சு கொஞ்சம் பெரியதாக‌ இருக்கும்.ஆனாலும் அதில் செய்வேன்.பாகு காய்ச்சும் முறை புதிது.இதில் தேங்காய் பூ வெல்லம் கலந்து சாப்பிடுவேன்.லெமன்,தக்காளியும் பிடிக்கும். பிள்ளைகளுக்கும் இப்போது இது பிடிக்கிறது.இதற்கு அவர்கள் வைத்துள்ள‌ பெயர் வீட்டு நூடில்ஸ்....தேங்ஸ் அக்கா:‍)