சுண்டைக்காய் குழம்பு

தேதி: April 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சுண்டைக்காய் - ஒரு ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி அளவு
குழம்பு மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 தேக்கரன்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 20
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
நல்லெண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு
வறுத்து பொடித்த வெந்தயப் பொடி - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

சுண்டைக்காயைத் தட்டி, அதிலுள்ள விதை போக தண்ணீரில் அலசிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லியை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பாதி வெங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும்.
முதலில் வறுத்து ஆற வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன் வதக்கி ஆற வைத்தவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
பூண்டு நன்கு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
பிறகு புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து நன்கு கெட்டியானதும் வெந்தயப் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.

இந்தக் குழம்பை மண் சட்டி அல்லது கல் சட்டியில் செய்தால் இன்னும் அதிகச் சுவையாக இருக்கும். அடுத்த நாள் தான் குழம்பின் சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே வாயூறுது அக்கா. சூப்பர் குழம்பு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு செல்வி மேடம்,

அருமையான‌ பக்குவத்தில், அசத்தலான‌ குறிப்பு கொடுத்திருக்கீங்க‌.

கல் சட்டி வாங்கி வைத்துக் கொள்ளணும் என்று ஆசை வந்து விட்டது.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றாகயிருக்கிர்து இங்கு சுண்டக்காய் கிடைக்காது,சுண்டவத்தலில் செய்யலாமா செல்விமா.

குழம்பு அருமை.படங்கள் தெளிவு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுண்டைக்காய் குழம்பு பார்க்க வத்தல் குழம்பு மாதிரி கெட்டியாக கலர்புல்லா இருக்கு, படங்களும் தெளிவாக உள்ளன, பூண்டு, சுண்டைக்காய் சேர்த்து சூப்பரா அதுவும் கல் சட்டியில் செய்திரீக்கீங்க

நான் சமைப்பேன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்... எனக்கு இந்த காயெல்லாம் செய்யும் பழக்கமே கிடையாது, யாரும் விரும்புவதும் இல்லை. ஆனா நீங்க செய்திருக்கும் முறை நல்லா இருக்கு. :) அம்மா சுண்ட வத்தலில் குழம்பு வைப்பாங்க... முன்பெல்லாம் விரும்பி சாப்பிட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம்ம்ம்,,,,,,
மனம் விரும்புதே,,,,௨ங்கள் குழம்பை,,,,,,,
படமும் குறிப்பும் ரொம்ப ௮௫மை போங்க,,,,,,,

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

கல் சட்டியில‌ குழம்ப‌ பார்க்கவே நாவூறுது செல்விம்மா. சுண்டைக்காய் கூட்டு செடய்திருக்கேன் இப்படி குழம்பு முயற்சித்ததே இல்லை. படங்கள் ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்பு உமா,
மிக்க‌ நன்றி உமா. வீட்டுக்கு வாங்க‌. செய்து தரேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
இதெல்லாம் பழங்கால‌ பக்குவம் இல்லையா? நமக்கு அதுதான் கொஞ்சம் நல்லா வரும்.

கண்டிப்பாக‌ கல்சட்டி வாங்கி வைத்துக் கொள்ளூங்கள். உடம்புக்கும் நல்லது. சுவையும் சூப்பரா இருக்கும்:)

அன்புடன்,
செல்வி.

அன்பு இனியா,
சுண்டவற்றலிலும் செய்யலாம். தண்ணீரில் அலசிட்டு எண்ணெயில் போடுங்க‌. உப்பு கொஞ்சம் பார்த்து போடுங்க‌. ஏற்கனவே வற்றலில் இருக்கும். இப்பல்லாம் இங்கேயே எப்பவாவது தான் கிடைக்குது.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
ஐ! படங்கள் நான் எடுத்ததாக்கும்;)

மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
வத்தல் குழம்பு கெட்டியாக‌ வைத்தால் தான் நன்றாக‌ இருக்கும். படங்கள் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

கல்சட்டியில் தான் இந்த மாதிரி குழம்புகளை நான் எப்போதுமே செய்வேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
எங்க‌ ஊர்ப்பக்கம் வீடு தவறாமல் இந்த‌ செடி இருக்கும். பச்சை சுண்டைக்காய் உடம்பு அவ்வளவும் நல்லது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கும். குடலை சுத்தப்படுத்தும். வற்றலை விட‌ பச்சை சுண்டைக்காய் ரொம்ப‌ நல்லது.

அன்புடன்,
செல்வி.

அன்பு திவ்யா,
ம்ம்ம்.... பாட்டெல்லாம் அமர்க்களமா இருக்கே!
மிக்க‌ நன்றி பாராட்டுக்கு.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
கூட்டை விட‌ இந்த‌ குழம்பு சூப்பரா இருக்கும். கல்சட்டியில் செய்தாலே தனி ருசி தான்!
படங்கள் கிரிடிட் இம்முறை எனக்கு:)
நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

உங்க வீட்ல நல்ல ஹெல்த்தி ரெசிப்பியெல்லாம் செய்ரீங்க போல. நான் காய்ந்த சுண்டைக்காயில் குழம்பு வைத்து தான் பழக்கம்,
கடைசி கப்பில் உள்ள குழம்பை என்னிடம் கொடுத்திடுங்க, அப்படியே ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிட்டு விடுவேன்.
போன முறை ஊரில் கல் சட்டி தேடிப் பார்த்தேன், கிடைக்கவே இல்லை.

அம்மா அடிக்கடி செய்யும் குழம்பு இது... சிறிதுமாறுபட்ட முறை... சாப்பிட ஆசையா இருக்கு

ஆழாக்குன்னா கிராம்ல எவ்வளவு இருக்கும் அக்கா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,
ஆமாம் வாணி, எப்போதுமே இந்த‌ மாதிரி பொருட்களைக் கண்டால் நான் வாங்காமல் வரமாட்டேன். ஆவாரம்பூ, பச்சை முந்திரி, மொடக்கத்தான் கீரை.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்:)

அச்சோ, சாரி வாணி, உங்க‌ ஆசையை ரொம்பவே தூண்டிவிடறேன் போல‌ இருக்கு. ஒரு கப் என்ன‌, எத்தனை கப் வேண்டுமானாலும் த்ருகிறேன்.

நீங்க‌ வரும் போது சொல்லுங்க‌. நான் கல்சட்டி வாங்கி வைத்து தருகிறேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
ஆழாக்கு அளவு கிட்டதட்ட‌ 125 கிராம் அளவு வரும்.

அன்புடன்,
செல்வி.

அக்கா ஒரு படி என்பதும் ஒரு ஆழாக்கு என்பதும் ஒன்றா?

அன்பு பிரியா,
படி என்பதும் ஆழாக்கு என்பதும் ஒன்றல்ல‌. படியில் எட்டில் ஒரு பங்கு தான் அரைக்கால் படி, அதுதான் ஆழாக்கு. கால் படியில் பாதி)

அன்புடன்,
செல்வி.