பயணங்கள் தந்த பாடம்

இது நடந்தது நான்கு வாரங்கள் முன்பாக வார இறுதியில்.

ஒரு கத்தோலிக்கக் கலவன் பாடசாலையில் வேலை எனக்கு. நான்கு வருடங்களாக அவர்களது 'சாக்ரமெண்டல் டீமில்' இருக்கிறேன். பாடசாலை மூலம் நற்கருணை மற்றும் தேவதிரவிய அனுமானங்கள் பெறுவதற்குத் தயார் செய்துவிடுவோம்.

முன்பெல்லாம் அவர்களுக்குத் தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்து வந்தேன். என் கைவினைகள் அழகாக இருக்கும் என்கிற காரணத்தால் அங்கு ஆரனபிள் எடுபிடி. ;)

இந்தப் பகுதிக்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயுடன் போராடுகிறார். மெல்ல மெல்லச் செயற்பாடுகள் குறைந்து வருகிறது. அதனால் சில வருடங்களாக அவருக்கு உதவியாக நானும் இணைந்திருக்கிறேன்.

'க்ளாக்ஸ் பீச்' - அழகான அமைதியான நீண்ட கடற்கரை. ஆட்கள் அரவம் இராது. கடல், காலையில் நீண்ட தூரத்திற்கு உள்ளே போயிருக்கும். இரவாகுகையில் கரை வரை நீர் வந்துவிடும். தூரத்தில் Auckland Airport தெரியும். நொடிக்கொரு விமானம் தரையிறங்கவும் வான் ஏறவும் பளிச்சிடும் குட்டி வெளிச்சங்கள் பார்வைக்கு அழகு.

சுற்றிலும் மரங்கள், பறவைகள், இயற்கை, ஏகாந்தம்... இதனால்தான் இந்த இடத்தைக் காம்பிற்காகத் தெரிவு செய்திருக்கிறோம். வருடம் ஒரு முறை, ஒரு வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி இரவு திரும்புவோம்.

கிளம்ப முன் அதிபர் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் - ஒரு முறை அல்ல, பல தடவைகள். "As you reach the camp and unload your stuff... can someone make sure Mrs. Christopher's bag gets off the bus please... so that I don't have to drive back to Auckland deport to collect it again!" :-)

முதல் தடவை பயணித்த போது, என் பையை ஒரு சின்னவர் ஓட்டுனர் இருக்கையின் பின்னால் வைக்க, அது ஓட்டுனரது என்று நினைத்து இறக்காமல் விடப்பட்டது. நானும் பல முறை சொன்னேன், "என் பையைக் காணோம்," என்று. தேடப் போனவர்கள் எல்லோரும், "வாகனத்தில் இல்லவே இல்லை," என்று திரும்பி வந்தார்கள்.

இதற்கிடையில் அந்தப் பாரிய இரட்டைத்தட்டு வண்டி அதிபரின் காரில் இடித்துவிட்டது. என் பைக் கவலை மூன்றாம் பட்சமாகி அமர்ந்து போனது.

"எங்காவது மாணவர்களது அறை ஒன்றில் அடைக்கலமாகி இருக்கும்; தேடிப் பிடிக்கலாம்," என்று ஆசிரியர்களிற் சிலர் நம்பிக்கை கொடுக்க முனைந்தனர். எனக்கு அது வர மறுத்தது. அத்தனை பைகளும் இறக்குவதை மேற்பார்வை செய்தது நான்தானே.

முன்பு ஒரு தடவை இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கிடையில் ஒன்றுக்கு மேல் ட்ரான்சிட்கள் மாறி வந்ததில் இங்கு வந்து இறங்கிய சமயம் எங்கள் பை ஒன்று காணாது போயிருந்தது. சில நாட்கள் கழித்துக் கிடைத்து விட்டதுதான். வீட்டிற்கு வந்து விட்டோம் என்பதால் அந்தத் தாமதம் பெரிதாகத் தோன்றவில்லை. இதுவே இன்னொரு நாட்டில் பை இல்லாமல் தவிக்க நேர்ந்தால்!

அந்த அனுபவத்தில் அன்று என் கையில் டாய்லெட்டரி பையும், மருந்துகளும் ஸ்லீப்பிங் பாகும் இருந்தன. ஒரு இரவுதானே! போதும், சமாளிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

மதியம் அழைப்பு வந்தது பஸ் டிப்போவிலிருந்து. "ஒரு பை வண்டியில் தங்கிவிட்டது. யாராவது வந்து எடுத்துப் போக முடியுமா?"

பிறகு தோழி போய் எடுத்து வந்தார். ஆனால் 2 மணி நேரப் போக்குவரத்து அது. இப்போது ஒவ்வொரு வருடமும் அதைச் சொல்லிச் சொல்லியே என்னைக் கலாய்க்கிறார்கள்.

அது முதலே எங்கு கிளம்பினாலும் அத்தியாவசியமானவற்றை என் கையிலேயே எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. ஒரு செட் மாற்றுத் துணி, முக்கியமான மருந்துகள் ++ என் கையோடு உள்ள பையில் எடுத்துக் கொள்கிறேன்.

~~~~~~~~~

இரண்டு நாட்கள் முன்பு ஒரு தோழி முகநூலில் பகிர்ந்திருந்த காணொளி சொன்ன கதை கொஞ்சம் திகிலாக இருந்தது. அதையும் இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எங்கள் பைகளில் இரண்டு ஸிப்களைச் சேர்த்து ஒற்றாகப் பூட்டுப் போட்டிருப்போம் அல்லவா? பூட்டியது பூட்டியபடியே இருக்க ஸிப் நடுவில் நச்சென்று குமிழ்முனைப் பேனாவினால் ஒரு குத்து குத்தினார் விபரணத்தில் வந்த நபர். பேனையை அப்படியே இடமும் வலமுமாக ஸிப் பற்கள் வழியே ஓட்ட, பை அழகாகத் திறந்துகொண்டது. பிறகு பூட்டோடு பிடித்து ஸ்லைடரை பையைச் சுற்றி இழுத்தால் உடைத்த அடையாளமெதுவும் இல்லாமல் பூட்டிக்கொள்கிறது பை. ;( என் பழைய பை ஒன்றில் தையற் துணிகளைச் சேமித்திருந்தேன். பிரிந்த நூலிழை ஒன்று எங்கோ பற்களிடையே சிக்கி இருந்து பையைத் திறக்க விட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. பேனையைக் கொண்டு திறக்கலாமா என்று நினைத்து முயற்சி செய்தால்! உண்மைதான். ;(

இனி ப்ரீஃப் கேஸ் வகைப் பைகள்தான் தேட வேண்டும். பொருள் தொலைந்தால் கூடப் பரவாயில்லை; தடை செய்யப்பட்ட ஏதாவது பொதியுள் மாட்டினால்! ;(

5
Average: 4.8 (4 votes)

Comments

//தடை செய்யப்பட்ட ஏதாவது பொதியுள் மாட்டினால்! ;(// - சங்கு தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இதுவே இன்னொரு நாட்டில் பை இல்லாமல் தவிக்க நேர்ந்தால்!// தவிச்சு இருக்கேன், என் இரண்டு வயசு பொண்ணோட‌ இந்த‌ நாட்டுக்குள்ள‌ முதன் முதலா காலடி எடுத்து வெச்ச‌ அன்னைக்கே..:( ..;)
//தடை செய்யப்பட்ட ஏதாவது பொதியுள் மாட்டினால்! ;(// ஊருக்கு வர‌ பேக் செய்துட்டு இருக்கும் போது இப்படி பதிவு போட்டா எப்படி ...;). கர்ர்ர்ர்ர்ர்... வேணாம் அழுதுடுவேன்...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பயணம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு.. ப்ரீஃப் கேஸ் வகைகளே பாதுகாப்பானது..
படங்கள் நல்லா இருக்குங்..

நட்புடன்
குணா

//இரண்டு நாட்கள் முன்பு ஒரு தோழி முகநூலில் பகிர்ந்திருந்த காணொளி சொன்ன கதை கொஞ்சம் திகிலாக இருந்தது// அதே காணொளியை நானும் என் கணவரும் நேற்று பார்த்தோம்,அட இப்படியெல்லாம் திறக்கலாமா இதை( இதல பூட்டு வேற),பழைய ட்ரன்க் பெட்டிதான் வாங்கனும் இனிமேல்,பந்தாவான சூட்கேஸிலெல்லாம் இந்த அளவுதான் safty இருக்கும்போல.......

நாங்கள் அமெரிகாவிற்கு வந்தது இதுதான் முதல் தடவை ,,,முன்பு பின்லாந்து போகையிலும் இங்கு வருகையிலும் சூட்கேசில் கீ வைத்து பூட்டிவிடுவேன்,அமெரிகாவில் புளோரிடா வந்து வீடு வந்து சேர்ந்தபின்பு சூட்கேசை திறந்தால் அங்கு ஒரு பேப்பர் இருந்தது வாசித்தால் அதில் இதை நாங்கள் செக் செய்தோம் ,,என்று இருந்தது ,,எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏனெனில் பூட்டி இருந்தது ,,சாவி என்னிடம் இருந்தது ,,எப்படி திறந்து பூட்டினார்கள் கிளோத் சூட்கேசாய் இருந்தால் பரவாயில்லை நீங்கள் பார்த்த வீடியோவை நானும் பார்த்தேன் ,,என்னோடது கனமான பிளாஸ்டிக் பின்பு எப்படி நடந்தது ,,என் கணவரிடம் சொன்னால் சட்டப்படி பூட்டகூடாது ,நீ ஏன் பூட்டினாய் என்று கேட்டார் ,,,ஆனால் நான் வைத்திருந்த நகை எல்லாம் அப்படியே இருந்தது நிம்மதியாய் இருந்தது ..

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//சங்கு தான்// ;) ஆமாம் வனி.

சுமி... //ஊருக்கு வர‌ பேக் செய்துட்டு இருக்கும் போது இப்படி பதிவு போட்டா எப்படி// ;) அது எல்லாம் ஒன்றும் ஆகாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

//விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு..// அவ்வ்! அது எல்லாம் ஒன்றும் இல்லை குணா. எதையாவது எழுதுகிறேன். :-)

//பழைய ட்ரன்க் பெட்டிதான் வாங்கனும் இனிமேல்// ;)) ஆமாம் அனு.

ஹாய் அஸ்வதா! //நாங்கள் செக் செய்தோம்// இப்படி நடப்பது உண்டுதான். ஸ்கானிங்கில் ஏதாவது சந்தேகம் வந்திருக்கும். பார்த்திருப்பார்கள். //சட்டப்படி பூட்டகூடாது// எனக்குத் தெரிந்தவரை பூட்டித்தான் வைக்கச் சொல்கிறார்கள். கேட்டால் மறுக்காமல் திறந்து காட்ட வேண்டும். பூட்டாமல் விடுவது ஆபத்தாயிற்றே! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாமே!

‍- இமா க்றிஸ்