எபோலா (Ebola) - மீண்டும் பரவும் பயங்கரம் !

முன்குறிப்பு: இதை பத்து தினங்களுக்கு முன்பே எழுதத் தொடங்கினேன். வேறு சில வேலைகளால் இதை முடிக்க இயலாது போயிற்று. இப்போது இது குறித்து இந்தியாவிலும் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளதால், சிறிய விழிப்புணர்விற்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகின்றேன்.

உலகச் செய்திகள் படிப்பவர்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு உலகப் பத்திரிக்கைகளின் தலையங்கத்தைப் பிடித்துள்ள எபோலா (Ebola) பற்றி படிக்காமல் இருந்திருக்க முடியாது. ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு அபாயம் இப்போது யூக்கே, யூஎஸ்ஏ வையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலா தெரியும்.. அது என்ன எபோலா? என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாக ஒரு அறிமுக உரை.

ஹெச் ஐ வி, ஹெப்படிட்டிஸ் பி/சி, டெங்கு, ரோட்டா.. என்ற அபாயகரமான வைரஸ்கள் பட்டியலில், மிக மிக அபாயகரமானவர் என்ற டைட்டிலை பெற்று முதலிடத்தில் இருப்பவர்தான் இந்த எபோலா (Ebola virus). இவர் தாக்கினால் 90 சதவீதம் மரணம் நிச்சயம் என்கின்றார்கள். இவருடைய வரலாறு என்ன?

ஆப்ரிக்க நாடானா காங்கோவில் உள்ள எபோலா ஆற்றின் கரையோர கிராமம் ஒன்றில், 1976 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஆற்றின் பெயரையே இந்த வைரஸ்ஸிற்கு வைத்துள்ளார்கள். ஆப்ரிக்க கண்டம் முதல் மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதனைக் கொல்லும் பல வைரஸ்களுக்கும் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. இங்குள்ளவர்கள் குரங்கு கறி சாப்பிடுவது இது போன்ற வைரஸ்கள் மனிதனை தாக்குவதற்கு காரணமாய் இருக்கின்றது என்ற விசித்திர காரணத்தை சில ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். குரங்குகள் இது போன்ற புதுவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகின்றன. அதே இன வரிசையில் வரும் மனிதனுக்கும் இவை எளிதாக பரவுகின்றது. இந்த எபோலா வைரஸ் பரப்புவதில் பழம் தின்னி வௌவால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றதாம். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அந்த வௌவால்களுக்கு இந்த வைரஸ்ஸினால் பாதிப்பு எதுவும் உண்டாவதில்லை. அது எப்படி என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படும்போது இதற்கு வேக்ஸின் எதுவும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், இன்று வரை இதற்கு மருத்துவம் எதுவும் இல்லை.

இந்த எபோலா அவுட்ப்ரேக் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை நிகழ்ந்திருக்கின்றது. அவை எல்லாமே ஆப்ரிக்க நாடுகளுக்குள்ளேயே நிகழ்ந்து முடிந்துவிட்டது. அப்போது பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கவில்லை. அதற்கு பல காரணங்களைச் சொல்கின்றார்கள். ஆனால் இம்முறை இதுவரை கண்டிராத அளவு விரைவாக மேற்காப்பிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. கிட்டத்திட்ட ஆயிரம் பேரை பலி கொண்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயால்தான் இறந்தார்கள் என்று தெரியாமல் எரிக்கப்பட்டவர்கள்/புதைக்கப்பட்டவர்கள், தெரிந்தும் அதனை அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் புதைக்கப்பட்டவர்கள் என்று கணக்கிட்டால் அது சில ஆயிரங்களைத் தாண்டும் என்றும் ஆப்ரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தக் கருத்தையே மேற்காப்பிரிக்க நாடுகளில் இருந்து வலைப்பதிவு எழுதும் சிலர் தெரிவித்து இருக்கின்றார்கள்.

எம்முறையும் இல்லாத அளவு இந்த முறை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றது. காரணம், இந்த நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த வைரஸ் தாக்குதல் உள்ள நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்த நாடுகளுக்கு நேரடியாகச் சென்று வருபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். கினியா, லிபிரியா, நைஜீரியா, சியரா ஆகிய மேற்காசிய நாடுகள் இந்த வைரஸ்ஸால் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற ஆப்ரிக்க நாடுகளில் இது இன்னும் பரவவில்லை என்று சொல்லப்பட்டாலும், மேலும் சில நாடுகளில் ஏற்கனவே சில நோயாளிகள் இருக்கின்றனர். அந்த தகவலை அரசாங்கங்கள் மறைக்கின்றன என்ற தகவலும் இணையத்தில் வெளியாகின்றது. ஏனெனில் இந்த வைரஸ்ஸின் தாக்கம் மிகவும் அதிகமான பிறகுதான் மேற்கண்ட நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டது. ஏர்போர்ட் எல்லாம் கிட்டத்திட்ட மூடப்பட்டன. உள்ளே வருபவர்கள், வெளியேறுபவர்கள் எல்லாம் பரிசோதிக்கப்பட்டே அனுப்படுகின்றார்கள். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு நிலைமை அப்படி இல்லை. பல நாட்டினரும், அதிலும் குறிப்பாக அருகில் உள்ள மற்ற ஆப்ரிக்க நாட்டினர் சாதாரணமாக வந்து சென்றுள்ளனர். யூ என் ற்காகப் பணிபுரியும் வெளிநாட்டினர் பலரும் இந்த நாடுகளுக்கு வந்து சென்றுள்ளனர். அவர்களை எல்லாம் இப்போது பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார்களாம்.

பத்து தினங்களுக்கு முன்பு யுகாண்டாவிற்கும் எபோலா பரவிவிட்டது என்ற செய்தியைப் படித்தேன். யுகாண்டா அரசாங்கம் அந்த செய்தியை அடுத்த தினமே மறுத்துவிட்டது. நமது நாகை சிவா அங்கேதான் வசிக்கின்றார். அவரைத் தொடர்பு கொண்டபோது யுகாண்டாவில் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் எல்லோரும் எச்சரிக்கையுடனே இருக்கின்றார்கள்.

பத்து தினங்களுக்கு முன்பு நான் இதை எழுதத் தொடங்கியப்போது இந்திய அரசாங்கம் இது குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த இரண்டு தினங்களாக இது குறித்து நிறைய பேசி இருக்கின்றார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பேசி இருக்கின்றார். இன்றைக்கு வேர்ல்டு ஹெல்த் ஆர்கனைசேசன் (WHO) உலகளாவிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. எல்லா நாடுகளும் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது.

மற்ற நாடுகளைவிட இந்தியா போன்ற ஜனநெருக்கடி நிறைந்த நாட்டில், சுத்தம் சுகாதாரத்தின் விலை என்னவென்று கேட்கும் நாட்டில் இந்த நோய் பரவத் தொடங்கினால் அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா குறித்து இப்படித்தான் தகவல்கள் வெளியாகின. ஆப்ரிக்க நாடுகளில் தொடங்கியுள்ளது என்றார்கள், அங்கே என்றார்கள், இங்கே என்றார்கள். பக்கத்து மாநிலம் என்றார்கள், பக்கத்து ஊர் என்றார்கள். இணையத்தில் அந்த செய்திகளை படித்துக் கொண்டிருக்கும்போதே நானும் ஒருநாள் பாதிக்கப்பட்டேன். எங்கள் ஊரில் குறைந்தது 70 சதவீதம் பேராவது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அந்தக் கொடுமையை இன்னும் மறக்க முடியவில்லை. சிக்கன்குனியாவிலாவது வலிதான். உயிர் போவது அபூர்வம்தான். ஆனால் இந்த எபோலாவில் உயிர் பிழைத்தல்தான் அபூர்வம்.

நான் முன்பு பார்த்த Outbreak என்ற ஆங்கிலப்படம் தான் நினைவிற்கு வருகின்றது. இப்போது நடப்பவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்த எபோலா வை வைத்துதான் அந்த படம் எடுக்கப்பட்டதோ என்று தோணுகின்றது. 1995ல் வெளிவந்த படம் அது.

இந்த வைரஸ்ஸை தீவிரவாதிகள் பயோலாஜிக்கல் வெப்பனாக பயன்படுத்த இருக்கும் வாய்ப்புகள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டுள்ளது. இப்போதைய அவுட்ப்ரேக் கூட அப்படி ஏதேனும் நிகழ்வாக இருக்கலாமோ என்ற யூகங்களும் பரவி வருகின்றன.

இதற்கு இப்போதைக்கு ட்ரீட்மெண்ட் எதுவும் இல்லையென்றாலும், இந்த நோய் பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற Dos Don'ts ஐ உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

செய்ய வேண்டியவை.

1. கைகளை எப்போதும் சோப் அல்லது ஹேண்ட் வாஷ் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும்.
2. உணவுப் பொருட்கள் மூலம் பரவும் அபாயம் இருப்பதால், உணவினை நன்கு வேகவைத்து, சமைத்து உட்கொள்ள வேண்டும். 3. தலைவலி, ஜுரம், உடல் வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, கண்கள் சிவந்து இருத்தல், தோல் அலர்ஜி இவை எல்லாம் வேறு காரணங்களால் வந்தாலும், இந்த நோய் பரவும் காலத்தில் இவை முதற்கட்ட அறிகுறியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நோய் தாக்கம் நாட்டினுள் வந்த பிறகு இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் சென்று வந்தவர்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் உடனே நோய் தடுப்பு முகாமினை அணுக வேண்டும்.
4. எபோலா குறித்த விபரங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதை அச்சுறுத்தல் என்று எண்ணாமல், ஒரு எச்சரிக்கை ஒலி என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

செய்யக்கூடாதவை.
1. எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடுதல் கூடாது. எபோலாவால் இறந்தவர்களையும் தொடக்கூடாது.
2. எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கைகளைக்கூட தொடக்கூடாது.
3. எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில், குடித்து வைத்த தண்ணீர், உணவு என்று எதையும் தொடக்கூடாது. அவர்களது இரத்தம், சிறுநீர், மலம் என்று எதுவும் நம் உடல் மீது பட்டுவிடக்கூடாது.
4. வவ்வால்கள் கடித்த பழங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.
5. குரங்குகளுடன் விளையாடுவது, தொடுவது கூடாது. குரங்கு மாமிசம் கூடாது.

இது இப்போதைக்கு ஆப்ரிக்க நாடுகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கைப் பட்டியல். இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவும்போது இந்தப் பட்டியல் இன்னும் பெரிதாகலாம். எச்சரிக்கையாய் இருப்போம். வேறு என்ன செய்ய முடியும்?

பயனுள்ள தகவல் அண்ணா. நேற்றிலிருந்து தான் இந்த செய்தியை கவனித்து வந்தேன். வெளியே உணவு எடுப்பதையும் பொது இடங்களுக்கு தேவை இல்லாமல் போவதையும் கூட தவிற்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று காலைதான் இதனை பற்றி கவனித்தேன். இதனை பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி அண்ணா. பயம் ஒருபக்கம் இருந்தாலும், தடுப்பு வழிகளும் தெரிந்திருக்கணும். முடிந்தவரை தெரிந்தவர்களுக்கு இதனைப்பற்றி புரியவைக்கணும்.
பள்ளிக்கூடங்களில் பசங்களிடம் தொட்டு விளையாடுதல், உணவு உண்ணும் முன் கைகளை அலசுதல் போன்றவற்றை சொல்லி வைக்கணும்.

பாபு அண்ணா,
ம்ம் நானும் நியூஸில் பார்த்தேன், ரொம்ப‌ கொடூரமான‌ நோயாம்.... அவர்கள் தும்மினால் கூட‌ அதிலிருந்து எளிதில் பரவுமாம்....

முடிந்தவரை எச்சரிக்கையாக‌ இருக்க‌ முயற்சி செய்வோம்....

நீங்க‌ சொல்லவும் நியாபகம் வந்தது இப்போ என்னானு தெரில‌ இங்க‌ எல்லா பக்கமும் டைபாய்டு காய்ச்சல் நிறைய‌ பேருக்கு இருக்கு, ரொம்ப‌ அதிக‌ அளவு மனித‌னை பாடா படுத்தி காய்ச்சலுக்கு முன், காய்ச்சலுக்குப் பின் போட்டோ போடுற‌ அளவு இளைச்சி போய்ட்டாங்க‌,

எல்லாருக்கும் குறைஞ்சது 10 நாள் கழிச்சு தான் சரியானது,
உடன் வேலை பார்ப்பவர்களுக்கு அது பரவதான் செய்த‌து,

இதற்கு மெயின் காரணம் தண்ணீர் தான் சொல்றாங்க‌,
சுத்தமான‌ குடி நீர் இல்லாததாம்.....

அப்புறம் காய்ச்சல்ல‌ பாதிக்கபட்டவங்க‌கிட்டேர்ந்து கொஞ்சம் விலகி இருக்கதும் ந‌ல்லதுனு சொல்றாங்க‌,

அவங்க‌ குடிச்ச‌ தண்ணீர், டவல், போர்வை அதை மத்தவங்க‌ பயன்படுத்தாம‌ இருக்கது தான் வராம‌ தடுக்க‌ வழியாம்......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

விளக்கமாக கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள பதிவு.

நட்புடன்
குணா

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா
நன்றி

Anna nenga sonnathuku appuramagathan nan paperla pathen romba bayangaramanathu carefulla irukanum ellarum

தேன் சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி பெருகுவதாக ஒரு தகவல்.தேன் சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாவதுடன் புது ரத்தம் ஊருவதாகவும் கேள்விபட்டேன்.தினமும் தேன் சாப்பிடுவோம் இதனால் நன்மை தானே.

மேலும் சில பதிவுகள்