பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

நடுவருக்கும்,மற்ற பட்டி மக்களுக்கும் வணக்கமுங்கோ.
முதலில் நமது 100ஆவது பட்டிமன்றத்திற்க்கு என் வாழ்த்துக்கள்.இதில் முதல் பதிவு என்னுடையது என்பதில் மிக்க மகிழ்ச்சி.என் அணி ஆண்களே!

மீண்டும் விவதங்களுடன் வருகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

ஆஹா!! ஆஹா!! எனக்கு மீண்டும் உங்கள் பதிவை அறுசுவையில் கண்டதைவிட பெரிய மகிழ்ச்சி வேறென்ன?? அதுவும் சிறப்பான 100வது பட்டிமன்றத்தில்!!! மறக்குமா இனி?? நேரத்திற்கு பட்டியை துவங்கியதற்கு நன்றி. வருகிறேன், அணியை தேர்வு செய்து கொண்டு மீண்டும். 100வது பட்டிக்கும், பெரிய இடைவெளிக்கு பின் தலைகாட்டும் நடுவருக்கும் ம்னமார்ந்த வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

100வது பட்டி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பு நடுவருக்கும் என் வாழ்த்துக்கள். பட்டியின் பார்வையாளர், பங்கேற்பாளர் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். அணித்தேர்வோடும், வாதத்தொடும் அவசியம் வருகிறேன் நடுவரே.

உன்னை போல் பிறரை நேசி.

நடுவருக்கும், வாதிடப்போகும் பட்டி மக்கள் அனைவருக்கும், 100 வது பட்டிமன்றத்திற்கான‌ சிறப்பு வாழ்த்துக்கள்.

நடுவர் அவர்களே,

வணக்கம். உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவது ஆண்களே. பெண்களுக்கு சமையல் செய்தோமா, சாப்பாட்டு கடையை முடித்தோமா, பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கி விட்டோமா என்பதுதான் கவலை. சமையல் செய்த‌ அலுப்பு தீர்வதற்குள் அடுத்து அடுத்து வேலை, இதில் சமையலை எங்கே ரசிப்பது, ருசிப்பது. எத்தனை வருட‌ சமையல் அனுபவம் இருந்தாலும், எல்லோருக்கும் சாப்பாடு போதுமா என்பதே பெருங்கவலை. சாப்பாடு மீதியானால் என்ன‌ செய்வது என்பது அடுத்த‌ கவலை. உணவை ரசித்து, ருசித்து உண்பது ஆண்களே என்பது என் வாதம்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நடுவரே... வந்துட்டோம்ல யார் பக்கம்னு முடிவு பண்ணி. ;)

ஏன் நடுவரே... பெண்கள் என்றாலே குடும்ப பொறுப்போட ஓடி ஓடி சமையல் பண்றவங்க மட்டும் தானா??? எல்லாரையும் கருத்தில் வைக்க வேண்டுமே நடுவரே. ;) எப்புடி??

நான் வேலை பார்த்த நாட்களில் 1 மணி நேரமாகும் காலை உணவுக்கு மட்டும். இத்தனைக்கும் ஃபுட் கோர்ட் பொங்கலும் வடையும் தான். எத்தனை நிதானமா சாப்பிடுவேன் தெரியுமா? அத்தனை விருப்பமா சுவைத்து சாப்பிடுவது வழக்கம். என் நண்பர்கள் (ஆண்கள் தான்) பலரும் வேக வேகமா அள்ளி தினிச்சுட்டு ஓடுவாங்க ஆஃபீஸ்க்கு. போங்கப்பா இந்த வயித்துக்கு தானே வேலை செய்யறோம்னு சொல்லிட்டு மெதுவா சாப்பிடுவேன்.

அப்படி எல்லாம் சாப்பிடுவதாலும் சுவையை உணர்ந்து ரசிப்பதாலும் தான் நடுவரே பெண்களால் உணவகங்களில் உண்ணும் உணவைக்கூட வீட்டில் செய்துவிட முடிகிறது. அந்த பக்குவம் எந்த ஆணுக்கு வருமாம்? பெண்கள் 100ல் 50 பேருக்கு வரும் என்றால் ஆண்கள் 100ல் 10 பேருக்கு வந்தாலே பெருசு தான்.

இப்போ சொல்லுங்க நடுவரே... யார் சுவையை உணர்ந்து சுவைத்து ரசித்து சாப்பிடுறோம்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் நடுவரே! நீண்ட‌ நாட்களுக்கு பிறகு உங்கள் தலைமையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்ததில் ரொம்ப‌ சந்தோஷமாக‌ இருக்கு அதுவும் 100வது பட்டிமன்றமாக‌ அமைந்ததில் டபுள் சந்தோஷம் :).

சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறது ஆண்கள்தான் நடுவரே! சின்ன‌ வயசுல‌ இருந்தேதான் பெண்களின் நாக்கை கட்டிப்புடறாங்களே. உண்டி சிறுத்தல் பெண்டிருக்கு அழகாம். அதனால் ரொம்ப‌ சாப்பிடப்படாதாம். இதுல‌ நாமே வேற‌ டயட்டிங்னு சொல்லிக்கிட்டு காய்ஞ்சு போன‌ ரொட்டியயும் உப்பு சப்பில்லாத‌ சாலட்டையும் தின்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல‌ எங்கிட்டு இருந்து ரசித்து ருசித்து சாப்பிடறது.

இன்னொரு கொடுமை என்னன்னா நாமே சமைச்சு அதை நாமே சாப்பிடறது. அதை சாப்பிடற‌ ஆண்களின் கதி என்னான்னு எதிரணி கேட்பாங்கோ.மனைவி எதை சமைச்சுப் போட்டாலும் தேவாமிர்தம்னு சொல்லி சாப்பிடறது கணவரோட‌ கடமை நடுவரே கடமை. அப்பதான் அடுத்த‌ நாளும் இந்த‌ சோறாவது கிடைக்கும். இல்லைன்னா வெளிய‌ போய்ன்னாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்குவாங்க‌. நமக்கு எங்கங்க‌ அந்த‌ கொடுப்பினை :(

அட‌ நாம‌ ரொம்ப‌ நல்லா ருசியாவே சமைப்போம்னு வச்சுக்கிட்டாலும் அந்த‌ சமையல் வாசனையிலேயே இருந்த‌ நமக்கு அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடத் தோணாது... முடியாது நடுவரே.மணக்க‌ மணக்க‌ பிரியாணி செய்து அடுத்தவங்களுக்கு சூடா சாப்பிட‌ கொடுக்க‌ முடியும். அதை அவங்க‌ ரசிச்சு ருசிச்சு சாப்பிடவும் முடியும். அதே சூட்டோட‌ நாமும் சாப்பிட‌ உட்கார்ந்தா நிச்சயமா நம்மால ரசிச்சு ருசிச்சு சாப்பிட‌ முடியாது. சமைக்கும் போதே நம்ப‌ மூக்கு அந்த‌ வாசனைக்கு பழகி பிரியாணி சாப்பிடும் போது அதன் சுவையை முழுமையாக‌ அனுபவிக்க‌ முடியாது

அப்புறம் எதிரணி சொல்றாங்க‌ ஒரு உணவை ருசிச்சு பார்த்தே அதை வீட்டிலும் செய்துடுவாங்களாம். உண்மைதான் நடுவரே. ஆனால் மேட்டர் என்னன்னா அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறோமாங்கறதுதான். இப்போ ஒரு உணவை முதல் வாய் டேஸ்ட் பண்ணினதும் அதன் சுவை நமக்கு பிடிச்சிருச்சுன்னு வைங்க‌ மீதம் இருக்கும் உணவை ரசிச்சு சாப்பிடுவோம்னு நினைக்கறீங்க‌. ரெண்டாவது வாய்ல‌ இருந்து இதுல‌ மிளகு சேர்த்திருக்கா சீரகம் இருக்கான்னு ஒவ்வொரு வாய்க்கும் நாக்கும் மூக்கும் மூளையும் டிடெக்ட்டிவ் கணக்கா வேலை செய்ய‌ ஆரம்பிச்சிடும். அப்புறம் எங்க‌ அதன் சுவையை முழுசா ரசிச்சு ருசிக்கறது. ரொம்ப‌ கஷ்டம் நடுவரே.

அரக்க‌ பரக்க‌ சாப்பிடறதெல்லாம் பெண்கள்தான் நடுவரே. விதிவிலக்குகளாக‌ சிலர் இருக்கலாம் எம் எதிரணித் தோழியைப் போல‌ :) மொத்தத்துல‌ உணவை ரசிச்சு ருசிச்சு சாப்பிடறது ஆண்கள்தான் நடுவரே. மீண்டும் வருவோம்ல‌!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உணவை ரசித்து ருசித்து உண்பது ஆண்களே!

1.நேரமின்மை:
பெண்கள் அப்படி சாப்பிட முடியாததற்கு,நேரமின்மை ஒரு முக்கிய காரணம். வீட்டு வேலை, அலுப்பு, வெளியில் வேலைக்குச் செல்லுதல், குடும்ப கவனிப்பு இதனால் அவர்களையே சரியாக கவனிக்க முடியாமல் போகும் நம் பெண்களுக்கு எங்கே ரசித்து ருசித்து சாப்பிட நேரம். ஆண்கள் அப்படி இல்லை. என்னதான் வேலை இருந்தாலும் உணவு உண்ணும்போது நன்கு ரசித்து ருசித்து உண்கின்றனர். அதனால் தான் குறைகளயும் சொல்ல முடிகிறது.

No pains,No gains

ANANTHAGOWRI.G

100வது பட்டிக்கு வாழ்த்துக்களும் ,நடுவர் அவர்களுக்கு வணக்கத்தோட நான் பெண்கள் அணியேன்னு தேர்ந்தெடுக்கிறேன் நடுவர் அவர்களே

பெண்கள் அப்படின்னாலே எப்பவும் அடுப்படி ,அதுலயே வேர்த்து விறுவிறுத்து என்னவோ சாப்பாட்டை பார்த்தா காத தூரம் ஓடற மாதிரியே பேசறாங்க .

பெரும்பாலான ஆண்களுக்கு மனைவி போட்டுத்தரது காபியா டீயா ந்னே கண்டுபிடிக்க தெரியாத அளவுக்குதான் இருக்குங்க நடுவரே . ரசனை இருந்தாத்தான் எதுவும் நல்லா இருக்கும் , அப்படி பார்த்தா தினம் மனைவி புதுசா சமைத்து குடுத்தாலும் கடமையே சாப்பிட்டு போற ஆண்கள்தான் அதிகம் . அதை ரசித்து பொறுமையா சாப்பிட்டு எத்தனை பேர் பாராட்டறாங்க சொல்லுங்க நடுவரே . பெண்களுக்கு ரசனை இருக்கறதாலதான் நடுவரே விதவிதமான புது ரெசிபிலாம் தயாரிக்கமுடியுது . ரசனை இல்லாம சாப்பாடு மட்டும் இல்ல சமையல் கூட ருசிக்காது நடுவரே . அம்புட்டுதான் நான் சொல்லுவேன் .
எதிர் அணியின் வாதத்துக்கு அப்பறம் அப்பாலிக்கா வரேன் நடுவரே . வரட்டா.......க்

Be simple be sample

பட்டிமன்றத்தை வாழ்த்த வந்த அன்புள்ளங்கள் "க்ரிஷ்மஸ் ", "அனு செந்தில்" க்கு என் நன்றிகள் உரித்தாகுகின்றன. சீக்கிரம் அணியை தேர்ந்தெடுத்து உங்கள் வாதமெனும் சுவையால் அணிக்கு பலம் சேர்க்க வாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்