பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?

வணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

எனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு "Ratatouille", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான "புட் கிரிட்டிக்". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.

என்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்!

இருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........

//தலைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //

மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.

குறிப்பு : தலைப்பை தந்த தோழி "Jayaraje" க்கு நன்றி.

இருந்தாலும் உங்க தைரியம் யாருக்கு வரும் //மாமியாரே பரிமாறினாலும்......" சூப்பர் அப்பு. நீங்கள் ருசித்து ரசித்து சாப்பிட்ட கதையை நாங்கள் ரசித்து ரசித்து படித்தோமே.......மறப்போமா?

அதானே இவங்களுக்கு பிடிச்சது மட்டும் தான் செய்யனும்னா அறுசுவையில் பாதி குறிப்பு கூட இருக்காது. அவங்களுக்கு பாட்டி காலத்து சமையல் தான் உயர்ந்தது இன்றளவிலும். இந்த காலத்து சமையலை ஆதரிப்பவர்கள் ரொம்பவுமே குறைவு தான்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மழை --- காபி--- ராஜாவின் இசை ------ஹ்ம்ம் கேட்கவே இதமாக இருக்கு. இருந்தாலும் அவங்களுக்கும் ஒரு காம்பினேஷன் இருக்கும் கேட்டு பாருங்க.....கண்டிப்பாக காபியாக இருக்காது.....

இல்லை எனக்கு மழை ----- டீ -----மிளகாய் பஜ்ஜி.......அது மாதிரி சொன்னேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாருங்கள் தோழியே! நூறாவது பட்டிமன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கோழிக்கறி என்றால் ராஜ்கிரண், பீர் இட்லி என்றால் விக்ரம், லட்டு என்றால் என்.டி.ஆர், முருங்கக்காய் என்றால் பாக்கியராஜ் இப்படி சினிமாலும் சுற்றி சுற்றி ஆண்கள் தான் நாவிற்கு அடிமையாக காட்டுறாங்க.

ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி பெண்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களோ?

மேலும் வாங்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே.. இதில் என்ன பயம் வேண்டியிருக்கு... எல்லாருக்கும் எல்லாம் பிடிக்குமா என்ன? அப்படித்தான் நானும். பிடிக்கலன்னா பிடிக்கல தானே.

இவர் ஆஃபீஸில் இருந்து வர லேட் ஆனாலும் மாலை நேரம் பெங்களூர் மழைக்கு நான் மசாலா டீயும், பஜ்ஜியும் மிஸ் பண்றதில்லை நடுவரே. ;)

எல்லாரும் பொண்ணுங்க உடம்பு போடும்னு சாப்பிட மாட்டோம், ஆண்கள் கவலையே பட மாட்டாங்கனு சொன்னாங்க... இதே கதையை இன்னும் எத்தனை நாள் சொல்வீங்க??? இப்போ ஆண்கள் தான் அதிகமா ஜிம்ல ஓடிக்கிட்டு இருக்காங்க நடுவரே. கொலஸ்ட்ரால், சுகருன்னு ஆயிரம் விஷயத்துக்கு வாயை கட்டி வெச்சிருக்க ஆண்கள் நிறைய பேருங்க. யாராவது கணவருக்கு சுகர்ன்னு சர்க்கரை இல்லாத டீ போட்டா, தனக்குமா சர்க்கரை இல்லாமலே குடிக்கறாங்க??? தனக்கு போட்டுக்க தானே செய்வாங்க??? அப்போ அங்க அவங்க ரானை எட்டிப்பார்க்குதுன்னு தான் நடுவரே அர்த்தம். சின்ன விஷயம் தான்.. ஆனால் அங்கே அதன் சுவையை சரி செய்து கொள்ள அதிக வேலை இல்லைன்னு தெரிஞ்சா செய்துக்க தான் செய்யறாங்க. அப்பறம் ஏன் நாங்க ரசிச்சு சாப்பிடுறதே இல்லைன்னு சொல்லணும்?

கூடவே ஆண்கள் எல்லாம் என்னமோ அளவு இல்லாம வண்டி வண்டியா சாப்பிடுற மாதிரியும் பெண்கள் தான் 2 இட்லின்னு அளவா சாப்பிடுறதாவும் சொல்றாங்க... அளவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்னாவா இருக்கும்? பெண்கள் எப்பவும் ஆணை விட குறைவா தான் சாப்பிடுவாங்க. இதனால் அவங்க ரசிச்சு சாப்பிடலன்னு எப்படி சொல்ல முடியும்? எல்லாருக்குமே உணவு ருசியா இருந்தா கூட (அதாவது வழக்கத்தை விட கூட) ஒரு பிடி போகத்தான் செய்யும், அது ஆணோ பெண்ணோ. வயிற்றில் இருக்கும் இடத்தை பொறுத்தது அது நிச்சயம் நாவில் உணரும் ருசியை மட்டுமே சார்ந்ததில்லை.

இங்கே எத்தனையோ பேர் நம்ம குறிப்புகளை செய்துட்டு சூப்பர்ன்னு சொல்றாங்க பதிவில்.. சுவைக்காமல், அதை ரசிக்காமலா சொல்றாங்க?? கல்யாணம் ஆகாத பெண்கள்?? யாருக்காக சமைக்கறாங்க? தனக்குத்தானே? நல்லா கவனிங்க நடுவரே... இங்கே யாரும் தனக்கு ரசனை இல்லன்னு சொல்லல, எல்லாருமே கல்யாணம் பண்ணி பிசியா இருக்கோம், சாப்பிட நேரம் இல்லைன்னு தான் சொல்றாங்க. இப்பவும் அம்மா வீட்டுக்கு போய் உட்கார வெச்சு சாப்பாடு போட்டா நல்லா சாப்பிடுவாங்க, ரசிச்சு ருசிச்சு. ஆகா பெண்கள் ரசிச்சு சாப்பிடுறவங்க தான், சில நேரம் முடியல என்பதால் ஆண்களேன்னு சொல்லிட முடியாது. பல ஆண்கள் கடையில் கிடைக்கும் உணவு பிடிக்கலன்னாலும் வேறு வழி இல்லாம கிடைச்சதை சாப்பிடுறாங்க. அதை எப்படி ரசனைன்னு சொல்றாங்க?? நிச்சயம் இல்லை. பெண்ணா இருந்தா அடுத்த நாளே சமைச்சு கொண்டு போக வழியை தேடுவாங்க. அது தான் ரசிச்சு உண்ணும் வழக்கம் உள்ளவங்கன்னு நாங்க சொல்றோம்.

அள்ளி அள்ளி தினிக்கிற ராஜ்கிரணை விட கோழியை தொங்க விட்டு கொஞ்சி கொஞ்சி கோழி கறி சாப்பிட்ட மனோரமா ஆச்சி பிடிக்கலயா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு மழை. ஆனால், சூடான Bonda மற்றும் tea missing. இது என்னுடைய combination.

என்னுடைய அடுத்த வாதம்
2. விருப்பம்
சம்பந்தமாக,

நம் நாட்டில் ஆண்களே அவர்களின் விருப்பத்திற்கு சாப்பிடுபவர்கள். ஒரு வீட்டில் எடுத்துக்கொண்டால் வீட்டு ஆண்களுக்குப் பிடித்த உணவுக்கே முன்னுரிமை கொடுத்து சமைப்பார்கள். அவர் வீட்டுத் தலவராகவோ,மகனாகவோ இருக்கலாம். என்னதான் பெண்ணுரிமை பேசினாலும், நாம் சில விஷயங்களில் ஆண்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம். அதில் உணவும் முதன்மையானது. இதற்குக் காரணம், வீட்டு ஆண் உழைப்பவன். மேலும் அவர் நன்றாக உண்டால்தான் குடும்பம் பிழைக்கும்.இன்றும் இப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது.

இவ்வாறு பெண்கள் விட்டுக்கொடுப்பதால் தான் அவர்களால் தாங்கள் விரும்பியதை ருசித்து உண்ண முடிவதுதில்லை.

No pains,No gains

ANANTHAGOWRI.G

இல்லை தோழியே.......இந்த சந்தேகம் வேண்டாம்.......உங்களை போல் உங்களின் தோழியும் உண்டு, அவருக்கும் அவருக்கு தான் முதலிடம் ;)

இந்த தோசையை அவர் சுட்ட போட இங்கே சுட சுட எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாமல் சாப்பிட்டு பிறகு வயறு முட்டும் போது இருக்கும் ஒரு நிலை பாருங்க ஆஹா அஹா.......என் இனமடி நீ.......

என்னது இப்படியும் ஒரு காம்பினேஷனா........தயிர் சாதத்தில் ப்ரெஷ் ஏடு மாங்காய் குழம்பு குழம்பில் ஊறின மாங்கா.......அருமை அருமை.....

குளிர்ந்த மாம்பழம்.....ஐஸ்க்ரீம்......மொச்சை குழம்பு.......கத்தரிக்காய் சாம்பார்......பாவம் வந்து சேரும்.

பட்டியை ஓத்தி வைக்கிறேன்....நீங்க இரண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க, நான் ஒரு ஒரு வாரம் லீவ் எடுத்துக்கறேன்...பசிக்கிறது.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்களும் ஆண்கள் அணியா.....வாங்க வாங்க.....

சமைத்து வெச்சிட்டு ஒரு வாய் அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள், என்னங்க நல்லாயிருக்க.....உப்பு காரம் சரியாக இருக்கா அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்டு அவங்களை கொடைந்து எடுத்து விடுவோம்.....சரி தான் சரி தான்......பின்னே எங்கே ருசி பார்க்க......நமக்கு தன் இந்த வேலை இருக்கே!

நமக்கு தான் எங்கே போனாலும் நகை, புடவை மேல் தான் கண்ணையிற்றே.......என்னது சாப்பாடு போட்டாங்க என்று கூட சொல்ல தெரியாது.....அதை கவனித்து சாப்பிட்டிருந்தா தானே....எதிர் பந்தியில் கவனம் இருந்ந்தால் எப்படி தெரியும்?

மேலும் வாங்க......

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கத்துடன் 100 வது பட்டிக்கான வாழ்த்துக்களை நடுவருக்கு தெரிவித்து கொள்கிறேன்...

உணவை ரசித்து உண்பது நிச்சயம் ஆண்கள் தான்...

காலை எழும்பி இரவு தூங்க செல்வது வரை பெரும்பாலும் பெண்களுக்கோ 1008 வேலைகள், இதில் இந்த உணவை ரசித்து சாப்பிட வேர நமக்கு எங்க நேரமிருக்காக்கும். எத்தனையோ பெண்கள் காலை உணவை தவிர்த்திடறாங்க முக்கிய காரணம் நேரமின்மை. சாப்பிடவே நேரமில்லையாம் இதில் எங்க ரசித்து ருசித்து சாப்பிட. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நாமே சமைத்து நாமே சாப்பிடுவது, உன்மையில் அந்த உணவு அத்தனை சுவையாய் இருந்தாலும் நமக்கு அத்தனை சுவையாய் தெரியவே தெரியாது. என்னவோ யாராவது சமைத்து கொடுத்து சாப்பிட மாட்டோமா என்று தான் ஏக்கமாய் இருக்கும். இப்பவெல்லாம் பல குடும்பங்களில் பெண்கள் வார இறுதிகளில் உணவங்களுக்கு போய் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கொடி பிடிக்கிறார்களாம். அதை அவங்க கணவர்மார்கள் நிறைவேத்தலைனு வைங்க மனுஷன் அம்புட்டுதேன், சாப்பிட்டில் அவங்க கோவத்தை காட்டிடுவாங்க... உப்பு காரத்தை கூட்டியோ குறைத்தோ... கரண்டி,சப்பாத்தி கட்டை பறக்கறது கூட சில வீடுகளில் உண்டு. என்னத்த சொல்ல சமைக்க தெரியாத கணவர்கள் இருக்கும் வீட்டில் ஹோட்டலுக்கு தானே ஓட வேண்டியிருக்கு.

எந்த வீட்டிலாச்சும் பெண்கள் பிடித்ததை சமைத்து சாபிடறாங்களா சொல்லுங்க... என் புருஷனுக்கு முட்டைகோசு பிடிக்கும், எங்க பெரியவனுக்கு கேரட் பிடிக்கும், எங்க சின்னவனுக்கு தாலிச்ச சாதம் பிடிக்கும், என் பொண்ணுக்கு நூடுல்ஸ் பிடிக்கும்னு நம்ம குடும்பத்துக்கு பிடிச்சதை சமைத்தே நாம காலத்தை ஓட்டிடறோம்.

எத்தனை திருமணமான ஆண்கள் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு வரலைனு பொண்டாட்டிட்ட சொல்லி வசவு வாங்கி கட்டிக்கிறாங்க தெரியுமா...

அதுவே பொண்டாட்டி சமையல் பிடிச்சு போனதுக்கு அப்பறம் மாமியார் வீட்டுக்கு போனால் கூட, நீ சமைத்தா தான்டீ நல்லா இருக்கு... உங்க அம்மா வீட்டிலும் நீயோ சமைச்சு குடுமா என்று சொல்லுறா ஆண்களும் பல... இப்படி ஒருத்தர் கைப்பக்குவம் பழகிடுதுனுனால் இந்த ஆண்கள் எந்த அளவிற்க்கு உணவை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டிருப்பாங்கணு யோசிச்சு பாருங்க...

இந்த ஆண்கள் சுவையான சாப்பாட்டை விரும்பி ருசித்து சாப்பிடும்போது கூட ஒரு கரண்டி உள்ளே இறங்கும். அதுவே சுவையற்ற சாப்பாட்டை சாப்பிடும்போது டிவி பார்த்திட்டு, புக்ஸ் படிச்சிட்டும் தன் கவனத்தை திசை திருப்பி வேறுவழியில்லாமல் உள்ளே தள்ளிடறாங்க... சில நேரங்களில் தட்டும் முட்டும் கூட பறக்கும்...

நல்லா யோசிங்க நடுவரே, நான் அப்பறம் வரேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இந்த பெண்களே இப்படி தாங்க எஜமான்......குத்துங்க எஜமான், குத்துங்க.......

பிடிச்சதை கூட இணுக்கு இணுக்காக தான் பெண்கள் சாப்பிடுவாங்க.....தெரியும் தெரியும் எனக்கு தெரிந்த தோழி டயட் என்று வடை சாப்பிட ஆசை இருந்தாலும் காலையிலிருந்து ஒரு வடையை வைத்து மோந்து பார்த்து, கிள்ளி கிள்ளி மாலை வரை சாப்பிடுவார்.

சர்வே எல்லாம் எடுத்து எடுத்துட்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம்.......எல்லாம் சொந்த அனுபவம் தான்........

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அதானே ஒரு பருக்கை சாபிட்டாலும் அதை ருசித்து சாப்பிட தெரிந்தவர்கள் பெண்கள் என்று நச்சுனு சொல்லியிருக்கீங்க......

மேலும் வாங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்