சின்னச் சின்ன டிப்ஸ் - 2 (பிரியாணி)

பிரியாணி செய்யுறது பலருக்கு சரியா வரதில்லைன்னு சொல்றோம். எனக்கும் ஆரம்பத்தில் பெரிய சிக்கலான விஷயமா தான் இருந்தது. ஆனா வாரம் ஒருமுறை அல்லது குறைந்தது 15 நாளுக்கு ஒரு முறை பிரியாணி செய்யும் போது பக்குவம் தானா வந்துடுச்சு. ”ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்ஃபக்ட்” ;) அப்படி என்ன பெரிய விஷயம் பிரியாணி பண்றது?? ஒன்னுமே இல்லைங்க... ரொம்ப ரொம்ப சுலபம் தான். சின்ன சின்ன விஷயங்களை கவனிச்சா போதும், உங்க பிரியாணியும் சம ஹிட் ஆகும். கீழ இருக்க டிப்ஸ் ட்ரை பண்ணிப்பாருங்க, என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க, நானும் எக்ஸ்பர்ட் இல்லைங்க, இப்பவும் பலர் வீட்டு பிரியாணி என்னை விட சூப்பர்னு கத்துக்க விரும்புறது தான்.... ஆனாலும் கட்டாயம் எனக்கு தெரிஞ்ச அளவில் உதவ காத்திருக்கேன். அட்லீஸ்ட் சுவையில் இல்லன்னாலும் பக்குவத்தில் நிச்சயம் பெர்ஃபக்‌ஷன் கொண்டு வர நான் உதவுவேன்.

1. பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். சுவை நன்றாக இருக்கும்.

2. அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை தண்ணீர் மாற்றி கழுவி 15 நிமிடம் ஊற வைங்க.

3. அரிசி மோட்டா டைப்பா இருந்தா நீரில் ஊற வைங்க, ரொம்ப மெல்லிய அரிசியா இருந்தா நீரை வடிச்சுட்டு ஈரமான அரிசியை அப்படியே வைங்க 15 நிமிஷம். அதுவே போதும், நீரோட ஊற வைக்க தேவை இல்லை.

4. அரிசி அதிகம் ஊறினாலும் உங்க பிரியாணி குழைந்து போகும். நினைவில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது ஊற வைங்க போதும்.

5. வெங்காயம், தக்காளி எல்லாமே நல்லா வதங்கணும் பிரியாணிக்கு. அரைகுறையா வதக்க கூடாது.

6. சிக்கன் சேர்ப்பதா இருந்தா நீர் சேர்க்காமல் வேக விடுங்க மூடி போட்டு. சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது.

7. மட்டன் சேர்ப்பதா இருந்தா மட்டன் வேக வெச்சு தனியா அந்த நீரை வடிச்சு எடுத்து வெச்சுக்கங்க. மட்டனை மசாலாவோடு சேர்த்து பிரட்டி விட்ட பின் மட்டன் வேக வைத்த நீர், கூட தேவையான நீர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடுங்க. மட்டன் வேக வெச்ச நீர் சுவையை அதிகப்படுத்தும்.

8. சிக்கன் பிரியாணியோ மட்டன் பிரியாணியோ... கறியில் உள்ள கொழுப்பை கவனிங்க சமைக்கும் முன். எவ்வளவு கொழுப்பு இருக்கோ அவ்வளவுக்கு எண்ணெய் விடும். அதுக்கு ஏற்ப உங்க எண்ணெய் அளவை முடிவு பண்ணுங்க. அதிகமான எண்ணெய் கூட பிரியாணி சுவையை கெடுத்துடும், திகட்டும்.

9. சிக்கனோ மட்டனோ... எலும்போடு இருப்பது தான் பிரியாணிக்கு சுவையான கறி. எலும்பில்லாதது அத்தனை சுவை சேர்க்காது. நிச்சயம் நல்ல கறி தான் நல்ல பிரியாணியை தரும்.

10. எந்த கறியா இருந்தாலும் பிரியாணி செய்யும் முன் ஒரு 1/2 மணி நேரம் ஊற விடுங்க. நிச்சயமா பிரியாணியோட சேர்த்து சாப்பிடும் போது கறி மட்டும் சுவையில்லாம இருந்தா நல்லா இருக்காது தானே? அதிலும் சுவை சேர்க்கணும்னா கொஞ்சம் ஊறுவது நல்லது. கறி மிருதுவா இருக்க தயிர், உப்பு, சர்க்கரை (1/2 தேக்கரண்டி போதும்) சேர்த்து ஊற வைக்கலாம்னு எப்பவோ யாரோ சொன்னாங்க. நான் சிக்கனுக்கு அதிகமா இதை ஃபாலோ பண்ணுவேன். ட்ரை பண்ணிப்பாருங்க.

11. இஞ்சி பூண்டு ஜீரணத்துக்கு மட்டுமில்லைங்க, அசைவத்தில் வாசமும் நல்லா இருக்க உதவுவது. கடையில் வாங்கின இஞ்சி பூண்டு விழுது இந்த வாசத்தை தராதுங்க. எந்த அளவு இஞ்சி எடுக்கறீங்களோ, அந்த அளவு பூண்டை எடுத்து ஃப்ரெஷா தட்டி போடுங்க. நல்ல வாசம் தரும். நான் பூண்டு எப்பவும் தோலோடு சேர்ப்பேன் வீட்டுக்கு அரைக்கும் போது. நீங்க தோல் இல்லாம சேர்ப்பதா இருந்தாலும் சேர்க்கலாம். மத்தில் கூட தட்டி போடலாம், மைய்யா அரைக்கணும்னு அவசியமே இல்லை.

12. நான் பயன்படுத்தும் கரம் மசாலா காம்பினேஷன்: 1 சின்ன பிரியாணி இலை, 1 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பச்சை ஏலக்காய், 1/2 கறுப்பு ஏலக்காய், 1/4 துண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை சோம்பு, 1/4 துண்டு நட்சத்திர மொக்கு, 1/4 துண்டு ஜாதிபத்திரி. இதை லேசான தீயில் வைத்து வறுத்து எடுத்து கையால் பொடி செய்து பயன்படுத்துங்க. இதையும் அரைச்சு ஸ்டோர் பண்ணிக்காதீங்க, ஃப்ரெஷா பொடிக்குறது தான் வாசம்.

13. நீர் அளவு பாசுமதின்னா 1 கப் அரிசிக்கு 1 1/4 கப் முதல் 1 3/4 கப் வரை ஊற்றலாம். சராசரியா 1 1/2 கப் நீர் சரியா இருக்கும். இதுவும் சிக்கன், மட்டன் பிரியாணிக்கு மாறும். சிக்கன் என்றால் அதுவே நீர் விடுவதாயிற்றே. அதனால் கொஞ்சம் நீர் கம்மி பண்ணலாம். நாம ஊற்றும் தயிர், கறி விட்ட நீர் எல்லாம் கணக்கில் எடுக்கணும்.

14. உண்மையில் நீர் கொஞ்சம் குறைவா இருந்தா கூட முக்கால் பதம் வெந்ததும் கண்டு பிடிச்சுடலாம். அப்போ கொதி நீர் சிறிது பரவலா சேர்த்து தம்மில் வேக விடலாம். அதிகமா போனாலும் தீயை கொஞ்சம் கூட்டி வெச்சு வேகமா நீர் வத்தி போக விடலாம். அப்பறம் தம்மில் போடலாம். ஆனா இதெல்லாம் சொதப்ப வாய்ப்பிருக்கு. முதல் முறை இப்படி செய்து உங்க அரிசிக்கு எவ்வளவு நீர் விட்டா சரியா வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அடுத்த அடுத்த முறை அதை சரியா செய்யுங்க.

15. அரிசி போடும் முன் உப்புமா மாதிரி நீர் நல்லா கொதிக்கணும். இதுவும் அரிசி பதமா வேக அவசியம்.

16. கொதிக்குற நீரில் அரிசியை போட்டு ஒரே ஒரு முறை கலந்து விடுங்க. கறியோட பிரியாணி நல்லா கலந்ததும், மறுபடி கொதிக்க விடுங்க. கொதிக்க துவங்கினதும் தீயை மிதமா வெச்சு மூடிவிடுங்க.

17. கலக்க எப்பவும் முனை நேரா இருக்க கரண்டி பயன்படுத்துங்க. சாதம் போடுற கரண்டி போல. குழியானது போட்டு கலந்தா பிரியாணி குழையும். கிளறுவதும் எப்பவும் பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து ரொம்ப பக்குவமா கிளறிவிடணும். நடுவில் விட்டு கொடைஞ்சா குழைந்து போகும்.

18. நல்லா கவனிங்க... கொதி நீரில் அரிசி சேர்த்து ஒரே ஒரு முறை கலந்து விடுவதோடு போதும், அதன் பின் முழுவதும் வேகும் வரை கரண்டி போடாதீங்க. அரிசியை அடிக்கடி கலந்தால் கஞ்சி வெளியாகும், பிரியாணி குழைந்து போகும். இந்த தப்பு தான் காமனா நிறைய பேர் பண்றது.

19. முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடுங்க. முக்கால் பதம் வெந்ததும் மேலே சாதம் தெரியும் , நீர் தெரியாது. கலந்து விடாதீங்க. நீர் குறைவுன்னு தோணினாலும் தம்மில் போடும் போது அந்த ஆவி உள்ளுக்குள் இருந்து நீராவியா வேக வைக்கும் என்பதை நினைவில் வைங்க. கரம் மசாலா சேர்ப்பதை இப்போ சேர்க்கலாம். எலுமிச்சை இந்த நிலையில் பிழிந்தாலும் சரி, அல்லது கடைசியா பிழிந்தாலும் சரி தான்.

20. தம் போடும் முறை நிறைய இருக்கு. அவனில் போடுறாங்க, அடுப்பிலேயே தோசை கல் வெச்சு போடுறாங்க, எதுவும் இல்லாம ரொம்ப பொடி தீயில் நேராவே கூட வைக்கிறாங்க. எதை செய்வதானாலும் நீங்க பிரியாணி பண்ற பாத்திரம் அடி கனமான பாத்திரமா இருந்தா நல்லது. அது தான் தீயாமல் பிரியாணி நல்லா தம் போட வரும். மேலே ஆவி போகாமல் மூட வசதியா மூடி இருக்கணும். அலுமினியம் ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடிட்டு மூடி போடலாம், அல்லது மாவு பிசைந்து தட்டையும் பாத்திரத்தின் ஓரத்தையும் சேர்த்து மூடலாம், அல்லது தட்டு மேல கல்லு வைக்கலாம். இதெல்லாம் ஆவி
வெளிய போகாம தம்மில் போடும் முறை.

21. பிரியாணிக்கு தக்காளி வதக்கும் போது, கறி வேகும் போதுன்னு எல்லா நிலையிலும் மூடி போட்டு வதக்குங்க, வேக விடுங்க. வாசம் நல்லா இருக்கும், தக்காளி எல்லாம் நல்லா குழைந்து வேகும்.

22. வெங்காயம் வதக்க, தக்காளி வதக்கன்னு எல்லா ஸ்டேஜுலையும் அந்த அந்த பொருளுக்கு ஏற்ப உப்பு சேர்த்து வதக்குங்க. அது சீக்கிரம் வதக்க மட்டுமில்ல, அந்த அந்த பொருளில் உப்பு சேர்ந்து சுவையை கூட்டவும் உதவும்.

23. கொத்தமல்லி புதினா எல்லாம் ரொம்ப அரைக்காம, பொடியா நறுக்கி போடுறது வாசம் நல்லா இருக்க உதவும். சிலருக்கு இதன் வாசம் கறியிலும் இருந்தால் பிடிக்கும், அப்படி நினைக்கிறவங்க கறி சேர்க்கும் முன்னே கூட புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கலாம்.

24. பிரியாணி எப்பவுமே சாப்பிட 2 மணி நேரம் முன்பே செய்துட்டா சுவை ரொம்ப நல்லா இருக்கும். பார்ட்டிக்கு எல்லாம் மதியமே பிரியாணி பண்ணி 3/4 பதம் வெந்ததும் அடுப்பை விட்டு எடுத்து அலுமினியம் ஷீட் போட்டு டைட்டா மூடி வெச்சுடுவேன். மாலை பரிமாற 1/2 மணி நேரம் முன் எடுத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து கிளறுவேன். பதமா வெந்து மசாலா கறியில் நல்லா ஊறி சுவையா இருக்கும் பிரியாணி. வீட்டிலும் இது போலவே சீக்கிரமா செய்து ஊற விட்டுட்டா டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும். எலுமிச்சை சாதம், புளி சாதம் எல்லாம் கிளறி கொஞ்ச நேரம் வெச்சிருந்தா எப்படி சாதத்தில் அதன் சுவை கூடுதோ, அப்படி தான் பிரியாணியும்.

குக்கரில் நான் இதுவரை விசில் வைத்ததில்லை. கொதிக்கும் நீரில் அரிசி போட்டு கொதி வந்ததும் மூடி ஒரு விசில் கூட விடாம அப்படியே சிம்மில் 15 நிமிடம் வைப்பேன், நல்லா வரும். ஆனாலும் பிரியாணி குக்கரில் செய்வதை விட அடி கனமான பாத்திரத்தில் அடுப்பில் சமைப்பதே எனக்கு பிடிச்ச முறை. என்னவோ பிரியாணி என் கண்ட்ரோலில் இருப்பது போல ஒரு உணர்வு ;)

நம்ம அறுசுவையில் வித விதமான பிரியாணி குறிப்பு வருது. பலருக்கும் குழப்பம் இருக்கும், எல்லாத்துலையும் அதே சிக்கன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தயிர், மசாலா வகை தானே இருக்கு, என்ன வித்தியாசம்னு... ஆனா ஒவ்வொரு வகைக்கும் சுவையில் நிறைய வித்தியாசம் இருக்கும், அதை சுவைத்து பார்த்தா உங்களுக்கே நல்லா புரியும்.

1. பிரியாணியில் வெங்காயம் அரைத்து சேர்ப்பதுக்கும், நறுக்கி சேர்ப்பதுக்கும் சுவை மனம் வேறுபடும். சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்தால் அது வேறு விதமான சுவையையும் மனத்தையும் தரும்.

2. புதினா கொத்தமல்லி சேர்த்தா ஒரு வாசம், சேர்க்கலன்னா வேறு விதம். நான் கறிவேப்பிலை கூட சேர்ப்பது உண்டு ஒரு வகை பிரியாணிக்கு. முக்கியமா வெஜிடபிள் பிரியாணிக்கு அது நல்ல வாசம்.

3. காரத்துக்கு மிளகாய் தூள் / பச்சை மிளகாய் / நறுக்கி தாளிப்பது / அரைத்து வதக்குவது ஒவ்வொன்றும் ஒரு வகை.

4. புளிப்புக்கு எலுமிச்சை / தயிர் / தக்காளி - ஒவ்வொன்றும் ஒரு வகை. இவற்றின் காம்பினேஷன் ஒரு வகை.

5. தாளிக்க முதலில் மசாலா பொருட்கள் சேர்ப்பது ஒரு வாசம், இஞ்சி பூண்டு முதலில் சேர்த்தால் ஒரு வாசம், வெங்காயம் முதலில் சேர்த்தால் ஒரு வாசம், புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கினா ஒரு வாசம்... இப்படி எண்ணெயில் முதலில் சேர்க்கும் பொருளே வாசத்தை மாற்றிவிடும்.

6. எண்ணெய் / நெய் - இதிலும் சுவை, வாசம் மாறுபடும். நெய்யை தாளிக்க பயன்படுத்துறதுக்கும், கடைசியில் சிறிது நெய் சேர்ப்பதுக்கும் கூட வித்தியாசம் இருக்கு தெரியுமா?

7. சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே மிகுந்த சுவை தரும்.

8. தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு காம்பினேஷன். தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை. தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை. அந்த தேங்காய் பால் கூட ரெடிமேடுக்கும், வீட்டில் எடுத்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம்!!

9. மசாலா அரைக்கும் போதே பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் அரைத்து சேர்த்தால் அது ஒரு வகை.

10. கரம் மசாலாவை முதலில் சேர்த்து வதக்கினா ஒரு வாசம், கடைசியா தூவி தம்மில் போட்டால் ஒரு வாசம். பிரியாணிக்கு கரம் மசாலா கடைசியா சேர்ப்பது தான் எனக்கு பிடிச்ச முறை.

11. நட்ஸ் எல்லாம் வறுத்து சேர்த்தால் ஒரு சுவை / அவை இல்லாமல் செய்தால் ஒரு சுவை / சிலர் பைனாப்பிள் கூட சேர்ப்பாங்க பிரியாணியில் அது ஒரு சுவை. எனக்கு ஆனா நட்ஸ் சேர்க்கும் முறை பிடித்தமில்லை. முஹல் டைப் பிரியாணியில் நட்ஸ் நிறைய இருக்கும். ரிச்சான உணவு.

12. கறியுடன் உருளை சேர்த்தால் வாசமும் சுவையும் மாறுபடும்.

13. கறி தனியா அரிசி தனியா சமைச்சு லேயர் லேயரா தம் போடுவாங்க. இது ஒரு வகை பிரியாணி.

14. அரிசியை நெய்யில் அல்லது எண்ணெயில் லேசா வதக்கிட்டு அப்பறம் சமைப்பாங்க பிரியாணி, ஒன்னோடு ஒன்னு ஒட்டாம வரவும் இது நல்ல முறை. இப்படி செய்யும் போது சுவை வித்தியாசமா இருக்கும்.

15. புலாவுக்கும் பிரியாணிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முக்கியமா மசாலா. பிரியாணி கொஞ்சம் ஹெவி மசாலா, புலாவ் ரொம்பவே மைல்டா இருக்கும். லேயர் லேயரா தம் போடுறதும் பிரியாணிக்கே உள்ள தனித்துவம். தம் போடுறதே தனித்துவம்னு சொல்லலாம்.

பிரியாணி வகைகளும், மாறுபாடும்:

16. அவாதி பிரியாணி ஏறக்குறைய முஹல் பிரியாணி போல தான். முஹல் பிரியாணி நட்ஸ் எல்லாம் சேர்த்து, லேயர் லேயரா தம் போடும் முறை. அவாதி பிரியாணியில் நெய் அதிகம் இருக்கும். அரிசியை கூட நெய்யில் வறுத்து பின் கறி சமைத்த மசாலாவில் வேக வைத்து பின் கறியையும் சாதத்தையும் லேயர் லேயரா தம் போடுவாங்க. முக்கியமா மட்டன் இந்த முறையில் நல்ல சுவையா இருக்கும். மட்டன் வேக வெச்ச நீரில் அரிசியை சமைத்து, அதன் பின் கறி மசாலா கலவையை வைத்து லேயரா தம் போடுவாங்க.

17. ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல். இவங்க யாரும் லேயரா போடுறதில்லைன்னு சொல்ல முடியாது. ஆம்பூர் பிரியாணியும் சிலர் லேயரா போடுறாங்க. செட்டிநாடு பிரியாணியில் ஸ்பெஷல் தேங்காய் பால் சேர்ப்பது.

18. திண்டுக்கல் / தலப்பாக்கட்டி பிரியாணியில் ஸ்பெஷல்னு சொல்லணும்னு ஜீரக சம்பா அரிசி தான். பாசுமதியை விட ஜீரக சம்பா சுவையும் வாசமும் தனி தான். ஆனா நீர் அதிகமா தேவைப்படும் பாசுமதியை விட. எலுமிச்சை, தயிர் சேர்ப்பது இதுல ஸ்பெஷல்.

19. ஹைதராபாத் பிரியாணி பச்சை மிளகாய் ஸ்பெஷல். அதை விட ஸ்பெஷல் தம் போடும் முறை. கறி அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதை மாவு கொண்டு மூடி தம்மில் வைப்பாங்க. அந்த கங்கு சூட்டில் சாதம் தம்மில் இருப்பது தான் ஹைதராபாத் பிரியாணியின் ஸ்பெஷல் வாசம், சுவைக்கு காரணம்.

20. தலச்சேரி பிரியாணி, மலபார் ஸ்டைல். இதில் பயன்படுத்துவது சின்ன வகை அரிசி. நம்ம ஊர் ஜீரக சம்பா போல. தம் போடும் போது தட்டை மூடி மேலயும் சூடான கறி துண்டு வைத்து தம் போடுவாங்க.

21. வாணியம்பாடி பிரியாணி ஆல்மோஸ்ட் ஆம்பூர் பிரியாணி போல தான், ஆனால் ஆம்பூர் பிரியாணி சுவை கூட இருக்குறதா தோணும். ஆர்காட் நவாபுகள் அறிமுகப்படுத்தியவை.

22. சிந்தி பிரியாணி பாகிஸ்தானி ஸ்டைல்.

சில வகை பிரியாணியில் முஹல் போன்றவற்றில் வெங்காயத்தை நிளவாட்டில் நறுக்கி நெய்யில் அல்லது எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து பிரியாணியில் தூவுவாங்க. கொஞ்சம் இனிப்பான சுவை தரும். இப்படி பிரியாணி ஒவ்வொன்னு ஒவ்வொறு வகையில் சிறப்பானவை. எல்லா வகையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. ஆம்பூர் பிரியாணி பிடிக்கிறவங்களுக்கு செட்டிநாட்டு பிரியாணி சுவையா தெரியாம போகலாம். நான் இங்க சொல்லி இருக்குறது ஓரளவு பிரபலமான சில பிரியாணி வகைகளை மட்டுமே. இன்னும் எத்தனையோ வகையான பிரியாணி இருக்குங்க.

செய்து பார்த்தா உங்களுக்கு ஒவ்வொன்னும் ஒரு சுவையா தெரியும் :)

பிரியாணி எந்த நாட்டில் இருந்து வந்ததோ... அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி, எங்க நாடு தான் பிரியாணிக்கு தாய் வீடுன்னு சொல்வாங்க. அது எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நம்ம வீட்டில் செய்து பரிமாறும் போது நம்ம ஊர் பெண்களுக்கே உள்ள அதீத அன்பும், பொறுமையும் கலந்து சுவையான உணவா அமையும். எனக்கு பிடிச்ச விஷயம்.. “Don't practice until you get it right. Practice until you can't get it wrong." அதனால் விடாம ட்ரை பண்ணுங்க... பிரியாணி எப்பவுமே சூப்பரா வரும் என்ற நிலைவரை. ஆல் தி பெஸ்ட். ;)

5
Average: 4.6 (14 votes)

Comments

அன்பு வனி
சூப்பர். இத்தனை டிப்ஸ்... இனி பிரியாணி யாருக்கும் சொதப்பாது. எல்லா டவுட்டும் க்ளீயர்.
நான் எலுப்பின்றி வைத்து விடுவேன். இனி எலும்பு சேர்த்து வைக்கிறேன்.
நான் குக்கரில் விசில் வைத்து வைப்பேன். அது அடிப்பிடித்து விடும்.
நீங்க‌ சொன்ன‌ மாதிரி என் கண்ட்ரோலில் இராது.
இனி வேறு அடி கனமான‌ பாத்திரத்தில் வைக்கிறேன்.
அடி கனமான‌ பாத்திரம் என்றால் அலுமினியம் அல்லது எவர்சில்வர் எது சரி வனி.
நான் நான்ஸ்டிக் உபயோகிப்பதில்லை. எதை வாங்கணும்னு சொல்லுங்க‌.
அப்புறம் பிரியாணியில் எவ்வளவு வெரைட்டி. எத்தனை வேறுபாடுகள்.
இனி நானும் தினுசு தினுசா ட்ரை பண்ணுறேன்.
ஆனால், இது கார்த்திகை மாசம். நெக்ஸ்ட் மந்த் ட்ரை பண்ணனும்.
நீங்க‌ தம் போடும் அந்த‌ கடைசி படம் தெளிவா புரியுது. இதுவரை நான் தம் போட்டதில்லை.
சூப்பர் வனி.தான்க்ஸ் எ லாட்:)
புக்மார்க் பண்ணியாச்சு:)

பயனுள்ள டிப்ஸ்களை அதிகமாக வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
டிப்ஸ் மழை அருமைங். விருப்பபதிவாக சேர்க்க முடியுமான்னு வலைப்பதிவில் பட்டனை தேடினேன்ங்.
6. பாயிண்ட் சந்தேகம் தீர்ந்ததுங்.
அனைவர்க்கும் பயன்படும்படியான அருமையான பகிர்வுங். :-)

நட்புடன்
குணா

ரொம்ப பயனுள்ள குறிப்புகள். இப்போ தான் தெரியும் இவளோ பிரியாணி இருக்கு என்று. பிரியாணி செய்ய தொடங்கியதே உங்க குறிப்பு பார்த்து தான். சின்ன சின்ன பிழைகளுடன் 2 முறை செய்து விட்டேன்.

தம் போடுவது என்றால் எப்படி ? இப்போ தான் தெரிஞ்சு கொண்டேன்.
கொத்தமல்லி நான் சேர்ப்பது இல்லை. அஅரிசி போட்டதும் அடிக்கடி கிளறிட்டு இருப்பேன் . உங்க குறிப்புகளின் படி பிரியாணி செய்து பார்கிறேன்.
உங்க பிரியாணி சுவையை எங்க கூட பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

ம்ம்ம்ம்ம்ம்... பிரியாணீணீணீணீ... வாரத்துல‌ ஏழு நாளும் குடுத்தாக்கூட‌ சலிக்காம‌ சாப்பிடுவேன்.. அதே போல‌ அடிக்கடி வீட்ல‌ செய்வேன்.. வித‌ விதமா இல்லைனாலும் ஒரே முறைல‌ சின்ன‌ சின்ன‌ மாறுதல்களோட‌ செய்வேன்..

அருமையான‌ டிப்ஸ் எல்லாம் கொடுத்திருக்கீங்க‌.. ஒரு ஒரு வகை பிரியாணிலயும் என்னென்ன‌ ஷ்பெஷல்னு சொல்லிருக்கறது சூப்பர்.. ரொம்ப‌ உபயோகமான‌ டிப்ஸ்.. எப்பவும் போல‌ கலக்கல்.. பிரியாணி ஷ்பெஷல்ன்ன‌ உடனே பதிவு போடாம‌ இருக்க‌ முடியல‌.. ;)

வித்யா பிரவீன்குமார்... :)

வனி சூப்ப்ர்மா முஸ்லிம்னா பிரியானி பேமஸ் நு எல்லாரும் சொல்வாங்க ஆனா எங்களால் கூட இப்படி அழகா சொல்லமுடியாது இன்னும் நிரைய டிப்ஸ் சொல்லனும் எல்லாருக்கும் யூஸாயிருக்கனும் வாழ்த்துக்கள் வனி

பிரியாணிக்கு கொடுத்திருக்கும் எல்லா டிப்ஸ்ம் ரொம்ப‌ நல்லா இருக்கு வனி.. கத்துக்குட்டி முதல் கை தேர்ந்த‌ எல்லாருக்கும் பயன்படும்படி சூப்பரா ,படங்களோட‌ விளக்கமும் கொடுத்து இருக்கீங்க‌..வாழ்த்துக்கள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அக்கா

வெஜிடபிள் பிரியாணி செய்முரை சொல்லுகள் அக்கா.

புதினா கொத்தமல்லி இல்லாமல் செய்வது எப்படி

சூப்பரோ சூப்பர் போங்க‌!!!

சமயலில் டாக்டரேட் செய்து, பிரியாணியில் ரிசர்ச் ஒர்க் பன்னி , அறுசுவையில் தீஸிஸ் சப்மிட் செய்திருக்கீங்க‌!!! ரிசல்ட் கேக்கனுமா????? அதுதான் கீழெ கருத்துகளா வருதே!!

///அட்லீஸ்ட் சுவையில் இல்லன்னாலும் பக்குவத்தில் நிச்சயம் பெர்ஃபக்‌ஷன் கொண்டு வர நான் உதவுவேன்/// சுவை எனக்கு எப்பவுமே ஒரு பிரச்சனையா இருந்ததில்லை! இந்த‌ பதம் மட்டுமே எப்பவும் பிரச்சனை!! ஒவ்வொரு அரிசிக்கும் இந்த‌ பதத்தை கண்டுபிடிக்கிறது குதிரைக்கொம்பா இருக்குங்க‌!!!

இனிமேல் இந்த‌ பிரியாணியை "ஒரு கை பார்த்துடவேண்டியடுதான்."

எனக்கு ஒரு சின்ன‌ சந்தேகம், அவனில் எப்படி தம் போடுவது?

பிகினர்ஸ்க்கு ரொம்ப பயனுள்ள டிப்ஸ் வனி
நானும் சமைக்க தொடங்கிய புதிதில் சொதப்புவது தம் மட்டும் தான், அப்புறம் வாரம் ஒரு முறை செய்ய தொடங்கி இப்போ ரொம்ப சுலபமா அவனில் தம் போட்டுடுவேன்.

சில டவுட்
வெங்காயம் அதிகமா சேர்த்தா இனிக்காதா ?
கரம் மசாலா பவுடர் நான் எண்ணெயில் போட்டுத்தான் பழக்கம். அப்படி போட்டால் தான் பிரியாணி முழுதும் பரவின திருப்தி எனக்கு. தம் போடுகையில் போட்டால் பிரியாணி முழுதும் மிக்ஸ் ஆகுமா ? (பிரியாணியை நாம் அதிகமா கிளர முடியாதே)

முதல் படம் பார்க்கையில் வீக்கென்ட் சீக்கிரம் வராதான்னு இருக்கு :)

ஆஹா வனி... பிரியானியில் இம்புட்டு விசயமா... நான் எப்ப பிரியானி செய்தாலும் ஒவ்வொரு முறையும் சுவை மாறுபடும், அதன் ரகசியம் இப்ப தான் புரியுது... நிறைய தெரிஞ்சுகிட்டோம்... இனி நிறைய இம்ப்ளிமெட்ஸ் பன்னலாம்...

ஒரு சந்தேகம், எங்க தலைவருக்கு பொதுவா பட்டை லவங்க ஏலக்காய் பல்லுல கடிபடுவது பிடிக்காது, அதனால் கறி போட்டு வதக்கி நீர் விட்டதும், அது எல்லாத்தையும் எடுத்திடுவேன்... நீங்க சொன்ன கரம் மசாலாவை கடைசியில் சேர்த்து கிண்டும்போது பிரியானியோட நல்லா மிக்ஸ் ஆகுமா, காரல் வாடை வராதா???

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சூப்பர் வனி ரொம்ப அருமையான ப்ளாக். எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல். எனக்கு சில நேரங்கள்ல அரிசில நீர் சேர்க்குறதுல பிரச்சினை வரும். நான் அதிகமா சீரக சம்பாதான் யூஸ் பண்ணுவேன். பாஸ்மதி வாசனை அவ்வளவா பிடிக்காது. பொன்னில பிரியாணி எப்டி வரும் வனி? நீங்க ட்ரை பண்ணிருகீங்களா? செய்துருந்தா டேஸ்ட் எப்டி இருக்கும்னு சொல்லுங்க. அடுத்த தடவை அதுல ட்ரை பண்ணி பாக்குறேன்.

நான் பிரியாணிக்கு நெய் சேர்க்க மாட்டேன். வீட்ல யாரும் விரும்பமாட்டாங்க. நான் சக்தி கரம் மசாலாதான் யூஸ் பண்ணுவேன். கறியோட சேர்த்து ஊறவைப்பேன் இல்லன்னா வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கும் போது சேர்ப்பேன். அடுத்த தடவை உங்க முறையில் பொடிச்சு கடைசியா சேர்த்து பாக்குறேன்.

பயனுள்ள டிப்ஸ் குடுத்ததுக்கு நன்றி வனி. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி எதிர்பார்துடே இருந்தது இப்போ கிடைச்சிடு.

///கிளறுவதும் எப்பவும் பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து ரொம்ப பக்குவமா கிளறிவிடணும். நடுவில் விட்டு கொடைஞ்சா குழைந்து போகும். ///
இது தாங்க நான் பண்றது. ஒவ்வொரு நிமிசத்துக்கும் கிண்டி கிண்டி எடுத்து டேஸ்ட் பார்பேன்.

இன்னும் ஒரு சந்தேகம். நீங்க அப்ப முதல்ல பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாம் போட்டு தாளிக்க மாட்டீர்களா? இஞ்சி,பூண்டு தானா? (உங்கள அப்படியே பாலோ பண்ண போறேன். ).

இந்த வீகெண்ட் செய்துட்டு சொல்றேன். நன்றி.

பாரதி வெங்கட்

அன்புடன்
பாரதி வெங்கட்

பிரியாணிப் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை படித்த திருப்தி ஏற்படுகிறது. நான் அறு சுவை சகோதரிகள் கூறிய முறைகளை பின் பற்றி செய்தாலும் electrical cookeril செய்கிறேன். தம் எல்லாம் போடுவதில்லை. அதுவும் சுவையாகத்தான் இருக்கிறது.

Information is wealth

வனி சிஸ். பிரியாணி டிப்ஸ் சூப்பர்... சூப்பர். பிரியாணிக்கு இவ்வளவு பக்குவங்களா? முதல் வேலையா எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி நினைவில் வைக்கணும்.

இவ்வளவு நாளா நான் வெஜிடேபிள், போடுறதுக்கு பதிலா சிக்கன் இல்ல மட்டன் போடுவேன். அவ்வளவு தான் நான் பண்ணுற வெஜிடேபிள் பிரியாணி, சிக்கன் பிரியாணி வித்தியாசம்.

உன்னை போல் பிறரை நேசி.

Super tips vani akka...innum neriya tips podunga....nan non veg nala seivan but veg sothapidum veg kum tips podunga.... :)

சூப்பருங்க‌... மிகவும் அருமையான‌ பதிவு.
(வீக்கென்ட் நம்ம‌ அருசுவை தோழிகள் உங்க டிப்ஸை மனதில் கொண்டு சமைக்கும்போது உங்களுக்கு "தும்மல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_தும்மலா" வரப்போகுது ஹி ஹி ஹி...)

வாவ் வனி இவ்வளவு டிப்ஸ் சான்ஸே இல்ல. உங்க குறிப்பு கள் எல்லாத்துலயும் கடைசியா குடுக்கற டிப்ஸ் எல்லா சந்தேகமும் தீர்த்துடும். அதனாலயே உங்க குறிப்பு அடிக்கடி செய்யமுடியுது.

எனக்கு பிரியாணினா ரொம்ப உயிர். நான் ரசித்து சொல்வதில் பக்கத்துவீட்டுல இருக்கறவங்க அவங்களுக்கு ஆசை வந்துடுச்சுன்னு சொல்லுவாங்க. அப்படி ரசித்து சாப்பிடுவேன். குட்டிஸ்க்கும் ரொம்ப பிடிக்கும்.

நானும் முதல்லலாம் பிரியாணி செய்யனும்ன்னு ஆரம்பிச்சா அது தக்காளி சாதம் போலயே இருக்கும். நானும் அடிக்கடி விடாம செய்துக்கொண்டே இருப்பேன். இப்ப நல்லா வந்துடுச்சு. முதல்லலாம் குக்கரில் செய்வேன். இப்போ பாத்திரத்தில் செய்ய கத்துகிட்டேன். எனக்கும் இந்த மெத்தட் தான் பிடிக்கும். நிச்சயமா அவருக்கு தான்க்ஸ் சொல்லணும் எப்படி செய்தாலும் வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டுவார். இப்ப ஒரு அளவுக்கு எக்ஸ்பெர்ட்தான் பிரியாணி சமைப்பதில்.

நீங்க சொன்னதுல எனக்கு லேயர் லேயரா போட்டு பண்ணறது கொஞ்சம் வராது. அதனால எப்பவும் தம்தான்.
மட்டன் பிரியாணி செய்தா உங்க செட்டிநாடு பிரியாணி தான் செய்வேன். வீட்டுக்கு கெஸ்ட் வந்தப்ப செய்து நிறைய பாரட்டும் கிடைச்சுருக்கு. நம் அறுசுவை தோழிதான் காயத்ரி கல்ஸ் அவங்களும் வீட்டுக்கு வந்தப்ப இது போல செய்து மயங்கிட்டாங்க அதோட சுவைக்கு. என்னவருக்கும் ரொம்ப பிடிக்கும். அவர் பிரண்ட்ஸ் வீட்டில் வந்தப்பவும் இது போல் செய்ததில் அவருக்கு ரொம்ப பெருமையும் கூட .

சீரகசம்பா பிரியாணி சான்ஸே இல்ல நல்ல டேஸ்ட். ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா செய்யணும்.
நீங்க சொன்னமாதிரி போனவாரம் கரம்மசாலா கடைசியில் போட்டேன். ம்ம்ம்ம்ம் இப்ப நினைச்சா கூட எச்சில் ஊறுது. அவ்வளவு சுவை.

Be simple be sample

நான் நான் ஸ்டிக் வெச்சிருக்கேன், கூடவே எவர் சில்வர் கூட வெச்சிருக்கேன். இரண்டுமே எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க ப்ரெஸ்டீஜ்ல திக் பாட்டம் சமையல் பாத்திரம் கிடைக்குதே அதை வாங்கி ட்ரை பண்ணுங்களேன், நான் ஒன்னு வெச்சிருக்கேன், நான் ஸ்டிக் போல ஒட்டாம வருது, எவர் சில்வர் தான். :) மிக்க நன்றி நிகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாம் நம்ம தோழிகள் சொல்லி தான் கொடுக்கறேன்... இல்லன்னா நானா எங்க உட்கார்ந்து வேலை பார்க்க ;) நாம தான் சோம்பேரி ஆச்சே. மிக்க நன்றி குணாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி
பிரெஸ்டீஜ் உடனே பார்க்கலாம். இந்த‌ நிமிஷமே .... தான்க்ஸ் :)

மிக்க நன்றி :) அவசியம் கிளறிவிடாம செய்து பாருங்க. எப்படி வந்ததுன்னு எனக்கு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? :) மிக்க நன்றி. எத்தனை வகை என்பது நம்ம நிகி தான் கேட்டாங்கன்னு நினைக்கிறேன் ;) அவங்களுக்கு தான் அந்த தேன்க்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பதிவுக்கும் வாழ்த்துக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) //கை தேர்ந்த‌ எல்லாருக்கும்// - ம்ஹும்... அவங்ககிட்டலாம் என்னை சிக்க வைக்காதீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெஜிடபிள் இதே போல தாங்க. புதினா கொத்தமல்லி இல்லாம காய்கறிகளை வெங்காயம் பாதி வதக்கும் போதே சேர்த்து வதக்குங்க. எனக்கு வேக வைத்து காய்கறிகளை மசாலாவில் சேர்ப்பதை விட, காயை முதலில் சேர்த்து வதக்கி மாசாலாவோடு வேக விடுவது பிடிக்கும். காய் நல்லா வதங்க மூடி விடுங்க. அதுலையே முக்கால்வாசி வெந்துடும், அப்பறம் தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி, நீர் விட்டு கொதிக்க விட்டு... மற்ற எல்லாம் நான் வெஜ் பிரியாணி ப்ரொசீஜர் தான். ட்ரை பண்ணிப்பாருங்க. அறுசுவையில் ஏகப்பட்ட வெஜிடபிள் பிரியாணி இருக்கு, எதை வேணும்னாலும் ட்ரை பண்ணுங்க. குழையாம நல்லா வர இந்த டிப்ஸ் பயன்படுத்திக்கங்க. :) டவுட்டிருந்தா கேளுங்க. மிக்க நன்றி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அப்பப்பா... முடியல சாமி ;) நானெல்லாம் தீஸிஸ் சப்மிட் பண்ணி தேருமா?? என்ன பண்ண... சுவை நாக்குக்கு நாக்கு மாறுமே. எனக்கு பிடிச்சத் இவருக்கு பிடிக்காது, இவருக்கு பிடிக்குற மாதிரி சமைக்குறது பெரிய சிரமம். ஆனா பிரியாணி விஷயத்தில் எங்க சாப்பிட்டாலும் தலைவர் வீட்டு பிரியாணி போல இல்லன்னு சொல்லும் படி தேரிட்டேன். நான் அரிசி அடிக்கடி மாத்த மாட்டேன்... ஆனா விதி, ஊர் ஊரா மாறும் போது அரிசி மாறிகிட்டே தான் இருக்கும். அதனால் ஒரு பார்வையில் ஓரளவு கெஸ் பண்ண கத்துகிட்டேன். அவன்ல தம் போடும் முறை நம்ம லாவி ஒரு முறை கொடுத்திருக்காங்க...

http://www.arusuvai.com/tamil/node/21996

இதுல படத்தோட விளக்கமா மொஹல் பிரியாணி இருக்கு :) அசத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) வெங்காயம் அதிகம் என்றால் 1 கப் அரிசிக்கு 2 மீடியம் சைச் அல்லது 3 சின்னது தான். அது இனிப்பு சுவை தராது. நானும் சில செஃப் சொன்னதை தான் ஃபாலோ பண்றேன். கரம் மசாலா கடைசியா தூவுறதும் ஒரு செஃப் சொன்னது தான். கடைசியா போடும் போது வாசமும் சுவையும் நல்லா இருக்கும். ஏற்கனவே வறுத்து நல்லா பொடி பண்ணிடுறதால தம் போடும் போது நல்லாவே இருக்கும். கடைசியா எப்படியும் ஒரு கிளறு கிளறுவோம் தானே... அதுவே போதுமானது. அதிகம் கிளற தேவை இல்லை. ட்ரை பண்ணிப்பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பிரேமா :) வறுத்து தானே பொடி பண்றோம், அப்பறம் தம்லயும் போடுறோம் தானே... அதனால் காரல் வாடை வராது. பயப்படாம ட்ரை பண்ணுங்க, வேணும்னா முதல் முறை கொஞ்சமா தூவி விடுங்க. பிடிச்சா அப்பறம் வழக்கமா போடும் அளவுக்கு போடலாம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பொன்னியில் பிரியாணி சுவை அதிகம் சேராது. இது போல வகைகளுக்கு பச்சரிசி நல்லா இருக்கும். அது வேணும்னா ட்ரை பண்ணிப்பாருங்களேன், சுவையும் நல்லா இருக்கும். நான் பிரியாணி ட்ரை பண்ணாதே அரிசியே இல்ல ;) எந்த ஊரில் எது கிடைக்குதோ எல்லாம் ட்ரை பண்ணுவேன். ரொம்ப கஞ்சி உள்ள அரிசின்னா சில நேரம் எண்ணெயில் வதக்கிட்டு சுடு தண்ணி விட்டு பண்ணுவேன், கொழ கொழன்னு இல்லாம வர. நானும் நெய் வீட்டுக்கு செய்தா சேர்க்க மாட்டேன், பார்ட்டிக்கு மட்டும் தான். இங்கையும் இவருக்கு பிடிக்காது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நிமிஷத்துக்கு ஒரு முறையா?? அப்படி கிளறுவது சரியோ இல்லையோ... பிரியாணி நிமிஷதுக்கு ஒரு முறை சுவை பார்த்தா காலி ஆயிடாதா டேபில்க்கு வரும் முன் ;) ஹஹஹா. நான் முதல்ல பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை எல்லாம் சில நேரம் தாளிப்பேன், சில நேரம் தாளிக்காம நேரா வெங்காயம் போட்டுடுவேன். இதை தாளிச்சாலும் கரம் ம்சாலாக்கு பதிலா நான் பொடி செய்து போடுவதை போடுவேன். :) அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க பாரதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா