வலி மிகும் இட‌ங்கள் (மூட்டு வலி)

வலி மிகும் இடங்கள் என்றதும் தமிழ் இலக்கணம்னு நினைச்சி தலை தெறிக்க‌ ஓடாதீங்க‌.

மூட்டு வலியைப் பற்றியே அவ்வாறு வேடிக்கையாகச் சொல்ல‌ வந்தேன்.

அனேகமாக‌ நாம் எல்லோருமே எங்காவது ஓரிடத்தில் மூட்டு வலியை அனுபவித்திருப்போம். மூட்டு வலின்னு டாக்டரிடம் போனா அவர் பெயின் கில்லர் தான் தருவார். அது சில‌ தினங்களுக்கு மட்டுமே நிவாரணம் தரும். டி.வி. விளம்பரத்தைப் பார்த்து அதையும், இதையும் வாங்கித் தேய்ச்சா அதுவும் தற்காலிக‌ நிவாரணந்தான். கண்டகண்ட‌ மாத்திரையை வாங்கி போட்டால் உள்ளே போயி என்னென்ன‌ பண்ணுமோ தெரியல‌.

ஒரு மீட்டிங்க்ல‌ திண்டுக்கல் லியோனி நகைச்சுவையா சொன்னது நினைவுக்கு வருது.

ஒரு அம்மா கைவலின்னு டாக்டரிடம் போனாங்களாம். கையை நல்லா தூக்கி துணியை அடிச்சி துவைக்கிற‌ மாதிரி (பிடிக்காதவங்களை மனசில‌ நினைச்சிகிட்டு) கையை நல்லா சுழற்றி துவைக்கிறாப்பல‌, பிழியறாப்பல‌ ஆக்ச‌ன் பண்ணச் சொன்னாராம். கப்பியில‌ தண்ணீர் இழுக்கிற‌ மாதிரி வாளி நிறைய‌ வெயிட் வச்சி இழுக்கச் சொன்னாராம். வலி சரியாப் போச்சாம்.

இதிலிருந்து என்ன‌ தெரியுது. நமது உடலின் எல்லா பாகத்துக்கும் அசைவுகள் தேவை. குனிந்து, நிமிர்ந்து , வளைந்து அசையும் போது ஆரோக்கியம் நம்மோடவே இருக்கும்.

சரி இப்போ சில‌ வலி மிகும் இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

சில‌ எளிய‌ பயிற்சிகள் மூலம் இதுக்கு தீர்வும் சொல்ல‌ வந்திருக்கேன். ஆரம்பிக்கலாமா??

ரெடி.....ஸ்டார்ட்

முதலில் கழுத்து வலி

பின்கழுத்தில் இந்த‌ வலியை நாம் அனுபவித்திருப்போம். கழுத்தைத் திருப்ப‌ முடியாமல் கஷ்டப்படுவோம்.

முதல்ல‌ நாம் எங்கேயும் எப்போதும் நிமிர்ந்து நேரா இருக்கப் பழகணும். முதுகெலும்பை நேரா வச்சிருந்து பழகினாலே பாதி குணமாயிடும்.

இந்த‌ இடத்தில் ஒரு சம்பவத்தை சொல்கிறேன். என் சகோதரர் சாப்பிடும் போது தினமும் டி. வி. பார்த்துக் கொண்டே சாப்பிட‌ வசதியாக‌ டைனிங் டேபிளில் உணவு ஒரு திசையிலும், உட்கார்ந்து சாப்பிடும் திசை வேறு கோணத்திலுமாக‌ சாப்பிடுவது வழக்கம். கழுத்து வலி வந்தபின்னர் அந்தப் பழக்கத்தை மாற்றினார்.

அதனால் தான் சொல்கிறேன். சரியான‌ பொசிசன்ல‌ எப்பவும் இருக்கணும்.
பயிற்சின்னு சொன்னால், ரொம்ப‌ சிம்பிள். கழுத்தை வலமிருந்து இடமாக பத்து தடவை சுழற்றுங்க‌. அப்புறமா இடமிருந்து வலமாக‌ பத்து தடவை சுழற்றுங்க‌.
ஏனோதானோவென்று செய்யாமல் நிதானமா கழுத்தை நல்லா திருப்பி சிரத்தையோடு செய்யணும். ரொம்பவும் வலி இருந்தால் வலிக்க‌ வலிக்க‌ கஷ்டப்பட்டு செய்ய‌ வேண்டாம். முடிந்தவரை கழுத்தைத் திருப்பி செய்யணும்.
சில‌ தினங்களில் வலி சரியாகி விடும்.

உங்களுக்கு உயரம் குறைவான‌ தலையணையை நான் ரெகமண்ட் செய்யறேன்.

அடுத்து தோள்பட்டை, கை வலி

முதல்ல‌ நம் அறுசுவைத் தோழிகள் கணினி இயக்கும் போது கையும், மவுஸும் ஒரே லெவல்ல‌ இருக்கும்படி வச்சுக்கோங்க‌.

1. கைகளிரண்டையும் முன்பக்கம் நீட்டவும். முதல்ல‌ விரல்களை நன்கு விரித்து மீண்டும் மூடவும். இவ்வாறு விரல்களை நீட்டி மடக்குவதால் நம் முழங்கை வரை ரத்த‌ ஓட்டம் சீராகிறது. ஐந்து தரம் செய்யுங்க‌.

2. இரண்டு கைகளையும் முன்பக்கம் நீட்டவும். விரல்களை கோர்த்துக் கொள்ளவும். இப்போது உள்ளங்கைகள் உங்களை நோக்கியபடி இருக்கும். அப்படியே உள்ளங்கைகள் வெளிப்புறம் வருமாறு விரல்களைத் திருப்பவும். மீண்டும் உள்ளங்கைகள் உங்களை நோக்கியபடி திருப்பவும்.

சரி.. அப்படியே கைகளைக் கோர்த்தபடி கைகளைத் தலைக்கு மேலாக‌ தூக்கவும். இப்போது உள்ளங்கைப் பக்கம் தலையை நோக்கியபடி இருக்கும். அப்படியே உள்ளங்கை வானத்தை நோக்கியபடி இருக்குமாறு திருப்பவும். மீண்டும் உள்ளங்கைகள் தலையைப் பார்த்தபடி திருப்பவும்.

இது ஒரு சுற்று. இதையே பத்துதரம் செய்யவும். இது மிகவும் சிம்பிளான‌ பயிற்சி. எவ்வளவு சிம்பிளோ அவ்வளவு பவர்புல். கட்டாய‌ம் கை வலி, தோள்பட்டை வலி சரியாகும். சில‌ நாட்கள் செய்ததும் ரிசல்ட் தெரியும்.

முதுகு வலி

முதல்ல‌ கூன் போடாம‌ நிமிர்ந்து நிற்கப் பழகுங்க‌. எங்க‌ வீட்ல‌ அழகான‌ தேக்கு மர‌ ஈசிசேர் ஒண்ணு இருந்தது. இப்பவும் இருக்கு. என் தந்தை ரிடையர்மெண்ட் ஆனதும் அடிக்கடி ஈசிசேரை உபயோகப்படுத்த‌ ஆரம்பித்தார். விளைவு கடுமையான‌ முதுகுவலி. அதன் பின்னர் அதை தூக்கி ஓரமா வேண்டாத‌ பொருளோட‌ போட்டாங்க‌. அதனால‌ தான் சொல்லுறேன் நிமிர்ந்து உட்காரணும்னு.

மேலும், படுக்கும் போதும் சரி, நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் சரி ஒரு காலின் மீது அடுத்த‌ காலைப் போட்டு அமரக் கூடாது.

மேலும், நீங்க‌ ஹைஹீல்ஸ் செருப்பை தவிர்த்து விடுங்கள்.

பயிற்சிகள்
எட்டு நடை கேள்விப்பட்டு இருக்கீங்களா?

ஒரு ரூம் சைஸ்ல‌ 8 அப்படீன்னு பெரிய‌ எட்டா சாக்பீசால‌ எழுதிக் கொள்ளவும். அந்த‌ சாக்பீஸ் லைன் மீது பத்து நிமிடம் நடங்க‌.

அவ்வளவு தான் முதுகுவலி இடுப்பு வலி எல்லாம் ஓடியே போகும். இன்னொரு எளிய‌ பயிற்சியும் சொல்லுறேன்.

அதுதான் ரிவர்ஸ் வாக்கிங்.

இது முதுகு வலிக்கு ரொம்ப‌ பெஸ்ட்னு சொல்லுவேன்.

பின்புறமா நடப்பது தான் இது. தினமும் பத்து நிமிடம் பின்னங்காட்டி நடந்தால் கட்டாயம் முதுகு வலி சொல்லாம‌ கொள்ளாம‌ ஓடியே போயிடும்.

கவனம். பின்புறமா நடக்கும் போது நடைபாதை சீராக‌ இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் தலைவலி போய் திருகு வலி வந்த‌ கதை தான்.

இருவர் சேர்ந்து நடந்தால் எளிதாக‌ இருக்கும். எப்படியெனில் ஒருவர் நேராகவும், மற்றவர் பின்புறமாகவும் நடந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக‌ இருக்கும்.

நானும் என்னவரும் அவ்வாறு ரொம்ப‌ ஜாலியா நடந்திருக்கிறோம். மற்றவங்க‌ நம்மை வினோதமா பார்ப்பதை ரசித்தபடியே நடந்திருக்கோம்.:)

குதிகால் வலி

சொன்னா நம்ப‌ மாட்டீங்க‌. வலிக்க‌ வலிக்க‌ குதிகாலை மட்டுமே ஊன்றி கால் விரல்கள் தரையில் படாதபடி முன்னங்கால்களைத் தூக்கியபடி நடக்கணும்.கொஞ்சம் கஷ்டம் தான். வலிக்கும். பொறுத்துக் கொண்டு சிறிது நேரம் நடந்தால் போதும். தேவையெனில் சுவரைப் பிடித்துக் கொள்ளலாம்.

சில‌ தினங்களில் வலி குறைவதை உணரலாம்.

பொதுவா 'குரு இல்லாத‌ வித்தை குருட்டு வித்தை' அப்படீன்னு சொல்லுவாங்க‌. நீங்கள் தவறாக‌ செய்தால் சரிசெய்ய‌ குரு மூலம் கற்றாலே முடியும். சில‌ பயிற்சிகளை வீடியோ மூலம் புரிந்து கொள்ள‌ இயலும். ஏதோ என்னால் இயன்றவரை மிக‌ மிக‌ சிம்பிளான‌ பயிற்சிகளை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.

ஸ்கிப்பிங் போடுவதும் ஜாலியான‌ பயிற்சி.
உங்க‌ வீட்டு குட்டீசோட‌ மாலை நேரத்தில் நல்லா ஓடியாடி விளையாடினால் மனசு, உடம்பு ரெண்டுமே குதூகலிக்கும். எனக்கு ரொம்பவும் பிடித்த‌ பொழுதுபோக்கு இதுவே.:)

மேலும் தோப்புகரணம் போடுவது மூளைக்கு செல்லும் நரம்புகளைத் தூண்டும்னு படிச்சிருக்கேன். எது எப்படியோ? ஆனால், தோப்புகரணம் போடுவது தலை முதல் கால் வரை நல்லதொரு பயிற்சி என்பது உண்மை.

டவுட் இருந்தால் கேளுங்க‌.
வலியின்றி வாழுங்க‌.:)
வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்களாக‌ ஆகட்டும்.

5
Average: 4.8 (5 votes)

Comments

Carpal Tunnel Syndrome என்று சொல்லக்கூடிய computer mouse கைவலி பிரச்சனைக்கு நல்ல பயிற்சி முறையை எளிமையாக சொல்லியிருக்கீறீகள்.

Information is wealth

நிகி அக்கா, தான்க்யூ தான்க்யூ வெரி மச், இது எனக்காகவே போட்ட‌ பதிவு போலவே இருக்கு,
இந்த‌ எல்லா வலியும் நான் டெய்லி அனுபவிக்கும் கொடுமை... நைட் படுக்கும் போது அழறது தான் வேலை, அம்மா தான் தைலம் , வாலினி ஸ்ப்ரே எல்லாம் தடவி வலிச்சு விடுவாங்க‌, நான் 5 வருடத்துக்கு மேலா கம்யூட்டர் வொர்க் தான் பண்றேன், அதுவும் முதுகும் கழுத்தும் வலிக்கும் போது ரொம்பவே கஸ்டமா இருக்கும், கழுத்துக்கு பயிற்சி தினம் எடுப்பேன், சின்ன‌ பயிற்சி முதுகுக்கு செய்வேன், ஸ்கிப்பிங் அடிக்கடி விளையாடுவேன்,
இனி உங்க‌ டிப்ஸ் ,

கண்டிப்பா நாளையிலேந்து இந்த‌ ஈஸியான உடற்பயிற்சியை செய்றேன்,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கை வலிக்கும், முதுகு வலிக்கும் சொன்னவை எனக்கு ரொம்பவே பயன்படும். :) தேன்க்ஸ் ஃபார் ஷேரிங் நிகி. எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு. நாளைக்கே துவங்கிடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல‌ பதிவு நிகி.

//மூட்டு வலின்னு டாக்டரிடம் போனா அவர் பெயின் கில்லர் தான் தருவார். அது சில‌ தினங்களுக்கு மட்டுமே நிவாரணம் தரும். டி.வி. விளம்பரத்தைப் பார்த்து அதையும், இதையும் வாங்கித் தேய்ச்சா அதுவும் தற்காலிக‌ நிவாரணந்தான். கண்டகண்ட‌ மாத்திரையை வாங்கி போட்டால் உள்ளே போயி என்னென்ன‌ பண்ணுமோ தெரியல‌/// இதுக்கு பெயின்கில்லர் யூஸ்பன்றது தற்காலிக‌ நிவாரணம் மட்டுமே! எக்ஸசைஸ் பன்றாதுதான் சிறந்ததுன்னு சொல்றாங்க‌!!

//ஒரு மீட்டிங்க்ல‌ திண்டுக்கல் லியோனி நகைச்சுவையா சொன்னது நினைவுக்கு வருது// நகைச்சுவைக்காகச் சொன்னாலும், குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யற‌ உதவியாளர்களுக்கு இந்த‌ மாதிரி பிரச்சனையெல்லாம் வராது! எல்லாவற்றுக்கும் மெஷின், பற்றாக்குறைக்கு உதவிக்கு ஆள்னு வைத்துவிட்டு அசையாமல் இருந்தால் கண்டிப்பா இதுல‌ இருந்து தப்பிக்கிறது ரொம்ப‌ சிரமம்!( எனக்கும் சேர்த்துதான் ) :)))

உயரம் குறைவான‌ தலையணை, ஃபிளாட் செப்பல்ஸ்,தோப்புக்கரணம் மற்றும் கூன் போடாம‌ நிமிர்ந்து உட்காருவது இதெல்லாம் நான் கடைபிடிக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் உட்காரும்போது 2 கால்களையும் தரையில் சமமாக‌ அழுத்தி உட்கார‌ வேண்டுமாம், முதுகுவலிக்கு இதுவும் உதவுகிறதாம்!

8 நடை ஃபிரெண்ட் ஒருத்தங்க‌ சொன்னாங்க‌, நானும் புக்கில் படித்திருக்கிறேன், முயற்சி செய்யனும்.

ரிவர்ஸ் வாக்கிங், கைவிரல் பயிற்சி மற்றும் குதிகாலால் நடக்கிறது உங்க‌ மூலமா தெரிந்துகொண்டேன். கண்டிப்பா முயற்சி செய்யனும்.

ஆவலாக‌ வந்தேன் தமிழில் ஏதோ சொல்லித்தரப்போகிறீர்கள் என்று.ஆனால் இதுவும் நன்றாக‌ உள்ளது.

No pains,No gains

ANANTHAGOWRI.G

அநேகமாக இது எல்லோருக்குமே பயனுள்ள பதிவு என்று தான் நினைக்கிறேன்.
எல்லா வலிகளுக்கும் அடிப்படை காரணம் நீங்கள் சொன்னது போன்று நம்முடைய Posture தான். டாக்டர் ஒரு முறை அம்மாவிடம் சொன்னது, சமையல் மேடை கூட நம் கைகளின் உயரத்திற்க்கு இணையாக அமைந்திருந்தால் முதுகு வலி வருவதை தவிர்க்கலாம் என்று.
குதிகால் வலிக்கு மிகவும் பயனுள்ள தகவல். எங்க அம்மா ரொம்ப நாளா கஷ்ட்டப் படறாங்க. இன்றைக்கே போன் செய்து சொல்லிடறேன்.
எட்டு போடுறது இங்கேயுமா?!! :-))
ரிவெர்ஸ் வாக் கேள்விப் பட்டதே இல்லீங்க. புது தகவல் எனக்கு.
கொஞ்ச நேரம் சிஸ்ட்டத்தில் இருந்தாலே எனக்கு கழுத்து வலிக்குது.
பயனுள்ள பதிவிற்க்கு நன்றி

ஹாய் நிகி. எப்போதும்போல மிகவும். உபயோகமான பதிவு .

Be simple be sample

அன்பு நிகிலா,

ரொம்ப‌ நல்ல விஷயங்கள் அதுவும் இன்னிக்கு எல்லோருக்கும் தேவைப்படும் விஷயங்களை, கோர்வையாக‌ சொல்லியிருக்கீங்க‌. நன்றி நிகிலா.

குதிங்கால் வலி, மூட்டு வலி இதுக்கு கண்டிப்பாக‌ உடற்பயிற்சிதான் தீர்வு.

நான்கைந்து மாதங்களுக்கு முன்னாடி, குதிங்கால் மற்றும் மூட்டு வலி வந்து, ரொம்ப‌ ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

டாக்டர்கிட்ட‌ காட்டினப்ப, 15000 ரூபாய் விலையுள்ள‌ ஊசி, இரண்டு முழங்காலிலும் போட்டுக்கணும், அதும் 3 மாசத்துக்கு ஒரு முறை போடணும். சாதாரண‌ மாத்திரைகள்(வலி நிவாரணி) எடுத்துகிட்டா சைட் எஃபக்ட் நிறைய‌ இருக்கும்னு சொன்னார். யோசிச்சுட்டு, இப்போதைக்கு மாத்திரை மட்டும் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன். ரொம்ப‌ வலி பொறுக்க‌ முடியாம‌ இருந்தப்ப‌ மட்டும் மாத்திரை சாப்பிட்டேன். இன்னொரு டாக்டர்கிட்டயும் செக் பண்ணினேன்.

வயசு ஆகிடுச்சுன்னா, யு ஹேவ் டு லிவ் வித் திஸ் பெய்ன், முழுமையாக‌ குணமாகாது, அப்படின்னு சொல்லிட்டார். ரொம்ப‌ சங்கடமாகிடுச்சு.

நெட்ல‌ தேடிப் பார்த்த‌ போது, நம் அறுசுவையிலேயே அதுக்கு விடை இருந்தது!!!

(தோளில் ஆட்டுக்குட்டியை வச்சிக்கிட்டு ஊர் பூராவும் தேடிய‌ கதையாக‌) பழமொழி நினைவுக்கு வந்தது.

இதோ அந்த‌ லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/9564

இதில் டிசென் கொடுத்திருந்த‌ பதிவுப்படியே செய்தேன்.

கால் விரல்களை உள் நோக்கி மடக்கி, மடக்கி விரிப்பது.

குதிங்காலை மட்டும் ஊன்றி நடப்பது

முன் காலை மட்டும் ஊன்றி நடப்பது

இதெல்லாம் இப்பவும் செய்யறேன்.

வலி இருந்தாலும் தொடர்ந்து வாக்கிங் போனேன். ஏன்னா வலிக்குதுன்னு நடக்காம‌ இருந்தா, ஸ்டிஃப்னெஸ் வந்துடும்னு வனி சொன்னாங்க‌.

நான்கைந்து மாதங்களில் இப்ப‌ 90% வலி தேவலையாகிடுச்சு!!!

எனக்கு இன்னொரு விஷயம் என்ன‌ தோணுதுன்னா, மனசில் ஸ்டரெஸ் இருந்தாலும் இப்படி ஏதாவது வலி, நோய் என்று வரும்னு நினைக்கிறேன்.

ஓரளவுக்கு த்யானம், பிரார்த்தனை என்று மனசை டைவர்ட் செய்யறப்ப‌, வலிகளும் குறையுதுன்னு தோணுது.

ரிவர்ஸ் வாக்கிங் இதுவரை கேள்விப்படாதது.கண்டிப்பாக‌ முயற்சி செய்கிறேன் நிகிலா.

நன்றிகள் பல‌.

அன்புடன்

சீதாலஷ்மி

//Carpal Tunnel Syndrome என்று சொல்லக்கூடிய computer mouse கைவலி பிரச்சனைக்கு நல்ல பயிற்சி முறையை எளிமையாக சொல்லியிருக்கீறீகள்.//

உங்களது பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.

உண்மை தான். இப்போது கம்ப்யூட்டர் மவுஸ் கைவலிப் பிரச்சனை நிறைய‌ பேருக்கு இருக்கிறது.
அதனால் தான் இந்தப் பதிவு:)

//இந்த‌ எல்லா வலியும் நான் டெய்லி அனுபவிக்கும் கொடுமை... நைட் படுக்கும் போது அழறது தான் வேலை//
சுபி ரொம்பவும் கஷ்டப்படுறீங்க‌ போல‌. பயிற்சிகள் மூலம் கட்டாயம் தீர்வு காணலாம்.
இந்தப் பதிவு உங்களுக்கு பயன்பட்டால் எனக்கு மிக்க‌ மகிழ்ச்சி சுபி.
இந்தப் பயிற்சிகளை செய்வதால் நாம் சுறுசுறுப்பாகவும் உணரலாம்.
தொடர்ந்து செய்துட்டு வாங்க‌ .பலன் நிச்சயம்.:)

உங்களை நினைத்து உங்களுக்காகப் போட்ட‌ பதிவு தான் இது.
துவங்கியாச்சா??
வலியின்றி சுகமாக‌ வாழ‌ வாழ்த்துக்கள். வனி:)

..//குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யற‌ உதவியாளர்களுக்கு இந்த‌ மாதிரி பிரச்சனையெல்லாம் வராது.//
உண்மை தான் அனு. நம்மால் ஒரு வீட்டை பராமரிக்க‌ முடியலை. குனிஞ்சா முதுகு வலி; நிமிர்ந்தா மூச்சு வாங்கல்....
ஆனா உதவியாளர்கள் லாம் எத்தனை வீட்ல‌ வேலை செய்யறாங்க‌.
//எல்லாவற்றுக்கும் மெஷின், பற்றாக்குறைக்கு உதவிக்கு ஆள்னு வைத்துவிட்டு அசையாமல் இருந்தால் கண்டிப்பா இதுல‌ இருந்து தப்பிக்கிறது ரொம்ப‌ சிரமம்!//

இந்த‌ சூழலில் தான் நமக்கு பயிற்சி கட்டாயம் வேணும் அனு. குட்டிப் பசங்களோட‌ சேர்ந்து வேர்க்க‌ விறுவிறுக்க‌ விளையாடலாம். மனமும் உடலோடு சேர்ந்து மகிழும்.:)

//ஆவலாக‌ வந்தேன் தமிழில் ஏதோ சொல்லித்தரப்போகிறீர்கள் என்று.ஆனால் இதுவும் நன்றாக‌ உள்ளது//
அட‌ இது நல்லாருக்கே. உங்களுக்கு தமிழ் இலக்கணம் பிடிக்குமா கௌரி:)
மிக்க‌ மகிழ்ச்சி பா.

//சமையல் மேடை கூட நம் கைகளின் உயரத்திற்கு இணையாக அமைந்திருந்தால் முதுகு வலி வருவதை தவிர்க்கலாம் என்று// அது போல‌ காய் நறுக்கும் போது மேடையில் குனிந்த‌ படியே வெட்டாமல் டைனிங் டேபிளில் அமர்ந்து நிமிர்ந்தபடி நறுக்கலாம்...
அம்மாவிடம் சொல்லிட்டீங்களா வாணி. எங்க‌ அம்மாவுக்கு இந்தப் பயிற்சியினால் குதிகால் வலி சரியாகி விட்டது.
//ரிவெர்ஸ் வாக் கேள்விப் பட்டதே இல்லீங்க. புது தகவல் எனக்கு// ரொம்பவும் பெஸ்ட் ... முதுகு வலி சொல்லாம‌ கொள்ளாம‌ ஓடியே போயிடும். பின்கால் தசை நார்கள் எல்லாம் வலுப்பெறும்.
உங்க‌ பாராட்டுக்கு நன்றி வாணி:)

//எப்போதும்போல மிகவும். உபயோகமான பதிவு // ரேவா உங்களுக்கு உபயோகப்பட்டால் எனக்கு மிக்க‌ மிகிழ்ச்சி பா..:)
பாராட்டுக்கு நன்றி ரேவா

//வயசு ஆகிடுச்சுன்னா, யு ஹேவ் டு லிவ் வித் திஸ் பெய்ன், முழுமையாக‌ குணமாகாது, அப்படின்னு சொல்லிட்டார். ரொம்ப‌ சங்கடமாகிடுச்சு.//
நிறைய‌ பிரச்னைகளுக்கு இப்படி தான் ட்ரீட்மெண்ட் சொல்றாங்க‌ சீதா.

பிரஷர், சுகர், தைராய்டு வந்துட்டா எந்நாளும் மருந்து தான். அதோடு வாழப் பழகிக்கறோம். இது சரியான‌ ட்ரீட்மெண்ட் இல்லேன்னு தான் சொல்லுவேன். அந்த‌ மெடிசின் எல்லாம் ஒரு தற்காலிக‌ தீர்வு தானே. நோய் அப்படியே தான‌ இருக்கு?????

http://www.arusuvai.com/tamil/node/9564 லின்க் ரொம்பவும் பயனுள்ளது. படித்து மனதில் பதிய‌ வைத்துக்கொண்டேன். நன்றி சீதா.

//வலி இருந்தாலும் தொடர்ந்து வாக்கிங் போனேன். ஏன்னா வலிக்குதுன்னு நடக்காம‌ இருந்தா, ஸ்டிஃப்னெஸ் வந்துடும்னு வனி சொன்னாங்க‌.// வனி சொன்னது உண்மை தான். முடிந்த‌ அளவு முயற்சி எப்பவும் வேணும். அதை கைவிடும்போது வலி இன்னும் அதிகமாகும்.

'ஸ்ட்ரெஸ்' இந்தப் பூனை தான் மெயின் காரணம். மனசு அமைதியா இருந்தால் ஹார்மோன் எல்லாம் ஒழுங்கா சுரக்கும். அதுக்கு தியானம் ரொம்பவும் உதவும்.
'ஓம்' சி. டி. போட்டுட்டு மெடிட்டேஷன் பண்ணலாம் சீதா. அது நல்லாருக்கு.

ரிவர்ஸ் வாக்கிங் போகும் போது ரெண்டு பேரா சேர்ந்து போங்க‌. அது ஒருவருக்கொருவர் சப்போர்ட்டா இருக்கும்.

உங்க‌ கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சீதா:)

ஆமாம் நிகிலா, அம்மாவிடம் இன்றைக்கு காலையிலே சொல்லி விட்டேன். செய்கிறேன்னு சொல்யிருக்காங்க. மிக்க நன்றி

தொடர்ந்து செய்தால் அம்மாவுக்கு சரியாயிடும்.
மிக்க‌ சந்தோசம் வாணி.