தேதி: January 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. சாதிகா அவர்கள் வழங்கியுள்ள புல்லு கொழுக்கட்டை என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.
புல்லு (கம்பு) - அரைக் கிலோ
பனங்கருப்பட்டி - அரைக் கிலோ
தேங்காய் - ஒன்று (பெரியது)
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
சுக்குத் தூள் - அரை தேக்கரண்டி
கம்பை நன்கு கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து அரவை மெஷினில் கொடுத்து அரைத்து வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

முதல் நிலை பாகுப் பதம் வந்ததும், கம்பு மாவு, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும்.

கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாக வந்ததும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும்.

பிறகு அதனை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பானையில் வைத்து நீண்ட நேரம் வேகவிட்டு எடுக்கவும். (மற்ற கொழுக்கட்டைகளைவிட இது வேக அதிக நேரம் எடுக்கும். இதை முதல் நாள் இரவே தயார் செய்து மறுநாள் காலை கொழுக்கட்டை செய்தால் தான் சாஃப்டாக வரும்).

சுவையான புல்லு கொழுக்கட்டை தயார். புல்லு என்றால் என்னவென்றே தெரியாத நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சுவையுடன் கூடிய சத்தான பதார்த்தம் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
