பிஸ்ஸா

தேதி: February 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - அரை கிலோ
எண்ணெய் - 200 மில்லி
பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீனி - ஒரு ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
சாஸ் செய்வதற்கு :
பழுத்த தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
வறுத்து பொடியாக்கிய :
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
தைம் இலை (காய்ந்தது) - ஒரு டீஸ்பூன்
பெர்ஸில் இலை (காய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்
பப்ரிகா பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
சிக்கன் க்யூப் - ஒன்று
உப்பு - ஒரு ஸ்பூன்
மேலே அலங்கரிக்க :
கொத்திய ஆட்டுக்கறி - 300 கிராம்
குடை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - கால் கிலோ


 

பிஸ்ஸா செய்வதற்கு 5 அல்லது 6 மணி நேரத்திற்கு முன்பே மைதா மாவில் உப்பு, சீனி, பேக்கிங் பவுடர் போட்டு 150 மில்லி எண்ணெய் ஊற்றி கலந்து வெது வெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து விடவும்.
தக்காளி, வெங்காயத்தை வெட்டி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் மீதியுள்ள 50 மில்லி எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போடவும்.
அதனுடன் வறுத்து பொடியாக்கிய மிளகாய் தூள், தைம் இலை, பெர்ஸில் இலை, பப்ரிகா பவுடர், சிக்கன் க்யூப், உப்பு இவை அனைத்திலும் மேற்கூறிய அளவில் பாதியளவுகள் சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை நன்கு வதக்கி விட்டு சாஸை ஆறவிடவும்.
சாஸுடன் சேர்க்க சொன்ன பொருட்களில் மீதியுள்ள பாதி பொருட்களை கொத்திய கறியில் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
குடை மிளகாயை சிறு கட்டங்களாக நறுக்கிவைக்கவும். 5 அல்லது 6 மணி நேரத்திற்கு பிறகு, பிசைந்து வைத்த மைதாவை பிஸ்ஸா மெஷினில் வட்டமாக சற்று மொத்தமாக விரித்து அதன் மேல் பரவலாக துருவிய சீஸில் 1/3 பங்கு தூவவும்.
பிறகு அதன் மேல் செய்துவைத்துள்ள சாஸை பரவலாக ஊற்றவும். அதன் மேல் பிசைந்துவைத்துள்ள கறியை தூவி நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளையும் தூவவும்.
மீண்டும் அதன் மேல் மீதியுள்ள சீஸை எல்லா இடங்களையும் கவர் பண்ணுவது போல் தூவி, மிதமான சூட்டில் வேகவைத்து, வெட்டி எடுத்து சூடாக பரிமாறவும்.


இதில் ஆட்டுக்கறிக்கு பதிலாக பீஃப், தூனா (டின்) மீன், ஓடு நீக்கிய நண்டு, வான்கோழி கறி, அவித்த முட்டை இவற்றில் ஏதாவது ஒன்றில் செய்யலாம். அல்லது சைவ முறையில் தேவைப்பட்டால் காளான், தக்காளி இவற்றை துண்டுகளாக்கி தூவலாம். குடை மிளகாய்க்கு பதிலாக ஆலிவ் காய், சிகப்பு வெங்காயத்தை பயன்படுத்தலாம். சாஸ் செய்யும்போது சிக்கன் க்யூபுக்கு பதிலாக சர்டீன் (டின்) மீனை சுத்தம் செய்து அதனுடன் சேர்க்கலாம். நாம் விரும்பும் சுவைக்கேற்றாற்போல் இப்படி பலவிதமாக செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பிஸ்ஸா மெஸின் என்று எலுதியிருக்கிறிர்கள்.புரியவில்லை.
அவனில் தானே வைக்க வேன்டும் எவ்லோ ஹீட்டில் வைக்க வேன்டும்.பிஸ்ஸா மாவை கையைக்கொன்டே வட்டமாக விரித்து வைக்கவேன்டுமா?சப்பாத்தி கட்டையால் தேய்க்கலாம் தானே.?

sajuna

இந்த பிஸ்ஸா செய்முறையை முடிந்தால் "யாரும் சமைக்கலாம்" பகுதியில் ஃபோட்டோக்களுடன் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அப்போது பிஸ்ஸா மெஷினையும் நீங்கள் பார்க்கலாம். வீட்டு உபயோகத்திற்காக பல அளவுகளில் வட்ட வடிவ மெஷினாக மூடி போட்டதாக இருக்கும். அதில் வைப்பதாக இருந்தால், மாவை அதன் மேல்வைத்து கையாலேயே விரித்துவிடலாம். அது இல்லாவிட்டால் எலெக்ட்ரிக் அவனில் கூட செய்யலாம். அவனின் அளவுக்கு தகுந்தாற்போல் 2 அல்லது 3 பிஸ்ஸா செய்துக்கொள்ளவேண்டும். அப்போது நீங்கள் கேட்டதுபோல் சப்பாத்தி கட்டையால்தான் தேய்க்கவேண்டும். கீழே சிறிது மைதா மாவு தூவி தேய்த்தால்தான் எடுக்கும்போது ஒட்டாமல் வரும்.எதில் விரித்தாலும் உயரம் 3 சப்பாத்தி அளவு மொத்தமாக இருக்கவேண்டும். முதலில் 10 நிமிடங்கள் அவனை அதிகபட்ச ஹீட்டில் வைத்துவிட்டு, பிறகு பிஸ்ஸாவை வைத்து மீடியம் ஹீட்டில் மட்டும் வைத்து வேகவைத்து எடுங்கள். வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்! செய்துபார்த்துவிட்டு சொல்லுங்கள்! நன்றி!

மெஷினில் செய்வதர்க்கும் அவனில் செய்வதர்க்கும் டேஸ்ட் வித்தியாசப்படுமா?

sajuna

மெஷினில் செய்வதற்கும் அவனில் செய்வதற்கும் டேஸ்ட்டில் எந்த வித்தியாசமும் இருக்காது. மெஷினில் வைக்கும்போது பிஸ்ஸாவின் கீழ்ப்பகுதி (மாவு பகுதி) முறுகிவிடாத அளவு ஹீட்டை செட் பண்ணிக்கொண்டால் போதும், மேலேயுள்ள சீஸ் பதமாக உருகி மற்ற பொருட்களும் வெந்து இருக்கும். ஆனால், அவனில் வைக்கும்போது மேலேயுள்ள சீஸும் முறுகிவிடாத அளவுக்கு கவனமாக செட் பண்ணவேண்டும். ஒவ்வொரு அவனிலும் செட் பண்ணும் விதம் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்களுடைய அவன் எப்படி உள்ளது என்று பார்த்துக்கொண்டு கீழே சற்று கூடுதலாகவும், மேலே சற்று கம்மியாகவும் ஹீட் செட் பண்ணி செய்து பாருங்கள்.

என்னுடைய அவனில் ஒரே மேலும் கீலும் அளவுடன் தான் ஹீட்டிங் செட் செய்ய முடியும்.
சந்தேகங்களை கேட்டவுடன் உடனுக்குடன் பதில் அளித்ததற்க்கு மிகவும் நன்றி.நான் செய்து பார்த்து சொல்கிரேன்.ந்ன்றி.

sajuna

இன்று பிஸ்ஸா செய்து பார்தேன்.உங்கள் சாஸ் செய்முறை டேஸ்ட்டாக இருந்தது.பிஸ்ஸா ஏனோ பிஸ்கட் போல இருந்தது.நான் நினைக்கிரேன் மைதா மாவூ மிஸ்டேக் செய்துடேன் என்று இன்னொருமுறை முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.

sajuna

சாஸ் நல்ல டேஸ்ட்டாக அமைந்துவிட்டாலே பிஸ்ஸா அருமையாக இருக்கும். ஆனால் பிஸ்ஸா பிஸ்கட் போல் இருந்தால் பிஸ்ஸா சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அதற்கு 2 காரணங்கள் இருக்கலாம்.

1. உங்கள் அவனில் மேலும் கீழும் ஒரே அளவு டெம்பரேச்சர்தான் செட் பண்ண முடியும் என்றீர்கள். அதனால் கூட மாவு ஒரத்துபோய் மொறுமொறுப்பாகிவிடும்.
முதலில் கீழே மட்டும் ஹீட் கொடுத்துவிட்டு பிறகு மேலே மட்டும் ஹீட் கொடுக்கும்படி உங்கள் அவனில் செட் பண்ண முடிந்தால், அப்படி செய்து பாருங்கள். அப்போது கீழ் மாவு பதமாக வெந்து, பிறகு மேலே சீஸ் உருகியவுடன் வெளியே எடுத்துவிடலாம்.

2. மைதா மாவு 3 விதமான தரங்களில் இங்கு கிடைக்கும். N° 45, N° 55 என்று வீட்டு உபயோகத்திற்கும், கடைகளில் செய்யக்கூடிய பன் வகைகள் செய்வதற்கென்று மற்றொரு வகையும் உள்ளது. இதில் N° 55 - தான் பிஸ்ஸா, பரோட்டா, பூரியான் போன்றவை செய்வதற்கு பயன்படுத்துவோம். உங்களுக்கும் அதுபோல் கிடைத்தால் வாங்கி அதில் செய்து பாருங்கள்.

ஆனால் இது பெரும்பாலும் முதலில் சொன்னதுபோல் டெம்பரேச்சர் பிரச்னையாகத்தான் இருக்கும். பிஸ்ஸா மெஷினில் இந்த பிரச்னையிருக்காது. ப்ரீ ஹீட் பண்ணிவிட்டு, பிறகு மிதமான ஹீட்டில் வைத்து எடுத்தால் அருமையான பதத்தில் எடுக்கலாம். உங்கள் அவனில் மீண்டும் நான் சொன்னதுபோல் செட் பண்ணி Try பண்ணி பார்த்து எனக்கு சொல்லுங்கள்.

நான் நினைக்கிரேன் மைதா என்று ஏன் என்றால் யாரும் சமைக்கலாம் பகுதியில் பரோட்டா செய்முறையில் நான் செய்த போது அதும் பிஸ்கட் போல வந்தது மனோஹரி மேடம்அருமையாக வந்தாக எலுதியிருந்தார்கள். ஒருமுறை சமுசா செய்த போது நன்றாக வந்தது அது எந்த மைதா மாவூ என்று மறந்துவிட்டதுநான் இந்த முறை உபயோகப்படுத்தினது இந்தியன் கடைகளில் வாங்கின maida flour என்று மட்டும் எலுதியிருக்கும். நீங்கள் சொன்னது போல டெஸ்கோ கடைகளில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.நன்றி.

sajuna

நீங்கள் சொன்னது போல கடைகளில் பார்தேன் N55 என்று எதும் பாக்கெட்களில் இல்லையே. எந்த கடைகளில் உங்களுக்கு கிடைக்கிறது.கொஞ்ஜம் சொல்ல முடியுமா.

sajuna

இங்கு (ஃபிரான்ஸில்) எல்லா கடைகளிலும் நம்பர் 55, நம்பர் 45 வகை மாவுகள் கிடைக்கிறது. அங்கு (IRELAND - ல்) எப்படியென்று எனக்கு தெரியவில்லை. TYPE 45, TYPE 55 என்று பாக்கெட்டின் ஓரத்தில் சிறியதாக குறிப்பிட்டிருக்கும். நீங்கள் அதற்காக தேடி சிரமப்படுவதற்கு முன், நான் ஏற்கனவே சொன்னதுபோல் டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் பண்ணி செய்துபாருங்களேன்.

நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிரேன்.அதே சமயம் எனக்கு இந்த ஊர் மைதாவைக்கொன்டூ எது செய்தாலும் சரியாக வருவதில்லை.பல வகை மைதா இருப்பதினால்,நீங்கள் சொன்னது போல நம்ம ஊர் அய்ட்டம் செய்வதர்க்கு ஏற்ற மைதா கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று முயற்ச்சிசெய்கிரேன்.இந்தியா போவதாக எலுதியிருந்தீற்கள் வாழ்த்துக்கள்.

sajuna

அன்புள்ள அஸ்மா மேடம், இந்த குறிப்பை கேஸ் அவனில் செய்ய முடியுமா?.பிஸ்ஸா செய்ய 'இஸ்ட்' சேர்க்க தேவையில்லையா. ஒரு விருந்திற்கு செய்ய விரும்புகிறேன்.தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்கிறேன்.நன்றி