
கீரை வாங்கலியோ...கீரை கீரை...
சும்மா, உங்களையெல்லாம் கூப்பிட்டுப் பார்த்தேன்ங்க.
எனக்கு மணத்தக்காளிக் கீரைன்னா ரொம்பவும் பிடிக்கும். அதுக்கு ஏற்ற மாதிரி எங்கள் ஊரிலே அது கிடைப்பதில்லை.
எனக்கு மணத்தக்காளி, அதுவும் ஆர்கானிக் கீரை வேணும். என்ன செய்யலாம்?
யோசித்தேன். ம்.... ஐடியா ....நானே சாகுபடி செய்ய தயார் ஆனேன்.
கிச்சனில் டப்பாவில் இருந்த மணத்தக்காளி வற்றலை உதிர்த்து வீட்டின் பின்பக்கம் தூவினேன்.
தினமும் பூவாளியால் நீர் தெளித்துவந்தேன். சில நாட்களில் மணலை திறந்து கொண்டு குட்டி குட்டி செடிகள் இவ்வுலைகை எட்டிப் பார்த்தன.
தினமும் காலை சில நிமிடங்கள் தோட்டத்தைச் சுற்றி ஒவ்வொரு செடியிலும் புதிதாய் அரும்பியிருக்கும் தளிர்களைப் பார்ப்பதே ஒரு பரவசம் தான்.
இரண்டு மாதம் ஆயிற்று. இப்போது கீரை ரெடி. இயற்கையான முறையில் மருந்து தெளிக்கப்படாத கீரை கிடைக்கிறது.
ஐந்து செடிகள் இருந்தால் போதும். வாரம் ஒருமுறை கீரை பறிக்கலாம். காயைப் பறித்து வற்றல் போடலாம்; குழம்பு வைக்கலாம்.
இது நேற்றுப் பறித்த கீரையின் படம். தனியாகப் பழம் பார்த்து பொறுக்கி வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா?
பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்கள் இறைவனால் சமைத்து பக்குவமாக தரப்பட்ட உணவு. அவற்றை மீண்டும் சமைப்பது என்னால் முடியாது. அப்படியே சாப்பிட வேண்டும்....
மணத்தக்காளிக் கீரையை சமைத்து விட்டு அதன் காம்பை வீணாக்க வேண்டாம். கொஞ்சம் உள்ளி, ஒரு தக்காளி, ஒரு டேபிள்ஸ்பூன் சிறுபருப்பு, சீரகம் போட்டு குக்கர் ரெண்டு விசிலடித்தால் சூப் ரெடி. நன்கு மசித்து பின்னர் வடிகட்டி உப்பு, மிளகு, துளி நெய் விட்டு பருக சுவையோ சுவை.
மணத்தக்காளியின் மகிமையை என்னனு சொல்ல.....
அது வயிற்றுப் புண்ணுக்கு மாமருந்து. உடலுக்கு குளிர்ச்சி.
இங்கே நிறைய தோழிகள் அல்சர் இருப்பதாக சொல்லி இருக்கீங்க.
அதுக்கு ரெண்டு டிப்ஸ் சொல்லிட்டுப் போறேன்.
வில்வ இலை சிவன் கோவிலில் இருக்கும். கோவில் அருகிலுள்ள பூக்கடையிலும் கிடைக்கும். அதை ஒரு கைப்பிடி எடுத்து இரவில் நீரில் ஊறப்போட்டு மறுநாள் காலையில் இலையை கசக்கி எடுத்து விட்டு நீரை மட்டும் வெறும் வயிற்றில் பருகவும். தொடர்ந்து ரெண்டு வாரம் செய்ய, அல்சர் இனி இல்லவே இல்லை.
முட்டையின் வெண்கருவை மட்டும் எடுத்து சுவைக்கு சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அரை டம்ளர் நீர் விட்டு பருகவும். சில நாட்களில் அல்சர் சொல்லாம கொள்ளாம ஓடியே போயிடும். இது என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

எல்லாத்துக்கு மேலே நம்ம மணத்தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைவிட சிறந்த மருந்து,,,, இல்லையில்லை உணவு, வேறெதுவுமில்லை.
மணத்தக்காளியில் சிவப்பு நிறமாக பழுக்கும் ரகமும் உண்டு. இரண்டுமே மருத்துவ குணமுடையது தான். எனக்கு இங்கே கறுப்பு நிறத்தில் பழுக்கும் தினுசு மட்டுமே கிடைக்கின்றது.
கடைசியா ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்ங்க.
அல்சர் இருப்பவங்க வேளாவேளைக்கு நேரந்தவறாம சாப்பிடணும். அதுவும் காரம், எண்ணெய் குறையா சேர்த்து...
அப்புறம் என்ன அல்சரா? இட்ஸ் கான்.போயே போச்சு....
Comments
நிகிலா
கீரைகள் எனக்கு பிடித்தமான உணவு :))
\\கிச்சனில் டப்பாவில் இருந்த மணத்தக்காளி வற்றலை// வற்றல்ன்னா? காய்ந்த விதையா ?? மளிகை கடையில் கிடைக்குமா ??
\\காயைப் பறித்து வற்றல் போடலாம்; குழம்பு வைக்கலாம்.//
பார்க்க சுண்டைக்காய் போன்றே உள்ளதே :))
\\பழங்கள் இறைவனால் சமைத்து பக்குவமாக தரப்பட்ட உணவு.// அதினால் தான் சுட்ட பழம் - சுடாத பழமா ?? :))))
உள்ளி - சின்ன வெங்காயம் தானே!
கீரை சமையல் குறிப்புகள் சூப்பர், ஊரிலிருந்து வற்றல் அனுப்பச்சொல்லி சம்மரில் கீரை போட்டுப் பார்க்கிறேன்.
வில்வ இலை - அப்படின்னா என்னவென்று எனக்குத் தெரியவில்லையே :(
முட்டை வெள்ளைக் கரு
\\முட்டையின் வெண்கருவை மட்டும் எடுத்து சுவைக்கு சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அரை டம்ளர் நீர் விட்டு பருகவும்.//
நம் ஊர்களில் பெரியவங்க சமைக்காத முட்டை நல்லது என்று சொல்வாங்க நிகி. ஆனால் விஷயம் தெரிந்த மருத்துவர்கள் இறைச்சியைப் போன்றே முட்டையையும் சமைக்காமல் உண்ணக் கூடாது என்பார்கள். அதற்க்கு காரணம் அதிலுள்ள சல்மோனெல்லா என்கிற ஒருவகை பாக்டீரியா தான். ஃபுட் பாய்சன் முதல் விஷக் காய்ச்சல் வரை வரும் வாய்ப்புள்ளது:((
அதினால் வேக வைக்காத முட்டை உண்பது நல்லதல்ல என்பது என் கருத்துங்க.
நிகி
சுக்குட்டிக்கீரை என்கிற கருஞ்சுக்குட்டி என்கிற மணத்தக்காளி என்கிற மிளகுதக்காளிக் கீரையைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை.
எங்க வீட்ல இருந்துச்சு, இப்ப கொஞ்சநாளா இல்ல. செடியோட இலைக்கு பின்னால ஒருவித பூச்சி புடுச்சு எல்லாமே வீணாகிடுச்சு :( ஆனா பூச்சி புடிக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பழங்களும் காய்களும் கிடைச்சிது.
இப்பவும் மார்க்கெட்ல அதிக விலை கீரைனா இதுதான்.
இதனோட இலைகளைப் பச்சையாகவே சாப்பிடலாம். நல்லா கழுவிட்டு, வயில் போட்டு மென்னுட்டே இருக்கணும். அப்படி செய்தா வாய்ப்புண்னிற்கு ரொம்ப நல்லது. வயிற்றுப்புண்ணிற்கும் ரொம்ப நல்லது.
//அது வயிற்றுப் புண்ணுக்கு மாமருந்து. உடலுக்கு குளிர்ச்சி. //
வயிற்றில் புண் இருந்தா வாயில் புண் வரும்னு சொல்றாங்க.
சிவப்பு மணத்தக்காளி இங்கேயும் பார்த்ததில்லை.
நல்லதொரு இடுகை :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கீரை
அன்பு வாணி
மணத்தக்காளி வற்றல்னா காய்ந்த விதை தான். சுண்டைக்காய் வற்றல் மாதிரி அளவில் சிறியதாக இருக்கும். நல்லமிளகு சைசில் இருக்கும்.
//சுட்ட பழம்.// ஹி...ஹி... இது சுடாத பழம்:))))
//உள்ளி// ஆமாம் சின்ன வெங்காயம் தான்.
வில்வ இலைன்னு கூகுள் பண்ணி பாருங்க வாணி. கோவிலில் கிடைக்கும். இதில் ஈரத்தன்மை குறைவாக இருக்கும். மரமாக வளரும் தன்மையுடையுது.
இங்கே ஊரில் ஃப்ரெஷ்ஷா நாட்டுக் கோழி முட்டை கிடைக்கும் வாணி. ஒண்ணும் ஆனதில்லை. உடனடியா கைகொடுக்கும் மருந்து. கிடைக்காத பட்சத்தில் லெக்கான் கோழி முட்டையும் சாப்பிடலாம். வயதுக்கு வந்தால் பச்சை முட்டை சாப்பிடுவோம் தானே;))
கருத்துக்கு நன்றி வாணி.
உள்ளி
//உள்ளி - சின்ன வெங்காயம் தானே!// ஆமாம் என்று பதில் சொல்லியிருக்கீங்க நிகிலா. எந்தெந்த ஊர்களில் இப்படிச் சொல்லப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
இலங்கையில் உள்ளி = பூண்டு / வெள்ளைப் பூடு.
போஸ்ட் படிக்கல நிகிலா. திரும்ப வருவேன்... ஒரு வாரம் கழித்து. :-)
- இமா க்றிஸ்
சுக்குட்டி
ஆஹா....பேரு அருமையா இருக்கே.....சுப்புக்குட்டின்னு சொல்றாப்பல இருக்கு.;))
//இப்பவும் மார்க்கெட்ல அதிக விலை கீரைனா இதுதான்//
ஆமா அருள். அதிலும் கடையில் வாங்கினால் குச்சி தான் அதிகமா இருக்கும். இலை ரொம்பவும் குறைவா இருக்கும். மீண்டும் மணத்தக்காளி வளருங்க அருள்.
பூச்சி பிடிக்கிற கிளையை மட்டும் கவனமா வெட்டிவிடுங்க போதும்.
//வயிற்றில் புண் இருந்தா வாயில் புண் வரும்னு சொல்றாங்க// உண்மை தான். அல்சர்ன்னாலே புண் என்று தான் அர்த்தம்.. எல்லாப் புண்ணுமே சரியாகும்.
பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி அருள்.
உள்ளியும் பூண்டும்
அன்பு இமா
உள்ளியும் பூண்டும் இலங்கையில் ஒண்ணு தானா?
இங்கே திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை உள்ளி என்றும் பெரிய வெங்காயத்தை பல்லாரி என்றும் சொல்லும் வழக்கம் உண்டு.
கேராளாவிலுள்ள ஒரு தோழி கொச்சுள்ளி என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
//போஸ்ட் படிக்கல நிகிலா. திரும்ப வருவேன்... ஒரு வாரம் கழித்து. :-)//
இன்னிக்கு புனித வெள்ளி ஆச்சே. பிசியா இருப்பீங்க.. எனக்கும் சேர்த்து பிரேயர் பண்ணுங்க இமா.
அட்வான்ஸ் நன்றி .....பிரேயருக்கு:))))
நல்ல கீரை
நிகி, நன்மை பயக்கும் நல்ல கீரையைப்பற்றி நல்லதோர் பதிவு! சின்ன சின்ன மருத்துவ டிப்ஸ் அருமை.
எனக்குப் பிடித்த கீரைகளில் இதுவும் ஒன்று. ஊரில் எங்கு பார்த்தாலும் களை போல முளைத்திருக்கும்! தேடிப் பிடித்து பறிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று!
பருப்பும் , தேங்காயும் சேர்த்து பொரியல் மாதிரி செய்வது ரொம்ப சுவையாக இருக்கும்!
கீரை பார்க்கவே நல்லாயிருக்கு...இன்னும் நிறைய கீரை போடுங்க....
உள்ளி என்றால் நானும் பூண்டுன்னுதான் நினைத்தேன்! கன்னடத்தில் உள்ளி, பெள்ளுள்ளின்னா பூண்டுதான்!
Niki
Nalla padhivu. Amma veetil irukku indha keerai. Enakku aagala... allergy aagi sama running nose aagudhu. :)
Ulli - chinna vengaayam nu dhaan arusuvaiku varum varai ninaichen. Tirunelveli pakkam appadi solli dhaan vaanguvom. Inga vandha piragu dhaan puundum ulli enbaargal sila uuril enru purindhadhu.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உள்ளி
நல்ல பதிவு. தங்கை வீட்டில் நிறைய இருக்கு. கறுப்பு, வெள்ளையும் (பழுப்பு நிறம்?) பார்த்திருக்கேன். ஆனா இந்த நிறம் எனக்கு புதுசு. ரொம்ப அழகாவும் இருக்கு.
ஒரு சந்தேகம். வற்றல் கடையில் வாங்குவதா? அது முளைக்குமா?. ஏன்னா அது உப்பும், தயிரும் கலந்து காயவைத்து தான் கிடைக்கிறது.
நாகர்கோவிலில்
உள்ளி __ சின்ன வெங்காயம்
வெளுத்துள்ளி\பூடு __ பூண்டு
அன்புடன்
ஜெயா
niki
Niki pathivu epavum romba nallarukum. Egalayum keerai Nada aasaiya kilapitigalaey naan EGA nadarthu photo super. Keerai sapitu nalla healthy a irugo.
Be simple be sample
கீரை டிப்ஸ்
பாராட்டுக்கு நன்றி அனு.;)
//இன்னும் நிறைய கீரை போடுங்க// பொன்னாங்கண்ணி, புதினா கீரையும் நட்டிருக்கேன் அனு. வீட்டிலே முருங்கை கீரையும், கறிவேப்பிலையும் கிடைக்கும். ஒருவழியா வீட்டிலேயே தேவையான கீரை கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.
நானும் பருப்பு சேர்த்து பொரியல் செய்வேன்.
//உள்ளி என்றால் நானும் பூண்டுன்னுதான் நினைத்தேன்! கன்னடத்தில் உள்ளி, பெள்ளுள்ளின்னா பூண்டுதான்!// நல்லவேளையா இமா சொன்னதால ஆச்சு. இல்லேன்னா நிறைய பேரு உள்ளி தான் பூண்டுன்னு குழம்பிப் போயிருப்பீங்க போல.
அலர்ஜி
// allergy aagi sama running nose aagudhu. :)// வனி இந்தக் கீரை உடலுக்கு நல்ல குளிர்ச்சி. அதனால் ரன்னிங் நோஸ் ஆகியிருக்கு. ஆனா, மறக்காதீங்க. அல்சருக்கு சிறந்த மருந்தும் இதுவே.
நானும் உள்ளியும் பூண்டும் குழம்பிட்டேன் வனி:)))
பதிவுக்கு நன்றி வனி:)
வற்றல்
சுண்டைக்காயில் தான் கசப்பு இருப்பதால் தயிரும் உப்பும் சேர்த்து காய வைப்பாங்க. மணத்தக்காளியை சும்மா அப்படியே காய வச்சி தான் என்னிடம் இருக்கு ஜெயா.
தயிர் கலந்ததை போட்டுப் பாருங்க, முளைக்குமான்னு தெரியலை பா.
சின்ன வெங்காயத்தை ஈருள்ளி என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
பூண்டு என்பது வெள்ளை வெங்காயம் ஆகும். எனவே, வெளுத்துள்ளி சரியாக சொல்லுறீங்க.:)
பதிவுக்கு நன்றி ஜெயா.
ஜோதில ஐக்கியமாக
//Niki pathivu epavum romba nallarukum.//
ஆஹா ரொம்பவும் சந்தோஷம் ரேவா.:)))
நீங்களும் கீரை போடுங்க பா. இயற்கையான கீரை கிடைக்கும்.
//naan EGA nadarthu photo super// புரியலை ரேவா என்ன சொல்றீங்க?
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி ரேவா.
மணத்தக்காளி
நிகிலா சிஸ்டர், அழகான ஆரோக்கிய குறிப்பு கொடுத்திரிக்கீங்க.. நிறைய பேருக்கு பயன்படும், வீட்டிலேயே வளர்க்கப்பட்டது இன்னும் கூடுதல் நன்மை.
உன்னை போல் பிறரை நேசி.
ஆரோக்கியக் குறிப்பு
அன்பு க்றிஸ் சிஸ்டர்
வீட்டிலேயே வளர்ப்பது மனதுக்கு மகிழ்வைத் தரும் ஒன்று.
உங்க பதிவும் மனதுக்கு மகிழ்வைத் தருது..:)
நிகிலா
அடடே ரொம்ப அருமையான குறிப்புகள்....அல்சரால் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க ரொம்ப உபயோகமானது.எங்கள் வீட்டில் மாமியார் பெரிய தோட்டமே வைத்திருக்காங்க, இதில் மணத்தக்காளியும் ஒன்று. ....
நல்லாயிருக்கீங்களா?....
அன்பு தோழி. தேவி
கீரைத் தோட்டம்
அன்பு அஸ்வதா
அல்சர்னு நிறைய பேரு சொல்றதால தான் இந்தக் குறிப்புக்களை கொடுத்தேன்.
கீரைத் தோட்டமே இருக்குதா.....சந்தோசம்.:). அடிக்கடி கீரை சமையல் செய்து சாப்பிடுங்க பா.
நான் ரொம்ப நல்லா இருக்கேன் அஸ்வதா. உங்கள் ஞாபகமான விசாரிப்பு மகிழ வைக்கிறது. நீங்களும் குழந்தையும் நலமா இருப்பீங்கன்னு நினைக்கேன்:)))
நிகிலா
எல்லோரும் நலமே....வாரத்திற்கு இரண்டு நாள் கீரை தான்...என் மாமியார் பூந்தோட்டம், கீரைத்தோட்டம், நிறைய இருக்கு......
அன்பு தோழி. தேவி
அஸ்வதா
ரொம்ப சந்தோசம் அஸ்வதா:)))
தோட்டம் போடுவது நல்ல பொழுதுபோக்கு. எனக்கும் மிகவும் பிடிக்கும்.:)))))
நான் இப்போது தான் புதிய வீட்டில் வளர்க்க ஆரம்பித்திருக்கிறேன் பா.
வீட்டின் பின்பக்கம் அனைத்து பழ மரங்களும் வளர்க்கிறேன்.
நிகிலா
நீங்க என்ன உரம் போடுறீங்க? என் அத்தை வெங்காய தோல் காய்களை நறுக்கும் போது கிடைப்பதை உரமாக போடுறாங்க... அதுதான் இயற்கை உரமாம்.....
அன்பு தோழி. தேவி
இயற்கை உரம்
அஸ்வதா
செடிகள் எல்லாம் நட்டு ஓராண்டு தான் ஆகின்றது.
வீட்டிலுள்ள சமையலறைக் கழிவுகள் எல்லாம் உரம் தான். பக்கத்து காம்பவுண்டின் வேப்பிலை எல்லாம் எங்கள் வீட்டில் விழுந்து ஏராளமான சருகுகள். இப்போது இலையுதிர் காலம் அல்லவா?
வேப்பிலை எல்லாம் வேர்ப்பூச்சிகளை தடுக்கும் என்று சொல்லி மரத்துக்கு உரமா போட்டாச்சு.
மற்றபடி மாட்டுச் சாணம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.
எல்லாமே இயற்கை தானே பா:))
உள்ளி
சின்ன வெர்ங்காயத்தை நாங்களும் உள்ளி என்றுதான் சொல்லுவோம்.
பூண்டு - வெள்ளைப் பூண்டு , பூடு என்போம்.
வெளுத்துள்ளி - மலயாளத்தில் பூண்டின் பெயர். (வெளுத்த உள்ளி)
நண்பர் ஒருவரை ஒருநாள் white onion வாங்கி வரச் சொன்னேன். அவரோ பூண்டை வாங்கி வந்து விட்டர். அவங்க ஊரில் (கோவை) வெள்ளை வெங்காயம் என்றால் பூண்டு என்றார்.
வெள்ளை வெங்காயம்
எங்கள் பக்கமும் இப்படிச் சொல்லுவோம் வாணி. அங்கு பூண்டு, பூடு எல்லாம் பேச்சில் வராது. :-)
- இமா க்றிஸ்
வெளுத்துள்ளி
ஆம் வாணி, இமா.
பூண்டை வெளுத்துள்ளி என்று சொல்லுவதை நானும் கேள்விப்பட்டிருக்கேன்.
வெங்காயமும் பூண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அதனால் தான் இப்படி ஒரு சகோதரக் குழப்பம்:)))
ஈருள்ளி
\\ சின்ன வெங்காயத்தை ஈருள்ளி என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.\\ அம்மாவும் அப்படி சொல்ல கேட்டிருக்கிறேன். காரணம் சின்ன வெங்காயம் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டு பல் இருக்கும். (இரண்டு+ஐந்து= ஈரைந்து \ இரண்டு+உள்ளி= ஈருள்ளி)
ஈருள்ளி
அன்பு ஜெயா
என்னோட மாமியார் ஈருள்ளி என்று தான் சொல்லுவாங்க. இப்போது தான் புரிகின்றது.
//இரண்டு+உள்ளி= ஈருள்ளி)// விளக்கம் அருமையாக உள்ளது.:)))
நன்றி ஜெயா
மணத்தக்காளிக் கீரை
அன்பு நிகிலா,
மருந்துமாச்சு, உணவுமாச்சு - டூ இன் ஒன் ஆக பயன்படும் மணத்தக்காளிக்கீரை குறிப்புகள் அருமை.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா
அன்பு சீதா
//மருந்துமாச்சு, உணவுமாச்சு - டூ இன் ஒன் ஆக பயன்படும் மணத்தக்காளிக்கீரை குறிப்புகள் அருமை.//
உணவே மருந்து என்பது தானே நமது மொழி.
மருந்தாகும் உணவுகள் பற்றிய கருத்துக்கு நன்றி சீதா:))