ஞாபகம் வருதே.....-2

லீவில் வீட்டிற்கு விருந்தாளி வந்து பின் நாங்கள் வெளியில் போனதால் ஞாபகம் வருதே அடுத்த‌ பாகத்திற்கு கால‌ தாமதம் ஆகி விட்டது. பரவாயில்லை மன்னித்து விட்டுடலாம். முதல் பாகத்தில் சொன்னது போல‌. இன்னும் சில‌ பாடல்களும் ஞாபகத்துக்கு வருகின்றன‌.

1. நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல‌ துதி செய்

2. அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூற‌ ஓட்டு
ஒரு பங்கு உனக்கு ஒரு பங்கு எனக்கு
ஒரு பங்கு அப்பாக்கு ஒரு பங்கு காக்காக்கு

3. மழை வருது மழை வருது நெல்ல‌ வாருங்க‌
முக்கா படி அரிசி போட்டு முருக்கு சுடுங்க‌
ஏர் இழுக்கற‌ மாமனுக்கு எண்ணி வையுங்க‌
சும்மா இருக்கற‌ மாமனுக்கு சூடு வையுங்க‌

4. பச்ச‌ மிளகா காரம், பன்னண்டு மணி நேரம்
டீச்சர் வந்தாங்க‌, டியூப்லைட் போட்டாங்க‌
வாத்தியார் வந்தாரு, வணக்கம் வெச்சாரு
இன்ஸ்பெக்டர் வந்தாரு, இழுத்து போட்டு அடிச்சாரு

5. அதோ பார் காரு, காருக்குள்ள‌ யாரு?
நம்ம‌ மாமா நேரு, நேரு என்ன‌ சொன்னாரு?
நல்லா படிக்க‌ சொன்னாரு.

6. மொட்ட‌ பாப்பாத்தி, முருக்கு சுட்டாலாம்,
எண்ண‌ பத்தலயாம், கடக்கி போனாலாம்,
காசு பத்தலயாம், கடக்காரன‌ பாத்து கண்ணடிச்சாலாம்.

7. தம்பி தம்பி டா, என்னா தம்பி டா?
குருவி குடுடா, என்னா குருவி டா?
மஞ்ச‌ குருவி டா, அது எப்டி கத்தும் டா?
கீச் கீச்னு கத்தும் டா.

8. ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.
ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.

9. சின்ன‌ சின்ன‌ பை(யி)
காச‌ போட்டு வை(யி)
அம்மா சொல்வது மெய்(யி)
சொல்ல‌ கூடாது பொய்(யி)

10. கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?
கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?

இம்புட்டு தாங்க‌ என் நினைவில் உள்ள‌ பாடல்கள். உங்களுக்கு இதிலிருந்து எதாவது ஞாபகம் வருதா? உங்களுக்கு வேறு ஏதாவது பாட்டு தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

5
Average: 5 (2 votes)

Comments

ஜெயா இந்த பாடலில் இன்னும் சில வரிகள் சேர்த்து பாடிய 'ஞாபகம் வருதே...'

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
மெள்ளமாக நடக்கும்
செல்லமணி வாத்து.

இன்னொரு பாடல் சிறுவயதி பாடி ஆடியது.

கோ கோ பிஸ்க்
கோவக்கா பிஸ்க்
நாலுபடி நல்லெண்ண(ய்)
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பையா
வழியுடம்மா மீனாக்ஷி
மீனாக்ஷியம்மன் கோயிலுக்கு
மிஞ்சி(மெட்டி)வாங்க போகையிலே
காமாக்ஷியம்மன் கோயிலுக்கு
கப்பல் செய்ய போகையிலே
பொண்ணு பேரு பூவாத்தா
மாப்பிள பேரு மணியாத்தா :))))
டும் டும் டும்....

இந்த பாட்ட முழுசா பாடினமா அரைகுறையானாலெல்லாம் அப்ப தெரியாது. அதுக்கப்புறம் பாடினதும் இல்ல. ஆனா பாலா உங்களால நினைவோட ஆழதிலிருந்து காட்சிகளுடன் வெளிக்கிளம்பிடுச்சு :))

கல்யாண வீடுகளுக்கு செல்லும் போது, நிச்சயம் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோழிகள் கிடைப்பர். அதில் இருவராக சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இருவரும் முகத்திற்கு எதிராக நின்றுகொண்டு, ஒருவரின் வலதுகையை மற்றவரின் இடது கையால் பிடித்துக்கொள்ளவேண்டும். இரண்டு கைகளையும் இது போல் மாற்றி மாறி பிடித்துக்கொண்டு வேகமாக கரகர வென சுத்த வேண்டும். கூடவே மேற்சொன்ன பாடலும்... பாடல் முடியும் தருவாயில் இரண்டு கைகளையும் விட்டு விட்டு, போட்டிருக்கும் பட்டுப்பாவடை புஸ்ஸென்று வர கீழே அமரவேண்டும். பார்ப்பதற்கு தலையும், கைகளுமே தெரியும்.
யாரோடா பாவாடை அழகாக வருகிறது என அதில் ஒரு போட்டியே நடக்கும் :)))))
யாராச்சும் சிரிச்சீங்க..அப்பரம் நடக்கிரதே வேற...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப‌ அருமையான‌ பாட்டு. நாங்களும் நீங்கள் சொல்லும் இந்த‌ விளையாட்டை (கை கோர்த்து சுற்றுவது) விளையாடி இருக்கிறோம். ஆனால் வேறு ஏதோ பாட்டு பாடுவோம். அந்த‌ பாட்டு நினைவுக்கு வந்தால் அனுப்புகிறேன். ஆனா உங்க‌ பாட்டு சூப்பர்.

//பிஸ்க்// சூப்பரா இருக்கு. நாங்க‌ யாரையாவது ஏமாற்ற‌ அஸ்க்கு பிஸ்க்கு னு சொல்வோம். அது நினைவுக்கு வருகிறது. நன்றி அருள்.

எல்லாம் சில‌ காலம்.....

பாட்டுகள் அனைத்தும் அருமை. சாஞ்சாடம்மா சாஞ்சாடு பாட்டுல‌ நாங்க‌ இன்னும் நிறைய‌ சேர்த்து பாடுவோம். மல்லாக்க‌ படுத்து காலை மடக்கி குழந்தையை காலில் உக்கார‌ வைத்து மேலும் கீழும் தூக்கி இதை பாடுவோம். எதுலாம் வாய்க்கு வருதோ அதெல்லாம் சொல்லி குழந்தையை கொஞ்சி சாஞ்சாடுனு சொல்லுவோம். துவங்கும் வார்த்தை எதுகை மோனையாக‌ இருக்குமாறு பார்ப்போம். இல்லைனா அப்படியே தோணுவதை பாடுவோம்.

கட்டி கரும்பே சாஞ்சாடு,
காவியமே சாஞ்சாடு,
செல்ல‌ குட்டியே சாஞ்சாடு,
சேர்ந்து சுற்றலாம் சாஞ்சாடு,
கொஞ்சும் கிளியே சாஞ்சாடு,
கோவில் புறாவே சாஞ்சாடு,
மணி புறாவே சாஞ்சாடு,
மாடப்புறாவே சாஞ்சாடு,

இது மாறி நிறைய‌ இருக்கு

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப‌ நல்ல‌ பயனுள்ள‌ வலைபதிவு, சூப்பர்.
நீங்க மேல‌ சொல்லி இருக்க‌ எல்லா பாட்டும் நாங்க‌ சின்ன‌ வயதுல‌ பாடினது தான்,
இப்போ என் அக்கா பையனுக்காக‌ அப்பப்போ பாடுறதுண்டு.

சில‌ வார்த்தைகள் மறந்து போய்ருந்தது அது எல்லாத்தையும் நீங்களும் மத்தவங்களும் நியாபகபடுத்தீட்டீங்க‌ , ரொம்ப‌ தாங்ஸ்.

எவ்ளோ அழகான‌ எளிமையான‌ குட்டி குட்டி பாட்டு எல்லாம் ச்சே இப்போ இருக்க‌ குழந்தைங்க‌ ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க‌,

இந்த‌ போஸ்ட் பாத்து இப்ப நிறைய‌ பேர் குட்டீஸ் க்கு சொல்லி தருவாங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எல்லா பாட்டையும் நீங்களும் மத்தவங்களும் சொல்லீட்டீங்களே,
எதாவது சொல்லனுமே, ஆங்

ஒரு குடம் தண்ணீ ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
இரண்டு குடம் தண்ணீ ஊத்தி இரண்டு பூ பூத்துச்சாம்
.
.
.இப்படி 10 வரை சொல்லுவோம்
இது ஒரு விளையாட்டு இரண்டு பேரு கையை மேல‌ தூக்கி பிடிச்சி நிப்போம் அதுக்குள்ள‌ பூந்து மத்தவங்க‌ போயிட்டு போயிட்டு வருவாங்க‌, 10 குடம் தண்ணீ ஊத்தி 10 பூ பூத்துச்சாம் சொல்லும் போது யாரு உள்ள‌ நுழையுறாங்களோ அவங்க‌ அவுட்.

(சொல்ல‌ மறந்துட்டேன் பாலா க்கா போட்டல‌ இருக்கது உங்க‌ பையனா?
ரொம்ப கியூட்டா இருக்காங்க‌ சாரு)

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி,

இந்த‌ விளையாட்டு நாங்களும் விளையாடியதுண்டு. எனக்கும் மறந்து போன‌ பல‌ பாடல்கள் மற்றும் நினைவுகள் இங்கு கிடைத்தது. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம் விளையாடிய‌ நினைவுகள் எனக்கும் இப்போ நல்லா நினைவுக்கு வருது. அதுல‌ நான் தோத்ததே இல்லை. ஏனா எங்க‌ செட்ல‌ நான் தான் சின்ன‌ பொண்ணு. குள்ளமா இருப்பேன் ( இப்போ நல்ல‌ உயரம். 5.4"). கை இறக்கறதுக்குள்ள‌ அடுத்த‌ பக்கம் ஓடிடுவேன். உங்களால‌ இன்னிக்கு இந்த‌ ஞாபகம் வந்தது. நன்றி சுபி. குட்டீஸ் எங்க‌ வீட்டு வாண்டு தான். பேரு சமிக்ஷ‌ன்.

எல்லாம் சில‌ காலம்.....

ஹஹஹா... குட்டியில் படிச்சதெல்லாம் நினைவிருக்கோ? ஆச்சர்யம் தான். இதில் 3 தான் எனக்கு தெரியும்... அதுவும் பிள்ளைகளுக்காக‌ சிடி போட்டு போட்டு மனப்பாடம் ஆயிற்று. மற்றதெல்லாம் நான் படித்ததாக‌ பாடியதாக‌ நினைவு கூட‌ இல்லை. கச்சேரி பலமா நடக்குது தோழிகளோடு... கலக்குங்க‌ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு இது போல் பாடி ஆடி பழக்கம் இல்லையா? நீங்க‌ உங்க‌ குழந்தை பருவத்தை கொண்டாடவே இல்லை போல‌ இருக்கே! நீங்க‌ ரொம்ப‌ மிஸ் பண்ணிட்டீங்க‌. அக்கா என்ன‌ ரொம்ப‌ நாளா ஆளையே காணோம். எங்க‌ போயிருந்தீங்க‌? உங்க‌ பதிவு கண்ணில் படாமல் வருத்தமாக‌ இருந்தது. இப்போ வருத்தம் போய் விட்டது. வந்ததுக்கு நீங்களும் ஒரு பாட்டு பாடலாமே...

எல்லாம் சில‌ காலம்.....

நான் தான் சொன்னேனே... எனக்கு ஒரு பாட்டும் தெரியாது. :) கூட்டீஸ்க்கு 2 வருடம் முன் சில‌ பாடல்கள் போட்டு காட்டுவோம்... அதில் ஒன்னு உங்களுக்காக‌...

கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க‌?
காட்டு பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க‌.
கம்பிலி சட்டை ஜோராயிருக்கு யாரு தந்தாங்க‌?
கடவுள் தந்த‌ சொத்து தாங்க‌ வேற‌ யாருங்க‌.

பிள்ளைகளுக்கு பள்ளி தேடி 2 மாசம் சுத்தினேன். இப்போ பள்ளி கிடைச்சு அட்மிஷன் போட்டு அவங்க‌ போக‌ ஆரம்பிச்சிருக்காங்க‌. முதல் 1 வாரம் தானே ஆயிருக்கு, அது கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு. தினம் பள்ளிக்கு போனா அங்கையே இருந்து பள்ளி முடிஞ்சு கூட்டி வர‌ வேண்டி இருக்கு. இன்னும் ஒரு வாரம்... எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டா ஃப்ரீ ஆயிடுவேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாட்டு சூப்பர். நீங்க‌ ஃப்ரீ ஆகிட்டு வாங்க‌. குட்டீஸ்க்கு ஆல் த பெஸ்ட் சொல்லிடுங்க‌ என் சார்பில்.

எல்லாம் சில‌ காலம்.....

பாலா எங்க‌ அம்மா உங்க‌ பதிவைப் படிச்சிட்டு பாடிய‌ பாட்டு இது

நத்தையாரே நத்தையாரே
அத்தை வீடு பயணமோ
அத்தை வீடு போகும் வழியில்
தண்ணீர் குடம் வேணுமோ
அத்தையார்க்கு நீர் சுமக்கும்
நத்தையாரே வாருங்கள்
மெத்தவெளியில் நீரும் சிந்தும்
மெல்ல‌ மெல்ல‌ செல்லுங்கள்

எப்படி இருக்குன்னு சொல்லுங்க‌ பார்ப்போம்:))