வெயிலை உபயோகிக்கலாம் வாங்க‌

காலையில் 8 மணிக்கு கூட‌ வெளியில் செல்ல‌ முடியவில்லை. மே மாதம் முடிந்து ஜூன் மாதமும் வந்து விட்டது. இடையிடையே மழை பொழிந்தாலும் வெயில் சுளீரென்று குத்துகிறது. வெயில் எப்படி இருந்தாலும் மனிதனுக்கு சூரிய‌ ஒளி மிக‌ முக்கியம். ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது நம் உடம்பில் சூரிய‌ ஒளி பட வேண்டும். அதற்காக‌ உச்சி வெயிலில் போக‌ வேண்டாம். இள‌ வெயிலில் (காலை அல்லது மாலையில்) செல்லலாம். அதற்காக‌ மண்டை பிளக்கும் வெயிலை வீணாக்க‌ முடியுமா? இதையும் பயனுள்ளதாக‌ மாற்றுவோம் வாங்க‌. வித‌ விதமான‌ வற்றல் வடகம் போட்டு வைத்துக்கொண்டால் வருடம் முழுதும் உதவும் சீசன் இல்லாத‌ நேரத்திலும் கூட‌. இங்கே நான் படித்த எனக்கு தெரிந்த‌ சில‌ வற்றல் வடக‌ வகைகளை நான் கூறுகிறேன்.

1. மாங்காய் வற்றல்:

மாங்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக்கி உப்பு சேர்த்து பிசறி 2 நாள் ஊறவிட்டு பின் வெயிலில் வற்றல் ஆகும் வரை காயவைத்து எடுத்து வைக்கவும். இது சீசன் இல்லாத‌ நேரத்திலும் குழம்பு சாம்பாரில் சேர்க்க‌ உதவும்.

2. பாகற்காய் வற்றல்:

பாகற்காயை வட்ட‌ வட்ட‌ வில்லைகளாக‌ நறுக்கி வெந்நீரில் சிறிது நேரம் ஊற‌ வைத்து நீரை வடித்து புளித்த‌ தயிர், உப்பு சேர்த்து 2 நாள் ஊற‌ வைக்கவும். பின் வெயிலில் நன்கு காய‌ வைக்கவும். சமைக்கும் முன் வெந்நீரில் ஊற‌ வைத்து பின் குழம்பில் சேர்க்கலாம். அல்லது அப்படியே பொரித்தும் சாப்பிடலாம்.

3. கத்தரிக்காய் வற்றல்:

கத்தரிக்காயை நன்கு கழுவி நீள‌ வாக்கில் நறுக்கி அப்படியே வெயிலில் காய‌ வைத்து வைக்கவும்.

4. கொத்தவரை வற்றல்:

இந்த‌ வற்றலுக்கு கொத்தவரை பிஞ்சாக‌ இருந்தால் நன்றாக‌ இருக்கும். பிஞ்சு கொத்தவரையின் இரு பக்கமும் காம்பு நீக்கி நன்கு கழுவி தேவையான‌ தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் பாதி வேக்காடு வேக‌ வைக்கவும். பின் 2 கப் தயிர் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வெயிலில் நன்கு காய‌ வைக்கவும். இதே முறையில் அவரை காயிலும் செய்யலாம்.

5. சுண்டைக்காய் வற்றல்:

சுண்டைக்காய் வற்றலுக்கு பெரிய‌ சுண்டைக்காயே (மலை சுண்டைக்காய்) சிறந்தது. இதை காம்பு நீக்கி லேசாக‌ கீறி அரிசி கலைந்த‌ நீரில் கழுவி 4 கப் சுண்டைக்காய்க்கு 2 கப் தயிர் வீதம் சேர்த்து உப்பு சேர்த்து 2 நாள் ஊற‌ வைக்கவும். பின் வெயிலில் நன்கு காய‌ வைக்கவும். இதே முறையில் வெண்டைக்காயிலும் செய்யலாம்.

6. மணத்தக்காளி வற்றல்:

மணத்தக்காளியை நன்கு தண்ணீரில் கழுவி 3 கப் மணத்தக்காளிக்கு அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒன்றரை கப் கெட்டி தயிர் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ந்த‌ மிளகாய் மற்றும் பெருங்காயம் இரண்டையும் அரைத்து சேர்த்து நன்கு குலுக்கி 2 நாள் ஊற‌ வைக்கவும். பின் வெயிலில் நன்கு காய‌ வைக்கவும்.

7. மோர் மிளகாய்:

பிஞ்சு பச்சைமிளகாயின் காம்பு பக்கம் பாதியை எடுத்து விடவும். காரம் விரும்புவோர் முழுதாக‌ சேர்க்கலாம். இதனுடன் லேசாக‌ புளித்த‌ கடைந்த‌ தயிர் (5 கப் மிள்காய்க்கு ஒன்றரை கப் தயிர்) சேர்த்து உப்பும் சேர்த்து ஒரு நாள் முழுக்க‌ ஊற‌ வைத்து பின் மிளகாயை மட்டும் வெயிலில் காய‌ வைத்து பின் இரவில் தயிர் கலவையில் நன்கு குலுக்கி ஊற‌ வைத்து மறு நாள் மிளகாயை மட்டும் காய‌ வைக்கவும். தயிர் கலவை தீர்ந்து மிளகாய் நன்கு சுருள‌ காயும் வரை இதே போல் காய‌ வைக்கவும்.

8. வெங்காய வடகம்:

இதை குழம்பு தாளிக்க‌ பயன்படுத்தலாம். சின்ன‌ வெங்காயம் அரை கிலோ ஒன்றும் பாதியுமாக‌ நன்கு இடித்துக் கொள்ளவும். துவரம்பருப்பு 1/2 டம்ளர், உளுத்தம்பருப்பு 1/2 டம்ளர் ஊறவைத்து கொரகொரப்பாக‌ ஒன்றும் பாதியுமாக‌ அரைக்கவும். இதனுடன் கடுகு , உளுந்து, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், கொரகொரப்பாக‌ நசுக்கிய‌ மல்லி, மஞ்சள்தூள், உப்பு எல்லாமே தலா 1/2 டம்ளர், இடித்த‌ (நசுக்கிய‌) பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, நசுக்கிய‌ சின்ன‌ வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து 200மி.லி. நல்லெண்ணை சேர்த்து நன்கு பிசைந்து 1 நாள் ஊறவிட்டு உருண்டையாக‌ உருட்டி வெயிலில் நன்கு காய‌ வைத்து பின் உதிர்த்து நன்கு காய‌ வைத்து மீண்டும் 50 மி.லி. நல்லெண்ணை கலந்து பிசறி டப்பாவில் எடுத்து வைக்கவும்.

9. ஜவ்வரிசி வடாம்:

ஜவ்வரிசியுடன் தண்ணீர் (1 கப்புக்கு 3 கப்) சேர்த்து 2 மணி நேரம் ஊற‌ விட்டு பின் மேலும் தண்ணீர் சேர்த்து பெருங்காய‌ பொடி, உப்பு சேர்த்து கஞ்சி பத்திற்கு காய்ச்சவும். காரம் விருப்புவோர் பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம். கஞ்சி பதம் வந்த‌ பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின் வாழை இலையில் (அ) பாலித்தின் கவரை விரித்து வட்ட‌ வட்ட‌ வில்லைகளாக‌ தட்டி காய‌ வைக்கவும். கஞ்சி நீர்க்க‌ இருந்தால் கரண்டியால் மொண்டு வட்ட‌ வட்டமாக‌ ஊற்றவும். இது நன்கு காயும் வரை வாழை இலையிலிருந்து எடுக்க‌ வேண்டாம். அப்படியே காய‌ வைத்து நன்கு காய்ந்ததும் தனியே டப்பாவில் எடுத்து வைக்கவும்.

10. சோற்று வற்றல்:

சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊற‌ வைத்து (பழையது) தண்ணீர் பிழிந்த சாதத்துடன் காய்ந்த‌ மிளகாய், வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து லேசாக‌ தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பததில் அரைக்கவும். வெயிலில் நீட்டு துணியை விரித்து இந்த‌ மாவை முறுக்கு அச்சில் நிரப்பி நீட்டாக‌ பிழியவும். நன்கு காய்ந்ததும் டப்பாவில் எடுத்து வைக்கவும்.

என்னங்க‌ வற்றல்லாம் நல்லா இருக்கா? அப்றம் என்ன‌ ட்ரை பண்ணி பாருங்க‌. இட‌ பற்றாகுறையால் நான் நிறைய‌ வற்றலை விட்டு விட்டேன். அது உங்களுக்கு தெரியும். அந்த‌ உங்களுக்கு தெரிந்த‌ வற்றல்களையும் இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

5
Average: 4.3 (3 votes)

Comments

Romba romba super. Useful kurippugal. Kathirika vathaluku konjam pazutha kathiri payanpaduthuvaanganu kelvi paten bala.. idhu enna kathirika sollirukinga?? Kothavarai seyya aasai. Ippo inga adikira mazaiku idhu edhuvum velaiku aagaadhu. But bookmark panren.. veyyil varumbodhu poduvom :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:-) //என்னங்க‌ வற்றல்லாம் நல்லா இருக்கா?// தமிழ் நல்லா இருக்கு.

பாலநாயகிதானா இது!! :-) பாராட்டுகிறேன். மீண்டும் முன்பு போல மாறிவிடாமல் எப்பொழுதும் இப்படியே தொடருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இங்கு இப்போ வற்றல் போடும் காலமில்லை. குறித்துக் கொள்கிறேன். மார்கழி வரும்போது பார்க்கலாம்.

/அரிசி கலைந்த‌ நீரில்// க..ளை..ந்த
எங்கோ ஒரு இடத்தில் மிள்..காய் கண்ணில் பட்டது. அது கணணித் தட்டச்சில் சாதாரணம்தான். ஆங்காங்கே 'க்', 'ப்' என்று சின்னதாகச் சிலவற்றைக் காணோம் என்றாலும் படிக்க இலகுவாக இருக்கிறது. இரண்டு இடங்களில் 'பதம்' பிசகியிருக்கிறது. மற்றப்படி... அருமையான இடுகை பாலநாயகி. வசனங்களை நீள நீளமாக எழுதியிருக்கும் விதம்... :-) ரசித்தேன்.

//உங்களுக்கு தெரிந்த‌ வற்றல்களையும் இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.// ஊரில் விலும்பி மரம் இருந்தது. அந்தக் காய்களில் இரண்டு விதமாக வற்றல் போடுவேன். முற்றிப் பழுக்கத் தயாராக இருக்கும் காய்களைக் கழுவித் துடைத்து அப்படியே காயவிடவேண்டும். உலர்ந்த பின்னால் அளவில் சிறுத்திருக்கும்; திராட்சை வற்றல் போல விரல்களிடையே உருட்டக் கூடியதாக இருக்கும். முடிந்த அளவு நீர்த்தன்மை வற்றும் வரை காய விட்டு, கண்ணாடிச் சாடியில் போட்டு வைக்க வேண்டும்.

இரண்டாவது முறை - நெடுக்குவாட்டில் நான்காக வெட்டி உப்பு பிசிறிக் காயவிடுவது. உலர உலர உப்பு ஊறி... சுவையாக இருக்கும்.

இங்கு டீஹைட்ரேட்டரில் ஆப்பிள், ஃபீஜோவா, தக்காளி, வாழைப்பழம், திராட்சை எல்லாமே வற்றல் போட்டிருக்கிறேன். திராட்சை வற்றல் அறுசுவையில் இருக்கிறது. http://www.arusuvai.com/tamil/node/25175

‍- இமா க்றிஸ்

Super

அன்பு பாலா
புழுங்கலரிசியை ஊறவிட்டு நன்கு அரைத்து கொதிக்கும் நீரில் கரைத்து விட்டு வெந்ததும் எள், ஜீரகம் சேர்த்து ஊற்றினால் கூழ் வற்றல்.
எல்லாமே அருமை.

ஹாய்,
''வெயிலை உபயோகிக்கலாம் வாங்க‌''பயனுள்ள‌ பதிவுங்க‌. பாராட்டுக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

குண்டு கத்தறியில் இந்த‌ வற்றல் போட்டால் நன்றாக‌ இருக்கும். கொத்தவரை எல்லாவற்றுக்கும் சூப்பரா இருக்கும். முக்கியமா கூழுக்கு. இங்க‌ மட்டும் தான் வெயில் கொளுத்துது. நீங்க‌ எல்லாம் குஜாலா இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

\\பாராட்டுகிறேன்.\\ நன்றி இமா அம்மா. உங்க‌ கிட்ட‌ இருந்து பாராட்டு வாங்கறது பெரிய‌ விஷயமாச்சே. நீங்களா பாராட்டி இருக்கீங்க‌? நம்பவே முடில‌. மிக்க‌ மகிழ்ச்சி. இங்கே மார்கழி நல்ல‌ குளிர்.

விலும்பி மரம்னா என்ன‌? தெரிந்தால் நானும் முயற்சி செய்வேன்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி மீனாக்ஷி.

எல்லாம் சில‌ காலம்.....

நிகினா எப்பவும் கலக்கல் தான். சூப்பர் நிகி. இந்த கூழ் வற்றல் நானும் ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரஜினி.

எல்லாம் சில‌ காலம்.....

Averrhoa bilimbi என்று தேடிப் பாருங்கள் பாலநாயகி.

‍- இமா க்றிஸ்

விலும்பியை தேடி கண்டுபுடிச்சிட்டேன். இதைநாங்க‌ புளிச்சக்காய்னு சொல்லுவோம். இதுலயும் வற்றல் போடலாமா? சீசன் அப்போ கண்டிப்பா ட்ரை செய்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

உங்க பதிவைப் பார்த்து வடாம் சாப்பிட ஆசை வந்திடுச்சு :))

\\உங்களுக்கு தெரிந்த‌ வற்றல்களையும் இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள்\\
எங்க அம்மா தக்காளியை அரைத்து ஜவ்வரிசி கூழ் காய்ச்சி இரண்டையும் கலந்து வடாம் ஊற்றுவாங்க,
தக்காளியை வெட்டி வெயிலில் உலர்த்தி அதன் பின் அதில் ஊறுகாய் போடுவாங்க. ரொம்ப நல்லாயிருக்கும்
வெயில் காலத்தில் உப்பு கண்டம் போடுவாங்க

சோற்று வற்றலை நாங்க கூழ் வற்றல் / கூழ் வடாம் என்று சொல்லுவோம்.

சூப்பர் வாணி. தக்காளி வடாம் எப்டி? கேள்விபட்டதே இல்லை. சொல்லி தரவும். அப்படியே தக்காளி ஊறுகாயும்.

எல்லாம் சில‌ காலம்.....