
தேதி: October 6, 2015
ஆர்கமி பேப்பர் - 7 நிறங்களில்
A4 பேப்பர் - ஒன்று
கத்தரிக்கோல்
ஃபெவிக்கால்
சலங்கைகள்
அரச இலை
உல்லன் கயிறு
குச்சி
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

அரச இலையை இரண்டாக மடித்து A4 பேப்பரையும் இரண்டாக மடித்துக் கொண்டு மடங்கிய பக்கத்தில் இலையை வைத்து வளைவுள்ள பக்கத்தை வரைந்துக் கொள்ளவும்.

அதை அப்படியே வெட்டி எடுத்து வெட்டிய அந்த பேப்பரின் உட்பக்கத்தில் மூடியை நடுவில் வைத்து அரை வட்டம் வரைந்துக் கொள்ளவும்.

வரைந்த இடத்தை நறுக்கி எடுத்து விட்டு பேப்பரை விரித்துக் கொள்ளவும்.

ஆர்கமி பேப்பரை இரண்டாக மடித்து இரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் ஒரு துண்டை இரண்டாக மடித்து நறுக்கி வைத்திருக்கும் A4 பேப்பரை வைத்து வரைந்து அச்செடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதை போலவே வெளி பக்கத்திலும் உட்பக்கத்திலும் படத்தில் உள்ளபடி வெட்டி எடுத்து விடவும்.

இதைப் போல எல்லா நிறங்களிலும் உள்ள பேப்பரை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

படத்தில் உள்ளபடி ஏதேனும் இரண்டு இலை போன்ற வடிவமுள்ள துண்டுகளை ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.

அதை தொடர்ந்து மற்ற துண்டுகளையும் இணைக்கவும். கடைசி துண்டையும் முதல் துண்டையும் இணைக்காமல் வைத்திருக்கவும்.

இதைப் போலவே வட்டமாக நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கவும்.

ஒரு குச்சியில் முனையில் ஃபெவிக்கால் தடவி உல்லன் கயிற்றை சுற்றவும். குச்சியின் முழுவதும் சுற்றி முடிக்கும் போது ஃபெவிக்கால் தடவி ஒட்டி முடித்து விடவும்.

தேவையான அளவு உல்லன் கயிற்றை எடுத்து அதன் முனையில் ஒரு பெரிய சாட்டின் பாலை கோர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். வட்டமாக இருக்கும் பேப்பரை இலை வடிவ பேப்பருக்கு இடையில் வைக்கவும். ஒட்டாமல் வைத்திருக்கும் இரு இதழ்களுக்கு நடுவில் கயிற்றை வைத்து இரண்டு பக்கத்தையும் இணைத்து ஃபெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.

இதேப் போல மற்றொன்றையும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு நிற பேப்பரில் ஐந்து வட்டங்கள் நறுக்கி எடுத்து இரண்டாக மடக்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்து கடைசி பக்கத்தையும் முதல் பக்கத்தையும் இணைக்கும் முன் உல்லன் கயிற்றில் 5, 6 சலங்கைகளை இணைத்து கட்டி நூலில் கோர்த்து அதை நடுவில் வைத்து இரண்டு பக்கத்தையும் ஒட்டவும்.

மூன்றையும் உல்லன் கயிறு சுற்றிய குச்சியில் இரண்டு ஓரங்கள் மற்றும் நடுவில் வைத்து கட்டவும்.

பேப்பரால் செய்த அழகிய தோரணம் தயார். சாட்டின் பாலிற்கு பதில் சலங்கைகளை இணைத்து கட்டி விடலாம். காற்றில் ஆடும் போது சத்தம் கேட்க நன்றாக இருக்கும்.

Comments
தோரணம்
சுலபமான, அழகான கைவேலை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.
//அச்செடுத்துக் கொள்ளவும்.// template என்னும் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்! பல முறை சிந்தித்திருக்கிறேன், பிடிபட்டதில்லை. நன்றி செண்பகா.
இறுதிக் குறிப்பில் சொல்லியிருக்கும் wind chime யோசனையும் பிடித்திருக்கிறது.
- இமா க்றிஸ்