
பல(ழ) மொழி யில் இடப்பற்றாக் குறையால் (ரொம்ப பெருசா இருந்தா யார் படிப்பீங்க?) விட்ட இன்னும் சில பழமொழிகளின் தொகுப்பு இங்கே உள்ளன.
1. அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக.
நாட்டின் அரசன் (மன்னன்) நம்பி புருசனை கை விட்ட கதையாகனு நாம் நினைச்சிட்டு இருக்கோம்.
உண்மைப் பொருள்:
மரங்களின் அரசன் அரச மரம். அந்த அரச மரத்தை நம்பி அதையே சுற்றுவதில் நேரத்தை செலவழித்து புருஷனை கண்டுகொள்ளாமல் விடுவது என்று பொருள். இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் பொதுவாக மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள் இழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடும். அதிலும் அரச மரம் வெளிவிடும் காற்று கருப்பையை சுத்தம் செய்ய வல்லது. எனவே குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றினால் அதில் இருந்து வரும் காற்று அவர்கள் கருப்பையை சுத்தம் செய்து குழந்தை பேறு ஏற்பட வழி வகுக்கும் ஆற்றல் படைத்தது. அதற்காக முழுதும் அரச மரத்தை மட்டுமே நம்பி அதையே சுற்றாமல் புருஷனையும் சுற்றி வர வேண்டும் என்பதே இதன் உண்மைப் பொருள்.
2. சட்டியில் இருந்தா தான் ஆப்பையில் வரும்
சட்டியில் ஏதேனும் இருந்தா தான் ஆப்பையில் போடும் போது வரும்னு நாம தப்பா நினைத்து இருக்கோம்.
உண்மைப் பொருள்:
சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
சஷ்டியில் விரதம் இருந்தால் தான் முருகனின் அருளால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை வர வரம் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.

3. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணனும்.
ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொன்னா தப்பு இல்லனு நாம நினச்சிட்டு இருக்கோம்.
உண்மைப் பொருள்:
ஆயிரம் (பேருக்கு) போய் சொல்லி கல்யாணம் பண்ணனும்.
நாம ஒரு கல்யாணம் பண்ணா அதை ஆயிரம் பேருக்காவது போய் சொல்லி அனைவரையும் அழைத்து கல்யாணம் பண்ணனும் என்பதே ஆகும். அவ்வளவு சொந்தங்களை (நண்பர்களை) நம் வாழ்நாளில் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். இங்கு போய் என்பது பொய் என்று மருவி விட்டது.
4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்:
ஆப்பரேஷன் என்ற பேரில் ஆயிரம் பேரையாவது கொன்றால் தான் அரை வைத்தியன் என்றே ஒத்துக் கொள்ள முடியும் என்று நாம் எண்ணியுள்ளோம்.
உண்மைப் பொருள்:
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
ஆயிரம் தாவர வேர்களை கொன்று அதிலிருந்து நோய் போக்க மருந்து தயாரித்த பின்பே ஒருவன் அரை வைத்தியனாக ஆகிறான் என்பதே இதன் பொருள். இங்கு வேரை என்பது பேரை என்று மருவி விட்டது.

5. ஆழம் அறிந்து காலை விடு:
தண்ணீரின் ஆழம் அறிந்து தான் காலை விட வேண்டும் என்று நாம் எண்ணியுள்ளோம்.
உண்மை பொருள்:
புதிதாக ஒருவரிடம் பழகும் போது அவரின் எண்ண ஆழங்களை (நல்ல எண்ணம் கொண்டவரா தீய எண்ணம் கொண்டவரா) அறிந்து அவரிடம் பழக வேண்டும். மற்றுமொரு விளக்கம். எந்த ஒரு செயல் செய்யும் முன்னும் இது நமக்கு சரியாக வருமா செய்யலாமா என்று அந்த செயலின் ஆழத்தை அறிந்தே அதில் காலை வைக்க வேண்டும். (தொடங்க வேண்டும்)
6. ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்
ஆத்துல ஒரு பொருளை போட்டா எவ்ளோ போடறோம்னு அளந்து போடனும்னு நாம நினைத்து இருக்கோம்.
உண்மைப் பொருள்:
அகத்துல போட்டாலும் அறிந்து போடனும். ஆத்துல இல்ல அகத்தில் அதாவது மனதில். பலவிதமான கருத்துகளை நாம் கேட்போம் , பார்ப்போம் அப்போது
அவையெல்லாவற்றையும் சரியாக அறிந்து அகத்துல மனசுல வச்சுக்கனும் என்பதே இதன் பொருள். இது நம் தோழி சுபி கூறிய பழமொழி விளக்கம். நன்றி சுபி.
உங்களுக்கு தெரிந்த பழமொழியும் அதன் அர்த்தத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்,
அன்பு தோழி...