தீபாவளி

அனைவருக்கும் முன்னெடுக்க‌ (advance) தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை நாம் தீபஒளி திருநாள் என்கிறோம். தமிழ்நாட்டை பொருத்தவரை நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக‌ கொண்டாடுகிறோம். அன்றைய‌ பொழுதில் லட்சுமி ஆனவள் தீபத்தினுள் அமர்ந்திருப்பாள். ஆகவே தீபத்தை வீடெங்கும் ஏற்றி தீப‌ ஒளி வீடெங்கும் நிறைந்திருக்க‌ தீபத்தின் மூலம் அம்பாளை வழிபட‌ வேண்டும். இது எல்லாருக்குமே தெரிந்த‌ ஒன்று.

தீபாவளி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, புது துணி, பலகாரங்கள், புதுபடம் ரிலீஸ். (ஆனா இப்போ விளம்பரத்துல‌ நகை எடுங்கனு சொல்றாய்ங்க‌, டிவி ஃப்ரிட்ஜ் வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, அறைகலன் (furniture) வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, இதுலாம் பரவாயில்ல‌ இதெல்லாம் ஆன்லைன்ல‌ ஷாப்பிங் பண்ணுங்கனு சொல்றாய்ங்க‌. அவங்கள‌ இவங்க‌ கலாய்க்கிறாங்க‌. இவங்கள அவங்க‌ கலாய்க்கிறாங்க‌. என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்கய்யா) இது ஒரு புறம் இருக்க‌ எனக்கு இப்போது நினைவுக்கு வருவது என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த‌ ஒரு முக்கியமான‌ விஷயம். தீபாவளியை எப்படி தொடங்க‌ வேண்டும் என்று. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள‌ ஆசைப் படுகிறேன்.

குளியல்:

கொஞ்சம் கஷ்டமான‌ வேலை தான். நாமும் கொஞ்சம் சிரத்தை எடுப்போம். சாதாரண நாட்க‌ளில் ப்ரம்ம‌ முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 முதல் 6 மணி வரையிலான‌ நேரத்தில் குளிர்ந்த‌ நீரில் குளித்து விட‌ வேண்டும். ஆனால் தீபாவளி அன்று அந்த‌ ப்ரம்ம‌ முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி சீயக்காய் நல்லெண்ணையை வைத்து பூஜை செய்து விட்டு வீட்டில் உள்ள‌ அனைவரும் அந்த‌ நல்லெண்ணையும் சீயக்காயும் தலையில் வைத்து தேய்த்து 6 மணிக்குள்ளாக‌ வெந்நீரில் குளிக்க‌ வேண்டும்.

நாம‌ தினமும் பச்ச‌ தண்ணில‌ குளிக்க‌ கஷ்டப்படுவோம்னு தீபாவளி அன்றைக்கு மட்டுமாவது வெந்நீரில் குளிக்க‌ தேவியானவள் நமக்காக‌ நாராயணனிடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறாள். ஹூ ஈஸ் தட் தேவி & நாராயணன் னுலாம் கேள்வி கேட்க‌ கூடாது. கருத்து சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

அப்றம் என்ன‌? இட்லி, வடை, தீபாவளி பலகாரம், பட்டாசு, புது துணினு எல்லாம் வெச்சி பூஜை செய்துட்டு பட்டாசு வெடிச்சி புது துணி உடுத்தி தீபாவளிய‌ கொண்டாட‌ வேண்டியது தான். நம்ம‌ பலகாரம் மத்தவங்க‌ வீட்டுக்கு கொடுத்து, அவங்களோடத‌ நாமும் உண்டு, உறவினர் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கூடி மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடலாம். (இப்போலாம் யார் உறவினர் வீட்டுக்குலாம் போறோம். டிவி தான் நம் உறவினர் மாதிரி டிவி முன்னாடியே உக்காந்துடறோம்.) அம்புட்டு தானானு கேக்க‌ கூடாது. தீபாவளி போனஸா கொஞசம் ஈஸியான‌ விசேஷமான‌ பலகாரம் சொல்லி தரேன்.

முறுக்கு:

1. பச்சரிசி 1 கிலோ வாங்கி கழுவி ஈரத்துடன் மெஷினில் கொடுத்து அரைக்கவும். (முறுக்குக்கு என்று சொல்லி அரைக்கவும்). பின் இதை வாணலில் போட்டு தீயவிடாமல் நன்கு வறுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். இப்படி செய்வதால‌ முறுக்கு வெள்ளையாகவே வரும்.
2. இது கஷ்டம் என‌ எண்ணுபவர்கள் பச்சரிசியை கழுவி நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. இந்த‌ அரிசியில் நான்கில் ஒரு பங்கு பொட்டுகடலை மாவு சேர்த்து (1 கிலோ அரிசிக்கு கால் கிலோ பொட்டுகடலை மாவு), ஒரு கைப்பிடி எள், 50 கிராம் வெண்ணெய் சேர்க்கவும்.
4. 1 மூடி தேங்காயை எடுத்து கட்டியாக‌ பால் பிழிந்து திரியவிடாமல் சூடேற்றி ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து அரிசி மாவுடன் சேர்த்து நன்கு பிசையவும். கட்டியாகவும் இருக்க‌ கூடாது. மிகவும் தளர்வாகவும் இருக்க‌ கூடாது. (தளர்வாக‌ இருந்தால் எண்ணை குடிக்கும்). இடியாப்ப‌ மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
5. இதை முருக்கு அச்சில் போட்டு மீடியம் சூட்டில் ஒரே தீயலில் வைத்து பொரித்து எடுக்கவும்.

2. அதிரசம்:

1. 1 கிலோ பச்சரிசியை நன்கு கழுவி ஈரமாகவே மெஷினில் கொடுத்து அதிரசத்திற்கு என்று அரைத்துக் கொள்ளவும்.
2. 1/2 கிலோ வெல்லம் (அ) சர்க்கரையுடன் 100 கிராம் தண்ணீர் சேர்த்து பாகு பிடிக்கவும். (பாகு உருட்டு பதம் இருக்க‌ வேண்டும். உருட்டு பதம் என்றால் ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் போட்டு பின் அதை எடுத்து உருட்டும் அளவுக்கு வர‌ வேண்டும்)
3. இந்த‌ உருட்டு பதத்தில் அரிசி மாவை சேர்த்து கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து அப்படியே 2 நாளைக்கு புளிக்க‌ விட‌ வேண்டும்.
4. பின் எண்ணை தடவிய‌ வாழை இலையில் அதிரசமாக‌ தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க‌ வேண்டும்.

இதுல‌ என்ன‌ புதுசு இருக்கு? இதான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லாதீங்க‌. அடுத்த‌ வலைபதிவில் இதையே சிறுதானியத்தில் செய்யலாம் வாங்க‌.

Average: 5 (1 vote)

Comments

குறிப்பு, படம் என்று போட்டு ஆசை காட்டுறீங்க‌. ;)

//என்ன‌ புதுசு இருக்கு?// ம்ஹும்! இப்போ பழசுதான் புதுசு; புதுசு எல்லாம் பழகினது. இப்படி ஒரு நல்லநாள் பெருநாளிலாவது வீடுகளில் தமிழர் ஆடை, உணவு என்று ஒரு பழக்கம் வைத்திருந்தால்தான் குழந்தைகள் எம் பாரம்பரியம் பற்றி அறிந்துகொள்வார்கள் பாலா.

திரும்பவும்... படம்.. அருமை. சாப்பிடத் தூண்டுகிறது.

‍- இமா க்றிஸ்

நல்ல பதிவு பாலா. குறிப்புகளுடன் தீபாவளி வாழ்த்து கொடுத்த பாலா க்கு தான்க்ஸ். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Be simple be sample

நன்றி இமா அம்மா.

//இப்போ பழசுதான் புதுசு// உண்மை தான். ஆனால் இந்த‌ பலகாரங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் தான் இதில் புதுசு எதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளேன். அதனால் தான் புதிய‌ பலகாரங்கள் அடுத்த‌ வலைபதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

ஒரு முக்கியமான‌ விஷயம் இமா அம்மா. இந்த‌ advance என்பதற்கு முன்னெடுக்க‌ என்ற‌ வார்த்தையை உங்களுக்காகவே நெட்டில் தேடி எடுத்தேன். மாற்றி கூறிவிட்டால் தவறாகி விடுமே அதற்காக‌. பாலா கொஞ்சமாவது தேறிட்டேனா?

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவ்'ஸ் எனக்கு முதல் தீபாவளி வாழ்த்து உங்க‌ கிட்ட‌ இருந்து தான் வந்து இருக்கு. உங்களுக்கும் சேர்த்து தேவியிடம் வேண்டிக்கறேன். மீண்டும் நன்றி ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

ரெசிப்பி ரொம்ப நல்லா இருக்கு. இடையில் ஒரு முறை செய்து பார்க்கிறேன்... தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

;) //இந்த‌ advance என்பதற்கு முன்னெடுக்க‌ என்ற‌ வார்த்தையை உங்களுக்காகவே நெட்டில் தேடி எடுத்தேன்.// ;)
//மாற்றி கூறிவிட்டால் தவறாகி விடுமே அதற்காக‌.// ;)

மொழிமாற்றம் என்று பார்த்தால்... சொல் சரிதான். உபயோகம் பொருத்தமாக‌ அமையவில்லை பாலா. கவனித்தேன்; ஆனால், 'எப்போதும் பிழை பிடிக்கிறேனோ!' என்று எனக்கே தோன்றியதால், காணாதது போல‌ போக‌ விரும்பினேன். இப்போ நீங்களாகக் கேட்டதனால் மட்டுமே இதைச் சொல்ல‌ வந்தேன்.

advance என்று தேடாமல் in advance என்று தேடியிருப்பீர்களானால் சரியான‌ வார்த்தை கிடைத்திருக்கும். அப்போதும் கூட‌, வாழ்த்தப் பயன்படுத்தும் மீதிச் சொற்களும் சரியாக‌ அமைந்தாக‌ வேண்டும்.

தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன‌. இருந்தாலும், முன்கூட்டியே உங்களை வாழ்த்திவிட‌ விரும்புகிறேன். பாலாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த‌ தீபாவளி வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி அபி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....