குளிரூட்டியை விரும்பாத உணவுகள்

சில உணவுப் பொருட்களை, 'ஏன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது!' என்பதற்கான காரணங்களைக் கூறும் ஒரு செய்தித் துணுக்கை இன்று படிக்க நேர்ந்தது.

படிக்கும் போது இருந்த என் சிந்தனை ஓட்டம் இங்கே... இது காப்பி பேஸ்ட் இடுகை அல்ல.

வாழைப்பழங்கள் சில சத்துக்களை இழந்துவிடும். கனிவதும் தாமதமாகும் என்கிறார்கள். இது எல்லாக் காய்கறிகளுக்கும் பொருந்தும் இல்லையா?

உருளைக் கிழங்குகள்... குளிரின் காரணமாக அதிலுள்ள மாப்பொருள் விரைவில் வெல்லமாகும் என்பது எனக்குப் புதிய தகவல்.

வெண்காயம் - முழுவதாக குளிரூட்டியின் உள்ளே வைத்தாலும் (நான் இப்படி வைப்பதில்லை.) அதன் விறைப்பு நீங்கி மெதுவே பூஞ்சணம் வளர ஆரம்பிக்கும் என்கிறார்கள். வெட்டிய பின் வைப்பதானால்... கட்டாயம் ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் காற்றிலுள்ள வேண்டாத எதையாவது உறிஞ்சிக் கொள்ளும். (இறுதியாக என் படுக்கையறையச் சுவரைப் பெய்ன்ட் செய்த பொழுது, எப்பொழுதோ வாரமஞ்சரி ஒன்றில் படித்த நினைவில் வெண்காயத்தை அரிந்து அறையின் நான்கு மூலைகளிலும் வைத்தேன். அறையில் புதிய தீந்தையின் வாடை அறவே இல்லை. அப்படியானால்... கரியைப் போல வெண்காயமும் உறிஞ்சும் தன்மை கொண்டது தானே?)

ஆவகாடோ / பட்டர் ஃப்ருட் - இவை மரத்தில் இருக்கும் வரை பழுப்பது கிடையாதாம். அதற்கான சுரப்புகளை உருவாக்கிக் கொள்ளும் தன்மை இராது என்பதை முன்பே அறிந்திருக்கிறேன். கிளையிலிருந்து தொடர்பு விட்டதன் பின்புதான் பழுப்பதற்கான செயற்பாடு ஆரம்பம். வெயில் படும் படி வைத்தால் பழுப்பது விரைவில் நடக்கும். அதன் பின் மேலும் கனிவதைத் தவிர்க்க வேண்டுமானால் குளிரூட்டியில் வைக்கலாம்.

உள்ளி / வெள்ளை வெங்காயம் / பூடு - குளிர், முளை விடுதலைத் தூண்டும். பூடு தன்மை மாறிப் போகும். குளிரூட்டியில் வாடை தொற்றும்.

தக்காளி - சுவை மாறும். தன்மை மாறும் - கெட்டித் தனம் விட்டுப் போகும். முற்றியவை கனிவது தாமதமாகும்.

தேன் - இயல்பாகவே கெட்டுப் போக முடியாத உணவு. வேறு உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கக் கூடியது - இதற்குக் குளிரூட்டி தேவயில்லை. தவறுதலாக வைத்து விட்டு... சரி அங்கேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்ட ஒரு சமயம் - சீசாவின் அடியில் சீனியைக் கொட்டி வைத்தது போல உறைந்து போயிருந்தது. வாய் அகலமான சீசா அது. இருந்தும் எடுக்க முனைந்த போது கரண்டி வளைந்தது; தேனை எடுப்பது சுலபமாக இருக்கவில்லை. தேனீக்கள் வளர்க்கும் ஸ்தாபனத்திலிருந்து வந்த தரமான தேன், எப்படி இப்படி ஆயிற்று! கலப்படமோ என்று குழம்பினோம். காரணம் குளிரூட்டிதான், கலப்படம் அல்ல என்பது இப்போது தெரிகிறது.

வெயில் காலம் ஆரம்பித்தால் இங்கு வர்த்தகப் பழம் வீட்டில் இராத நாள் இராது. இன்று அறிந்து கொண்ட தகவல் - குளிரூட்டியில் வைத்தால், 'antioxidant' & 'beta-carotene' அளவுகள் குறைந்து போகிறது என்பது. வெட்டிய பின்னால் துண்டுகள் மீந்துவிட்டால், மூடி வைத்துக் குளிரூட்டச் சொல்கிறார்கள்.

பூசணிக்காய் - வளர்ப்பவர்களுக்கான தகவல் - காற்றோட்டமான இருட்டான இடத்தில் (பேஸ்மண்ட்) வைக்கட்டுமாம். துண்டு போட்ட பின் - இங்கு அதிக நாட்கள் குளிரூட்டியில் தாங்குவது இல்லை.

தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் - திறக்காவிட்டால் குளிரூட்டி தேவையில்லை. திறந்த பின் மீந்து போனதை அதே நீரில் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் குளிரூட்டலாம். இதுவும்... மறுநாள் தீர்த்துவிடுவது நல்லது.

வெள்ளரி இனம் - குளிரூட்டினால் உடைந்து, அதன் காரணமாகக் கெட்டுப் போகும் சாத்தியம் அதிகம். பார்க்கும் போது தெரிவதில்லை. தொட்டால் விரல் உள்ளே நுழைந்துவிடும். :-)

இவற்றை விட, குளிரூட்டியில வைப்பதனால் கெட்டுப் போகக் கூடியவை.... மிளகாய் வகைகள், கரட், பழங்கள், ஜாம், சீரியல், சாலட் (இலைத் துணிக்கைகள் உடைந்து கேட்டுப் போகும்.) பீநட் பட்டர் (இறுகிப் போய் பூசுவது சிரமமாகிப் போகும்.) மென்மையான இலைகள் (உடைந்து போகும்.), ஆலிவ் எண்ணெய் (இதையும் யாராவது வைப்பார்களா!!) , காப்பி & காப்பிக்கொட்டை (சுவை குறையும்).

[இடுகையில் படங்களாகக் காண்பவை சென்ற வருடத்து விளைச்சலின் ஒரு பகுதி. இந்த வருடம் தக்காளி வளர்ப்பதாக இல்லை. இன்னும் ஃப்ரீசரில் நிறைய உறங்குகின்றன. கேல், லீக்ஸ் வெள்ளரியிலிருந்தும் நல்ல விளைச்சல் கிடைத்தது. கடையில் வாங்கிச் சமைப்பதை விட வீட்டில் வளர்த்துச் சமைக்கும் போது தான் அந்தக் காய்கறிக்கான உண்மையான சுவையை உணர முடிகிறது.]

நிச்சயம் உங்கள் பதில்களில் வேறு சில உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். காத்திருக்கிறேன். :-) அப்படியே எங்காவது எழுத்துப்பிழை கண்ணில் பட்டால் சொல்லி உதவுங்கள். இந்த இயந்திரம் தன் இஷ்டத்திற்குப் பிரித்து / இரடித்துத் தட்டி வைக்கிறது. திரும்பப் படித்தாலும் ஒன்றிரண்டு என் கவனத்திலிருந்து விட்டுபட்டு விடுகிறது. :-)

5
Average: 4.7 (7 votes)

Comments

அன்புள்ள‌ இமா
வெங்காயம், பூண்டு, வாழைப்பழம், உருளைகிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை.
தோசை மாவும் இரண்டு நாள்கள் வரை மட்டுமே வைப்பேன்.

சமைத்த‌ உணவை வைப்பதில்லை. காய்கனிகளை அவ்வப்போது வாங்க‌ முயற்சிப்பேன்.

ஃபிரிட்ஜில் வைக்கும் எந்த‌ காயும் நாட்பட்டால் சுவை குறையும். வேக‌ அதிக‌ நேரம் எடுக்கும். சத்துக்கள் குறைந்துவிடும் என‌ படித்திருக்கிறேன்.

முடிந்தவரை எங்கள் வீட்டு குளிரூட்டியில் நிறைய‌ இடம் காலியாகவே இருக்கும். என்னமோ அதிலொரு திருப்தி.

நல்ல‌ தகவ‌ல் இமா:)

நிகி அக்கா சொன்ன மாதிரி நானும் அவ்வளவாக பிரிட்ஜில் ஏதும் வைக்க மாட்டேன்..

வாரம் ஒருமுறை காய் வாங்கி வந்து வைப்பேன்.. முடிந்த அளவு ஒரு வாரத்திலேயே காலி செய்ய பார்ப்பேன்.. அதற்கும் மேல் வைத்திருக்க மாட்டேன்.. ஆனால் மாவு ரெடி பண்ணி 5 நாள் வைப்பேன்.. எப்பவாவது ஒரு வாரம் வரை இருக்கும்.. :)

பிரிட்ஜில் ஸ்மெல் (காய்கறி, பூ, பழங்கள்) வராமல் இருக்க சாறு பிழிந்த மீதி எலுமிச்சை தோல்களை போட்டு வைத்தால் வாசனை ஏதும் வராது.. புது பழம் பிழியவும் தோலை மாற்றி மாற்றி போடலாம்.. நான் பிரிட்ஜ் ஸ்மெல் வெல் யூஸ் பண்ணாமல் இயற்கையாக இதையே செய்து விடுவேன்..

இந்த விளைச்சலை பார்த்து ஏற்கனவே ரொம்ப பெருமூச்சு விட்டுட்டேன்.. :)
அந்த தக்காளிதான் என்னை ரொம்ப காலமா இழுக்குது... :)

பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிம்மா..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//வாழைப்பழம், உருளைகிழங்கு// நானும் வைப்பதில்லை. ஆனால் வைக்கிற ஆட்களைத் தெரியும். அதை நினைத்துத்தான் எழுதி வைத்தேன். :-)

//தோசை மாவு// வீட்டில் மனித எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதையெல்லாம் ட்ரீட் என்று ஒதுக்கியாயிற்று.

//ஃபிரிட்ஜில் வைக்கும் எந்த‌ காயும் நாட்பட்டால் சுவை குறையும்.// & //சத்துக்கள் குறைந்துவிடும்// உண்மை. //வேக‌ அதிக‌ நேரம் எடுக்கும்.// ஓ! நொந்து போய் இருப்பதால் விரைவில் வெந்து விடும் என்று நினைத்திருந்தேன். இனி கவனித்துப் பார்க்க வேண்டும். இங்கு கடையிலேயே எத்தனையோ நாள் குளிரில் கிடந்த பிறகு தான் வாங்குகிறோம். சென்ற தடவை சென்ற போது ஃபில்லர் ஒருவர் ஒரு தட்டில் ப்ரோகோலி நிரப்பிக்கொண்டு இருந்தார். ஐஸ் தூள் ஓட்டிக் கிடந்தது. இதனால்தான் என் முயல்கள் சாப்பிடப் பஞ்சிப்படுகிறார்கள் போல.

///எங்கள் வீட்டு குளிரூட்டியில் நிறைய‌ இடம் காலியாகவே இருக்கும்.// நீங்கள் அதிர்ஷ்டசாலி நிகி. இங்கு வேலையால் ட்ராஃபிக்கில் மாட்டி வீடு வந்து சேரவே சரியாக இருக்கிறது. வாரம் இரண்டு முறை என்பதற்கு மேல் கடைக்குப் போக முடிவதில்லை. ;( வீட்டில் தொடர்ந்து கிடைக்கும் கீரைகள்... கேல், சில்வர்பீட், நேட்டிவ் ஸ்பினாச், வல்லாரை, பஷன். மீதி எல்லாம் சீசனல்தான்.

‍- இமா க்றிஸ்

//பூ, பழங்கள்// பூவா? தலைக்கு வைக்கிறதா? கர்... பொறாமையா இருக்கு.
இங்கு எல்லோருமே பழங்களை வெளியே தான் வைப்பார்கள். சும்மாவே குளிர். பழத்தைச் சுட வைத்துச் சாப்பிட முடியாதே! :-)

//சாறு பிழிந்த மீதி எலுமிச்சை தோல்களை போட்டு வைத்தால் வாசனை ஏதும் வராது.// நல்ல ஐடியா. அடுத்த போஸ்ட் போடும் சமயம் இங்கு கிடைக்கும் குட்டி குட்டி டிப்ஸ் எல்லாம் மேலே சேர்த்து விடுகிறேன்.

//பிரிட்ஜ் ஸ்மெல் வெல்// அப்படியென்றால் என்னவென்று கூகிளாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இங்கு இப்படியான தயாரிப்புகளை விற்பதாகத் தெரியவில்லை. ஆனால் தேவைப்படுவதாகவும் காணோம்.

//அந்த தக்காளிதான் என்னை ரொம்ப காலமா இழுக்குது.// நட்டுப் பாருங்க. ஒரு தடவை இங்க உள்ள ரீசைக்கிள் பின்ல கத்தரி போட்டோம். ஒவ்வொரு காய் மூன்று நாளைக்கு வரும். அது போல பஜ்ஜி மிளகாயும் நிறைய காய்ச்சுது. நன்றாக வரும் இன்னொரு விஷயம் சௌசௌ. ஒவ்வொரு வாரமும் பத்துப் பதினைந்து நட்பு வட்டத்திற்குப் போகும். இங்க டாரோ நன்றாக வரும். பசளை... சமையலறை, ட்ரிக்ஸி & தோட்டக் கழிவுகள்தான்.

‍- இமா க்றிஸ்

”வெண்காயம்” இதை மட்டுமே கண்டேன்.
அன்புடன்
சுபா

be happy

ஹாய்,
நல்ல‌ பயனுள்ள‌ பதிவு. பால், தயிர், தோசை மாவு மட்டுமே ப்ரிஜ்ஜில் இருக்கும். ஆனால் ஒரு மினி புட் சோனே, ஷாப்பிங் மாலே ப்ரிஜ்ஜில் வைத்திருப்பவரை பார்த்தாலே எனக்கு கோபமாக‌ வரும். காது, மூக்கு, தொண்டை பிரச்சனைக்கு ப்ரிஜ்ஜிலுள்ள‌ உணவுப் பொருள்களின் பயன்பாடே என்பது ஆய்வுக் குறிப்பு. நல்ல‌ பதிவு இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

:-) அதை ஒருவரும் சொல்லேல்லயே என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

இப்பதான் தெரியுது எத்தனை ஆதி அறுசுவை உறுப்பினர்கள் அமைதியா வாசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள் என்கிறது. :-)

‍- இமா க்றிஸ்

//பயனுள்ள‌ பதிவு.// இடுகை பதிவிட்டு நாளாகிவிட்டது. படித்ததை வைத்து ஒரு இடுகை. ::-)

//பால், தயிர், தோசை மாவு// திடீரென்று தோன்றுகிறது... ஃப்ரிஜ் வர முன்னால் இவையும் வெளியே தானே இருந்தன? எங்கள் பக்கம் பால் புழக்கமிருக்கவில்லை. தயிர்... வார இறுதியில் ஒரு அப்பா மூதூரிலிருந்து தூக்கில் கொண்டுவருவார். எவ்வளவு வாங்கினால்லும் வாங்கி அரை மணிக்குள் முடிந்துவிடும்.

//ஒரு மினி புட் சோனே, ஷாப்பிங் மாலே ப்ரிஜ்ஜில் வைத்திருப்பவரை// :-)) சுவாரசியமாக இருக்கிறது நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்க. ரசித்தேன். :-) எங்கள் பாடசாலை ஃப்ரிஜ்ஜைப் பார்க்கும் போது இப்படித் தோன்றும். :-)

‍- இமா க்றிஸ்

Hi akka arumaiyana thagaval ku nanri migavum payan ullathaaka irukkirathu. Enaku sila vegetables vaikalama vaika kudathanu doubt irunthuchi athu ipa clear achi ka thx..

மனம் போல் வாழ்க்கை☺

பாதி வெங்காயம் வெட்டி பிரிஜ் இல் வைத்தும் ஏன் வாடினமாதிரி இருக்கிறது என்பது எனக்கு பல நாட்களாக சந்தேகம் இருந்தது. உங்கள் பதிவை பார்த்ததும் நன்றாக புரிந்தது . நல்ல பயன் உள்ள தகவல் நன்றி மம் :)