கானல் நீராய் போன வாழ்க்கை…! - சரண்யா விஜயகுமார்

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த காலங்கள் கடந்தன..
இன்று அலாரத்தின் எரிச்சல் சத்தம் கேட்டு
எழுந்த நாட்கள் கசந்து போயின..
அரைத்தூக்கத்தில் ஆறரை மணி ஓட்டம், பேருந்துக்கு...
அரை மணி நேர ஜன்னல் பயணம்….
அலுத்து போகாத ஐந்து பாடல்கள் ப்ளே லிஸ்ட்டில்..
அரை வயிற்றில் அரைகுறையாய் ஏழரை மணி டிபன்…
சூழ்நிலையின் சுயநலத்துக்காக
ஓடி ஓடி செய்யும் கார்பரேட் வேலை…
பார்வையிலேயே பாதி எரித்து விடும் மேலதிகாரி…
நுனிநாக்கில் நூடுல்ஸ் பிழியும் ஆங்கிலம்…
சிரிப்பே வரவில்லை என்றாலும் சிரிக்க வேண்டும்
உடன் பணிபுரிவோரின் மொக்கை காமெடிகளுக்கு…
ரெண்டு பஞ்ச் ஒரு லஞ்ச்..
அப்ரைசலின் ஆதிக்கம்…
ஒண்ணாந்தேதி சம்பளம்…
வரவுக்கு முன் வரிசையில் நிற்கும் செலவு..
மாத இ.எம்.ஐ
மளிகை பாக்கி..
மாமா வீட்டு விசேஷம்..
மனசு சரியில்லன்னு ஊர் சுத்திக்காட்ட சொல்லும் அம்மாவின் ஆசை...

அப்பப்போ எட்டி பார்க்கும் ஆசைகள்..
அலுத்துக் கொள்ளாமல் அழகாய் விட்டுக் கொடுக்கும் நான்,
எப்போ கல்யாணம்??? என்ற உறவினர்களின் கேள்விகளுக்கு
வெட்கம் என்ற பெயரில் பொய்யான சிரிப்பு மட்டுமே பதிலாய்…
அதி வேகமாக சுழலும் கடிகாரம்..
அகெய்ன் அண்ட் அகெய்ன் அதே பம்பர வேலை…
அரசல் புரசலாக ஆறு ஏழு நண்பர்கள்…
ஆப்பிள் ஜூஸ்க்கு சண்டை போடும் தங்கை..

இது எல்லாத்துக்கும் நடுவுல இஞ்சிமரப்பா போல ஒரு காதல்..
இவன் இனிப்பா, கசப்பா, காரமா, உப்பா?
என்னானே புரியாத புதிராய் ஒரு காதலன்..
அத்தி பூ பூத்தாற்போல் அவன் சிரிப்பு..
இன்னிக்காச்சு எனக்காக ஃபோன் பண்ண மாட்டானானு ஒரு எதிர்பார்ப்பு..
தவணை முறையில் அவனின் உரையாடல்,
அதிலும் அழகாய் சதி செய்யும் ஏர்டெல் நெட்வொர்க்
இவன் நல்லவனா? கெட்டவனா?
ராமனா? கிருஷ்ணனா?
எப்பவும் ஒரு வைபரேசன்
ஆசைகளை ஆசை பட கூட அனுமதிக்காத அவனுடைய கமிட்மெண்ட்ஸ்
செல்ல சண்டை என்ற பெயரில் செழிப்பாய் தினம் தினம் சண்டை..
அவன் மேல் உண்டான என் காதல் ஐஸ்கிரீம் மாதிரி
டேஸ்ட் பண்ணாலும் கரையுது. வேஸ்ட் பண்ணாலும் கரையுது..

காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா?
இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்ட சொல்லும்
தந்தையின் சொல் கேட்பதா?
வாழ்த்துகள் வாட்ஸ் அப்ல் மட்டும்..
ஃபீலிங் ஹேப்பி என்ற ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக்கில் மட்டும்

ராகு கேது ரவுண்டு கட்டும்...
குருப்பெயர்ச்சி கும்மி அடிக்கும்..
ஏழரை ஹெலிகாப்டர்ல வரும்...
என்னவோ நமக்கு மட்டும்.

இடி விழுந்தாலும் ஈஸியா எடுத்துக்கிற இந்த இயந்திர வாழ்க்கை
எதை கற்றுக் கொடுத்ததோ இல்லையோ...
ஆசைகளை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்க தேவையில்லை,.
நடுத்தர குடும்பத்தில் முதல் பெண்ணாக பிறந்தாலே போதுமானது
என்பதை நாசுக்காக கற்றுக் கொடுத்து விட்டது..

- சரண்யா விஜயகுமார்

Comments

வாவ்! யதார்த்தத்தைக் கொட்டி கலக்கிட்டீங்க‌. :‍) பாராட்டுக்கள்.

//மல்லிகை பாக்கி..// பூவா! அது மட்டும் சந்தேகமாக‌ இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

சூப்பர், எதார்த்தமனா வார்த்தைகள்.
உணர்வுகள் நிரம்பிக்கிடக்கு,,, உங்கள் கவிதையில்....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

////மல்லிகை பாக்கி..// பூவா! அது மட்டும் சந்தேகமாக‌ இருக்கிறது.//

ஆஹா, கவனிக்கவில்லை. :-) சரி செய்துவிட்டேன். இதற்குதான் இமா வேண்டுமென்பது. :-)

மாற்றியதற்கு நன்றி அட்மின். :‍)

‍- இமா க்றிஸ்

வாசிக்கும் போதே சுவாசிக்கவும் செய்து விட்டீர்கள். கவிதையில் ஒரு கதையை உயிரோட்டமாய் தந்திருக்கிரீர்கள் வாழ்த்ததுக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நன்றி

Tamiluku amudhu endru paer..Andha Tamil Inba Tamil engal Uyiruku naer..

நன்றி

Tamiluku amudhu endru paer..Andha Tamil Inba Tamil engal Uyiruku naer..