எனக்கு ஒரு ரோபோ வேணும்....

எனக்கு ஒரு ரோபோ

அறுசுவையில் தான் நிறைய கற்று கொண்டது. உடனே பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் புது தளத்தில் எழுத ஆசை. இந்த பதிவு சமீபத்தில் முகநூலில் நான் போட்ட பதிவு தான். மீண்டும் எழுத வேண்டும் என்று நினைத்த பொழுது இதை எழுதினேன்.

கதிரவனோடு போட்டியிட்டு
கடிகாரம் முந்திக் கொள்ள
ஒரு 5 நிமிடம் இன்னும்
ஒரு 5 நிமிடம் என்று
மனம் கெஞ்சி
போர்வைக்குள்
சுருண்டு கொள்ளும்
சோம்பல்...
நேரம் ஆகிவிடும் என்று
மூளை ஆணையிடும்
வரைதான்...
இனி பிள்ளைகள் பள்ளி
செல்லும் வரை ஒவ்வொரு
நிமிடமும் முக்கியம்தான்.!!

குழம்பிலும் காய்
இருக்க வேண்டும்
கொண்டு வரும்
பொரியலும் காயாய்
இருக்க வேண்டும்
என்ற பள்ளியின் கட்டளை
சந்தோஷமாய் இருந்தாலும்
இப்படி தான் இருக்க
வேண்டும் என்பதை விட
இப்படி செய்தால்தான்
குட்டி தொந்தி சந்தோஷப்படும்
என்பதும் முக்கியம்!!

கண்ணைக் கசக்கிக் கொண்டு
பொடியாய் மெல்லியதாய்
நறுக்கவும் துருவவும்
மதிய உணவும் , காலை
உணவும் ஒன்றாய்
வெந்து வதங்கும் நேரம் சமையலறைக்கும் படுக்கையறைக்கும்
இடையே சில ஓட்டங்கள்...

ஒளிந்து கொண்ட
நோட்டுப் புத்தகமும் ,
மறந்துபோன துண்டும்
ஒன்றாய் அழைக்கும்போதே
குக்கரின் விசிலும்
திருப்பி போட்ட
தோசையும் அழைக்கும்...

காலை உணவில் இருந்து
காலணி அணியும் வரை
வரும் குட்டி குட்டி
சண்டைகளுக்கு
பஞ்சாயத்து தலைவர்
ஹிட்லராய் மாறும்
தருணங்களில்
பதற்றங்களுக்கு
பஞ்சமில்லை........

வீட்டில் ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும்
புத்தகங்கள், செய்தித்தாள்கள்,
விளையாட்டு சாமான்கள்,
காற்றோடு பறந்து வந்து
படிந்து போன தூசிகள் ,
வாடகையே கொடுக்காமல்
தன் வீட்டை கட்டி
என் வீட்டை குப்பையாக்கும்
சிலந்தி வலைகள்,
சிதறிக்கிடக்கும் அடுப்பு மேடை சேர்ந்து கிடக்கும் பாத்திரங்கள்
குவிந்து கிடக்கும் துணிகளை பார்க்கையில் மனம்
மலைத்து போக
மறுப்பதில்லை!!!

திடீரென்று கொதித்துக் கொண்டிருக்கும்
தேனீருக்கு தெரியாது
அவசரமாய் விட்டு வந்த
காகிதங்கள்
காற்றோடு சண்டையிடுவது...

அழைப்பு மணியிலும்
தொலைபேசி ஒலியிலும்
கதை பேசும் வேளையில்
உயிர் பெற காத்திருக்கும்
காகித ரோஜாக்களை
பார்க்கும்போது கொஞ்சம்
பாவமாய் தான் இருக்கிறது....

மதிய உணவின்
மயக்கம் தீரும் முன்னே இரவு உணவிற்கு ஆலோசனை நடத்தும் மனதை என்னதான் செய்ய...

வீட்டுக்குள் நுழையும்போதே முட்டிக்கொள்ளும் முரண்பாடுகள்
மண்டியிட்டு மல்யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் மந்திர பூனைகள் என் வீட்டு குட்டித் தலைவர்கள்.....

பொங்கி விடுமோ என்று கண் இமைக்க மறந்த கணத்தில்
எட்டி எடுப்பதாய் முட்டிக்கொண்டு நிற்கும் வண்டுகளின் அலறல் சத்தத்தில் திரும்பிய கணமதில் பொங்கியே விட்டது....
பாலும் கோபமும்......
சிந்திய பாலையும்
கடித்து சிதறிய
கடலை மிட்டாயையும்
அவசரமாய் துடைக்க வேண்டும்
அலையா விருந்தாளிகள் வரிசையில் வருவதற்குள்....

தீர்ந்துபோன தேநீர்
குவளையோடு
மதிய உணவை
சுமப்பவன் வந்ததும்
சுவாசிக்கவும் மறுக்கிறது
மனம்...

தெரியாத வார்த்தைக்கு
அர்த்தம் தேடுவதற்குள்
தொலைந்து போகிறது
எழுதுகோல்....
தடுமாறிப் போன
எழுத்துக்களை
தூக்கி நிறுத்தி...
படிப்பதாய் படம் பார்த்து
வாசிக்க மறுக்கும் நேரம் பொறுமைக்கும் பொறுமை தேவைப்படுகிறது!!

இரவு உணவை இம்சை
அரசர்கள் முடித்தாலும்
தூக்கம் தானாய் தூது
செல்வதே இல்லை!!

இடறிய பொருளையெல்லாம்
இடம் பார்த்து வைக்கும் தருணம்
ஏக்கமாய் பார்த்த காகித ரோஜா
கண் முன் தோன்றிட
குட்டிக்குட்டி காளானாய்
முளைத்து கொண்டிருக்கும்
வேலைக்கும்
காலை எழுந்ததும்
சமைக்கப்படும் உணவு பட்டியலுக்குமே
முன்னுரிமை கிடைக்கிறது!!!

திடீர் விருந்துக்கு
அவசர உதவிகள்
பிரியமானவர்கள்
செய்தாலும்

மலைத்து நிற்கும் பொழுதில்
பொறுமையை மறக்கும் வேளையில்
பதற்றத்தால் பக்குவம் இழக்கையில்
ஓய்வின்றி ஓய்ந்து போகையில்
சோர்வாய், சோம்பலாய் இருக்கின்ற தருனத்தில் மனம் சப்தமின்றி சொல்கிறது....
நான் சொல்ல கேட்டு
என் வேலையெல்லாம் செய்து
முடிக்க எனக்கு ஒரு ரோபோ கிடைத்தால் நல்லா இருக்குமே!!!!

"I wish, I had a robot
that could do all my work"

என்ற வரி மட்டும் நிஜமானால்
என் வேலையெல்லாம் வேகமாய் முடியுமல்லவா!!

Average: 5 (2 votes)

Comments

மிக அருமை.நமக்கு ரோபோவும் கிடைக்கபோறதில்லை,
வேலையும் ஒழிய போறதில்லை போங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமை ரேணு. இந்த ரோபோ இருந்தால் நல்லா இருக்கும்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பார்த்துங்க... நம்ம விதி அதுக்கும் சேர்த்து நம்ம வேலை செய்ய வேண்டியதா ஆயிடாம ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே எல்லார் மனசுல இருக்கறது. காலை நேர பரபரப்பு அப்ப்பபா. நிஜமாவே என் கண்ணுக்கு நானே ஹிட்லர் போலதான் தெரிவேன். உங்க பதிவு நிறைய எதிர் பார்க்கிறோம்.

//இடறிய பொருளையெல்லாம்
இடம் பார்த்து வைக்கும் தருணம்
ஏக்கமாய் பார்த்த காகித ரோஜா
கண் முன் தோன்றிட
குட்டிக்குட்டி காளானாய்
முளைத்து கொண்டிருக்கும்
வேலைக்கும்
காலை எழுந்ததும்
சமைக்கப்படும் உணவு பட்டியலுக்குமே
முன்னுரிமை கிடைக்கிறது!!!// அதில் எங்களுக்கும் ஒரு இடம் கொடுத்து அடிக்கடி இங்கு வந்து செல்லுங்கள்

Be simple be sample

சரியா தான் சொன்னீங்க, இருந்தாலும் சில நேரம் மனசு ஏங்குதுல :)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசையா இருக்கு கவி, ஒரு அசிட்டென்ட் நமக்கும் வேனும்ல

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி ரோபோகிட்ட வேலை வாங்க ,அத சார்ஜ் போட்டு துடைச்சு வைக்கனும் அதெல்லாம் நாம தான செய்யனும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நிறைய வீடுகள் காலை நேரம் அப்படி தான் ஓடுது. பழையபடி வரனும் அதுக்கு தான் நானும் முயற்சி செய்யறேன். முக்கியமா உங்க அழைப்புக்கே வரனும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நம்ம குட்டீஸ் நமக்காக ஒரு ரோபோட் செய்து கொடுப்பாங்க கவலையே படாதீங்க.

வனி சொன்னதைத் தான் நானும் சொல்ல வந்தேன். அதுக்கு லிஸ்ட் போட்டு, விபரம் கொடுக்கிற நேரத்துல நாமே வேலையை முடிச்சுரலாம். :-)

‍- இமா க்றிஸ்