நவராத்திரி - கொலு வைக்கும் முறை

நவராத்திரி கொலு

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம். ஆன்மீகம் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

பண்டிகைகள் என்பவை நமக்கு உற்சாகத்தைக் கொடுத்து, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவை. நம்மிடமுள்ள கலைத்திறமையை வெளிப்படுத்த, உறவினர்கள் நண்பர்களுடன் பேசி மகிழ, ஒரு நல்ல வாய்ப்பு. அந்த வகையில் நவராத்திரி ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

நவராத்திரி ஆரம்பிக்கப் போகிறதல்லவா? நவராத்திரி கொலு வைப்பதைப் பற்றியும், செய்ய வேண்டிய நைவேத்தியங்கள், கொண்டாட்டங்கள் பற்றி, பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும். வீட்டில் வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் வைப்பார்கள்.

எப்பொழுதும் போல, பிள்ளையார், குல தெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை மனதினுள் வணங்கி விட்டு, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச்(செப்பு) செம்பை எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

அதனுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் இவற்றையும் போடலாம்.

கலசத்தின் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை சுற்றி வர வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். இந்தக் கலசத்தை, கொலு அம்மனாக பாவித்து, பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும். கலசத்தின் மேல் தினமும் பூக்கள் வைக்க வேண்டும். 

பூஜையாக செய்ய வேண்டும் என்றில்லாமல், குழந்தைகளின் ஆசைக்காக கொலு வைப்பவர்கள், கலசம் வைக்க வேண்டும் என்பதில்லை. புரட்டாசி மாத அமாவாசையன்று, கொலு வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம். (கொலு மறு நாள்தான் ஆரம்பிக்கும்)

மரப்பாச்சி பொம்மைகள் இருந்தால், அவற்றை ஜோடியாக அமாவாசையன்று கொலுப்படியில் வைத்து விடலாம்.

கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம். ஹாலில் கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன. நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்,

படிகளை அமைத்த பின், சுத்தமான வெள்ளைத் துணியை, படிகளின் மேல் விரிக்க வேண்டும்.

மேல் படிகளில், முதலில் நடுவில் பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

அடுத்த படியாக மீனாட்சி கல்யாணம், தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம்.

அதற்கு அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆனவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.(விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, பரம ஹம்ஸர்) பிறகு, மற்ற பொம்மைகள் - கிரிக்கெட் வீரர்கள், குறவன் குறத்தி, செட்டியார் பொம்மைகள் இப்படி வைக்கலாம். 

பிறகு மிருக பொம்மைகள் - சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் போன்றவை. அடுத்த படியில் பறவை பொம்மைகள். கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம்.

கலசம் வைப்பதாக இருந்தால், கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ(கைக்கு எட்டும் தூரத்தில்) கலசத்தை வைக்கலாம். தினமும் பூ வைக்க வேண்டும். பூப் போட்டு, பூஜை செய்ய வேண்டும் அல்லவா.

கலசம் வைக்கவில்லை என்றாலும், கொலு என்பது அம்மன் வடிவம்தான். அதனால் தினமும் மாலையில் விளக்கேற்றி, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் தினமும் செய்ய வேண்டும்.

தினமும் கொலுவின் முன்னால், தெரிந்த கோலங்களைப் போடவும். முடிந்தால் ரங்கோலி போடலாம். 

கொலுவின் இரண்டு பக்கமும் கீழே விளக்கேற்றி வைக்கலாம். பாதுகாப்பு குறைவு, குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பூஜையறையில் மட்டும் ஏற்றினாலும் போதும். நைவேத்தியத்தையும் பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து, கொலுவுக்கு முன்னால், கொண்டு வந்து வைக்கலாம்.

அமாவாசைக்கு அடுத்த நாள் கொலு ஆரம்பம். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு. அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. யு ட்யூபில் துர்க்கா பாடல்கள், மஹாலஷ்மி ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்கள் கிடைக்கும்.

இவற்றை மாலை நேரங்களில் ஒலிக்க விடுங்கள். லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி இவற்றைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து, கேட்கலாம். ஸ்ரீஸுக்தம், ஸ்ரீ தேவி பாகவதம் இவையும் ஒலி வடிவில் யு டியூபில் கிடைக்கின்றன. இவற்றையும் மாலை வேளைகளில் ஒலிக்கச் செய்யுங்கள்.

வீட்டுப் பெண்கள் தினமும் சுத்தமான, உடைகளை உடுத்தி, மலர் சூடி, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். 

நவராத்திரியின் ஒன்பது தினங்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

- சீதாலஷ்மி

 

Comments

மிகவும் அருமை. புதிதாக கொலு வைக்க நினைக்கும் அறுசுவை தோழிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி அம்மா.

கவனத்தில் கொள்ள இத்தனை விடயங்கள் இருக்கிறதா! கட்டுரை சுவாரசியமாக இருக்கிறது சீதா. அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்