இவர் என் அம்மா

Seba amma

இவர் என் அம்மா.
இவர் என் அப்பா.
இவர் என் அண்ணா.
இவர் என் அக்கா...

என் சின்னக் காலத்தில், இலங்கையில் முதலாம் வகுப்புத் தமிழ் மலரில் முதற்பாடம் இப்படித் தான் இருக்கும். :-) சிங்களப் புத்தகத்திலும் இதே விதமாகத் தான் முதலாம் வகுப்புப் பாடம் ஆரம்பித்திருக்கும். அந்த ஓவியங்களை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை. மனிதர்களை இன்னும் சற்று அமைப்பாக வரைந்திருக்கலாம் என்று தோன்றும்.

இவர்... என் அம்மா.

பழைய அறுசுவை உறுப்பினர்களுக்கு... இல்லையில்லை, இடைக்காலத்தில் உறுப்பினரானோருக்கு இவரைத் தெரியும். அழகுணர்ச்சியும் நகைச்சுவையுணர்ச்சியும் மிக்கவர். இளமையான மனது, குறும்பாக சின்னச் சின்ன இடுகைகள் என்று பதிவிட்டு இங்கு சில நட்புகளைச் சம்பாதித்திருந்தார்.

அவருக்குப் பின் அவரது உடமைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்டது ஒரு பழைய கடித உறை. அறுசுவை நட்புகள் பெயர் சில அதில் குறித்து வைத்திருந்தார். அறுசுவையில் சில கைவினைக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார் செபா.

அவற்றுக்கான சுட்டிகளை இங்கு இணைக்கிறேன்.

மேலும் சில குறிப்புகள் அனுப்புவதற்குப் பாதி தயாராக அவரது மின்னஞ்சலில் சேமிப்பிலுள்ளதை அவதானித்தேன். நேரம் கிடைக்கும் போது எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.

அறுசுவையில் இடம்பெற்ற கவிதைப் போட்டி ஒன்றுக்கான நடுவர்குழுவில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார்.

சரி, இன்று ஏன் இந்த இடுகை!

செபா காலமான முதல் ஆண்டு நிறைவு இன்று.

அவரைப் பற்றி...

இயற்பெயர் : திருமதி. அந்தோனியா ஜெயநாதன்

செல்லமாக - பொன்மணி

அறுசுவையில் - செபா (2009 முதல்)

பிறப்பு : 11 ஜூன் 1931 (சின்ன உப்போடை, மட்டுநகர், இலங்கையில்)

வாழ்ந்தது : 1960 முதல் 2003 வரை திருகோணமலையில் பின்பு நியூஸிலாந்தில்

மீளாத் துயில் ஆழ்ந்தது : 18 அக்டோபர் 2017 அன்று தனது எண்பத்தோராவது வயதில் நியூஸிலாந்தில்

தொழில் : தமிழ் ஆசிரியை

கற்பித்தது : மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை, தி/புனித மரியாள் கல்லூரி, தி/புனித சூசையப்பர் கல்லூரி

கணவர்: செ. ஜெயநாதன் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - திருகோணமலை. இலங்கை)

பெற்றோர் : காலம் சென்ற - செபமாலை (செல்லம்மா) & செபஸ்தியான்பிள்ளை (மட்டுநகர்)

உடன் பிறப்பு : காலம் சென்ற - இன்னாசிமுத்து செபஸ்தியான்பிள்ளை (மட்டுநகர்)

பிள்ளைகள் : நான் - ஜெயா க்றிஸ்தோபர் & என் தம்பி - மருத்துவ கலாநிதி. ஹிலறி ஜெயறஞ்சன். இதற்கு மேல்... மருமக்கள், பேரப் பிள்ளைகள், அவர்களின் மனைவிமார் அனைவரும் நியூஸிலாந்தில் வசிக்கிறோம்.

 

ஒரு நட்பின் ஃபேஸ்புக் சுவரில் இடுகையொன்று பார்த்தேன். அவரது மகன் - என் மாணவர் அவர் - காலமான முதலாம் ஆண்டு நிறைவினைக் குறித்த ஞாபகார்த்த இடுகை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் தெரிந்திருந்த வார்த்தைகள் சற்று வித்தியாசமானவை; பிடித்திருந்தது. புதுப் பிறப்பின் முதலாண்டு நிறைவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மம்மியின் புதுப் பிறப்பின் முதல் ஆண்டு நிறைவு இன்று. தொல்லைகளிலிருந்து விடுபட்டு தேவைகள், சேவைகள் என்று எதுவுமில்லாத புதிய வாழ்க்கைக்குள் சென்ற முதலாம் ஆண்டு நிறைவு. நம்பவே இயலவில்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது!

எனக்கு நினைவு தெரிந்து 'மம்மி' என்றுதான் அழைத்து வந்தேன் அவரை. என் மூத்தவர் பேச ஆரம்பித்த வயதில் 'அம்மம்மா' என்று அழைக்க ஆரம்பித்து சட்டென்று அம்மாவாகச் சுருக்கி விட்டார். அதன் பின் வீட்டில் மம்மி நான், அம்மா - என் அம்மா தான் என்று ஆகிவிட்டது. அறுசுவைக்கு வர ஆரம்பித்த பின், 'செபா' என்று கூப்பிடுவேன். மறுப்பு வந்ததில்லை; பிடித்து ஏற்றுக் கொண்டார்.

'செபா' என்பது தன் தாய் செபமாலை, தந்தை செபஸ்தியான்பிள்ளை இருவரது பெயர்ச் சுருக்கமாக, அவர்கள் நினைவாக இருக்கும் என்று தெரிந்துகொண்டதாகச் சொல்லுவார்.

'மம்மி' என்று தாயை அழைக்கும் பழக்கத்தைப் பற்றி பலர் கிண்டலாக இணையத்தில் இடுகைகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். காணும் போது மெல்லிதாக ஒரு புன்னகை வரும். 'மம்மி' என்பதால் தமிழ் சாகப் போவதில்லை. 'அம்மா' என்கிற ஓர் வார்த்தை மட்டும் தமிழ் வளரப் போதாது. ஈடுபாடு வேண்டும்; பேச்சானாலும் எழுத்தானாலும், செய்வன திருந்தச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். என் முதலாவது தமிழ் ஆசிரியை மம்மிதான். என் முதல் ஆங்கில ஆசானும் அவர்தான். சிங்களமொழி அடிப்படை சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். அதனால் தானோ என்னவோ என் கையெழுத்து மூன்று மொழிகளிலும் அவருடையவற்றை அச்செடுத்தாற்போல் இருக்கும்.

எனக்குக் கைவேலையில் ஈடுபாடு வரக் காரணமாயிருந்தவர் முதலில் மம்மி, அதன் பிறகுதான் டடா. அறுசுவையில் என் குறிப்பு வெளியாகி இருந்தால் முதன்முதலில் எனக்கு மம்மிதான் தெரியப்படுத்துவார். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்.

அவரது வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாக அறிந்துகொள்ளத் தவறிவிட்டேனென்று தோன்றுகிறது. விசாரிப்பதற்கு... விடயம் தெரிந்தவர்கள் உயிரோடு இல்லை அல்லது நான் கேட்பது தொல்லையாக இருக்கும் என்கிற வயதில் இருக்கிறார்கள்.

என்னிடம் ஒரு நாட்காட்டி இருகிறது. ஜிஃப் எம்போரியம் - பெயரைக் கேட்டு மதிப்பிட முடியாத இடம். பல கடைகளிலுமிருந்து விற்பனை ஆகாமல் தங்கிவிட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்கு வந்திருக்கும். தரமானவையாக இருக்கும்; விலையும் மலிவாக இருக்கும். எங்கும் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும். அங்கேதான் இந்த நாட்காட்டியை வாங்கினேன். பிறகு மம்மிக்கும் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இப்போதுதான் எல்லாமே என் உடைமைகள் ஆகிவிட்டனவே! இரண்டு நாட்காட்டிகளையும் ஒன்றாகவே வைத்திருக்கிறேன்.

மம்மி மீளாத் துயிலிலாழ்ந்த சில நாட்கள் கழித்து, அவரது நட்புகள் சிலருக்கு இழப்பைத் தெரிவிக்க விரும்பி தொலைபேசி எண்களைத் தேடிக்கொண்டிருந்தேன். நட்புகள் - எண்கள் எங்களுக்குத் தெரியாது. மம்மிக்கு அபார ஞாபகச்சக்தி. பிறந்தநாட்கள், தொலைபேசி எண்கள் எல்லாம் மூளை மடிப்புகளில் பதிவாகியிருந்த காரணத்தால் எங்கும் குறித்து வைத்திருக்கவில்லை அவர். சிலருக்கு இன்றுவரை என்னால் செய்தியைத் தெரிவிக்க இயலவில்லை.

ம்... தொலைபேசி எண்களைத் தேடினேன் என்றேனல்லவா! அப்போது அந்த நாட்காட்டி என் கண்ணில் பட்டது. (மம்மி குளிரூட்டிய அறையில் மீளாத்துயிலிலிருந்தார் அப்போது.) சில தேதிகளைப் பென்சிலால் குறித்துவைத்திருந்தார். எழுத்துக்களில் நடுக்கம் தெரிந்தது. தன் ஞாபகசக்தி குறைகிறது என்று தோன்றியிருக்க வேண்டும். குறித்து வைக்க ஆரம்பித்திருப்பார்.

ஆனால் பென்சிலில் ஏன்! ஏன் பேனாவால் எழுதவில்ல!
நிச்சயமில்லாதது போல் தோன்றிற்றோ!

பின்னாலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி அந்தந்த மாதங்களுக்குரிய குறிப்புகளை ஒவ்வொரு தேதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். திடீரென்று... திகைத்தேன்! அதிர்ச்சியில் ஒரு நொடி சிந்தனை உறைந்துபோயிற்று.

அக்டோபர் 18 - Amma's Death என்றிருந்தது.

எப்படி!
நான் எழுதவில்லை. வீட்டில் எழுதுவதற்கு யாரும் இல்லை.
எப்படி! எப்படி அதற்குள்!

சிறிது நேரம் கழித்து ஊகிக்க முடிந்தது. அன்று அவரது அம்மாவின் நினைவுதினமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரே தேதியில் இவரும்!!!
தேர்வு செய்து போனாரா!

இன்னும் நினைவு இருக்கிறது அந்த நாள். சென்ற அக்டோபர் 18 - புதன்கிழமை.

அப்போது புதன் எனக்கு வேலையில்லாத நாள்; நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்துவந்தேன். புதனன்று பாடசாலையில் பாடகர் குழுவிற்கு (ஆசிரியர்கள் குழு இது) பயிற்சி இருக்கும். வித்தியாசமான ஒரு விடயத்தைக் கற்கிறேன் என்று ஆரம்பித்திருந்தேன். என் துரதிஷ்டம், வகுப்புகள் புதன் பாடசாலை முடிந்தபின் நடப்பதாக முடிவானது.

அன்று ஆறாவது வகுப்பு. பன்னிரண்டு மணிக்குக் கிளம்பி மம்மி வசித்து வந்த எலிசபெத் நொக்ஸ் ஹோம் & ஹொஸ்பிட்டல் சென்றேன். முதலில் தாதியிடம் சென்று பேசிவிட்டு அறைக்குப் போனேன்.

கட்டிலில் அமர்ந்திருந்தார் மம்மி. அது தலைப் பக்கமோ காற்பக்கமோ அல்லது முழுவதாக மேலும் கீழுமாகவோ உயர்த்தி இறக்கக் கூடிய மருத்துவமனைக்குரிய கட்டில். அவசரத்திற்கு அழைக்கவென்று மணியொன்றும் இருக்கும். தலைமாட்டை உயர்த்தி வைத்திருந்தார்கள். முழுகி, கூந்தல் உலர்த்தி உயர்த்திக் கொண்டை போட்டிருந்தார். எண்பத்தொன்றாகியும் நரைக்காத கருங்கூந்தல். மடியில் கடதாசிகள், பேனா, கண்ணாடிக் கூடு.

அன்றுதான் முதன்முதலாக படுக்கையில் காலைக்கடன் கழிக்க உதவி தேவையாக இருந்திருக்கிறது. முதல் நாள் விழுந்திருந்தார். கால்கள் உதவ மறுத்திருக்க வேண்டும். என்னிடம் தன் கண்ணைப் பரிசோதிப்பதற்கு ஏற்பாடு செய்யக் கோரினார்; இரண்டு சால்வைகளை அருகே எடுத்து வைக்கக் கேட்டார்; காலணிகளை மாற்றி புதியவற்றை வெளியே வைத்தேன். எதுவும் சுருக்கமாக பேச்சாக இருக்கவில்லை. நன்றாக வழமையை விடத் தெளிந்த குரலில் பிசிறின்றிப் பேசினார். "நித்திரை நித்திரையா வருது மகள்," என்றார். "நல்லதுதான், நல்லா நித்திரை கொள்ளுங்க. நாளைக்கு வாறன், கதைப்பம்," என்றேன். சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.

பாடசாலைக்குப் போனேன்; ஆட்கள் குறைவு என்பதால் பயிற்சி செட்டென்று முடிந்துவிட்டது. வீட்டிற்குப் போய் தோட்டத்தில் வேலையாக இருந்த க்றிஸ்ஸிடம், "மம்மி இண்டைக்கு நல்லா இருக்கிறா," என்று சொல்லி விட்டு உள்ளே நுழைய, தொலைபேசி அழைத்தது. "We think you should come now Imma. Anthonia may have passed. We are waiting for the doctor to confirm."

உறக்கத்திலேயே போய்விட வேண்டும் என்கிற அவர் விருப்பம் நிறைவேறிற்று. எனக்குப் பெரிய அதிர்ச்சிதான் ஆனால் அந்த ஆரம்ப நாட்களில் அவரது நட்புகளை ஆறுதற்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. என்னைப் பற்றி நினைக்கவோ என் சோகத்தைக் கொண்டாடவோ எனக்கு நேரமிருக்கவில்லை.

ஒரு தடவை மம்மி சொன்னார், "சாகிற மாடு இருக்கிற மாட்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறதில்லை மகள்," என்று. இன்று நினைத்துப் பார்க்கும் போது அதற்குப் பல அர்த்தங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தில் - வேண்டா
நமக்குமது வழியே நாம் போமளவும்
எமக்கென்னென்றிட்டுண்டிரும்.

இதையும் சொல்லிக் கொடுத்தவர்... 'மம்மி' தான். :-)

5
Average: 5 (2 votes)

Comments

செபா அம்மா குறித்து நானும் தனியாக ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. உங்களிடம் அனுமதி பெற்று பிறகு வெளியிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தேன். தவிர்க்க இயலாத மற்ற வேலைகளால் அது தள்ளிப் போயிற்று.

பிறந்த நாட்களும், மறைந்த நாட்களும் வரும்போதுதான் காலச் சக்கரத்தின் வேகம் தெரிகிறது. உண்மை அதுவாயினும் மனம் நம்ப மறுக்கிறது.

அறுசுவைக்கு பங்களித்தவர்களில், நான் அறிந்த வரையில் இவர்தான் மிகவும் மூத்தவர். எல்லோராலும் செபா அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்டவர். பதிவுகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடும். இமாவின் ஆசிரியர் யாராக இருந்திருக்க முடியும் என்பது அதிலேயே தெரியும்.

கடைசி வரை முகத்தில் அந்த சிரிப்பு மறையவே இல்லை என்று இமா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். என்னைவிட என் மனைவியிடம்தான் இணையம் வாயிலாக அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அறுசுவையின் முதல் இழப்பு.

அறுசுவையில் பங்களித்தபோதும் எங்கோ தொலைதூரத்தில் இருந்துதான் பங்களித்தார். அவரது பங்களிப்புகளால் நம்மில் ஒருவராய், அடுத்த வீட்டில் இருப்பவர் போன்ற ஒரு உணர்வு இருந்தது. இன்று இன்னும் சற்று தூரம் சென்றிருப்பதாய் எடுத்துக் கொள்கின்றேன். அவரது பங்களிப்புகள் என்றும் அவரை நம்முடன் இணைத்து வைத்திருக்கும்.

குறிப்புகள், பதிவுகளைத் தாண்டி தன் மறுஉருவை பொக்கிஷமாய் இந்த உலகிற்கும் அறுசுவைக்கும் கொடுத்துச் சென்றிருக்கின்றார். இவரில் அவரை என்றும் காணலாம் என்பதுதான் நமக்கிருக்கும் பெரிய ஆறுதல்.

வானம் நோக்கி, என் கரங்கள் கூப்பி அன்னாரைத் தொழுகின்றேன்.

உங்கள் அம்மாவை பற்றி இயல்பாக தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்..
என்ன சொல்வது என்று தெரியவில்லை...

அம்மா மகள் நட்பு நன்றாக உள்ளது..இந்த வரம் எல்லோருக்கும் அமையாது...

நான் அறுசுவைக்கு வரும்போது செபாம்மாவின் பங்களிப்பு குறைவு. ஆனால் பழைய இடுகைகள் படிக்கும்போது புன்னகைகள் முளைக்கும். புது பிறப்பின் முதலாண்டாம் நிறைவு

Be simple be sample

அன்பு இமா,

மீண்டும் மீண்டும் படித்தேன். படிக்கிறேன். படிப்பேன்.

/ஆனால் அந்த ஆரம்ப நாட்களில் அவரது நட்புகளை ஆறுதற்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. என்னைப் பற்றி நினைக்கவோ என் சோகத்தைக் கொண்டாடவோ எனக்கு நேரமிருக்கவில்லை./ சோகத்தைக் கொண்டாட மாட்டோம் என்றாலும், பிரிந்தவர்களின் நினைவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவில்லையே, நிறையப் பேசியிருக்கலாமே, அவர்களுடன் நேரத்தைக் கழித்திருக்கலாமே என்று தோன்றும்.

பெற்றவர்கள் மறைந்த பின், அவர்கள ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் அப்படியேதான் இருக்கும். என்ன செய்வது.

/ "நித்திரை நித்திரையா வருது மகள்," என்றார். "நல்லதுதான், நல்லா நித்திரை கொள்ளுங்க. நாளைக்கு வாறன், கதைப்பம்,"/ . அறிந்திருந்தாரோ, மீளா நித்திரை வருவதை.

அன்புடன்

சீதாலஷ்மி

அதற்குள் ஓராண்டாகி விட்டதா இமாம்மா.
செபாம்மாவிடம் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால் அவரின்பங்களிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எவ்வளவு பாசிட்டிவ் ஆனவர் என்று வியந்திருக்கிறேன்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. என்றுமே அவரின் ஆசி உங்களோடு இருக்கும் இமாம்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு இமாம்மா , பல தடவை இவ்வலைப்பகுதியைப் படித்து விட்டேன் , சொந்தங்கள் நமக்கு கிடைத்த வரம் அதிலும் , அம்மாவை பிரிந்த உள்ளம் ஒரு குழத்தைபோல் தான்

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

உங்கள் அம்மாவின் பதிவுகள் எதையும் நான் பார்த்தது இல்லை..
மனம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது..
ஏதேனும் லிங்க் அனுப்பி வையுங்கள்.. அன்புடன் கேட்கிறேன்..

முதலில் பதில் சொல்ல இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டதையிட்டு மன்னிப்பைக் கோருகிறேன்.

இந்தப் பக்கத்தைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் வந்திருக்கும் பதிவுகளைப் படிக்கவோ பதில் சொல்லவோ முடியாமல், ஏன் இந்த இடுகையைப் பதிவிட்டேன் என்று நினைக்கும் அளவு மனதுக்குப் பாரமாக இருந்தது. இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டேன். :-)

நீங்கள் செபாவை அறுசுவையின் வேறு சில விடயங்களுக்குள்ளும் இழுக்க முயன்றீர்கள். செபா வலைப்பக்கம் வரச் சொல்லி நீங்கள் வைத்த அழைப்பை ஏற்க மறுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சிரிப்பின் பின்னே இயலாமைகளை மறைத்துக் கொண்டார். உண்மை எனக்குப் புரிய மேலும் ஒரு வருடம் ஆகிற்று.

ஒரு வருடம் கடந்துவிட்டதை என் மனமும் நம்ப மறுக்கிறது. //அவரது பங்களிப்புகள் என்றும் அவரை நம்முடன் இணைத்து வைத்திருக்கும்.// ஆமாம், அவரைக் காண வேண்டும் என்னும் நினைப்பு வரும் சமயம் எல்லாம் இங்கு வந்து பழைய பதிவுகளைப் படித்துப் பார்ப்பேன். அவரோடு நேரில்பேசுவது போல் இருக்கும். அறுசுவை இல்லாவிட்டால் எனக்கு இந்த ஆறுதல் கிடைத்திராது. மிக்க நன்றி பாபு.

‍- இமா க்றிஸ்

அறுசுவையும் நீங்களும் கூட எனக்கு வரம்தான் இந்து.

இன்னும் இரண்டு நாட்கள் கொடுங்கள். ஓரிரண்டு இழைகள் தேடிக் கொடுக்கிறேன். இப்போது தேடுவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது. :-) அதிலேயே மூழ்கிப் போகாமல் இருப்பது கஷ்டம். :-)

‍- இமா க்றிஸ்

ஒரு காலகட்டத்தின் பின் நிலை மாறிவிட்டது. நான் தாயாகவும் அவர் மகளாகவும் மாறிப் போனோம். என் குழந்தையைப் பிரிந்தது போன்ற உணர்வுதான் என்னுள் இருக்கிறது. இதிலிருந்து வெளியே வரவேண்டும் நான். :-)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி.. நாங்களும் வரம் என்று சொன்னதை கேட்டதும் அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது...

பொறுமையாக கொடுங்கள்..
இனி இந்த இழையில் பதில் வைக்க போவது இல்லை..

அம்மாவின் பிரிவை யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும்.. எத்தனை வயது ஆனாலும் அம்மா அம்மாதானே..

நீங்கள் உங்களை தேற்றி கொள்வீர்கள்.. அத்துனை பக்குவம் உங்களிடம் உள்ளது..
உங்கள் அம்மாவும் உங்களுடனே இருக்கிறார்..

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. காலம் ஆறுதல் தரும்.

அன்புடன்
ரீஹா :-)