இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 9

Maha Vihara Duta Maitreya Monastery

நல்லா ரெஸ்ட் எடுத்தாச்சா. இன்னிக்கு நாம செய் பானாஸ் (Sei Panas) என்னும் இடத்தில் உள்ள புத்தர் கோவிலுக்கு போகலாம். போகும் வழியில் இந்தோனேஷிய தொலைக்காட்சி பற்றி சொல்கிறேன். 

முன்னரே சொன்னேனே பத்தாம் வந்த புதிதில் சிங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் ஒன்றரை மணிநேர தமிழ் நிகழ்ச்சிகள் மட்டும்தான் தெரியும் என்று. மீதி நேரத்தில் என்ன பண்றது. இணைய வசதியும் பெரிதாக கிடையாது. எவ்வளவு நேரம்தான் அந்த ஊரில் இருக்கும் 4 தமிழ் தோழிகளும் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பது. மீதி நேரம் கையில் ரிமோட் வச்சுட்டு சேனல் மாத்திக்கிட்டே புரியற மாதிரி ஏதும் தெரியுதான்னு தேடிகிட்டு இருப்பேன். அப்படி ஒருநாள் தேடிட்டு இருக்கும் போது நம்ப பிரபுதேவாவும் ரோஜாவும் பஹாசா இந்தோனேஷியாவில் பேசிட்டு இருக்காங்க. என்னடா நம்ம மக்கள் இந்தோனேஷிய படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்களான்னு பார்த்திட்டு இருக்கும் போதுதான் புரிஞ்சுது அது ராசையா தமிழ் படத்தின் இந்தோனேஷிய டப்பிங். அது தமிழில் இருந்து ஹிந்திக்கு போய் அங்கேயிருந்து இந்தோனேஷியாவுக்கு வந்திருக்கு. அதனால் பாடல் மட்டும் ஹிந்தியில். 

இந்தோனேஷிய மக்களுக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். ஹிந்தி படங்கள் விரும்பி பார்ப்பார்கள். அப்படி ஹிந்திக்கு போய் இங்கே வந்த சில தமிழ் படங்கள் ராசையா, தளபதி. நான் இந்த ரெண்டும்தான் பார்த்தேன். இன்னும் சில தமிழ் படங்கள் வந்திருக்கின்றன. ரஜினியை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஷாருக்கான் என்றால் உயிரையே விட்டு விடுவார்கள் இந்தோனேஷிய பெண்கள். அடுத்து பிரபலமானவர் ஹிருத்திக் ரோஷன். குச் குச் ஹோத்தா ஹை பாட்டுதான் எந்த இந்திய பெண்ணைப் பார்த்தாலும் இந்தோனேஷிய இளைஞர்கள் பாடுவார்கள். ஹிந்தி பாட்டை கேட்டால் நாம் இயல்பாகவே திரும்பி விடுவோமே.

இவர்களையெல்லாம் விட இப்போது இன்னொருவர் அங்கே பிரபலமாகி விட்டார். மஹாபாரதம் சீரியல் இந்தோனேஷிய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கே ஒளிபரப்பானது. அதில் அர்ஜுனராக நடித்த ஷாகிர் ஷேக் அங்கே இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆகிவிட்டார். இதை அங்கே ஒரு தொலைக்காட்சியும் பயன் படுத்திக் கொண்ட்து. Panah Asmara Arjuna (அர்ஜுனரின் காதல் பாணங்கள்) என்ற பெயரில் அவரை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தியது. நிகழ்ச்சியின் பெயரை கவனித்தீர்களா.. பாணா அஸ்மாரா அர்ஜுனா… பாணா என்பது தமிழில் பாணம் என்ற சொல்லில் இருந்து உருவாகிய சொல். இந்திய நிகழ்ச்சிகளை மொழிமாற்றம் செய்வதிலும் நேரடி இந்தோனேஷிய தொடர்களை உருவாக்குவதிலும் உள்ள முன்னணி நிறுவனம் இந்திய வம்சாவழியினரான பஞ்சாபி பிரதர்ஸ். பேசிட்டே கோவிலுக்கு வந்துட்டோம்

Maha Vihara

2000ம் ஆண்டு இங்கே வந்த போது இந்து ஆலயங்கள் ஏதும் இருந்தது இல்லை. முதலில் ஒரு கோவிலுக்கு போக வேண்டுமே என்று சொன்ன போது என்னவர் இங்கேதான் என்னை கூட்டி வந்தார். சிறிய குன்றின் மேல் வெள்ளைவெளேரென்று கம்பீரமான தோற்றத்தில் இந்த புத்தர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் பெயர் மஹா விஹாரா டுத்தா மைத்ரேயா மோனாஸ்ட்ரி (Maha Vihara Duta Maitreya Monastery). மேற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய புத்த ஆலயம். கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு நீண்ட படிகள் ஏறினால் முகப்பில் பெரிய லாஃபிங் புத்தா நிற்பார். அவரின் குழந்தை சிரிப்பையும் பெரிய தொந்தியையும் ரசித்துக் கொண்டே சென்றால் பிரமாண்டமான வாயில். உள்ளே மூன்று பெரிய புத்தர் சிலைகள். முன்னே முழங்காலிட்டு வணங்க ஏதுவாக குஷனால் ஆன சாய்வாக அமைக்கப்பட்ட குட்டி குட்டி நாற்காலிகள். அங்கேயே ஊதுபத்திகள் வைக்கப் பட்டிருக்கும். எடுத்து ஏற்றி வைத்து மனதில் வேண்டுதல்களை சொல்லி புத்தர் முன்னால் உள்ள பெரிய கிண்ணங்களில் குத்தி வைக்க வேண்டும். இதே போன்று மூன்று பெரிய ஹால்கள் உள்ளன. புத்த பிக்குகளின் சிலைகள் இருக்கின்றன. அங்கும் முதல் ஹாலைப் போலவே வணங்க ஏதுவான குஷன்கள் மற்றும் ஊதுபத்திகள். அங்கேயே வராண்டாக்களில் எதிர்காலத்தை கணிக்கும் புத்த ஜோசியர்கள் இருப்பார்கள்.

முதல் முறை சென்ற போது எனக்கு பக்தி உணர்வு வரவில்லை. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த்து போல் ஆ… வென்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஊதுபத்தி ஏற்றக் கூட தோன்றவில்லை. அதன் பின்னர் சென்ற போது மனமுருகி வணங்க முடிந்தது. நிறைய கலைவண்ணமிக்க சிலைகள் வளாகம் முழுக்க நிரம்பியிருக்கின்றன. குட்டி குட்டி லாஃபிங் புத்தாக்கள் நம் மனதை கொள்ளை கொண்டு விடுவார்கள். ஒவ்வொரு குட்டி புத்தாவும் இரண்டு ராசிகளோடு (Zodiac signs)  இருப்பார். அங்கேயே சுவையான சைவ உணவுக் கூடமும் இருக்கிறது. சீன இந்தோனேஷிய சைவ உணவு வகைகள் கிடைக்கும். புத்த பிக்குகள் தங்கும் இடமும் அங்கேயே உள்ளது. முதன்முறை செல்லும் போது நமக்கு ஒரு சுற்றுலாப் பயணி உணர்வு மட்டுமே இருக்கும். சிலு சிலுவென்ற காற்று, சுத்தமான அமைதியான இடம்… மனம் அப்படியே இலேசாகி பறக்கும். 

பத்தாமில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் இவைதான். இன்னும் மினியேச்சர் பார்க், கோஸ்ட் அரீனா என்னும் செயற்கைத் தீவு, சிறிதும் பெரிதுமான பீச்சுகள் மற்றும் ரிசார்ட்டுகள் என இருக்கின்றன. பத்தாம் அருகில் இன்னொரு தீவு பிந்தான். முழுக்க முழுக்க ரிசார்ட்டுகள் மற்றும் நீர் விளையாட்டுகள்தான் இந்த ரிசார்ட் தீவின் சிறப்பம்சம். பத்தாமை விட செலவு அதிகம். சுருக்கமாக சொன்னால் பத்தாமின் 5ஸ்டார் வெர்ஷன் தான் பிந்தான். சிங்கையில் இருந்து இந்த தீவுக்கும் பேக்கேஜ் டூர்கள் இருக்கின்றன. நம் அறுசுவைத் தோழி திருமதி. பிரேமா ஹரிபாஸ்கர் இந்த பிந்தான் தீவில்தான் சில வருடங்கள் இருந்தார்.

இன்னிக்கே உங்கள் பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வச்சுக்கோங்க. நாளை சிங்கப்பூர் போகப் போறோம். பத்தாமின் நினைவுகளை இந்த 9 பாகங்களில் நிரப்பிவிட முடியவில்லைதான். ஆனால் நான் நீட்டு முழங்கினால் உங்களுக்கு போரடித்து விடும். அது யாரு இப்பவே அப்படித்தான்னு சொல்றது :). சே சே… நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க :)

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8

Comments

சூப்பர். சலிக்காமல் படிக்கிற மாதிரி எழுதுறீங்க.
நான் ரெடி வித் பெட்டி படுக்கைஸ். :-)

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா! நிஜம்மாவே போரடிக்காம எழுதறேனா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னம்மா சுத்தி காண்பிக்கிறேன்னு அதுக்குள்ள பொட்டி படுக்கைய கட்ட சொன்ன எப்படி நான் பொறுமையாதான் வருவேன்

Be simple be sample

வாங்க வாங்க ஃபெரி கிளம்ப முன்னாடி வந்து சேர்ந்திடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!