ராமுவும் ஜானுவும்

96 சினிமா இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்கள் மற்றும் ட்ரெய்லரில் இருந்து கதைக்கரு என்ன என்பது புரிந்து விட்டது. சமீபத்தில்தான் எங்கள் பள்ளி நண்பர்களின் 25வது ஆண்டுவிழா ரீயூனியனும் நடந்தது. அன்று இந்த சினிமா போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும் நாங்கள் அனைவருமே அன்று எங்கள் பள்ளிப் பருவத்துக்கே சென்றுவிட்டோம். ஜானுராமுவின் கதை 96 என்றால் எங்கள் ரியூனியன் 93.
ஒரு வருட காலம் தொடர்ச்சியான திட்டமிடல், நண்பன் ஒருவனின் முயற்சி. தோள் கொடுத்த மற்ற நண்பர்கள் என 25வது ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடந்தது. மே12 2018 அன்றுதான் எங்கள் ஒன்றுகூடல். அதற்கு 1மாதத்திற்கு முன்பிருந்தே அழைப்பிதழ்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நண்பர்கள். அழைப்பிதழோடு நிறுத்தாமல் நண்பர்கள் கையால் ஒரு விதைப்பந்தை மண்ணில் இட்டும் கூடவே ஒரு மலர்ச்செடியும் அளித்து அந்த இரண்டையும் ரியூனியன் அன்று எடுத்து வரச்சொன்னார்கள். விதைப்பந்தும் அழகாக முளைத்து துளிர்க்க ஆரம்பித்து விட்டது. அப்படி எனக்கு அளிக்கப்பட்டவை பிச்சிப்பூ செடியும் புளியமரமும். இப்படி ஒவ்வொருவருக்கும் இரண்டு செடிகள். அவரவர் வீட்டில் இடமிருந்தால் அங்கேயும் அல்லது விழாவை ஒருங்கிணைத்த நண்பர்களே பொது இடத்தை தேர்ந்தெடுத்து நட்டு பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அம்மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது

சிறுகுழந்தைகள் போல் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தோம். மே 11 இரவெல்லாம் தூக்கமில்லை. எப்போதடா விடியும் கிளம்பி விழா நடக்கும் இடத்திற்குப் போகலாம் என்றிருந்தோம். காலையில் சீக்கிரமாகவே கிளம்பி போய்விட்டோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என் பொறுப்பு. கூடவே இரு நண்பர்களும் துணை நின்றார்கள். ஒருசில நண்பர்களைத் தவிர மீதி அனைவரும் குடும்பத்தோடு சென்றிருந்தோம். விடுபட்ட ஒருசிலரும் காணொளிக்காட்சி மூலமாக இணைந்தார்கள். எங்கள் ஆசிரியர்களையும் அழைத்திருந்தோம். மறுக்காமல் கலந்து எங்களை சிறப்பித்தார்கள்.
அறிமுகம் ஃபோட்டோ செஷன் என முகப்பில் ஆரம்பித்து விழாமேடைக்கு சென்று அமர்ந்ததும் பள்ளியில் நாங்கள் படித்த வகுப்பறை, மைதானம் என எங்கள் நினவுகளில் பசுமையாக நிறைந்திருக்கும் இடங்களை வீடியோ எடுத்து வந்து திரையிட்டார்கள். அனைவரின் கண்களும் லேசாக வேர்த்தது. ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. ஆசிரியர்கள் சிலரை ஞாபகம் வைத்திருந்தார்கள். சிலரை மறந்து விட்டார்கள். நான் கவிதாவாக, முதல் மாணவியாக என் ஆசிரியர்கள் மனதில் நின்றதை விட என் அண்ணனின் தங்கையாகவும் அப்பாவின் மகளாகவுமே ஞாபகம் நின்றிருந்தேன். என் அப்பாவும் அண்ணனும் கூட எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், எனக்கு கற்பித்த ஆசிரியர்களின் மாணவர்கள். ஆசிரியர்கள் கொஞ்ச நேரம் மட்டுமே இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் மாலை வரை இருந்து முழு நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்கள்.

நண்பர்கள் எங்களுக்கு பேச 25 ஆண்டு கால கதைகள் இருக்கும். ஆனால் எங்கள் குடும்பத்தினருக்கு போரடிக்குமே. அதனால் குழந்தைகளுக்கு ஃபேஸ்பெய்ன்டிங் செய்ய மெஹந்தி போட தனியே பூத் அமைத்திருந்தோம். எங்கள் குழந்தைகளின் தனித்திறமையை வெளிப்படுத்த ஆடல் பாடல் என அவர்களுக்கும் வாய்ப்பளித்தோம். எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞர். அவரையும் அழைத்து அவரும் நிகழ்ச்சி செய்தார். வயிற்றுக்கு அருமையான உணவு. இடையிடையே குளிர்பானங்கள் என மனநிறைவோடு வயிறும் நிறைந்தது.
என்னடா ஜானுவையும் ராமுவையும் இன்னும் காணோம்னு யோசிக்கறீங்களா. எங்கள் ராமுவும் ஜானுவும் தம்பதியராக குழந்தைகளோடு வந்திருந்தார்கள்.
பள்ளிப்பருவத்தில் ஆண் நண்பர்களோடு அதிகம் பேசியதில்லை. ஆனால் அன்று எந்த தயக்கமும் இன்றி பள்ளிப்பருவத்திற்கே போனது போல் பேசி அரட்டையடித்து மகிழ்ந்தோம், அப்போ நாம பேசினது இல்லேல்ல அப்படீன்னு சொல்லி சிரித்தோம். எங்கள் வாட்சப் க்ரூப்பில் இப்போதும் ஒரே அரட்டைதான். அந்த க்ரூப்பில் போய்விட்டால் மனது அந்த 16வயதிற்கு போய்விடுகிறது. நம் தோழிகளும் வாய்ப்பிருந்தால் பள்ளி நண்பர்களை ஒன்றாக சந்திக்க திட்டமிடுங்கள். மனதுக்கு ஒரு ரீசார்ஜ் செய்த உணர்வும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். நாங்கள் இனி எல்லா வருடமும் இப்படி சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இடையிடையே வெளியூரில் இருக்கும் நண்பர்கள் சொந்த ஊருக்கு வரும்போது மினி கெட்டுகெதர்களும் அவ்வப்போது நடக்கின்றன. ஒருவருக்கொருவர் உதவி தேவைப்படும் போது தோள் கொடுக்கிறோம். நட்பு வளர்கிறது. நீங்களும் முயற்சி செய்யுங்கள். கல்லூரி நட்புகளின் ஒன்றுகூடலுக்காக காத்திருக்கிறோம் இப்போது.

Average: 5 (2 votes)

Comments

அட என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா. எங்களுக்கும் அதே ஆசைதான் பழைய நட்புக்களை காண பேச. ஆனா பேச கூட அவர்களுக்கு நேரம் இல்லை அல்லது ஆர்வம் இல்லை வாட்ஸ்சப் குருப் அப்படி ஈ அடிக்கும். ஆண்கள் போல் பெண்கள் ஏன் நட்பு பாராட்டுவது இல்லை என தெரியவில்லை. அவர் குடும்பம் குழந்தைகள் என் முன்னுரிமை தர பல விஷ்யங்கள் இருந்தாலும் நட்புக்கு ஒரு ஓரமாவது இடம் தரலாம். எனக்கு பள்ளி தோழிகள் சந்திப்பு விட அறுசுவை நட்புக்களை காணவே ஆவல். பள்ளி நட்பை விட இறுகிவிட்டது. நீங்க நம்ப எல்லோரும் மீட் பண்ண ஒரு கெட் டு கெதர் வைங்களேன் ;)

Be simple be sample

ரேவ்ஸ் இந்த ரீயுனியன் ஒரு வருட திட்டமிடல். அதற்கு முன்னாடியே குட்டி குட்டியா சந்திக்க முடிந்த நட்புகள் மட்டும் சந்தித்து கொண்டிருந்தோம். பெண்களுக்கு குடும்ப சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். பல நண்பர்களின் தொடர்பு முற்றிலும் இல்லாமல் போனது. பள்ளி நண்பர்கள் சிலர் பள்ளியில் அவர்கள் கொடுத்திருந்த முகவரியை வைத்து அந்த ஊருக்கே சென்று விசாரிச்சு நம்பர் வாங்கி வாட்சப் க்ரூப்பில் சேர்த்தாங்க. நீங்களும் சீக்கிரம் சந்திக்க வாழ்த்துக்கள்.
இந்த 96 சினிமா பார்க்க நாங்கள் தோழிகள் சேர்ந்து போகலாம்னு ப்ளான் பண்ணி கடைசி வரை நடக்கவே இல்லை. எல்லோருக்கும் நேரம் ஒத்து வரவில்லை :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

விரைவில் சந்திக்கலாம் ரேவ்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

96 படம் தீபாவளிக்கு சன் டிவிலயே போடறாங்க. எல்லாரையும் கூப்பிட்டு வச்சு ஒன்னா பாருங்க

Be simple be sample

96 படம் எப்போ போடுறாங்க ரேவதி

அன்புடன்
ரீஹா :-)

தோழி சரியாய் சொன்னிங்க என் மனசுல உள்ளதே அப்படியே சொல்லிடீங்கா இதே ஏக்கம் தான் எனக்கும் தோழி