சளித்தொல்லை - ஆலோசனை தேவை

அனைவருக்கும் வணக்கம். புதிய உறுப்பினராக இத்தளத்தில் இணைத்துள்ளேன். எனக்கு இரண்டு பெண்குழந்தைகள். பெரியவளுக்கு வயது நான்கரை. எல்கெஜி படிக்கிறாள். பிறந்து 3 மாதங்களில் விரல் சூப்ப தொடங்கி விட்டதால் (இன்றுவரையும்) பின் எவ்வளவோ முயற்சி செய்தும் சரிவர தாய்ப்பால் குடிக்கவில்லை. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தாலோ என்னவோ குழந்தை சளி, காய்ச்சல் என்று அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. அதிலும் கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி சளி, தொடர் தும்மல், இளைப்பு மற்றும் காய்ச்சல் என அடிக்கடி வருவதுண்டு. கடந்த வருடம் நிமோனியா சளிக்காய்ச்சல் வந்து ஒருவாரம் மருத்துவமனையில் வைத்து பின்னர் சரியானது. பின்னரும் அடிக்கடி சளி பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு மூன்று டாக்ட்டர்கள் மாற்றி பார்த்தும், எக்ஸ்ரே, பரிசோதனைகள் என அதிக செலவனதே தவிர சளி குறையவில்லை. இதனால் நானும் என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். அடிக்கடி பள்ளிக்கும் லீவு போடும்படி இருக்கும். சரிவர சாப்பிடவும் செய்யாமல் ஒல்லியாக இருப்பாள். பழக்கமான ஒருவரின் ஆலோசனையின் பேரின் மதுரையில் உள்ள ஒரு டாக்ட்டரிடம் சென்று காட்டியபோது (நுரையீரல் ஸ்பெசலிஸ்ட் ) அவரின் அறிவுறுத்தலின்படி நுரையீரல் மற்றும் சுவாசப்பகுதி CT ஸ்கேன் எடுத்து பார்த்ததில் சளியும், சுவாசப்பகுதியில் லேசான சைனஸ் பிரச்சினை உள்ளதாக கூறி மருந்துகள் கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை மூன்று வாரங்களாக சிரப் களும் மாத்திரைகளும் கொடுத்து வருகிறோம். எந்தவித சளித்தொல்லைகளும் தற்போது இல்லை. குழந்தையும் அடிக்கடி பசிக்கிறது என்று கூறி நன்கு சாப்பிடவும் செய்கிறாள். இதனால் குறிப்பிடும்படி கொஞ்சம் எடையும் கூடியிருக்கிறாள். இந்த திடீர் மாற்றம் சந்தோசமாக இருந்தாலும் ஒருபக்கம் இது குறித்து கொஞ்சம் கவலையாகவும் உள்ளது. குறிப்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையின் திடீர் உடல் எடை மாற்றத்தை பற்றி கூறி என்னவென்று பார்க்கும்படி சொல்வதால் என் மனைவி மிகவும் கவலைப்படுகிறாள். இது இயல்பானதுதானா? இத்தளத்தில் உள்ள சகோதரிகள் யாருக்கேனும் இதுபோன்ற அனுபவம் உள்ளதா? சளித்தொந்தரவுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலிருந்து குணமானதால் இந்த உடல் வளர்ச்சியா? தயவுகூர்ந்து எனக்கு ஆலோசனை கூறவும் உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கியிருக்கிறேன். நன்றி..
-ஜமால்

வணக்கம் ஜமால் அறுசுவைக்கு நல்வரவு.

விரல் வாயில் வைப்பது பாடசாலைக்குப் போக ஆரம்பித்து கவனம் வேறு விடயங்களில் திரும்பும் போது குறைந்துவிடும்.

குழந்தை அதன் வயதுக்கேற்ற எடை இருந்தால் யோசிக்க எதுவும் இல்லை. உங்களுக்கே தெரிகிறது எதனால் எடை போட்டிருக்கிறார் என்பது. எடை வயதுக்கு மிஞ்சியதாக இருந்தால் கொஞ்சம் உணவைக் கவனிக்கலாம். அது கூட வேண்டாம். சாதம், இனிப்பு, நொருக்குத் தீனி வகைகளை மட்டும் அளவாகக் கொடுத்தால் போதும். ஓடியாடி விளையாடினால் எடை சரியாக இருக்கும்.

//இது இயல்பானதுதானா?// முன்பை விட பசி அதிகம் இருக்கிறது; சாப்பிடுகிறார். எடை போடத்தான் செய்யும். இப்போது முன்பு போல இல்லாமல் சுகமாகவும் இருக்கிறார். இது இயல்புக்கு மாறான விடயம் இல்லை.

//சளித்தொந்தரவுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும்// வளர்ச்சியைப் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த வியாதியாக இருந்தாலும் அது இருக்கும் சமயம் உடலைப் பாதிக்கத்தான் செய்யும். குணமாக, உடல் சாதாரண நிலைக்கு வரத்தான் வேண்டும்.

//குணமானதால் இந்த உடல் வளர்ச்சியா?// அதை விட அவர் நன்றாகச் சாப்பிடுவதால் வந்த மாற்றம் என்று சொல்லலாம். யோசிக்காதீங்க. இனிப்பு கொழுப்பு உணவுகளை அளவாகக் கொடுத்துவாருங்கள். எடையைக் கண்காணியுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்