சிங்கபூரில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

அறுசுவை அன்பு சகோதரிகளுக்கு வணக்கம்

நாங்கள் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்கு இந்தியா செல்ல இருக்கிறோம் வழியில் சீங்கபூரில் இரண்டு நாட்கள் தங்கி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆகையால் சீங்கபூரில் மிகவும் முக்கியமான சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் எவை எவை என்பதனை தெரிந்தவர்கள் உதவும்படி கேட்டு கொள்கிறேன்.

நன்றி

சந்திரா
ஜப்பான்

அன்புள்ள சந்திரா அவர்களுக்கு,
சிங்கப்பூரில் செந்தோசாத் தீவு தவிர்க்கக் கூடாத ஒரு இடம். அதிலும் குறிப்பாக அண்டர் வாட்டர் வோர்ல்ட், மியூசிக்கல் ஃபவுண்டன்,டால்பின் லகூன், கேபிள்கார் பயணம் போன்றவை நன்றாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஒரு முழு நாள் அளவிற்கே அங்கு செலவிடலாம். முடியாது என்றால் பிற்பகல் இரண்டு மணியளவில் சென்றால் இரவு 9 மணி வரை நன்றாக இருக்கும். பிற்பகலைத் தெரிவு செய்வது உகந்ததாக இருக்கும்.
அடுத்தாற்போல விலங்கியல் தோட்டம், பறவைப் பூங்கா போன்றவையும் மிக முக்கியமானவையாகும். என்றாலும் உங்களுக்குப் போதுமான நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் கிட்டத்தட்ட அரை நாளாவது செலவிட வேண்டி இருக்கும்.
இந்தியக் கோவில்களைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் மிகமிகப் பழமையான கோவில். சிராங்கூன் சாலையிலேயே சில ஆலயங்கள் உள்ளன.
சிராங்கூன் பகுதியில் ஆனந்தபவன் மற்றும் கோமள விலாஸ் போன்றவை சைவத்துக்கும் அசைவத்துக்கு முத்தூஸ் கறி, அஞ்சப்பர், சகுந்தலா போன்ற உணவகங்களும் உள்ளன.
நீங்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் சிராங்கூன் சாலையில் உள்ள முஸ்தபா சென்டர் கடைக்குச் செல்லலாம். இது 24 மணி நேரமும் இயங்கும் கடையாகும். இந்தியர்கள் விரும்பும் பல பொருள்கள் குறித்த விலையில் கிடைக்கும்.
சிட்டி ஹால் மற்றும் ஆர்ச்சர்டு சாலையில் இருக்கும் கடைகள் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்றாலும் பார்க்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதியில் நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன.
சிராங்கூன் முஸ்தபா செண்டர் அருகில் உள்ள நியூ பார்க் ஹோட்டலில் (நடுத்தரமானது) தங்கிக் கொண்டால் பலவற்றுக்கும் வசதியாக இருக்கும்.
எந்த இடத்திலும் போக்குவரத்துக்கு டாக்ஸி வசதி மிகச் சிறப்பாக இருக்கும். சரியான முகவரியை டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிவிட்டால் கொண்டு விட்டுவிடுவார். மீட்டர் காட்டும் தொகைக்குமேல் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. எந்த பயமும் சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கையோடு டாக்ஸியில் செல்லலாம். ஏமாற்ற மாட்டார்கள்.
தங்களது பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

- அன்புடன் பீவி

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள கடைகள் மற்றும் இடங்களோடு எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. எந்தவித ஆதாயத்துக்காகவும் அவற்றின் பெயரை நான் குறிப்பிடவில்லை. இங்கு வருபவர்களின் பொதுவான விருப்பமாக அவை இருப்பதுதான் இங்கு குறிப்படப்படுவதன் காரணமாகும்)

அன்புடன் பீவி

நலமாக இருக்கிறீர்களா. தாங்கள் ஜப்பானில் இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் நானும் ஜப்பானில் தான் இருக்கிறேன் நீங்கள் எந்த எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று விருப்பமிருந்தால் சொல்லவும்.ஏன் என்றால் நீங்களும் இந்தியா என்பதால் கேட்க்கிறேன்.
நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் பீவி
நலமாக இருக்கிறீர்களா. நானும் இந்தியா செல்கிறேன் சிங்கப்பூர் போய்தான் இந்தியா செல்வதால் அங்கு சில இடங்களை முன்னாடியே பார்த்து இருக்கிறேன் ஆனாலும் குழந்தையை இந்த தடவை கூட்டி செல்வதால் எங்கு எல்லாம் சுத்தி பார்க்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தோம் உங்களின் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு எந்த இடம் எல்லாம் பார்க்கலாம் என்று முடிவு செய்வதற்க்கு உதவியாக இருந்தது.
மிக்க நன்றி.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்களுக்கு நிறைய விசயங்கள் பிரம்மிப்பூட்டும். ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்குமா என்பது சந்தேகமே. "இது என்ன பெரிய விசயம்.. எங்க ஜப்பானில் இதைவிட... " என்று அங்கலாய்க்காமல் இருக்க முடியாது.

இரண்டு நாட்கள் என்பது மிகக் குறைந்த காலம். எனவே முன்கூட்டியே எந்தெந்த இடங்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முக்கியமான இடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பார்த்துவிடுங்கள். நீங்கள் கடைசியாக சென்று பார்க்கலாம் என்று வைத்திருக்கும் சில இடங்களை நேரமின்மை காரணமாக பார்க்க இயலாமல் போகலாம்.

சகோதரி பீவி அவர்கள் முக்கியமான இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டு இருந்ததுபோல் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது அரை நாளாவது நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இரண்டு நாள் என்று குறிப்பிட்டுள்ளதை இரண்டு பகல், இரண்டு இராத்திரிகள் என்று எடுத்துக் கொண்டு, என்னுடைய ஆலோசனையைத் தருகின்றேன்.

பொருட்கள் ஏதேனும் வாங்கும் ஆசை, திட்டம் இருந்தால், முதலில் purchasing ஐ முடித்து பொருட்களை அறையில் போட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்புங்கள். கடைசி நிமிட purchasing சரியாய் வராது. ஊர் சுற்றிப் பார்க்கும்போது ஏதேனும் பொருட்கள் கண்ணில் பட்டாலும் வாங்கிக் கொள்ளலாம். முதல் நாளே கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் பார்த்து, விலையறிந்து வந்துவிடுவதால், ஊருக்கு புறப்படும் முன்பு கையில் அல்லது பையில் மீதம் பணம் இருந்து, நேரமும் இருந்தால் அதற்கும் ஏதேனும் இறுதி நிமிட purchase செய்யலாம். எப்போதும் என்னுடைய ஆலோசனை, purchasing first.

சகோதரி பீவி அவர்கள் குறிப்பிட்டதுபோல் இதற்கு பொருத்தமான இடம் முஸ்தபா சென்டர்தான். எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். பொருட்களின் விலையும் reasonable ஆக இருக்கும். செராங்கூன் ரோட்டில் ஏதேனும் ஒரு உணவுவிடுதியில் காலை உணவை முடித்துவிட்டு முஸ்தபாவில் நுழைந்தீர்கள் என்றால் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் செலவிடலாம். செராங்கூன் ரோட்டிலேயே ஏதேனும் ஒரு விடுதியில் தங்கினீர்கள் என்றால் மிகவும் வசதியாக இருக்கும்.

சாப்பிடுவதற்கு சில பிரபல உணவு விடுதிகளை சகோதரி அவர்கள் பரிந்துரைத்திருந்தார். என்னுடைய ஆலோசனை அதிலிருந்து வித்தியாசப்படும். அவர் குறிப்பிட்டிருந்த எல்லாமே இந்திய, தமிழ் உணவுவிடுதிகள். அந்த உணவுகளை நீங்கள் இந்தியாவில் எங்கும், எப்போதும் சாப்பிடலாம். எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கு கிடைக்கும் சிறப்பு உணவுகளை ருசி பார்ப்பதுதான் நல்ல அனுபவமாக இருக்கும். மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தது ஒரு வேளையாவது, சில வகை சைனீஸ் உணவுகள், மலேசிய உணவுகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கவேண்டும். பன்னாட்டு உணவுவிடுதிகளை உள்ளடக்கிய food courts அங்கு ஏராளம் உண்டு. சிங்கப்பூரை பொறுத்தமட்டில் எந்த இடத்திலும் நம்பி தைரியமாக வாங்கி சாப்பிடலாம். ஆரோக்கியம், சுகாதாரம், உணவுப் பொருட்களின் தரம் இவற்றுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

செந்தோசா(Sentosa)விற்கு கேபிள் காரில் சென்று வந்தீர்கள் என்றால் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மதியம் 12 மணிக்கு முன்பே புறப்பட்டு Harbourfront Station வந்து அங்கிருந்து செந்தோசாவிற்கு கேபிள் காரில் பயணிக்கலாம்(5 -6 நிமிடங்கள்). இன்னும் கொஞ்சம் நீண்ட நேரம் பயணிக்க விரும்பினால் The Jewel Box Station சென்று அங்கிருந்து ஆரம்பிக்கலாம்(12 நிமிடங்கள்). கேபிள் காரில் செல்லும்போது பகல் நேர சிங்கப்பூரை ரசிக்கலாம். இரவு திரும்பும்போதும் சிங்கப்பூரை ஒளிவெள்ளத்தில் பார்த்து ரசிக்கலாம். நிச்சயம் உற்சாகமான அனுபவமாக இருக்கும். செந்தோசாவில் குறைந்தது எட்டு மணி நேரங்களாவது செலவிட்டால்தான் நிறைய அனுபவிக்க முடியும். செந்தோசா உள்ளே நுழைய இப்போது 3 சிங்கப்பூர் டாலர் டிக்கெட் கட்டணம். உள்ளே நுழைந்த பின்பு அங்குள்ள பலவிசயங்களை பார்வையிட தனித்தனி கட்டணம். எல்லாவற்றையும் பார்வையிட்டு திரும்ப ஒரு நபருக்கு குறைந்தது 100 டாலர் ஆகும். குழந்தைகளுக்கு கொஞ்சம் குறையும். இரவு 8 அல்லது 9 மணி வரை அங்கே பொழுதை கழிக்கலாம்.

அடுத்த நாள் பார்ப்பதற்கு, விலங்கியல் பூங்கா, பறவைகள் பூங்கா, கோயில்கள், மியூசியம்ஸ், பழமையான இடங்கள், சைன்ஸ் சென்டர் இப்படி ஏராளமான இடங்கள் இருக்கின்றன. <a href="http://www.visitsingapore.com/publish/stbportal/en/home/sub_landing_pages/What_To_See0.html" target="_blank"> visitsingapore </a> இணையத்தளத்தில் பார்வையிடவேண்டிய அனைத்து இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்து உங்கள் விருப்பம், நேரத்திற்கு தகுந்தாற்போல் இடங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு என்பதால் தூரம் பற்றி கவலைக்கொள்ளத் தேவையில்லை. ஒரு மூலையில் இருந்து எந்த ஒரு மூலைக்கும் அதிகப்பட்சம் ஒரு மணி நேர பயணத்தில் சென்று விடலாம்.

சிங்கப்பூர் இரவு நேர விலங்கியல் பூங்காவை (night safari) நீங்கள் நிச்சயம் பார்வையிட வேண்டும். ஜப்பானில் இது போன்று இருப்பதாக தெரியவில்லை. மாலை ஆறு, ஏழு மணிக்கே வந்துவிட்டால் நல்லது. இரவு 10, 11 மணி வரை இங்கே சுற்றலாம். கூட்டத்துடன் கலந்து செல்லாமல் தனியே செல்லுங்கள். மிகவும் திரில்லிங்காக இருக்கும்.

சிங்கப்பூர் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தை முடித்து திரும்பி வந்தவுடன் மறக்காமல் உங்கள் பயண அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் அங்கே ருசித்து உண்ட உணவுகளைப் பற்றி எழுதுங்கள். படங்கள் எடுக்கும் வாய்ப்புகள் இருந்தால் எடுத்துக்கொள்ளவும். அவற்றை இங்கே வெளியிடலாம்.

அன்புள்ள பீவி அவர்களுக்கு

வணக்கம்

தாங்கள் கொடுத்து இருக்கும் குறிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எங்கு சுற்றி பார்ப்பது என்று குழப்பமாக இருந்தது தற்பொழுது தெளிவு கிடைத்தது மிக்க நன்றி.

நன்றி
அன்புடன்
சந்திரா
ஜப்பான்.

அன்புள்ள கதீஜா செய்யது அவர்களுக்கு

வணக்கம்

நாங்கள் நலம். நீங்கள் நலமா?
தங்கள் பதிவை பார்த்த உடன் மிக்க மகிழ்ச்சி.
நாங்கள் ஒசாகவில் இருக்கிறோம். தாங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளாமா? விருப்பம் இருப்பின்.

நன்றி
சந்திரா
ஜப்பான்.

மிக்க நன்றி திரு அட்மின் அவர்களுக்கு வணக்கம்,

தாங்கள் கொடுத்து இருக்கும் சிங்கபூர் பயணக்குறிப்பு எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. தங்கள் ஆலோசனையை எடுத்துகொண்டும்,தாங்கள் கொடுத்து இருக்கும் இணையதளத்தினை பார்வை இட்டும்,மற்றும் சகோதரி பீவி அவர்கள் கொடுத்த குறிப்பினை வைத்தும் எங்களது சிங்கபூர் பயணம் திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. மேலும் அறுசுவை தளத்தின் பணி தொடர எங்களது வாழ்த்துக்கள்.

நன்றி
சந்திரா
ஜப்பான்

நீங்கள் இன்னமும் எங்கள் நாட்டை மறக்கவில்லை என்பது சந்தோசமான விசயம். இப்போது வந்தீர்கள் என்றால் சிங்கப்பூரில் நிறைய மாற்றங்கள் தெரியும். ஜப்பான் அளவிற்கு எங்கள் நாடு கிடையாது என்பதை ஒத்து கொள்கிறேன். அதேசமயம் ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் வருகின்றார்கள். அப்படியென்றால் இங்கேயும் ஏதோ இருக்கின்றது என்றுதான் அர்த்தம்.

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா .உங்களின் சிங்கப்பூர் பற்றிய ஆலோசனைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நீங்கள் சொன்னது போல் சுற்றி பார்த்துவிட்டு எங்களின் அனுபவங்களை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.குறிப்பாக நாங்கள் அங்கே ருசித்து உண்ட உணவுகளைப் பற்றி எழுதுகிறோம்.அறுசுவையில் நாங்கள் கேட்டால் உடனே பதில் கிடைக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது. அறுசுவைக்கு இணை அறுசுவையேதான். மேலும் அறுசுவையும் தங்களின் மேலான பணியும் வளர எனது வாழ்த்துக்கள்.
நன்றி.

அன்புள்ள சந்திரா அவர்களுக்கு.
நான் நலமாக இருக்கிறேன். தாங்களின் நலம் அறிய ஆவல். உங்களிடம் இருந்து பதில் வந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி நானும் ஒசாகாவில் தான் இருக்கிறேன்.Near Shinsaibashi
தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா.
நன்றி.

மேலும் சில பதிவுகள்