வடகறி

தேதி: June 15, 2007

பரிமாறும் அளவு: 8நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கடலைப்பருப்பு - ஒரு கோப்பை
வெங்காயம் - நான்கு
தக்காளி - ஒன்று
துருவிய தேங்காய் - ஒரு கோப்பை
பச்சைமிளகாய் - ஆறு
நசுக்கிய முழு பூண்டு - ஒன்று
துருவிய இஞ்சி - இரண்டு துண்டு
மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரைதேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
ஏலக்காய் - நான்கு
கிராம்பு - நான்கு
பிரிஞ்சி இலை - இரண்டு
எண்ணெய் - முக்கால் கோப்பை
உப்பு - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி


 

கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காய்ப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மையாக அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சைமிளகாயில் நான்கை மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
ஊறிய பருப்பில் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும்.
பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். அதைத் தொடர்ந்து தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காய்ப்பால் மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைக்கோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.
இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பு கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றி.....
செய்து பார்த்துவிட்டு எப்படி வந்தது என்று எழுதுகிறேன்...எனக்கு வடகறி ரொம்ப பிடிக்கும்....
நன்றி...

நன்றி...

ஹலோ வாணி, இந்த வடகறி எனக்கும் மிகவும் பிடிக்கும்,செய்துப் பார்ப்பதாக கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

ரொம்ப சுவையாக இருந்தது...நான் தேங்காய் பால் சேர்க்கவில்லை(என்னிடம் தற்போது இல்லை)...ஆனாலும் ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது...சுலபமாக இருந்தது...நீங்கள் கொடுத்தபடி 30 நிமிடங்களில் சமைத்துவிட்டேன்(இட்லியும் சேர்த்து)...
என்னவர் மற்றும் என் குழந்தைக்கும் கூட மிக பிடித்தது...இட்லி எல்லாம் நிமிடத்தில் காலி செய்துவிட்டோம்...
மிக்க நன்றி...

வடகறி பிடித்த அனைவரும் இந்த குறிப்பைப்பார்த்து வடகறி செய்துபார்க்கலாம்...நிச்சயம் எதிர்பார்த்த சுவை கிடைக்கும்...

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர், செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. இன்னோரு முறை செய்வதாய் இருந்தால் கட்டாயம் தேங்காய் பால் சேர்த்து செய்துப் பாருங்கள். ரெடி மேட் டின் தேங்காப் பால் இருந்தால் கூட போதும். மேலும் இந்த வடகறி குறிப்பை மற்றவருக்கும் பரிந்துரைதுள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது மீண்டும் நன்றி.

டியர் மேடம், இந்த குறிப்பு செய்ய நினைத்தேன், ஆனால் ஒரு சந்தேகம். இதில் முக்கால் கப் ஆயில் என்று குறிப்பிட்டு உள்ளதே, அவ்வளவு தேவையா மேலும் இதில் ஒரே ஒரு பூண்டு என்று சொல்லி உள்ளிர்கள். அதுவே போதுமா. ப்ளிஸ் தெளிவு செய்யுங்களேன்.நன்றி மேடம்.

ஹலோ ரதி எப்படி இருக்கின்றீர்கள்? இந்த குறிப்பை செய்து பார்ப்பதாக கூறியுள்ள தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ஆமாம் நான் குறிப்பிடுள்ளபடி முக்கால் கோப்பை எண்ணெய் கொண்டு செய்தால் சுவையாக இருக்கும். அதிகம் என்று தாங்கள் நினைத்தால் வேண்டிய அளவிற்க்கு எடுத்துக் கொள்ளவும் பிரச்சனையில்லை, ஆனால் எண்ணெய் குறைக்கும் பொழுது ஒரு கையளவு பருப்பையும் குறைத்துக் கொள்ளவும் சுவை மாறாமல் கிடைக்கும். பூண்டு ஒன்று என்பது ஒரு பல் அல்ல முழுதாக ஒரு பூண்டு, அல்லது குறைந்தது பத்து பற்கள்/pods இருந்தால் நல்லது. ஒகேவா நன்றி.

அன்புள்ள மனோகரி மேடம்,

நிச்சயம் அடுத்த முறை செய்யும் போது தேங்காய்ப்பால் உபயோகித்து செய்துப்பார்க்கிறேன்.

தேங்காய்ப்பால் இல்லாமல் சுவை குறையும் என நினைத்துக்கொண்டே செய்தேன். ஆனால் ரொம்ப சுவையாக இருந்தது.

அதனால் அடுத்த முறை, தேங்காய்ப்பால் சேர்த்து செய்து, அதன் சுவையும் சுவைத்துப்பார்க்கிறோம்.

நன்றி...

நன்றி...

அன்புள்ள மனோகரி மேடம், தாங்கள் கூறியபடி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.எண்ணை முக்கால் கப் =12 டேபில் ஸ்புன் என்பது சரிதானே மேடம். நன்றி மேடம்.

ஹலோ ரதி எப்படி இருக்கீங்க? இந்த வடகறி குறிப்பை செய்துப் பார்த்ததற்கு மிக்க நன்றி. ஆமாம் முக்கால் கோப்பை என்பது 12 மேசைக்கரண்டி தான் சரியாக சொல்லியுள்ளீர்கள். நன்றி டியர்.

மனோ மேம் உங்க வடகறி இன்று செய்தேன் . ரொம்ப நன்றாக இருந்தது. ஸுப்பர். நன்றி.

நன்றி விஜி, எனக்கும் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடித்த சைட் டிஷ் வடகறி தான். இதை செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி

நேற்று உங்க குறிப்பினை பார்த்து வடகறி பண்ணினேன். ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் பருப்பு கலவையை ஆவியில் வேகவைப்பதற்கு பதிலாக எண்ணெயில் பொரித்து போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று என் கணவர் சொன்னார். அப்படி கூட பண்ணலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? குறிப்பிற்கு நன்றி!

டியர் சாய் கீத்தாலட்சுமி எப்படி இருக்கீங்க? உங்க பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி. பருப்பு கலவையை எண்ணெயில் பொரித்தும் வடகறி செய்யலாம். அவ்வாறு பொரிக்கும் போது பருப்பு கலவை நிறம் மாறாமல், வேகும் வரை பொரித்தால் போதும் சுவையாய் இருக்கும். நான் சென்னையில் இவ்வாறு வடகறியை அவித்துசெய்யும் முறையிலேயே சுவைத்து வளர்ந்ததால் அதுவே எனக்கு பிடித்துவிட்டது. நீங்க அடுத்த முறை பருப்பு கலவையை பொரித்து செய்தால் கட்டாயம் எனக்கு தெரிவிக்கவும் நன்றி.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக மறுபடியும் பருப்பு கலவையை எண்ணெயில் பொரித்து வடகறி செய்துபார்த்துவிட்டு உங்களிடம் எப்படி இருந்தது என்று சொல்கிறேன். அன்புடன் சாய் கீதாலஷ்மி!

அன்பின் மனோகரி மேம், இதனை நான் சிறு உருண்டைகளாக உருட்டி எண்னெயில் பொரித்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அம்மா செய்வது போல். மிகவும் நன்றி.
-நர்மதா :)

திருமதி. நர்மதா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த வடகறியின் படம்

<img src="files/pictures/aa73.jpg" alt="picture" />