புளியோதரை

தேதி: June 24, 2007

பரிமாறும் அளவு: 6-8நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

அரிசி - மூன்று கோப்பை
பொடி தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - பத்து
தனியா - மூன்று தேக்கரண்டி
கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி
வெந்தயம் - முக்கால் தேக்கரண்டி
மிளகு - அரைத்தேக்கரண்டி
எள்ளு - இரண்டு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால்தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்
உப்பு - ஒரு தேக்கரண்டி.
புளிக்காய்ச்சல் தயாரிக்க:
புளி - ஆரஞ்சு பழமளவு
எண்ணெய் - அரைக்கோப்பை
கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - நான்கு
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - நான்கு தேக்கரண்டி


 

முதலில் அரிசியை வேகவைத்து உதிரி உதிராக வடித்து ஆறவைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
பொடிக்குத் தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அதில் உப்பையும் மஞ்சள்தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகைப் போடவும், அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
அதன்பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
பிறகு அதில் கலக்கிவைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான புளியோதரைத் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகிரி அக்கா எனக்கு சனிக்கிழமை சமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. உங்கள் புளியோதரை தான் மிகவும் நன்றாக இருந்தது. காரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்து போட்டேன். ஐயா நான் சமைத்து பார்த்து பின்னூட்டம் கொடுத்து விட்டேனே. அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஜானகி

உங்களுடைய புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது. ஒரு சிறிய சஜஷன்...... புளிக்காய்ச்சலில் மஞ்சள்தூளுக்கு பதிலாக விரலிமஞ்சள் துண்டு வறுத்து பொடி பண்ணிபோட்டால் நல்ல ருசியாக இருக்கும். ஒரு சிறு துண்டு வெல்லமும் சேர்க்கலாம்.

டியர் ஜானகி அன்ட் மாலதி உங்க பின்னூட்டங்களை இப்போது தான் பார்க்கின்றேன்,நேரத்தோடு பதிலளிக்க தவறிய என்னை மன்னிக்கவும். இந்த குறிப்பைச் செய்து சுவைத்து பின்னூட்டமும் அனுப்பிய உங்களிருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

டியர் அரசி இந்த புளியோதரையை செய்துபார்த்ததற்கு மிக்க நன்றி. என்ன கேள்வி கேட்டுட்டீங்க! அரசி டூர் போக எடுத்துச் செல்ல இதை விட சிறந்த உணவேது? நான்கு நாட்களானாலும் எந்த சீதோஷ்ணத்திலும் கெடாது தைரியமாக எடுத்துச் செல்லுங்கள். பின்னூட்டத்தற்கு மிக்க நன்றி.

இன்று புளியோதரை செய்தேன் நல்ல சுவையுடன் இருந்தது. அவித்த முட்டையுடன் அருமையாக இருந்தது
நல்லா என்கரேஜ் பண்ணறீங்க... இப்படி தட்டி கொடுத்து வருவது மீண்டும் செய்ய தூண்டுது.. நன்றி :))
"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சரியாக சொன்னீங்க இலா, புளிசோறுக்கு அவித்த முட்டை ஒன்றே போதும் நல்ல பொருத்தமாக இருக்கும். என்கரேஜ் எல்லாம் இல்லீங்க கஷ்டப்பட்டு செய்து பின்னூட்டம் கொடுக்கிறாங்க அதற்கு உடனே பதில் எழுதாவிட்டால் சரியா வராது அவ்வளவுதான். மேலும் உங்க எல்லோரின் பின்னூட்டங்கள் தான் இன்னும் குறிப்பெழுதவும் தூண்டுகின்றது.இந்த குறிப்பின் உங்க பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

ஹாய் இன்னிக்கு உங்க புளிசாதம் செய்து பார்த்தேன்....ரொம்ப அருமையா வந்துச்சு.....ரொம்ப வாசமாகவும் இருந்துச்சு.....வாழ்த்துக்கள்....

ஹலோ அக்கா புளியோதரை புது சுவை & மணமுடன் நன்றாக இருந்தது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள். ஆனால் நான் எண்ணெயில் வறுத்து போட மறந்துவிட்டேன். இருந்தாலும் நல்லா இருந்தது. அக்கா டூர் போகும் போது கொண்டு போனால் கெடாமல் இருக்குமா? நன்றி அக்கா.