ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா?

பில்லி சூனியம் வைப்பதாகவும், எடுப்பதாகவும், ஆவிகளுடன் பேசுவதாகவும் பலர் சொல்லிக் கொண்டு பணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வகையில் ஏமாந்த அல்லது வெற்றி பெற்ற அனுபவம் உங்களுக்கு ஏதேனும் இருக்கின்றதா? இவையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அனுபவங்களை, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும்.

என்னுடைய கருத்து, பில்லி, சூனியம், ஆவி என்று எதுவும் இல்லை. அப்போது கடவுள் மட்டும் இருக்கிறாரா என்ற கேள்வி எழலாம். கடவுள் என்ற விஷயமே மனித இனத்தை ஒழுக்கத்தோட வாழுவதற்கும், மனசாட்சிக்கு பயப்படாவிட்டாலும் இப்படி ஒரு விஷயம் இருந்தால் என்று அனைவருக்கும் பொதுவான ஒழுக்க நெறிக்கும், நல்ல வாழ்க்கைக்கும் வழி வகுக்கும் என்று ஆரம்பித்து இருக்கலாம். அதற்காக நமக்கு தெரியாத விஷயங்களை,நம்மால் நிருபிக்க இயலாத விஷயங்களைப் பற்றி 100% இல்லாமல் எதுவும் சொல்லிவிட முடியாது.

எங்கே, கடவுள் இருக்கிறாரா என்று நிரூபி என்றால், இல்லை என்பதை நிரூபிக்கவும் சிலர் இருப்பார்கள். எத்தனையோ பேர் சாமி கும்பிடவில்லை என்றாலும் எதாவது நடந்து விட்டால் எல்லாம் என் விதி என்பார்கள். அப்போது விதி மட்டும் எங்கிருந்து வந்தது. ஜாதகம்,தோஷம்,ஏன் நமது வாழ்க்கையே நம்புவதில்தான் இருக்கிறது. தியானத்தில் சொல்வார்கள்,"எதை நாம் முழுதாக நம்பி,நடக்கும் என்ற எண்ணத்தோடு செய்கிறோமோ,அந்த பாசிட்டிவ் எண்ணமே(எண்ண அலைகள்) அதை நடத்தும் என்று".

ஆவி,பேய்,பிசாசு எல்லாமே நமது சினிமாத்துறையினரின் கற்பனை வளத்துக்கு நல்ல சான்று. கடவுள் உருவங்களும் அப்படியே. போட்டோவிலும்,சிலையிலும்,படத்திலும் பார்ப்பது போல தான் கடவுள் இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. என்னதான் Physics,Geography என்று சொன்னாலும் நமக்கு தெரியாத சக்தி என்று ஏதோ இருக்கிறது. இல்லாவிடில் விதி என்ற கான்செப்டே இருக்காது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவனுக்கு இருக்குதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய தோணாது. பல சமயம் அது காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போலதான். அவனுக்கு கஷ்டம் சரியானால் போதும். அது பணம் பறிக்கும் மந்திரவாதி,சாமியார் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. அதை விட எனக்கு புரியாத விஷயம்,நம்மை போல வாழும் சிலரை கடவுள் என்று கூறுவது. அதில் சிலர் கல்யாணம் செய்துக் கொண்டு குழந்தை குட்டிகளோடு இருப்பவர்கள். ஆனால் பெயர்தான் சாமியார். இதற்கும் அவர்களிடம் பதில் இருக்கிறது. ஏனென்றால் கடவுளே மனைவி,குழந்தைகளோடு,நகைகளுடன் தானே இருக்கிறார் என்று சொல்வார்கள். இப்படி மனிதர்களை நம்பி ஏமாறுவதற்கு நமக்கு தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது என்று வாழ்க்கையில் நம்பிக்கையோடு வாழ்வது பரவாயில்லை. தன்னை மட்டும் நம்புவனுக்கு கூட,நிலைமை சில சமயம் அவனை மீறிப் போகும்போது , விதியைதான் நம்ப தோன்றுகிறது.

நாமே வாழ்க்கையில் பார்க்கிறோம்.சிலர் நிறைய திறமைகளோடு இருப்பார்கள். நன்றாக முயற்சியும் செய்வார்கள். ஆனால் சிலருக்கு அப்ப்டி இல்லாமல் இருந்தாலும் அவர்களை விட நல்ல நிலைமையில் இருப்பார்கள். அதற்கும் அதிர்ஷ்டம், விதி, ஜாதகம், ராசி என்று ஆயிரம் காரணம் சொல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை பாவம், புண்ணியம் எல்லாம் நமது செயல்கள்தான். நம்மால் யாரும் பாதிக்கப்படாமல் , கஷ்டப்படாமல் இருந்தால் அதுவே போதும். நானும் சாமி கும்பிடுவது,விரதம் இருப்பது எல்லாமே செய்வேன். அது ஒரு வகை தியானம். யாருமில்லாத தீவில் ஒருவனை தனியாக விட்டால் அவன் ரொம்ப கஷடப்பட்டு பைத்தியம் போல் ஆகிவிடுவான். அவனே ஒன்னொருத்தர் கூட இருந்தால் அந்தளவு கவலைப்பட மாட்டான். அதே போல் வாழ்க்கையில் நாம கஷ்டப்படும்போது நம் மனக்கவலையை சொல்லி மன உளைச்சலில் விடுபட கடவுளை நாடுகிறோம். சந்தோஷம் அடைந்தால் நன்றி சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். விரதம் இருப்பது நமது மனம்,உடலை சுத்தப்படுத்துகிறது. அன்று நாம் பல சிந்தனைகள் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்துகிறோம். குறைவாக சாப்பிடுகிறோம். அதுவும் ஒரு வகை தியானமே(Meditation).

கஷ்டம் வந்தால் பேய்,பிசாசு,பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொல்வது ஒரு வகை எஸ்கேபிஸம். இதுதான் என் கருத்து. இன்னும் நிறைய பேசலாம் இதைப்பற்றி. மற்றவரின் கருத்தை அறியவும் ஆசைப்படுகிறேன்.

தேவா அவர்களுக்கு,

அருமையான பதிவு. ஒரு சூடான விவாதத்திற்கு களம் தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகத் தெளிவான கருத்துக்கள். சொல்ல வரும் விசயத்தை தைரியமாகவும், நேரடியாகவும் பூசி மெழுகாமல் சொல்லுவது நன்றாக இருக்கின்றது. உங்களுடைய பதிவுகளில் நான் விரும்பும் மற்றொரு அம்சம், உங்களது பிழையற்ற தமிழ். ற,ர,ல,ள,ழ, ன, ண குழப்பம் இல்லாமல் தெளிவாக பயன்படுத்துகின்றீர்கள். இப்போது அட்மினாக இருப்பதால் எனது கருத்துக்களை பின்னர் பதிவு செய்கின்றேன். எதிர்வாதத்திற்கு எதிர் கருத்துக்கள் தேவை. இன்னும் சிலர் பதிவுகள் செய்யட்டும்.

ஒரு நல்ல களத்திலே சூடானா ஒரு விவாதத்திற்கு அடித்தளம் போட்டு விட்டீர்கள். நல்லது.
நான் தேவா அவர்களின் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.என்னுடைய கருத்து, பில்லி, சூனியம், ஆவி என்று எதுவும் இல்லை.இறை வழிபாட்டினால், பிராத்தனைகளினால் மனம் லேசாகும். லேசான மனம் கவலை, பயம் இவற்றிலிருந்து விடுதலை தரும். மனத்தெளிவு உண்டாகும். இதனால் நம் வாழ்கையில் வெற்றிகள் எளிதகும். தோல்விகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடைக்கும். மனம் சக்தி மிக்க ஒரு ஆயுதம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பிராத்தனை, தியாணம், விரதம் இவை எல்லாம் நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத்தான்.

நினைத்து பாருங்கள். எப்பொழுதும் நாம் சொல்வதை கேட்க, நம் பிரச்சனைகளை கேட்க, உதவிட ஒருவர் துனையாக இருக்கிறார் என்றால் அதுவே நமக்கு தெம்பு தானே. ஒரு குழந்தைக்கு தாயின் அருகில் இருக்கும் போது உண்டாகும் ஒருவகையன பாதுகாப்பு. அவ்வளவு தான்.

ஒழுக்கம், கட்டுப்பாடு இவை சமுதாயத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களாகவே இவற்றை ஏற்பது சிரமம். அதற்க்குத்தான் இறைசக்தி. வேதங்கள், புராணங்கள் இவற்றின் கருத்துக்களில் இவைதான் மறைந்திக்கும். காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்திலும் மாற்றம் உண்டு.
மூடத்தனத்திற்கு இடம் தராமல் வாழ்கைக்கு நன்மை பயக்கும் விஷயங்களை மட்டும் ஏற்பதே அழகு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மிகவும் சரியாக சொன்னீர்கள். முக்கியமாக மூடத்தனத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற கருத்து அருமை. கடவுளை நினைத்து குறைகளை சொல்லும்போது அதற்கு ஒரு உருவம் இல்லாமல் இருந்தால், என்னவென்று நினைத்து பார்த்து வழிபடுவது என்பதாலும் கூட கடவுள் உருவம் படைக்கப்பட்டிருக்கலாம். எந்த விஷயத்துக்கும் உருவம் என்பது தேவைப்படுகிறது. முகம் தெரியாமல் யாருடனோ பேசுவதை விட ,அவர் உருவம் இப்படிதான் இருக்கும் என்று தெரிந்து பேசும்போது எளிதாக இருக்கும். அப்படி ஆரம்பித்துதான் ஆவி,பேய்,பிசாசு என்ற உருவங்களும் தோன்றியிருக்கலாம்.

அத்தனை மதங்களும் நீங்கள் கூறியது போல மக்களை நல்வழிப்படுத்த தோன்றியதே அன்றி எந்த மதத்திலும் சக மனிதர்களை வழிபடுவது குறித்து சொல்லப்படவில்லை. நமது பகவத் கீதையை முழுதாக படித்திருக்கிறேன். அது இன்றைய வாழ்க்கை முறைக்கு தேவையான அத்தனை கருத்தையும் சொல்கிறது. அதன் சாராம்சமும் நம்பிக்கை கொள் என்பதுதான். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சாத்தான் கூட கெட்ட எண்ணங்களே. அதையே அப்படி குறிப்பிடுகிறார்கள்.

திரு அட்மின் அவர்களுக்கு, மிக நல்ல கருத்தைப்பற்றி விவாதிக்க வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. என்னைப்பொருத்தவரையில் ஒருவருக்கு இறைவழிபாட்டின் மீது நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் இதுப் போன்ற நம்பிக்கைகளையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது என் கருத்து.

ஆன்மீகம் ஒருவருக்கு மன அமைதியைக் கொடுக்கும் பொழுது, இதுப் போன்ற பில்லி சூன்யங்கள் செய்வதாலும் ஒருவருக்கு மன நிம்மதியைக் கொடுப்பதில் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. எந்த மதத்திலும் கடவுளை போதிக்க இடைத்தரகர்கள் இருப்பதுப் போல் தான், பேய் பிசாசுவை ஓட்டுவதற்கென்று ஒரு இடைத்தரகர்கள் உருவாகி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.ஆகவே பூசாரிக்கும்,மந்திரவாதிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறுவேன்.

மேலும் இறைவழிப்பாட்டில் தோஷங்கள், மற்றும் பரிகாரங்களைப் போன்றது தான், பில்லி சூன்யமும். ஒன்று கடவுளை தூது விடுவது, மற்றொன்றுக்கு பிசாசுவை துணைத் தேடுவது அவ்வளவு தான்.ஆகவே ஆன்மீகமும் மூட நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை என்றே கூறுவேன்.

முடிவாக என்னுடைய கருத்து என்னவென்றால் கடவுள் முதல் பிசாசு வரை எந்த மதமானாலும் அனைத்துமே மனிதன் வியாபார நோக்கில் உண்டாக்கப்பட்டவைகள்.அதை நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொருத்தது. ஆனால் அவைகளில் யார்யாருக்கு எதில் நம்பிக்கை உள்ளதோ அதை கடைப்பிடிப்பதில் தவறில்லை.ஆகவே என்னைப் பொருத்தவரையில் கண்ணுக்கு தெரியாத கடவுளும், கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசும், எல்லாம் ஒன்று தான்.நன்றி.

இதில் என்னுடைய பதில் எனக்கு எந்த நேரிடையான அனுபவமும் இல்லை.கடவுளை நம்புகிறேன்.என் மத வழக்கபடி வாழ்கிறேன்.எல்லாவற்றிற்கும் கடவுளை நாடுகிறேன்.ஆனால் கடவுளை நேரடியாக பார்த்திருக்கிறாயா? என கேட்டால் என்னிடம் பதில் இல்லை.அதே பதில் தான் தீயசக்திகளூக்கும்.
தீயசக்திகளால் பீடிக்கபட்ட பல ம்னிதர்க்ளை கோவில்களில் பார்த்திருக்கிறேன்.தன்னிலை மறந்த நிலையில் அவர்களின் குழப்பமான செயல்கள் எனக்கு விடை தெரியாத விஷயமே. வேத நூல்களை கற்றுத்தேர்ந்தவர்களால் கூட இதற்கு சரியான விளக்கம் அளிக்கமுடிவதில்லை.காரணம் அனுபவமின்மை.மனித அறிவுக்கு எட்டாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று.இதில் நமது பதில்கள் அனைத்தும் வெரும் நம்பிக்கையே.

சகோதரி மனோகரி அவர்கள் சில கருத்துக்களை தைரியமாக முன் வைத்துள்ளார். அவர் குறிப்பிடும் விசயங்கள் இதுதான்.

1. கடவுளை நம்புகின்றவர்கள் பேய் பிசாசுகளையும் நம்பித்தான் ஆகவேண்டும்.
2. ஆன்மீகம் மன அமைதியைக் கொடுப்பதுபோல் பில்லி சூனியமும் சிலருக்கு மன அமைதியை கொடுக்கும்.
3. பூசாரிக்கும் மந்திரவாதிக்கும் வித்தியாசம் இல்லை. இருவருமே இடைத்தரகர்கள்தான்.
4. ஆன்மீகமும் மூட நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
5. கடவுள், பிசாசு எல்லாமே மனிதனால் வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை.
6. (அவரைப் பொறுத்தமட்டில்) கண்ணுக்கு தெரியாத கடவுளும் பேய் பிசாசும் ஒன்றே.

ஆஹா, களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதய்யா.. கடவுளை படைத்தது மனிதன் தான் என்ற ஒரு கருத்தை தைரியமாக முன் வைத்துள்ள சகோதரிக்கு மாற்று கருத்துள்ளவர்கள் பதில் தரலாம்.

அனைவருக்குமான ஒரு வேண்டுகோள்: கொஞ்சம் சென்ஸிடிவான டாபிக் இது. உங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தைரியமாக நீங்கள் முன் வைக்கலாம். தனி நபர், தனி மதத் தாக்குதல் இல்லாமல் நீங்கள் நம்புவதை, நம்பாததை தைரியமாக எடுத்துரையுங்கள். உங்கள் கருத்துக்களில் உள்ள நியாயங்களை எடுத்துக் கொண்டு எதிர் கருத்துடையோர் மனம் மாறலாம். இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டும் இருக்கட்டும்.

........மனதில் தெம்பில்லாதவர்கலுக்கு தான் மனநிலையும் எளிதில் பாதிக்கப்படும் அவர்களே இந்த பேய் ,பிசாசுகளையும் நம்புவார்கள்....ஏன் பார்க்கவும்,பேசவும் கூட செய்வார்கள்...அந்த பேயை ஓட்ட மந்திரவாதி தேவையில்லை ஒரு நல்ல மனநல மருத்துவரே போதும்........இந்த மந்திரவாதிகள் என்பதெல்லாம் ஒரு வகையில் மனநல மருத்துவருக்கு சமம்.......பேய் பிடித்தது என்று நம்பியவனுக்கு பேயை ஓட்டுபவனைத்தான் நம்பியாக வேண்டும்......மந்திரவாதியோ அவருக்கு அது வயிற்றுபிழைப்பு.....இலவசமாக பேயை ஓட்டும் யாரையாவது நீங்கள் பார்திருக்கிறீர்களா???சொல்லி ப்ரியோஜனம் இல்லை...இந்த உலகம் உருண்டு கொண்டே போவதற்கு எல்லா விதமான மனிதர்களும் தேவை

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். இது கடவுளுக்கும் பொருந்தும் எதிர்மரையான விடயங்களுக்கும் பொருந்தும். திருமூலர் அவரது திருமந்திரத்தில் கூறுகின்றார், மனம் அது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டம் என்று. உலகில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
நல்லன ஏற்று அல்லன நீக்கி வாழ்வாங்கு வாழ அனைவரும் பிறருக்கு துன்பம் செய்யாதிருத்தல் அவசியம்.

நல்ல தலைப்பு...சுவாரசியமான பல தகவல்களை எதிபார்க்கலாம்.

இயற்கையால் ஒரு செல் உயிரியாய் தோன்றி இன்று ஆறறிவு ஜீவனாய் பரிணாமம் எடுத்திருக்கும் மனிதன் தான் பார்த்து பிரமித்த நெருப்பு,மழை போன்றவற்றை தன்னை மீறிய சக்தியாக வழிபட ஆரம்பித்தான். கூடி வழிபட்ட சமுதாயக்கூடமே கோயில் ஆயிற்று. கோயிலில் கடவுளுக்கும் கூட உறவுகளைப் படைத்தான்.இரு தாரம் கொள்ளும் ஆசை வந்தபோது இறைவனுக்கும் அவ்வாறு ஏற்படுத்திப் பார்த்தான்.

இவ்வாறு கட்டுப்பாடின்றித் திரிந்த மனிதனைக் கட்டுக்குள் வைக்கக் கடவுளையும்,அச்சுறுத்த ஆவியையும் பூதத்தையும் படைத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அமைதியை விரும்பும் போது ஆன்மீகத்தையும், மனதில் தோன்றும் மிருகத்தை வெளிப்படுத்த பில்லி சூனியத்தையும் பின்பற்றுகிறான் மனிதன்.

சமீபத்தில் நம் தமிழகக் கோவில் ஒன்றில் பகைஉணர்ச்சியை வெளிப்படுத்த காசுகளை வெட்டிப்போடும் பழக்கத்தைப் பார்த்தேன்...ஆக சாமியும் பூதமும் மனதுக்கு வடிகால் மாதிரி...

தேக்கி வைக்கப்பட்ட மன அழுத்தம் ஒருவனை மனநோயாளி ஆக்குகிறது. கோவில்களில் சாமி ஆடுதல் கூட அதீத தாழ்வுமனப்பான்மையால் வரும் மனநோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்

ஆக, கடவுளும் பேய் பூதங்களும் மனிதனின் கற்பனைக்கு நல்ல உதாரணம் என்றே கூறலாம்

மேலும் சில பதிவுகள்