முகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை

இது 6 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அனுபவம். அக்னி நட்சத்திரம் முடிந்து சில வாரங்கள் ஆகியும் உக்கிரம் குறையாத சென்னை வெயிலில், ஊரில் இருந்து வந்திருந்த எனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, மில்கி வேயில்(milky way) ஒரு பவுல் ஐஸ்கிரீமையே மதிய சாப்பாடாக எடுத்துக் கொண்டு, மாலை பைகிராப்ட்ஸ் ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருந்த அமிர்தா ஐஸ்கிரீம் பார்லரில் அரைக்கிலோ வாங்கினால் அரைக்கிலோ ஐஸ்கிரீம் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்து, அதையும் வாங்கி, நண்பர்கள் சாப்பிட முடியாமல் ஒதுக்கி வைத்த அரைக் கிலோவை நான் மட்டுமே சாப்பிட்டு விட்டு, கொடுமையான வெயில் நாளை கொஞ்சம் நா குளிர செலவழித்தேன். இடையிடையே தாகத்திற்கு குடித்த ஏழு பாட்டில் குளிர்பானங்களை குறிப்பிடவேண்டாம் என்று நினைக்கின்றேன். புண்ணியம் செய்த ஒருவன் சென்னையில் இருப்பது அன்றுதான் வருண பகவானுக்கு தெரிந்தது போலும். இரவு கொஞ்சம் தூறலை அள்ளிவிட்டார். கொதிக்கும் வாணலியில் தெளித்த தண்ணீர் போல சென்னை நகர தார் சாலைகளில் மழை நீர் பட்டு, புகை கிளம்பிற்று. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிர்காற்று உடலை தழுவிய ஆனந்தத்தில், அன்று இரவு சாரல் தெறிக்கும் ஜன்னல் அருகில் சட்டை போடாமல், மெல்லிய குளிரை அனுபவித்தபடியே உறங்கிவிட்டேன்.

எல்லோருக்கும் விடிந்தது போல் எனக்கும் பொழுது சாதாரணமாகவே விடிந்தது. எப்போதும் போல் brush, paste, soap எல்லாம் எடுத்துக் கொண்டு வாஷ் பேஸின் செல்லும் வரை என்னால் வித்தியாசமாக எதையும் உணரமுடியவில்லை. பைப்பை திறந்து வாய் கொப்பளிக்க ஒரு கை நீரை அள்ளி வாயில் ஊற்றியபோதுதான் விபரீதத்தை உணர முடிந்தது. வாயின் ஒரு பக்கத்தில் இருந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தது. வாயில் இருந்த கொஞ்சம் தண்ணீரை, வாயை மூடி கொப்பளிக்க நினைத்தபோது இயலவில்லை. எல்லா நீரும் வலப்புற வாய் வழியே வெளியில் கொட்டியது. ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டு, மறுகணம் சுதாரித்து கண்ணாடியில் முகம் பார்க்க ஓடினேன். முகத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சியில் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்க வாய் கீழிறங்கி இருந்தது. ஒரு கண்ணை இமைக்கவே முடியவில்லை. வாயை முழுவதுமாக திறக்க முடியவில்லை. எனது முகம் ஒரு பக்கம் முழுமையும் செயலற்று போய் இருப்பதை உணர முடிந்தது. தேவர் மகன் காக்கா ராதாகிருஷ்ணன், தெனாலி ஜெயராம் என்று படங்களில் பார்த்த வாதம் வந்தவர்கள் ஒவ்வொருவராக மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தூங்கிக் கொண்டிருந்த என் நண்பர்களை அடித்து எழுப்பினேன். எல்லாருமே பயந்துவிட்டார்கள். எனது நண்பர் இம்மானுவேல் மட்டும் பார்த்த மாத்திரத்தில் சொன்னார்.. "பயப்படவே பயப்படாதீங்க பாபு, இதுக்கு பேரு முகவாதம், பதினைஞ்சே நாள்ல சரியாயிடும். எங்க அக்காவுக்கு இதேதான் வந்துச்சு. பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா போதும்." அவர் சொன்ன விதத்தைப் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. இருந்தாலும் பயம் நீங்கவில்லை. எனக்கு உடலின் எந்த பகுதியில் எவ்வளவு பெரிய காயம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் முகத்தில் சிறிய பரு வந்தால்கூட தாங்க முடியாது. இப்போது இப்படி ஒரு பிரச்சனை என்றதும் மிகவும் ஒடிந்துவிட்டேன். உடனடியாக ப்ரவுஸிங் சென்டருக்கு சென்று, நெட்டில் விபரங்கள் தேடினேன். பெல்ஸ் பால்ஸி அது இது என்று ஏதேதோ கொடுத்திருந்தார்கள். எதுவுமே எனக்கு மனதில் பதியவில்லை, ஒரே ஒரு தகவலைத் தவிர. இது எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சனை என்ற ஒன்று மட்டும்தான் பதிந்தது.

சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில், ஒரு நியுராலஜிஸ்ட்டை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிச் சென்றேன். எனது நண்பர் அதெல்லாம் தேவையில்லை, நீங்கள் ஒரு நல்ல பிஸியோதெரபிஸ்ட்டை பாருங்கள், அது போதும் என்று தடுத்தார். கேட்கவில்லை. எனது முகமாயிற்றே. அநாவசிய ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. டாக்டர் பார்த்தவுடனே எனது நண்பர் சொன்ன அதே வார்த்தைகளை எழுத்து மாறாமல் சொன்னார். முக அசைவுகளை கட்டுப்படுத்தும் ஏழாவது நரம்பில் உண்டான பாதிப்பால் வந்த பிரச்சனை இது என்று நான் நெட்டில் தேடி எடுத்த விசயத்தை எல்லாம் சொன்னார். நானும் சும்மா இருக்க முடியாமல் கொஞ்சம் தெரிஞ்சவனாக காட்டிக் கொள்ள, "பெல்ஸ் பால்சி யா டாக்டர்" என்று கேட்டு என்று நெட்டில் தெரிந்து கொண்ட இரண்டு மூன்று வார்த்தைகளைப் எடுத்துவிட்டேன். அவர் கொஞ்சம் ஆச்சரியமாகி, எப்படி தெரியும், படிச்சிருக்கீங்களா என்று கேட்டார். அப்போதாவது கொஞ்சம் சும்மா இருந்திருக்க வேண்டும். தற்பெருமை குணம் அடங்கவில்லை. "இல்லை டாக்டர் நான் நெட்ல பார்த்தேன், நான் சாப்ட்வேர் இஞ்சினியர்". அப்போது அவர் செய்த புன்னகைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. பின்னர் அவர் கொடுத்த பில்லில் தெரிந்தது. அதுமட்டுமல்ல. MRI ஸ்கேன், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று எல்லாவற்றையும் எழுதிவிட்டார். என் நண்பன் கொஞ்சம் பொறுமை இழந்துபோய் இதெல்லாம் தேவையா என்று கேட்க, பிரச்சனையின் தீவிரம் எந்த அளவிற்கு என்பது இந்த ஸ்கேன் மூலம்தான் தெரியும். அது சரியாக தெரியாமல் பிஸியோதெரபி போகக்கூடாது என்றார். எங்களால் பதில் பேச முடிவதில்லை. ஸ்கேன் செய்வதாக சொல்லிவிட்டு வெளியில் வந்தபோது என் நண்பன் சத்தம் போட்டான். உன்னை யாரு கம்ப்யூட்டர் இஞ்சினியர்னு எல்லாம் பந்தாவிடச் சொன்னது?

அதே ஹாஸ்பிடலில் இருந்த பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் பகுதிக்கு சென்று ஸ்கேன் அவசியமா என்று ஆலோசனை கேட்க சென்றோம். அங்கிருந்த ஃபிஸியோதெரபிஸ்ட் வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவரா' இருந்தார். விசயத்தை சொன்னவுடனே, ஸ்கேன் அது இதுன்னு பயமுறுத்தியிருப்பாங்களே என்றார். என்னுடைய முகத்தை கொஞ்சம் பரிசோதித்துவிட்டு ('வாயை மூடி பலூன் ஊதுவதுபோல் ஊதுங்க...' எங்க வாயை மூடுறது, எப்படி ஊதுறது?? சான்ஸே இல்ல.) ஸ்கேன் எல்லாம் தேவையில்லை. இது ரொம்ப சின்ன லெவல்தான். டெய்லி தொடர்ந்து 15 நாளைக்கு இங்க வாங்க. நான் சரி பண்றேன்னார். பதினைஞ்சு நாளைக்கு இப்படித்தான் அலையணுமான்னு மனசு ரொம்ப சோகமாச்சு. நல்லவேளை வாழ்நாள் முழுக்க இப்படி இருக்காம, 15 நாளோட விட்டுடுமேன்னு என்னை நானே தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் 15 நாளில் சரியாகிவிடுமா என்ற சந்தேகம் மட்டும் உள்மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் தொடங்கியது. முகத்தில் மெல்லிய அளவிலான மின்சாரத்தைப் பாய்த்து சிறிது சிறிதாக அதிர்வுகளை உண்டாக்கினார்கள். பிறகு வாயை குவித்து ஊதும் பயிற்சி, கன்னத்தை மேல் நோக்கி தேய்த்துவிடும் பயிற்சி.. இப்படி ஒவ்வொன்றாய் ஆரம்பமாயிற்று. ஒரு கண் எப்போது திறந்தே இருப்பதால், கண்ணில் எரிச்சல் உண்டாயிற்று. கூலிங் கிளாஸ் போட சொன்னார்கள். 'அற்பனுக்கு வாதம் வந்தால் அர்த்த ராத்திரியிலும் கூலிங் க்ளாஸ் போடுவானாம்' என்று புது (பழ)மொழி உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

ஐந்து ஆறு நாட்கள் ஆயிற்று. எனக்கு பெரிதாய் முன்னேற்றங்கள் எதுவும் தெரியவில்லை. சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, சிரிப்பது, பேசுவது என்று நான் சாதாரணமாக செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தேன். நான் அப்போது எப்படி சிரித்தேன் என்பதை எனது நண்பர்கள் இன்றும் இமிடேட் செய்து காட்டுவார்கள். என்னுடைய பிஸியோதெரபிஸ்ட் மட்டும் கரண்ட் வைக்கும்போதெல்லாம் எனக்கு நல்ல முன்னேற்றம் தெரிகின்றது என்பார். எனக்கு 7 நாட்கள் கழித்துதான் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. கண்ணை கொஞ்சம் மூடித் திறக்க முடிந்தது. கன்னத்திலும் இலேசாக உணர்வு இருப்பது போன்று பட்டது. கொஞ்சம் சந்தோசமானேன். அடுத்தடுத்த நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. 12 ஆம் நாள், ஓரளவிற்கு பழைய நிலைக்கு திரும்பிவிட்டேன். வாய் அசைவுகள் சரியாயிற்று, கண்ணும் சரியாயிற்று. முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. 12 நாட்களுக்கு பிறகு பிஸியோதெரபி சிகிச்சையை நிறுத்திக் கொண்டேன். அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு வரச்சொன்னார்கள். நான் செல்லாமல், ரூமில் இருந்தே முன்பு சொன்ன பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். 20 நாட்களுக்கு பிறகு முற்றிலும் குணமானேன்.

இன்று நான் இதனை கதை போல் சொன்னாலும், அன்று அனுபவித்த துயரங்கள் நிறைய. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மனதளவில் மிகப் பெரிய பாதிப்பு. 20 நாட்கள் யார் கண்ணிலும் படாமலே இருந்தேன். மேன்சனில் தங்கியிருந்ததால் வெளியில்தான் சென்று சாப்பிடவேண்டும். ஹோட்டல்ஸ் சென்று சாப்பிட முடியாது. சிறுகுழந்தை சாப்பிடுவதுபோல் எடுத்து வாயில் வைக்கும் உணவில் பாதி கீழே கொட்டிவிடும். நண்பர்கள் வந்தால் பார்த்து புன்னகைகூட செய்ய முடியாது. சாதாரணமாக சிரித்தாலும் நக்கலாக சிரிப்பது போல் இருக்கும். பழையபடி நான் சிரிப்பதற்கு ஒரு மாதம் ஆயிற்று. மறக்க முடியாத கொடுமையான அனுபவம் அது.

இந்த நோயைப் பற்றி எனது அனுபவத்திலும், படித்ததிலும் அறிந்துகொண்ட சில விசயங்கள் இங்கே கேள்வி பதில் பாணியில்..

1. இது என்ன மாதிரியான பிரச்சனை? பெயர் என்ன?

இதனை தமிழில் முகவாதம் என்றும் ஆங்கிலத்தில் facial paralysis என்றும் சொல்வார்கள். முகத்தின் ஒரு பக்கத்தில் உணர்வுகளே இல்லாமல் போவிடும். கண், தசைகள், வாய் என்று எதுவுமே ஒருபக்கம் இயங்காது.

2. இது எதனால் உண்டாகின்றது? யாருக்கெல்லாம் வரும்?

இது யாருக்கு வேண்டுமானாலும் வரும். பிறந்த குழந்தைகளுக்கு கூட வரும். பெண்கள், வயதானவர்கள் என்று யாருக்குமே வரக்கூடிய பிரச்சனைதான். கர்ப்பிணி பெண்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனது நண்பனின் சகோதரிக்கு அவர் கர்ப்பிணியாக இருந்த போதுதான் இந்த பிரச்சனை வந்துள்ளது. சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டாம்.

இது எதனால் ஏற்படுகின்றது என்பதற்கு மருத்துவ உலகம் ஒரு பட்டியலை கொடுக்கின்றது. அதில் முக்கியமானது "பெல்'ஸ் பால்சி (Bell's Palsy)"

முகத்தில் இருந்து செல்லும் முக்கியமான 7 வது நரம்பு பாதிக்கப்படுதல். இதுதான் பெரும்பான்மையான காரணம். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 40,000 பேருக்கு இப்பிரச்சனை வருவதாக இணையத்தளங்கள் குறிப்பிடுகின்றன. உலகில் 5000 ல் ஒருவருக்கு இப்பிரச்சனை வருகின்றதாம். (எதனால் இந்த பெயர் Bell's palsy? 200 வருடங்களுக்கு முன்பே முகத்தில் உள்ள நரம்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சர். சார்லஸ் பெல் என்பவர் பெயரையே இதற்கு சூட்டியிருக்கின்றனர்.)

இந்த பிரச்சனை ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவரையும் பாதிக்கின்றது. பாதிப்பின் அளவைப் பொறுத்து குணமாவதற்கான காலமும் இருக்கும். இது தொற்று நோய் அல்ல. ஆனால், ஒருமுறை வந்தால் மறுமுறை வருவதற்கு 4 ல் இருந்து 14 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.

பிரச்சனைகள்
வாயின் ஒரு பக்கம் உணர்வற்றுப் போய்விடும். திறந்து மூட இயலாது.
புன்னகைத்தால் ஒரு பக்கம் கோணிக்கொண்டு சென்றுவிடும்
வாயைக் குவித்து ஊதுதல் இயலாது. சாதாரணமாக நீர் குடிக்க இயலாது. உறிஞ்சுதலும் கடினம்.
பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண்ணை மூட இயலாது (சிலருக்கு கட்டுப்பாடு இழந்து கண் துடித்துக் கொண்டே இருக்கும்.)
கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும்.
பேச்சு மாறிவிடும்
நாக்கின் சுவையறியும் திறனும் மாறும்
முகம் ஒரு பக்கம் உணர்வற்று இருப்பதால், ஒரு வித வலி எப்போதும் உணரப்படும்.

நான் பிஸியோதெரபி சிகிச்சை எடுக்கும்போது அங்கு இதே போன்ற பிரச்சனையில் வந்திருந்த மற்றொருவரை சந்தித்தேன். அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? இரவு பேருந்தில் பயணிக்கும்போது ஜன்னலை திறந்து வைத்து, குளிர்ந்த காற்று முகத்தின் ஒரு பக்கம் அடித்து கொண்டிருக்குமாறு பயணித்து இருக்கின்றார். நிறுத்தம் வந்து இறங்கிய பின்னர்தான் அவருக்கு பிரச்சனை தெரிந்திருக்கிறது.

உங்களில் யாருக்கேனும் இந்த பிரச்சனை குறித்த அனுபவம் இருந்தால் இங்கே தெரிவிக்கலாம். இது சம்பந்தமான பிரச்சனையை மட்டும் இங்கே விவாதிக்கவும். வேறு பிரச்சனை எனில் புதிதாக ஒரு த்ரெட் ஓபன் செய்து கொள்ளவும்.

--

--

Facial paralysis can be treated effectively in ayurveda...

self-confidense is the key to open the door of happiness in your life
இது என் தோழிக்கு ஏற்ப்பட்ட அனுபவம். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் வரும்போது ஒரே இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமருவது அவளுக்கு வழக்கம்.காலை கல்லூரிக்கு வரும்போது 6.30 மணிக்கு வரும் போது பனிக்காற்றும் , மதியம் 3.00 மணிக்கு வீடு திரும்பும் போது வெப்பமும் ஒரே கன்னத்தில் பட்டதால் முகவாதம் வந்தது. ஃபிசியோத்தெரப்பி சிகிச்சைக்கு பின் முகம் சரியாகிவிட்டாலும் இன்றும் கண்களை மூடும் போது ஒரு கண் மெதுவாகத்தான் மூடும்.

self-confidense is the key to open the door of happiness in your life

இது எங்கள் வீட்டில் நாலு பேருக்கு நடந்தது...முதலில் என் கசின் அவ 9 மாத கர்பமா இருக்கப்ப நல்ல வெயில் காலம்னால குளிச்சுட்டு யார்சொல்லியும் கேக்காம ஈரத்தலையோட கீழ வெறும் நிலத்துல படுத்தா மதியம்...தூங்கி எழுத்ந்து பார்த்தப்ப இப்படி ஆகியிருந்தது...இது போலவே 1 மாதத்தில் சரியானது..அதன் பிறகு என் மாமாவுக்கு ....அதன் பிறகு என் அப்பாவுக்கு ஹெர்னியா சர்கெரி செய்து 4 ஆவது நாளில் இது போல் எழுந்து பல் தேஇக்கும்போழுது தான் தெரிந்தது....அப்படி அவருக்கும் 15 நாளில் ஓரளவு சரியானது..அவர் என் கசினுக்கு வந்ததால் விவரமாக தொடக்கத்திலேயே நியூராலஜிஸ்டை பார்த்து ஓடினார்....பிசியோதெரபியில் தான் அதிகம் சரியானது.....அது முடிந்து என் அம்மா ஒரு ஆக்சிடென்டில் கீழே விழுந்து இடுப்பில் சரியான அடி..எழுந்து 1 மாதத்துக்கு நடக்க முடியாமல் படுத்துக் கிடந்தார்கள்....அந்த நேரத்தில் விபத்து நடந்து 2 நாளில் இப்படி வந்தது...மற்றுள்ளவர்களை விட மனதளவில் பாதிக்கப் பட்டது அம்மா தான்.....மற்றவர்கள் யாருக்கும் தலை காட்டாமல் வீடுக்குளேயே இருந்ததால் அதிகம் பேச்சுக்களை கேக்க வாஇப்பிருக்கவில்லை...அம்மாவுக்கு விபத்து நடந்தது கேள்விப்பட்டு வந்து பார்ப்பவர்களுக்கு ஆச்சைர்யம்..இது விபத்தால் வந்தது என்று கன்டபடி கெட்டுக் கதை வேற.....அம்மா நல்ல வேதனையில் இருந்தார்.....நடக்கவும் முடியாமல் முகமும் இப்படி....வலி வேறு பக்கம்..நல்ல கஷ்டத்தை அனுபவித்தார்.....எனக்கு இது விபத்தி,சர்ஜெரி கூட கூட ஏதோ லின்க் இருக்கோன்னு தோனுது,......அப்பாவுக்கு 1 நாளாஇக்கு முன்னிருந்தே கன்னம் மறத்துப் போவது போல் இருந்ததாம்...அது போலவே அம்மாவுக்கும் இர்யுந்ததாம்....அதனால் கன்னம் மறத்து போவது போல் தோன்றும் போதே நியூராலஜிஸ்டை பார்த்து அவர் சொல்படி கேட்டால்ல் முகம் கோடிப் போவதை தவிர்ரக்/குறைக்கலாமாஅம்..
அப்பாவிக்கு அட்மின் சொன்னது போல் எல்லாம் செய்து மாறியது..அம்மாவுக்கு வேற மருத்துவர்..அவர் அம்மாவிடம் எப்பவும் சூயிங் கம்மை மென்று கொன்டே இருக்கவும்...மற்ற நேரங்களில் பலூன் போல வாயை ஊதுவது போல செய்தும் அது போல வேறு சில உடற்பயிற்சிகளையும் செய்யச் சொன்னார்...அம்மாவுக்கு இப்பொழுதும் முழுமையாக சரியாகவில்லை...பார்த்தால் தெரியாது,,இருந்தாலும் ஒரு கண் மெல்ல தான் மூடும்..சிரிக்கும்போது கொஞ்சம் தெரியும்..அம்மாவுக்கு 2 மாதம் ஆனது ஓரளவுக்கு சரியாக.....அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது....உடம்பிலும் அடியும் வலியும்,,முகத்தில் கண் மூடாமல் தூஸு விழுந்து வீங்கி சிவந்து...அப்படி நாலு பேருக்கு இப்படி ஆனது.......அம்மாவுக்கு இன்றும் குளுமையான பொருட்களை சாப்பிட பயம்....ஐஸ் க்ரீம் அல்லது குளிர் பானம் குடித்தால் 5 அ 6 மனிநேரத்தில் கன்னம் மறத்துப் போகத் தொடங்கி விடும்..பிறகு கண்ணத்தை வட்டமாக தடவும் ஒரு வித உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்திருக்கிரார்கள் அதை செய்து செய்து சரியாகிவிடும்.......அட்மின் சொன்னது போல் கொடுமையான மனதளவில் பாதிக்கக் கூடியது இது.......இது போல் யாருக்கேனும் சிம்ப்டம்ஸ் தோப்றினால் உடனே அவ்வளவு சீக்கிரம் போகமுடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் மருத்துவரை அனுகினால் சீக்கிரத்தில் குனமடைந்து விடலாம்....தாமதமானால் முகம் அப்படியே பாகிவிட வாஇப்புள்ளது.

தளிகா:-)

vaathanarayanan enRu oru mooligai uLLathu athai podi seythu kaalai veRum vayiRRil uNNa perumpaalaana vaatham theerum

bell's palsy-யே குணபடுத்த முடியுமா? pls தெரிந்தவர்கள் inform me with your phone number.conduct soon my phone no-9944776699 . பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் மட்டும் போதுமா?

Help me I am suffering from Bell's palsy for 2years

Pls Number 7010399474

மேலும் சில பதிவுகள்