சந்தவை (இனிப்பு)

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1 கிலோ,
உப்பு - தேவையான அளவு.
தேங்காய்ப்பாலுக்கு:
===============
தேங்காய் - 1,
சர்க்கரை - 1 டம்ளர்,
ஏலக்காய் -4.
வெல்லப்பாகுக்கு:
================
வெல்லம் - 1/4 கிலோ,
எள் - 1 தேக்கரண்டி,
ஏலக்காய் - 3,
பொட்டுக்கடலை மாவு - 1தேக்கரண்டி.


 

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
கடைசியாக எடுக்குமுன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
எடுத்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.
சந்தவை பிழிவதற்கு என தனியாக ஒரு நாழி விற்கிறது.
இட்லி வெந்ததும், அடுப்பில் வைத்துக் கொண்டே சூடாக நாழியில் இரண்டு இட்லிகளை போட்டு பிழியவும்.
இதே போல எல்லா இட்லிகளையும் பிழியவும். எல்லாமாவிலும் சேவை செய்து கொள்ளவும்.
தேங்காயைத்துருவி மிக்ஸியில் ஏலக்காய் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் பிழிந்து, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
வெல்லத்தை பொடித்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதி விட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து, பொட்டுக்கடலை மாவை சேர்த்து பாகில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இரண்டுமே சந்தவைக்கு ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும். தேவைப்பட்டால் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.


மாவு ரொம்ப கெட்டியாகவோ, தண்ணியாகவோ இருக்கக் கூடாது. இட்லி சூடாக இருக்கும் போதே பிழிய வேண்டும், இல்லையேல் பிழிய கஷ்டமாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் செல்வி அம்மா,
எங்க வீட்லயும் சந்தவை செய்வாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை செய்யணும் ஆசை ஆனால் என்கிட்ட சந்தவை நாழி இல்லை வேற எப்படி இதை செய்யலாம். சொல்லுங்க அம்மா உங்க பதிலுக்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

வணக்கம் சுஜி எங்க வீட்லையும் சந்தவை செய்வாங்க.எனக்கும் ஒருமுறை ஆசையாக இருந்தது அதை சாப்பிடனும் போல என்னிடமும் சந்தவை நாழி இல்லை என்ன செய்வதென்று யோசித்தேன் என்னிடம் கன் போன்று முருக்கு பிழியும் அச்சு இருக்கிறது அதில் ட்ரை பண்ணினேன் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது ஆனால் செய்துவிட்டேன்.நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.செல்விம்மா வேறு ஏதேனும் ஜடியா கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன் தீபா

ஹாய் தீபா, நானும் அதை தான் யோசிச்சு வச்சு இருக்கேன்.
வேற எதாவது வழி இருக்கான்னு கேட்கலாம்னு தான் இந்த பதிவை போட்டேன்.
நானும் அதுலேயே ட்ரை பண்ணி பார்க்கறேன். ரொம்ப தேங்க்ஸ் எனக்காக நீங்க சொன்னதுக்கு.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

சுஜி நான் கூட இன்று செய்யலாம் என்று இருக்கிறேன்.நாங்கள் மாவில் தேங்காய் சேர்த்து ஆட்டுவோம்.நேற்று பொங்கலுக்கு இரண்டு தேங்காய் உடைத்தேன் அதை யூஸ் பண்ணனும்
அன்புடன் தீபா

அன்பு சுஜி,
சாரிம்மா, உடம்பு சரியில்லாம அறுசுவைக்கெ வரலை. இப்பத்தான் பதிவை பார்த்தேன். தீபு சொன்ன மாதிரி அந்த முறுக்கு குழாயில் செய்யலாம். கொஞ்சம் கஷ்டமா இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டாம். சில சமயம் கண் அடைத்துக் கொள்ளும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.