முக்கிய அறிவிப்பு - கூட்டாஞ்சோறு குறிப்புகள் கொடுப்போர் கவனத்திற்கு

இந்த முக்கியமான பதிவை சில வாரங்களுக்கு முன்பே பதிவு செய்ய நினைத்தேன். சர்வர் மாற்றும் பணியில் இருந்ததால் அதை உடனடியாக செய்ய முடியவில்லை. தற்போது ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இதை அவசர அவசரமாக பதிவு செய்கின்றேன்.

முதலில் கூட்டாஞ்சோறு பகுதியின் நோக்கம் குறித்து ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகின்றேன். அறுசுவை ஆரம்பித்த காலத்தில் அனைத்து குறிப்புகளையும் நாங்களே சேகரித்து வெளியிட்டு வந்தோம். குறிப்புகளை தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று அனைவரிடமும் சென்று கேட்டு சேகரித்து வெளியிட்டு வந்தோம். அந்த குறிப்புகள் போதாத நிலையில் குறிப்புகள் சேகரிக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டோம். அதில் மிகவும் வெற்றிகரமான ஒன்று, சமையல் போட்டிகள் நடத்தியது. ஒவ்வொரு ஊராக சென்று சமையல் போட்டிகள் நடத்தி, அதில் கலந்து கொள்பவர்களிடம் குறிப்புகள் எழுதி வாங்கி, அதனை அறுசுவையில் வெளியிடும் அனுமதியையும் பெற்று பிறகு அவற்றை வெளியிட்டோம். இதில் பல்லாயிரக்கணக்கான குறிப்புகள் எங்களுக்கு சேர்ந்தன. குறிப்புகள் உரிமையும் எங்களிடம் இருந்தது. குறிப்புகள் அனைத்தும் கொடுப்போரின் சொந்த குறிப்புகளாக இருந்தன. ஆனால் நாங்கள் சேகரித்த குறிப்புகள் அனைத்தையும் வெளியிடவில்லை. நாங்கள் சேகரித்த குறிப்புகளில் பாதியளவுகூட வெளியிடவில்லை. காரணம், ஒரு நேரத்திற்கு பின்பு அறுசுவைக்கு வருகை புரிவோர் அவர்களது குறிப்புகளை வெளியிட விரும்பியதுதான். அதன்பிறகு அறுசுவை தளத்தினை முற்றிலும் மாற்றியமைத்து, தற்போது உள்ளவாறு புதிய தளமாக செய்தோம். இதில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்து, அவர்கள் அறிந்த சமையல் குறிப்புகளை வெளியிடுமாறு செய்தோம்.

இதில் பல நன்மைகள் இருந்தன. குறிப்புகள் வெளியிடுவோர் தாங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. குறிப்புகள் வெளியிடுவோர் அறுசுவையை தொடர்ந்து பார்வையிட்டு வருவதால், குறிப்புகள் பற்றி வாசகர்கள் யாருக்கேனும் ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால், அவற்றுக்கு விளக்கம் கொடுக்கவும் முடிந்தது. அறுசுவையின் வளர்ச்சிக்கும் அது உதவியது. இந்த கூட்டாஞ்சோறு பகுதி நீங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்வதற்கு உதவிடும் ஒரு பகுதி. ஆனால், சமீபத்தில் இது ஒரு போட்டிக்களமாக மாறிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டது உண்மையில் வருத்தத்திற்கு உரிய விசயம். இதனை அறுசுவையை பார்வையிடும் வருகையாளர்கள் பலர் தெரிவித்துவிட்டனர். கொடுக்கும் குறிப்புகளின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு, புத்தகங்களில் வெளியாகியுள்ள குறிப்புகளை எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

கூட்டாஞ்சோறு பகுதியில் உறுப்பினர்களை இணைக்கும்போதே அதன் விதிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துதான் இணைக்கின்றோம். குறிப்புகள் உங்களது சொந்த குறிப்புகளாக இருக்கவேண்டும் என்பது மிக முக்கிய விதி. அந்த விதி மீறும் செயலை செய்வது மிகவும் வருத்தத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது. இது அறுசுவையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்புகள் கொடுத்துவரும் உங்கள் மீது வருகையாளர்களுக்கு உள்ள நம்பிக்கையையும் குலைக்கும்.

மிகக்குறைந்த குறிப்புகளே கொடுத்தாலும் மிக அருமையான குறிப்புகளை கொடுத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர். இப்படி புத்தகங்களில் இருந்து எடுத்து போடலாம் என்றால் ஒரே நாளில் அறுசுவையில் இலட்சம் குறிப்புகள் கொடுத்துவிடலாம். எனவே கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதனை பொதுவான (கண்டிப்பான) வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். எல்லோருமே பழக்கமானவர்கள் என்பதால் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கூறவிரும்பவில்லை. அது தர்மசங்கடத்தை உண்டாக்கும். இப்படி பொதுவாக கொடுப்பதாலும் யாரும் வருந்தவும் வேண்டாம். இது தவறு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும்.

இப்படி ஒரு பதிவினை அவசர அவசரமாக கொண்டு வரக் காரணம், கூட்டாஞ்சோறு உறுப்பினர் ஒருவர், ஒரு பிரபலமான எண்ணெய் நிறுவனம் கொடுத்த இலவச குறிப்புகள் புத்தகத்தில் உள்ள குறிப்புகளை அப்படியே எடுத்து இங்கே வெளியிட்டு இருப்பதுதான். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு அந்த புத்தகத்தின் பிரதியும், விளக்கம் கேட்டு மின்னஞ்சலும் வந்துள்ளது. அவர்கள் சில நாட்களுக்கு முன்பே இதனை அனுப்பி இருக்கின்றனர். மெயில் சர்வர் பிரச்சனையால் அதனை என்னால் பார்வையிட முடியவில்லை. என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் கேட்டபிறகுதான் நான் அதனை பார்த்தேன். இது பெரிய பிரச்சனையாகும் முன்பு நாம் செய்யவேண்டியது, அந்த குறிப்புகள் அனைத்தையும் உடனடியாக நீக்குவதுதான். இதனை செய்திருப்பவர் அறுசுவையில் நீண்ட நாட்கள் பங்களிப்பவர் என்பதாலும், எல்லோரையும் நன்கு அறிந்தவர் என்பதாலும் அவரது பெயரை நீக்கம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவர் உடனடியாக அப்படி எடுத்து வெளியிட்ட குறிப்புகள் அனைத்தையும் நீக்க வேண்டும். வேறு எந்த புத்தகத்தில் இருந்து எந்த குறிப்புகளாவது எடுத்து வெளியிட்டு இருந்தால், அதனையும் உடனே நீக்க வேண்டும். அவர் அப்படி செய்ய தவறும்பட்சத்தில் அவரது பெயரை நீக்குவதின் மூலம்தான் என்னால் அந்த குறிப்புகளை நீக்க முடியும். எனக்கு எந்த எந்த குறிப்புகள் என்பது தெரியாது. எனவே ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் நீக்குவதுதான் நான் அறிந்த ஒரே வழி. அதற்கு இடம்கொடாமல் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உடனடியாக அந்த குறிப்புகளை நீக்கவேண்டும்.

அறுசுவையை தற்போது எல்லாத்தரப்பினரும் பார்வையிடுகின்றனர். இதனை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எங்காவது இது போன்ற தவறுகள் ஏற்பட்டால் அதனை உடனே எடுத்துக்கொடுத்துவிடுவார்கள். எல்லாக்குறிப்புகளையும் பரிசோதித்து வெளியிடுவது என்பது எங்களால் இயலாத காரியம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உங்களை குறிப்புகள் கொடுக்க அனுமதிக்கின்றோம். அதனைக் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது.

எல்லோருக்குமான வேண்டுகோள்.

நான் இந்த தளத்தினை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் நடத்தி வருகின்றேன் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். எனக்கு பலவகையில் உதவியாய் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதே சமயத்தில் இதுபோன்ற சில தவறான செயல்கள் ஒட்டுமொத்தமாக அறுசுவையின் வளர்ச்சியை பாதிக்கும். இவ்வளவு நாட்கள் சிரமப்பட்டு வளர்த்து வந்த அறுசுவைக்கு அவப்பெயர் வரும் பட்சத்தில் அதை உண்டாக்குபவர் யாராய் இருப்பினும் அவர்கள் மீது தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இதில் நமது நட்பு பாதிக்கப்படலாம். ஆனால், அறுசுவை என்ற ஒரு வளர்ந்து வரும் தளம் பாதிப்பில்லாமல் செல்லும். தனிநபரா, அறுசுவையா என்னும்போது நான் அறுசுவை பக்கம்தான் சாய்வேன். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பதிவு மன்றத்தில் தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை எழுதுகின்றேன்.

நான் இப்படி பொதுவாக கொடுத்திருப்பதால், தவறு செய்யாதோர் யாரும் வருந்த வேண்டாம். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் தாங்கள் நேர்மையானவர் என்பது. மற்றவர்கள் யூகங்களைப் பற்றி கவலைக்கொள்ளாதீர்கள். என்னுடைய நிலையில் நான் இதனை இப்படித்தான் வெளிப்படுத்த இயலும். சம்பந்தப்பட்டவருக்கு தனிமின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். இருப்பினும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கே பொதுமன்றத்தில் வெளியிட வேண்டியது எனக்கு அவசியமாகின்றது.

அட்மின் சார் ரொம்ப அருமையான, அவசியமான பதிவு.
யாராவது அடுத்து சொன்ன நல்லா இருக்காது!!!!!
யார் சொன்னா நல்லா இருக்குமோ அவங்களே தேவையான விளக்கத்தோடு தெளிவா கொடுத்து விட்டதால் இப்பொழுது எந்த ப்ரோப்லேமும் இல்ல பாருங்க.

இப்படிக்கு
இந்திரா

indira

அட்மின் சார் இத நான் எதற்காக இப்படி வரவேற்கிறேன் என்றால், சில நாட்களாகவே நான் யோசித்ததுண்டு.
நாம் ஏன் அட்மினுக்கு நம் ஆரயிசிகட்டுரையில் (Research findings - it should be reviewed by more than two reviewers then only it would acceptable for publication in journals) பின்பற்றபடுவதை தெரியபடுத்தக்கூடாது என்று.
பிறகு யோசித்தேன், சர்வதேச அளவில் இணையதளம் நடத்த ஆரம்பிக்க போதே எதாவது விதிமுறை இருக்கும் , நமக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கும், அல்லது வேறுசில காரணங்களால் இப்படி நடக்கலாம் ஆனால் என்றாவது ஒரு நல்ல நாளில் இப்படி ஒரு அறிவிப்பு வரும் என்று எதிபார்ததுதான்.

நன்றி
இப்படிக்கு
இந்திரா

indira

பொதுவாக காப்பிரைட் விதிமுறைகள் சிறிது சிக்கலானவை. எவையெல்லாம் காப்பிரைட் உரிமம் பெற தகுதியுடையவை என்பதற்கு விதிகள் உள்ளன. அந்த விதிகளில் சில சறுக்கல்களும் உள்ளன. இங்கே கொஞ்சம் அலசலாம்.

நான் மேலே கொடுத்திருந்த பதிவை பார்த்தபின்பு பலருக்கும் பலவித சந்தேகங்கள் வந்து என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அதில் முக்கிய சந்தேகம், பலரும் புத்தகங்களைப் பார்த்து, படித்தறிந்து சமையல் கற்றுக்கொண்டதையும், அதனை குறிப்புகளாக இங்கே கொடுத்துள்ளதையும் குறிப்பிட்டு இருந்தனர். அவை விதிமீறலா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டு உணவுகளும் இருக்கின்றன. விலங்குகளைப் போல் ஆரம்பத்தில் பச்சையாக அனைத்தையும் சாப்பிட ஆரம்பித்த மனிதன் படிப்படியாக சமைத்து சாப்பிட கற்றுக்கொண்டான். காலப்போக்கில் சமையல் என்பது ஒரு கலையாயிற்று. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு இருந்த உணவு வகைகளையும், இப்போது நாம் நமது இல்லங்களில் தயாரித்து சாப்பிட்டு வரும் உணவுவகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும், இந்த கலை எந்த அளவிற்கு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது.

இந்த மாற்றங்கள், வளர்ச்சிகள் எல்லாம் ஒரு தனிநபராலோ, ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினராலோ கொண்டு வரப்பட்டவை அல்ல. எல்லோருடைய பங்களிப்பிலும் படிப்படியாய் அடைந்த மாற்றங்கள் இவை. எனவே, இந்த உணவை இவர்தான் கண்டுபிடித்தார், இதை இவர்தான் முதன்முதலில் தயாரித்தார் என்று சொல்லக்கூடியவை எவையும் இல்லை.

வெளிநாடுகளில் சில வகை பானங்கள், சில நிறுவன உணவுகளுக்கு பேட்டண்ட் உரிமம் பெற்றுள்ளனர். இந்தியாவில் அப்படி பெறப்பட்ட உணவுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக, நமது இட்லியை எடுத்துக்கொண்டால், அதனை கண்டுபிடித்தவர் யார் என்பது நமக்கு தெரியாது. அதற்கு தனிநபர்கள் யாரும் உரிமம் எதுவும் கோர இயலாது. ஒரு சாதாரண இட்லியின் செய்முறையை எடுத்துக்கொண்டால், அரிசி, உளுந்தினை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எடுத்துக்கொண்டு அரைத்து, உப்பிட்டு, இட்லியாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுத்தல் வேண்டும். யார் இதற்கு குறிப்பு எழுதினாலும் செய்முறையை இப்படித்தான் எழுத இயலும்.

எனவே இட்லி தயாரிப்பதற்கான பொருட்கள் கொடுப்பதிலோ, அதனை தயாரிக்கும் முறைக்கோ ஒருவர் பதிப்புரிமை பெற இயலாது. சமையல் குறிப்புகள் எல்லாம் சட்டத்தின்படி "literary works" என்ற வகையில் சேர்க்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் அவை விளக்கப்படும் விதத்தை மட்டுமே நாம் காப்பிரைட் விதிக்குள் கொண்டுவரமுடியும்.

இட்லியை நான் செய்யும் செய்முறையிலேயே அவரும் செய்து குறிப்பு கொடுத்துள்ளார் என்று யாரும் கூக்குரலிட முடியாது. நான் எடுத்துக்கொண்ட அளவுகளையே அவரும் எடுத்துக்கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட முடியாது. தேவைப்படும் பொருட்களின் அளவுகள் காப்பிரைட் விதிமுறைக்கு கட்டுப்படாது. ஒருவர் குறிப்பில் கொடுத்துள்ள அதே அளவு பொருட்களை மற்றொரு குறிப்பில் கொடுத்தால் அவை தவறு அல்ல. ஆனால், செய்முறையை விளக்கும் பாங்கு காப்பிரைட் விதிகளுக்கு உட்பட்டது. ஒருவர் குறிப்பில் செய்முறையை எப்படி விளக்கியுள்ளாரோ, அதே வார்த்தைகளைப் போட்டு அப்படியே எழுதுவது காப்பிரைட் விதிகளின்படி குற்றம். இந்த குற்றம் கிரிமினல், சிவில் இரண்டு பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்க தகுதியுடையது. இதில் நஷ்டஈடு கோரவும் வழியுண்டு.

அறுசுவையில் வெளியாகி உள்ள குறிப்புகளை அனுமதியின்றி ஒருவர் அப்படியே எடுத்து, மாற்றங்கள் செய்யாமல் வெளியிட்டார் என்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதேபோல் வேறு ஊடகங்களில் வெளியாகி உள்ளவற்றை இங்கே வெளியிட்டாலும் இதே நடவடிக்கை செல்லும்.

அடுத்து ஒரு முக்கியமான விசயம், இரண்டு தளங்களில் ஒருவர் ஒரே மாதிரி குறிப்புகள் கொடுப்பது.

இது அந்த தளங்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டது. அறுசுவை நிபந்தனைகளின்படி, அறுசுவைக்கு குறிப்புகள் கொடுப்போர் மற்ற தளங்களில் குறிப்புகள் கொடுக்க தடை எதுவும் இல்லை. ஆனால், இங்கே அறுசுவையில் கொடுத்துள்ள குறிப்புகளை அப்படியே எழுத்து மாறாமல் மற்ற தளங்களில் கொடுப்பது குற்றம். அப்படி நடந்ததென்றால், இரண்டாவதாக குறிப்புகளை வெளியிட்ட தளத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அறுசுவை நிபந்தனைகளின்படி கொடுக்கப்படும் குறிப்புகள் அனைத்தின் உரிமையும் அதனை வெளியிடும் எங்களைச் சாரும். இதனை மாற்றியமைக்க, வேறு விதங்களில் பயன்படுத்த அனைத்து உரிமைகளையும் வெளியிடும் நாங்கள் பெற்றுள்ளோம். நான் மேலே குறிப்பிட்டு இருந்ததுபோன்ற தவறுகள் நிகழும்போது அதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலையிலும் நாங்கள்தான் இருக்கின்றோம். எனவே, இது நான் கொடுத்த குறிப்பு, இதனை நான் எங்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று ஒரு குறிப்பை அச்சுமாறாமல் வேறு தளங்களில் கொடுப்பதற்கு குறிப்புகள் கொடுப்போர்க்கு உரிமை இல்லை. அப்படி நீங்கள் கொடுக்க விரும்பும்பட்சத்தில் செய்முறை விளக்கத்தினை மாறுதலுக்கு உள்ளடக்கி வெளியிடவேண்டும். மாற்றாமல் நீங்கள் குறிப்புகளை கொடுத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. ஆனால், அதனை வெளியிட்ட தளத்தின்மீது நடவடிக்கை எடுக்க இயலும். அவர்கள் வேண்டுமானால் அவர்களின் நிபந்தனைகளின்படி உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே, விதிமுறைகளைப் பொறுத்தமட்டில் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இணையத்தில் ஏராளமான இடங்களில் காப்பிரைட் விதிகள் வரம்பு மீறப்படுகின்றன. நடவடிக்கை என்று இறங்க ஆரம்பித்துவிட்டால், நிறைய பேர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். விதிமுறைகளை விளையாட்டாக எண்ணிவிடவேண்டாம்.

மேலும் சில பதிவுகள்