கதை சொல்லி (தினம் ஒரு கதை)

விடியோ கேம்ஸ் மற்றும் இன்ன பிற பொழுதுபோக்குகள் எல்லாம் நம் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்துக்கொள்ளுகின்றன். கதை கேட்கும் நேரத்தை , பழக்கத்தை இவைகள் குழந்தைக்ளிடமிருந்து பறித்துகொள்கின்றன.உண்மையில் கதை கேட்பது கற்பனை சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கும் கேள்வி கேட்கும் ஆற்றலை அதிகரிக்கும்.எனவே தெரிந்தவர்கள் அனைவரும் ஒரு நீதிக்கதையை இந்த பதிவில் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கதை நீங்கள் கேட்டதாகவோ அல்லது படித்ததாக்வோ இருக்கலாம்.இது நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லவும் , இன்ன பிறர் தெரியாத கதைகளை படித்து அவர்களின் பிள்ளைகளுக்கு சொல்லவும் பயன்படும்.

இந்த பதிவின் ஆரம்பமாக இன்று ஒரு கதை

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

என் குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்வேன். நடந்த சம்பவத்தைக்கூட கதை மாதிரி சொல்லிடுவேன். சொந்த சரக்கை வேற அப்பப்ப எடுத்து விடுவேன். என் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் என் தம்பி, தங்கை குழந்தைகள், என் அக்காவின் பேரன்கள் இன்னும் எங்கள் வீட்டு வாண்டுகளுக்கு நான் சொன்ன் ஒரு கதையைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.

ஒரு கிராமத்தில ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஒரு பெரிய பொந்து. அதில் ஒரு பெரிய எலிக் குடும்பம். தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மாமி, அத்தை, அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகள் எல்லாம் இருந்தாங்க. வயல் வெளி எல்லாம் இருந்ததாலே அவங்களுக்கு பஞ்சமில்லாம உணவு கிடைச்சுது. அந்த குடும்பத்திலே ஒரு குட்டி எலி பிறந்தது. கொஞ்சம் பெரிசானதும் அது அங்கயும் இங்கயும் ஓட ஆரம்பிச்சுது.
அப்பதான் அந்த கிராமத்துக்கு டவுன் பஸ் விட்டாங்க. ஒரு நாள் அந்த குட்டி எலி அந்த பஸ்ஸுக்குள்ள ஏறித்தாம். பஸ் டவுனுக்கு வந்ததும் குதிச்சு பக்கத்தில இருந்த வீட்டுக்குள்ள போச்சாம். ஒரு டேபிள்லே என்னமோ வாசனையா வெச்சிருந்தாங்களாம். அதை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுதாம். ரொம்ப டேஸ்டா இருந்துதாம். தினமும் இப்படியே வந்துட்டுப் போச்சாம்.
அந்த வீட்டுப் பையன் அம்மா கிட்ட இப்பல்லாம் நீங்க ஏன் எனக்கு கொஞ்சமா பிஸ்கெட் கேக் எல்லாம் வெக்கறீங்கன்னு கேட்டானாம்.
இல்லயே நிறையதானே வெச்சேன்னு அம்மா சொன்னாங்களாம்.
இங்க இந்த குட்டி எலி அதோட அம்மா கிட்ட டவுன்லே ஒரு வீட்டுலே ஒண்ணு சாப்பிட்டேன். சூப்பரா இருந்துதுன்னு சொல்லித்தாம். அதுக்கு அந்த அம்மா எலி டவுனுக்கெல்லாம் போகாதே அங்க இருக்கறவங்க உன்னை கொன்னுடுவாங்கன்னு சொல்லித்தாம்.
ஆனா மறுநாளைக்கு நைசா பஸ் ஏறி டவுனுக்கு போயிடுத்தாம். அந்த வீட்டிலே அந்த பையனோட அம்மா ஒளிஞ்சுண்டு யார் பிஸ்கெட், கேக்கையெல்லாம் எடுக்கறாங்கன்னு பார்த்தாங்களாம். இந்த்க் குட்டி எலி நைசா டேபிள்லே இருந்த கேக்கை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுதாம். ஆஹா இந்தக் குட்டி எலிதானான்னு அந்த அம்மா ஒரு கட்டையை எடுத்து வீசினாங்களாம். அது எலிக்குட்டியோட வாலிலே பட்டு வால் கட் ஆயிடுத்தாம். தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு ஆலமரத்தடிக்கு வந்துதாம். அதோட அம்மா எலி சொல்லித்தாம். இங்க பாரு கண்ணு ந்மக்கு இங்க கிடைக்கிற தானியம் எல்லாமே போதும். நான் சொன்னதை நீ கேக்கலை. இப்ப பாத்தியா. வால் கட் ஆயிடுத்து. இனிமே அங்க போகாதேன்னு சொல்லித்தாம்.
மறுநாள் குட்டி எலி அம்மா கிட்ட அம்மா நான் இன்னிக்கு மட்டும் போய் அந்த துண்டு வாலை எடுத்துண்டு வந்துடறேன். எனக்கு தெச்சு விட்டுடுன்னு சொல்லித்தாம். அம்மா எலி வேண்டாம்பா போகாதேன்னு சொல்லிட்டு வேலைக்குப்போயிடுத்தாம். குட்டி எலி பஸ் ஏறி டவுனுக்குப் போச்சாம். அந்த பையனோட அம்மா மறு படியும் வந்துட்டியான்னு ஒரு பெரிய கட்டையை எடுத்து வீச அந்த எலி அம்மான்னு கத்திண்டே விழுந்து செத்துப்போச்சாம். அங்க அம்மா எலி குழந்தையைக் காணாம அழுதுண்டே இருந்ததாம்.
இதிலே நிறைய டயலாக் எல்லாம் விடுவேன். ஒவ்வொரு இடத்திலேயும் உன்னை மாதிரி அந்த குட்டி எலி சமத்து இல்ல அது அசடுன்னு

அப்புறம் பாபு, கோபுன்னு ரெண்டு பையன். ஒருத்தன் நல்லவன். ஒருத்தன் கெட்டவன். கெட்டவன் எப்படி நல்ல பையன் ஆகறான் அப்படின்னு எட்டுக்கட்டி கதை சொல்வேன்.

மறுபடியும் நாளை வேறொரு கதையுடன் வரேன்.
சாரதா, உங்களோட இந்த த்ரெட் நான் வரும்போது முதல் பக்கத்தில் இல்லாததால்தான் இதைப் பார்க்கவில்லை. இப்ப சந்தோஷமா.
அன்புடன்
ஜெயந்தி மாமி

kathaiyo kathai than en pillaikum solkirean mami. alhamdhulillah

alhamdhulillah

ஐயோ மாமி

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னும் நிறைய சரக்கு எடுத்து விடுங்க. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் உதவட்டும்.

தேங்க் யூ சோ மச் மாமி

இதெல்லாம் எதுக்கம்மா?

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

"அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?"

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

"நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு"

குட்டி திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்"

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

"பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு"

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?"

"அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்". பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

"பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?". இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?"

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?"

பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?

கதை தெரிந்தவர்கள் குழந்தைகளுக்காக இங்கு வந்து சொல்லுங்கப்பா

அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன.

ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன.

வெள்ளை மாடுதான் சண்டையில் வெற்றி பெறும்!'' என்றது ஒரு குழு தவளைகள்.

இல்லை, இல்லை செவலை மாடுதான் வெற்றி பெறும்!'' என ஒரு குழுவும் தவளைகளுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டு, ஆர்வத்துடன் மெய் மறந்து மாட்டுச் சண்டையைக் கவனித்தன.

அப்போது அங்கு வந்த கிழத் தவளை, ""இந்த மாட்டுச் சண்டையில் எது வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன? சண்டையை வேடிக்கை பார்த்து உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்!'' என்றது.

""என்ன தாத்தா! நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காங்க, நீங்க என்னடான்னா இப்படிப் பேசுறீங்களே!''

""ஆமாப்பா... இந்த சண்டையால் நம் இனம்தான் பாதிக்கப்படும் வாருங்கள் குளத்தை விட்டு வெளியேறுவோம்!'' என்றது.

""இந்த கிழத்துக்கு வேறு வேலையே இல்லை. தானும் லைப்பை என்ஜாய் பண்ணாது, இளசுகளையும் என்ஜாய் பண்ணவிடாது!''

""இந்த மாடுகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெற்றாலும், தோற்ற மாடு இந்தக் குளத்துக்குள் வெறித்தனமா அங்கு மிங்கும் ஓடுமே! மாடு குளத்துக்குள் ஓடும் போது நம் தவளைச் சகோதரர்கள் எத்தனை பேர் அதன் காலில் மிதிப்பட்டு இறந்து விடுவர் என யோசித்தாயா?'' என்று கூறி கவலைப்பட்டது.

""ஆமாம் தாத்தா! நீங்கள் கூறுவதும் உண்மைதான்!'' என உணர்ந்த சில தவளைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. அவைகளின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த சில தவளைகள் அவற்றின் பின்னால் சென்றன.

சிறிது நேரத்தில் அவை குளத்தை விட்டு வெளியேறி தப்பிவிட்டன. அவைகளின் பேச்சைக் கேட்காமல் இளம் தவளைகள் மட்டும் குளத்திலேயே இருந்தன.

சிறிது நேரத்தில் வெற்றி பெற்ற மாடு, தோல்வியுற்ற மாட்டினை முட்டித் தள்ளியது. இதனால், அந்த மாடு குளத்துக்குள் இறங்கி அங்கும் மிங்கும் ஓடியது. இப்போது அதன் கால்களில் மிதிபட்டு எத்தனையோ தவளைகள் இறந்துவிட்டன. "அப்போதே குளத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாமே.
கிழத் தவளை பேச்சை கேட்காமல் இப்படி அநியாயமா சாகிறோமே...' என புலம்பிலயவாறே உயிரைவிட்டன.
எனவே பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என சொல்லி கதையை முடிக்கலாம்

ஒரு ஞானி இருந்தார். அவர் ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர். அவர் ஒரு இடத்திற்குச் செல்லும்போது, ஒரு மனிதனின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த மனிதன் ஏழையாக இருந்தாலும், அவரை மிகவும் நல்ல முறையில் உபசரித்தான். அவரிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்துகொண்டான். ஆனால், அவன் ஒரு சோம்பேறி. அவனது நடத்தை ஞானியைக் கவர்ந்தது. அவர், புறப்படும் முன்பு சொன்னார்:

""நண்பனே, நீ ஏழையாக இருந்தாலும் நீ என்னை நல்ல முறையில் உபசரித்தாய். உனது அன்பும், அடக்கமும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே, நான் உனக்கு இந்தப் பூவை பரிசளிக்கிறேன். இது பார்வைக்கு சாதாரணப் பூவாகத் தெரிந்தாலும், உண்மையில் மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இந்தப் பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். ஆனால், இந்தப் பூ இரண்டு நாட்கள் மட்டும்தான் மலர்ச்சியாக இருக்கும். அந்த இரண்டு தினங்களுக்குள் நீ உனக்குக் கிடைக்கும் இரும்பை, தங்கமாக்கிக்கொள்ளலாம். இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப் பூ வாடிவிடும். வாடிவிட்டால் அதற்குச் சக்தி இருக்காது. இதைக் கவனமாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.''

அவர் சென்ற பிறகு அந்தச் சோம்பேறி மனிதன் யோசித்தான். "ஓ! இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன அல்லவா! நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்.'

அன்று அந்த மனிதன் நன்றாக உறங்கினான். மறுநாள் எழுந்தபோது மதியப் பொழுதாகிவிட்டது. அப்போது, அவனுக்கு அந்த ஞானி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே, எழுந்து நகரத்தில் உள்ள இரும்புக் கடையை நோக்கி ஓடினான். ஆனால், கடை பூட்டியிருந்தது. அன்று விடுமுறை நாள் என்பது அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அப்படி அந்த நாளும் கடந்து சென்றுவிட்டது.

மறுநாள் காலையிலேயே விழித்தெழுந்து அவன் நகரத்திற்குச் சென்றான். ஒரு டன் இரும்பு வாங்கினான். ஆனால், அவ்வளவு இரும்பையும் தனியாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவனால் முடியவில்லை. வண்டியும் கிடைக்கவில்லை, கூலிக்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. மாலைப் பொழுதானது. பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் சகோதரர்களை அழைத்து வருவதற்காக அவன் சென்றான். அங்கே சென்றபோதுதான், சகோதரர்கள் வெளியூர் சென்றிருப்பது தெரிய வந்தது. அந்த மனிதன் திகைத்துப் போனான். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். இருட்டிவிட்டால் இரண்டு நாட்கள் முடிந்துவிடும். அப்புறம் அந்தப் பூவை வைத்து எதுவும் செய்ய முடியாது.

அவன் அவசர அவசரமாக மீண்டும் இரும்புக் கடைக்கு ஓடினான். எடுக்க முடிந்த அளவு இரும்பை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்து ஓடினான். பல இடங்களிலும் தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து கடைசியாக அவன் வீட்டை அடைந்தான்.

அப்போது, அந்த நாள் முடிந்துவிட்டது. பூவும் வாடிவிட்டது. ஞானியின் குரல் மட்டும் அவனுக்குக் கேட்டது, ""நண்பனே, உனக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இனி அந்தப் பூவிற்கு எந்தச் சக்தியும் இல்லை. நீ குறித்த நேரத்தில் செயல்பட்டிருந்தால் உன் வீட்டின் வாயிற்படியில் உள்ள இரும்பையாவது தங்கமாக மாற்றியிருக்கலாமே! இது ஏன் உனக்குத் தோன்றவில்லை? இன்று செய்ய வேண்டியதை நாளைக்கென்று தள்ளி வைத்தால் இதுபோன்றுதான் நடக்கும்.''

இங்கு பதிவிட்ட சிறுவர்களுக்கான கதைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றது.
நானும் எனது பங்கிற்காக:

ஒரு சிறிய குளத்தில் பெரு மீன்கள் பலவும், சிறு மீன்கள் சிலவும் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் மீன் பிடிக்க வந்த ஒரு செம்படவன் தூண்டிலில் புழுவை கோத்துக் குளத்திற் போட்டான்.புதியதோர் உணவை கண்டு விட்ட களிப்பில் பெருமீன்கள் "ஆ" வென வாயை திறந்த வண்ணம் தூண்டிலை நோக்கி ஓடி வந்தன.குற்றுயிரும் குறையுயிருமாக துடித்துக்கொண்டிருந்த புழு மீன் கூட்டத்தைப் பார்த்து "அவசரப்பட்டு என்னை விழுங்கி விட வேண்டாம்.எனது உடலைத் துளைத்துத் தூண்டில் போடப்பட்டிருக்கின்றது.விழுங்கினால் உங்களால் மீளவே முடியாது..........ஒரு வாய் உணவுக்காக உங்கள் அரிய உயிரை பறிகொடுத்து விடாதீர்கள் !"என்று கூறியது.

"நீ உன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொய் சொல்லி எங்களை ஏமாற்றி விடப்பார்கிராய்"என்றது பக்கத்தில் இருந்த பெரு மீனொன்று.

"இல்லையில்லை, இது முற்றும் உண்மை.....என்னை நம்புங்கள்"

"உன்னைப் பரீட்சித்து பார்த்து விடப் போகின்றேன்" என கூறி, அருகிலிருந்த சிறு மீனை நோக்கி "அந்த புழுவை நீயே சாப்பிட்டு விடு" என்றது பெரு மீன்.

சிறு மீன் பயத்தில் உயிரே போய் விட்டது போல் அலறியது."என்னால் முடியவே முடியாது, நான் சாக விரும்பவில்லை." என கூ றி ஓடிவிட்டது.பெரு மீன் விடவில்லை. துரத்திக்கொண்டே சென்றது." நான் உன்னை விழுங்கி விடுவேன்....ஹம்...போய்ச் சாப்பிடு!"

சிறு மீன் வேறு வழியின்றி உயிருக்கு பயந்து தூண்டிலுக்கு அருகிற் சென்று, தனது சின்னஞ்சிறு வாயால் புழுவை துண்டு துண்டுகளாக கடித்து விழுங்கி விட்டது. செம்படவன் தூண்டிலை வெளியே எடுத்து, மீண்டும் ஒரு புழுவை கோர்த்து போட்டான்.சிறுமீனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை " இதையும் நானே சாப்பிட்டு விடட்டுமா?சுவையாக இருக்கும்"என்று பெரு மீனிடம் கேட்டது.

" வேண்டவே வேண்டாம்.....விலகிப் போ !.....நானே சாப்பிடப்போகின்றேன் ...."எனக் கூறி தூண்டிலை ஒரேயடியாக விழுங்கி விட்டது. மறுகணம் பெருமீன்,விழுங்கிய புழுவுடன் நீருக்கு வெளியே சென்றுவிட்டது!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒரு தோட்டத்தில் இரண்டு முயல்கள் இருந்தன.இரண்டும் நல்ல நண்பர்கள்.இருவருமே ஒருவர் மேல் ஒருவர் ரொம்பப்பிரியமாக இருந்தார்கள்.
இவர்களைப் பார்த்து எரிச்சல் பட்ட குள்ள நரி, ஏதேனும் செய்ய எண்ணியது."ஏ! முயல்களே.. உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.ரெண்டு பேரும் ஓடிப்போவணும்.அந்தக் கேரட் செடிய பிக்கணும். யாரு மொதல்ல பிக்கிறாங்களோ அவங்களுக்கு நான் ஒரு பெரிய பரிசு தருவேன்"என்று சொன்னது நரி.
முயல்களும் ஓடின. ஆனால் செடியைப் பிடுங்காமல் நின்றன. நரி அவர்களிடம் காரணம் கேட்டதற்கு,அவை பதில் சொல்லின."நாங்கள் நிஜமான நண்பர்கள்"என்றன.
இதைக் கேட்டு நரி தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டது.
முயல்களின் நல்ல நட்புக்குப் பரிசாக'இனி தன் கெட்ட எண்ணத்தை விட்டு விடுவது ' என முடிவு செய்தது.

சிரிப்பே சிறந்த மருந்து

சின்ன மழலையின் பாடல் கேட்போமா...

மழலையின் பாடல்....
பள்ளி விழாவிற்க்காக ஒரு முறை குட்டீஸ் பாடியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

அம்மா

அம்மா அன்பில் நானிருக்கேன்
எனக்கு ஒரு கவலையில்லை
அன்புடனே அருளும் தந்து
கைப்பிடித்து என்னை காக்கிறாள்
எல்லா பொறுப்பும் ஏற்க்கிறாள்..(அம்மா)

சம்சார கடலில் முழ்கும் போதும்
சங்கடத்தில் தவிக்கும் போதும்
காரிருள் என்னை சூழும் போதும்(2)
கைப்பிடித்து என்னை காக்கிறாள்
எல்லா பொறுப்பும் ஏற்க்கிறாள்..(அம்மா)

ஐம்புலனும் எதிராகி...
தன்வசமாய் என்னை இழுக்க
நெறித்தவறி நான் தத்தளிக்கையில் (2)
கைப்பிடித்து என்னை காக்கிறாள்
எல்லா பொறுப்பும் ஏற்க்கிறாள்..(அம்மா)

நான் என் அன்னையை மறந்தாலும்
அன்னை அவள் என்னை மறப்பதில்லை
என் அன்பு முழுவது தாயிடமே(2)
நானே அவள் அன்பு சேய்(அம்மா)

சுதந்திரநாள்

நாளாம் நாளாம் திருநாளாம்
சுதந்திரம் பெற்ற பெருநாளாம்
இளையவர்,முதியவர்,வறியவர்
வலியவர் அனைவரும் விரும்பும்
ஒரு நாளாம்

வேலை குடும்பம் அனைத்தையும்
இழந்து வீரத்துடனே பெற்றிட்டோம்
வாழ்வு இன்னுயிர் தியாகம் செய்து
சிறையில் வாடிப் பெற்றிட்டோம்

தேசதந்தை வழி செல்வோம்
சிந்தை மலர பணி செய்வோம்
விந்தை பலவும் புரிந்திடுவோம்
வீரத்துடனே வளர்ந்திடுவோம்.

லஞ்சம்

லஞ்சம் என்ற பேய் அது
ல கர கணக்கில் வளருது
நஞ்சு கலந்து உண்டது போல்
நாட்டையே அது சாய்க்குது

பேய ஓட்ட வந்தவனெல்லாம்
பேச்சில் வீரம் காட்டுறான்-பின்
பெரும் பணத்தை சுருட்டிகிட்டு
பேயோடு பேயா அலையிறான்

கொஞ்சமாய் நிறைந்து விட்ட
லஞ்சமதை விரட்டு -நாமும்
நெஞ்சம் நிமிர்வது எப்பொழுது
நாட்டில் நிம்மதி காண்பது..எப்போது...

நன்றி..வணக்கம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்