இதுதாங்க ஒரிஜினல் கெட் டுகெதர்

இது முற்றிலும் கற்பனையே. இதில் வரும் பெயர்கள் மட்டுமே உண்மை. இது யாருடைய மனதையும் புண் படச் செய்யும் நோக்கில் எழுதவில்லை. முற்றிலும் நகைச்சுவைக்கே. மேலும் இதை கெட் டுகெதரில் கலந்து கொ(ல்ல)ள்ள முடியாத என்னைப் போன்ற அறுசுவை சகோதரிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அறுசுவையின் கெட் டுகெதர்
--------------------------

இடம் : அறுசுவையின் சென்னை அலுவலகம்

காட்சி - 1

அட்மின் (டென்ஷனுடன்) : யார் யாரெல்லாம் இந்த கெட் டுகதருக்கு வரப் போறாங்கன்னு தெரியலையே. இந்த கூட்டத்தை எப்படி சமாளிப்பனோ தெரியலையே. என்னை யாரு காப்பாத்துவான்னு தெரியலையே!!

பாப்பி : யாமிருக்க பயமேன். நீங்க அறுசுவையே கட்டிகிட்டு இருந்தீங்கன்னா என் நினைப்பு எப்படி வரும்?

அட்மின் : நம்ம புது சைட்ட சர்ப்ரைஸா இன்னிக்குத்தான் தொடங்கப் போறோம். வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதா?

பாப்பி : எல்லாம் அந்த ரூமுல சீக்ரட்டா நடந்து கிட்டு இருக்கு. நீங்க யாரையும் அந்த பக்கம் அனுப்பாம, எதுவும் ஒளறி வைக்காம இருந்தா சரி. அந்த ரூமின் கதவை மட்டும்
மூடி வெச்சுடுங்க. அவங்களையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

காட்சி - 2

அப்போது வேகமாக ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது

அட்மின்: வாங்க சகோதரி ஜெ.அவர்களே. நீங்களே இவ்வளவு லேட்டா வரலாமா?

ஜெ.மாமி : என்ன பன்றது பாபு தம்பி. எங்க பாஸ் எப்படா கண்ண அசரும்னு பார்த்துட்டு எஸ்கேப் ஆகி வர்றதுக்குள்ள லேட் ஆயிட்டு. சரி யாரெல்லாம் வர்றாங்க?

அட்மின் மனதிற்குள்: (அது தெரிஞ்சா நா ஏன் இப்படி இருக்கேன்)

அட்மின் :எல்லா சகோதரிகளும் (சகோதரிகளா அதுங்க)வந்த பின்புதான் தெரியும். மனோ அத்தை வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்க மனசு கேட்காமா அறுசுவை சகோதரிகளுக்குன்னு நிறைய கேக் ஐட்டமெல்லாம் செய்து பார்சலில் அனுப்பி இருக்காங்க.

ஒரு குரல் : நான் டயட்ல இருக்கப்ப என்ன கேக்கு, அது, இதுன்னு ஒரே பேச்சு இங்க.
pat a cake pat a cake Baker's man
Dont bake me a cake

அட்மின் : வரும்போதே யாரா இருக்கும் அது?

ஜெ.மாமி : ஆங்கில தத்துவத்தோட வரும்போதே தெரியலையா. அது நம்ம இலாதான்.

இலா: என் டேமேஜர் ப்ளேடு பக்கிரிய டபாய்ச்சுட்டு வர்றதுக்குள்ள ஒரு வழியா ஆகிடுச்சு.
Bosses are the worst enemies in this world

அப்போது ஒத்தக் கையை தூக்கியபடியே தளிகா வந்து சேர்கிறார்.

அட்மின் : சகோதரி தளிகா அவர்களே ஏன் ஒரு கைய தூக்கிகிட்டே வர்றீங்க?

தளிகா: எனக்கு ஒத்த கையில வேலை செஞ்சு செஞ்சு இப்ப அந்த கைய கீழ போடவே முடியலை.

ஹேமா: என்ன இங்க சத்தம். என்ன இங்க சத்தம். சே!சே! இந்த ஊரு ஆட்டோ காரங்க திருந்தவே மாட்டானுங்கப்பா. மீட்டருக்கு மேல ஐஞ்சு ரூவா கேட்கறதை விடவே மாட்டானுங்க போலிருக்கு. இவனுங்கல்லாம் இருந்து என்னத்தை சாதிக்கப் போறானுங்க? முதல்ல இந்த கவர்ன்மண்ட சொல்லனும்.

தளிகா: மீட்டருக்கு மேல ஐஞ்சு ரூவான்னா மீட்டருக்கு மேல ஐஞ்சு ரூபாவ வைக்கனுமா?

ஹேமா : இன்னும் அந்த மியூஸியத்துல வெச்சிட்ட ஜோக்க விட மாட்டீங்களே

தளிகா : ஐயோ அது ஜோக்கா அது. எனக்கு தெரியவே தெரியாதே.

ஜெ.மாமி : அடடே மனோகரியா. நீங்க வரமாட்டேன்ல சொன்னீங்க.

மனோகரி : ஆமா எக்கா. நான் சொன்னேனே காண்டி பொறவு என்கு மன்சே கேக்கல. அதான் ஒரு ப்ளைட்ல ஏறி குந்திகினு பைலட்டாண்ட ரைட் ரைட் சொல்லிக்கினேங்க்கா. சரி சரி நான் ஒரு சேர் போட்டு அப்பால குந்திகிறேன். யார் யாருக்கெல்லாம் என்னத்துல டவுட் இன்னாலும் நான் கரீக்டா க்ளியர் பண்ணிடுறேன், அக்காங்.

அப்பொது ஜலீலா ஒரு ஆட்டோவிலும் இன்னொரு ஆட்டோவில் லோடோடும் வந்து இறங்குகிறார்.

ஜெ.மாமி : என்ன ஜலீலா இன்னொரு ஆட்டோவுல?

ஜலீலா : அந்த ஆட்டோவில கொத்துக்கறி பரோட்டா, கைமா சுரைக்காய், சிக்கன் பிரியாணி, மட்டன் பாயா, இறால் முட்டை, மீன் கத்தரிக்காய், தட்டு, டம்ளர் எல்லாம் இருக்கு.

விஜி: என்ன ஜலீ இப்டி பண்ணிட்டீங்க. நான் சுத்த சைவமாச்சே. உங்க சமையல நான் எப்படி டேஸ்ட் பண்றது?

ஜலீலா : யாரப் பாத்து இப்படி கேக்கறீங்க? இன்னொரு ஆட்டோவுல சைவ கத்தரிக்கா, மசாலா சாம்பார், வெஜ்ஜி பிரியாணி, தால் தர்க்கா, ரவை கிச்சடி, பாவக்கா கூட்டு, டபரா செட்டு
எல்லாம் இருக்கு. எல்லோரும் நல்லா சாப்பிடுங்க. எங்க எல்லாரும் சிரிங்க பார்க்கலாம். ஹா! ஹா!

செந்தமிழ் செல்வி : எல்லோரும் எப்படிப்பா இருக்கீங்க? வானு நீ கூகிள் சாட்டுக்கு வா. தீபூ நீ யாஹுவுக்கு வா. இலா நீ ஹாட்மெயிலுக்கு வா.

கதீஜா : அக்கா! அக்கா! நாங்க இப்ப உங்க பக்கத்திலே தான் இருக்கோம். நாம நேரிலே பேசலாம்.

செ.செல்வி : ஆமா, சே! எனக்கு அது மறந்தே போச்சு.

செ.செல்வி : ஒகேப்பா யார் யாருக்கெல்லம் பெயின்டிங் கத்துக்கனுமோ அவங்கெல்லாம் இங்க வாங்க

அப்போது தேவா வருவதாக தகவல் வற கூட்டமே பரபரக்கிறது.

ஹேமா : அய்யோ தேவா வர்றாங்களா? என் முகம் பளிச்சுன்னு இருக்கான்னு தெரியலையே?

ஜெ.மாமி: என்ன தேவா உன் முகம் இப்படி கருத்து போயிருக்கு?

தேவா : என்ன மாமி பன்றது? இந்த சென்னை வெயில் எனக்கு ஒத்துக்கலை.

தளிகா : தேவா, அலோவெரா ஜெல்லை தடவறதுதான.

ஹேமா : அப்படி போடு! தேவாவுக்கே அலோவெரா ஜெல்லா!!

ஸ்ரீ : தேவா என் முகத்தில் ஒரு கட்டி...
கவி சிவா : தேவா எனக்கு முடி கொட்டுது...
பர்வீன் : தேவா எனக்கு ஃபேஷியல்ல...
தேவா மேம், தேவா மேடம், தேவா மடம் என ஏகப்பட்டோர் ஆளாளுக்கு தேவாவை சூழ்ந்து கொள்கிறார்கள்

தேவா : இருங்க நான் ஒரு சேர் போட்டு இங்கு உட்காருகிறேன். எல்லாரும் லைன்ல வாங்க.

ஹேமா: இவங்கெல்லாம் யாரு? தேவா வந்தவுடன் எங்கிருந்தோ கரெக்டா வந்துட்டாங்க.

விமலா கந்தசாமி : வணக்கம் அருசுவை நெஞ்சங்களே! அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி வருகிறேன்.

ஹேமா : யாரவங்க?

தளிகா : விமலா கந்தசாமி

ஹேமா: யாரது? உள்ளாட்சி துறை அமைச்சரா?

ஜெ.மாமி : உனக்கு குசும்புதான். அவங்க நம்ம அறுசுவை ஃப்ரென்டுதான்.

தளிகா : ஹேமா, உள்ளாட்சின்னா என்ன?

ஹேமா : (நற நற..)

அப்போ அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க என்று சத்தம் கேட்கிறது

ஜெ.மாமி: யாரது இவ்வளவு ஆர்ப்பாட்டமா வர்றது?

ஸாதிகா: நாந்தான் மாமி. என் இனிய ஸ்னேகிதிகளை பார்க்கும் குஷியில் என்னை மீறி பாட்டு உற்சாகமா வருது.

தளிகா: ஹேமா கோவிக்காம சொல்லு ஹேமா நாக்க முக்குன்னா என்ன?

ஹேமா: நல்லவேளை தப்பிச்ச தளிகா. அப்டீன்னா என்னன்னு எனக்கே தெரியாது

அதிரா : வாங்கோ நான் சூடா ரீ போட்டு கொண்டு வந்தனன். எல்லோரும் சுட சுட சாப்பிட்டு தெம்பா கதைப்போம்.

கவிசிவா : நாகர்கோவில் காரர்கள் எல்லாம் இங்க வாங்க
சுரேஜினி: இலங்கை மக்களே வாருங்கள்

ஹேமா: ஆஹா! இந்தியா ரேஞ்சிலிருந்து இப்ப இன்டர்னேஷனல் ரேஞ்சுக்கு போயிட்டிங்களா?

நர்மதா : சுரேஜினி இதோ நான் இங்க இருக்கேன்

தளிகா: நர்மதா எங்கேயிருந்து இப்ப திடீர்னு வந்தீங்க?

நர்மதா: இலங்கைன்னு என் காதில் விழுந்த உடன் நான் ஓடி வந்தனன்

மர்ழியா: யாரெல்லாம் இங்க கா..

ஹேமா: ஸ்டாப்!ஸ்டாப்!! இப்ப நீங்க காயல்பட்டனம் என்று தான சொல்லப்போறீங்க? இதுக்குமேல எதுவும் சொன்னீங்க நான் அளுதிருவேன் ஆமா!

ஹேமா: நர்மதா வந்ததுதான் வந்தீங்க நீங்களும் ஒரு சேர்ல உக்காந்து கைவேலைப்பாடுல க்ளாஸ் எடுங்க
நானும் வந்ததிலேருந்து பார்க்கிறேன். ஆளாளுக்கு ஒரு சேர்ல உக்காந்து லெக்சர் குடுக்காறாங்க. சரி நாமும் எதாவது பண்ணலாம்.

யார் யாரெல்லாம் இன்டர்வியூக்கு போகனுமோ இங்க வாங்க. நான் டிப்ஸ் குடுக்கிறேன்.
சே! ஒரு காக்கா குருவி கூட வரமாட்டேங்குது.

தளிகா: எல்லாரும் இன்டர்வியூ போய் வேலை வாங்கிட்டாங்களோ என்னவோ

இலா: நானும் இது போலத்தான் ஒரு ரன்னிங் க்ளப் ஆரம்பிச்சு நம் மக்களைக் கூப்பிட்டேன். ஒருத்தரும் எட்டி கூட பாக்கலையே. இப்ப நான் மட்டும்தான் அதில் ஓடிக்கிட்டு இருக்கேன்.
run run as fast as you can
you can't catch me i am a running club woman

ரஸியா: நல்ல வேளை கூட்டம் முடிவதற்குள் ஓடி வந்துட்டேன். நம்ம மஹா வரமுடியலைன்னு எல்லாரையும் நலம் விசாரிச்சு எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்காங்க. இருங்க நான் அதை சத்தமா படிக்கிறேன்.
ரஸியா 10 நிமிடத்திற்கு மேலாகியும் படித்துக் கொண்டே இருக்க அவருக்கு மூச்சு வாங்குகிறது. சோடா குடுத்து அவரை தேற்றுகிறார்கள்.

சுஹைனா: என் அருமை அறுசுவை தோழிகளே! உங்கள் வருகைதனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன்! கண்டுவிட்டேன் உங்களை. சென்று வருகிறேன் தோழிகளே!

ஜெ.மாமி என்ன சுஹைனா வந்தீங்க அதுக்குள்ள கிளம்புறீங்க

சுஹைனா: பாசமலர் பூவிலே!
பனிபடர்ந்த மலையிலே!
என் ஆசை மச்சான் வீட்டிலே!!
அதனால் நான் சென்று வருகிறேன் தோழிகளே!

சுகன்யா: கை தட்டனா சத்தம் வரும் ஆனா சத்தம் போட்டா கை வருமா?
கவி.S: வெங்காயம் உரிச்சா தண்ணி வரும். தண்ணிய உரிச்சா வெங்காயம் வருமா?
ஜெயலட்சுமி: பாதாம் பாலில் பாதாம் இருக்கும். பசும்பாலில் பசு இருக்குமா?

ஹேமா: அவிங்கெல்லாம் என்ன பேசிக்கிறாங்க?
தளிகா: யாருக்கு தெரியும்? நல்ல ஆளாப் பாத்துதான் கேட்ட போ

பாப்பி: சரி சரி எல்லாரும் வந்து சாப்பிடுங்க

அதிரா: நம்ம கூட்டாஞ்சோறு உறுப்பினர்களோட குறிப்பில் இருந்துதான் செய்து இருக்காங்கோ. அனைவரும் மறக்காம அவர்களுக்கு பின்னூட்டம் அனுப்பிடுங்கோ.

ரேணுகா: இங்க 23 சைவ சாப்பாடும், 28 அசைவ சாப்படும் 14 சைட் டிஷ், 13 டெஸர்ட் இருக்கு.

அப்போது ஹேமா கண்களில் அந்த ரூம் பட்டுவிட,
ஹேமா : என்ன இது இந்த ரூம் சாத்தியே கிடக்கு. இதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியலைன்னா என் தலையே வெடிச்சுடும்.

அட்மின் : ஹி.ஹி அதுல அறுசுவை..வந்து..போயி

பாப்பி முறைக்க அட்மின் கப்சிப்.

பாப்பி : முதல்ல சாப்பிடுங்க அப்புறம் பார்க்கலாம்
பஃபே சாப்பாடுதான்.

சுகன்யா: என்னதான் நீங்க பஃபே என்று சொன்னாலும் கையேந்திதான் சாப்பிடனும்

ஹேமா: ஆரம்பிச்சுட்டாங்கையா. நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டாங்க போலிருக்கே.

அட்மின் பாப்பியிடம் : அந்த ரூமில வேலை எப்படி போகுதுன்னு தெரியலையே. எல்லாம் முடிந்தவுடன் பத்மா வெளிய வந்து சொல்றேன்ன்னு சொன்னாங்க. இன்னும் ஆளைக் காணோமே.

அப்போது பத்மா பதட்டமாக: பாபு ஒரு ப்ரச்சனை. நம்ம பழைய சைட்டில தேவையில்லாததை டெலிட் பண்ணிட்டு புது சைட்டுக்கு காப்பி பண்ணலாம் என்றால் அந்த அறிந்து கொள்வோம் பகுதியில் இருக்கும் கேரட் டெலிட்டே ஆக மாட்டேங்குது. கூடவே ஒட்டிக்கொண்டே வருது.

அதை ஒட்டு கேட்டுவிட்ட ஹேமா: இதுதான் பூர்வ ஜென்ம பந்தம் என்பதோ.

அதற்குள் அறுசுவை மக்கள் அனைவருக்கும் விஷயம் தெரிந்து போகிறது.

மாலதி : நான் அப்பவே சொன்னேன் கேரட்டை மாத்துங்கோன்னு

சுகன்யா: எத எத எப்ப எப்ப மாத்தனுமோ அத அத அப்ப அப்ப மாத்திடனும்.

அறுசுவை மக்கள் : புது சைட்டிற்கு வாழ்த்துக்கள். அட்மினிற்கு வாழ்த்துக்கள். அறுசுவை டீமிற்கு வாழ்த்துக்கள்.

ஹேமா: நாங்க எது செய்யறோமோ இல்லையோ, இந்த வாழ்த்தறதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்ல.

மாலதி: அது சரி அந்த கேரட்டை என்ன செய்யப் போறீங்க?

அட்மின் : சகோதரிகள் அனைவருக்கும், அந்த கேரட் புது சைட்டில் இருக்காது என்று நான் வாக்கு குடுக்கிறேன். போதுமா?

அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

பிறகு அனைவரும் சாப்பிட்டு,பேசி மகிழ்ந்து பிரிய மனமின்றி பிரிந்து செல்கின்றனர்.

எப்படி இருக்குங்க என் கற்பனை? யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என் தோழிகளே. அட்டு ரகமா இருக்கா:-) போர் அடிச்சுதுன்னா மனசுக்குள்ள என்ன திட்டிக்கோங்க. நான் எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கையா ஒரு நான்கு நாள் கழித்து இங்கு வருகிறேன்..

நான் தான் முதல்லே!!!
அய்யோ சிரிச்சு வயிறு புண்ணாகிவிட்டது.. சூப்பர்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாங்க வானதி.. சத்தம் போடாம வந்து ஒரு பெரிய சிரிப்பு வெடியை கொளுத்தி வைச்சிட்டீங்க.. ரொம்ப நல்லா இருக்கு.

நம்புறீங்களோ இல்லையோ.. ஒரு வாரத்துக்கு முன்னயே நான் ஒரு கற்பனை கெட்டுகெதர் டைப் பண்ண ஆரம்பிச்சேன். யார் பேரையும் போடாம எல்லாருக்கும் A,B,C ன்னு பேர் கொடுத்து, படிக்கிறவங்க கெஸ் பண்ணிக்கட்டும்னு விட்டிருந்தேன். பாதி டைப் பண்ணினப்பவே தெரிஞ்சிடுச்சு. அதை மட்டும் வெளியிட்டா அறுசுவை கூட்டம் பாதியா குறைஞ்சிடும்னு.. உஷாரா விட்டுட்டேன்.

இது உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, ரொம்ப ஜாக்கிரதையா, கொஞ்சமா கிண்டல் பண்ணியிருக்கீங்க.. :-) எனக்கு அதுதான் வரமாட்டேங்குது ;-(

ஐய்யோ வானதி சிரிச்சி சிரிச்சி எனது வயிறே புண்ணாகிவிடும் போலிருக்கு, எப்படீங்க இப்படி அப் டூ டேட்டா எல்லாருடைய ஸ்டைலைப் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டீங்க, சிரிப்பு தாங்கமுடியல.அசத்தப் போவது யாரு போன்று அடுத்தடுத்து வரும் எல்லா டயலாக்கும் சிரிக்க வைத்து விட்டது. உண்மையிலேயே கெட் டூ கெதருக்கு போக முடியவில்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள் அதற்கு நன்றி நன்றி கோடானுக் கோடி நன்றிகள்.

ஆஹா அந்த கேரட் படம் புதுஅருசுவையிலுமே.... போகவே போகாதா

எப்படியே இப்பவே கெட்டுகெதரை நெருலே பாத்த மாதிரி இருக்கு

கவலை படதீங்க நம்ம சார்பா நிஷா- வை அனுப்பிவைப்போம்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஐயகோ யான் என் செய்வேன்.இதற்குமேல் சிரிக்க முடியாது போலுள்ளதே.முக்கியமாக இலா தமிழை கூட்டிப்போய் பாதிவழியில் தொலைத்து விட்டு ஆங்கிலத்தோடு சமரசம் செய்வதை சொல்லியிருப்பது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.காமடி நாடகம் பார்த்ததுபோல் இருக்கிறது.

நீண்ட நாளுக்குபின் கண்ணில் நீர்வரும்வரை சிரிக்க வைத்து விட்டீர்கள் .மிக்க நன்றி.
சுரேஜினி

அன்பின் வானதி, சிரிச்சு சிரிச்சு.....................
என்மேல படுத்திருந்த வானதி (குழந்தை) எழும்ப பார்த்தா:)
திருப்பி வாசித்திட்டு சத்தமா சிரிக்கணும். மிகவும் நல்லா இருக்கு. இன்னும் இப்படி எழுதுங்கோ. கெட்-டுகெதர் முடிந்ததும் எப்படி இருந்திருக்கும் என்றும் எழுதுங்கோ.
-நர்மதா :)
இன்னும் ஒரு வாழ்த்து இருக்கு. தனிய ஒரு இழை தொடங்க பயமா இருக்கு.

வானதி உங்கள் கற்பனை மிகவும் அருமையாக இருந்தது.சிரித்து, சிரித்து வயிறு எல்லாம் புண்ணாகிவிடும் போல் இருக்கிறது.எவ்வளவு அழகாக
ஒவ்வொருவருடைய ஸ்ரைலையும் எழுதியிருந்தீர்கள்.
போகமுடியாத எங்களுக்கெல்லாம் கெட்டு கெதரில் பங்கு பற்றியது போல் ஒரு உணர்வு வந்துள்ளது.நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வானதி,என்னாபா இது என்னா அட்டகாசமாக்கீது!எப்படி!எப்படிபா இது.,வூடு கட்டி கலாய்ச்சிருக்கீங்களே.(சிரி!சிரி!சிரி! அப்ஸ்காண்டே ஆகவேண்டாம்)சும்மா சொல்லக் கூடாது சூப்பர் தோழி சூப்பர்.
ALL THINGS ARE DIFFICULT BEFORE THEY ARE EASY.

பரவால்லை அட்மின். உங்களுடையதையும் போடுங்கோ. சிரிக்கிறோம்.
-நர்மதா :)

மேலும் சில பதிவுகள்