உணவு

கல்யாண சமையல் சாதம்

நாஞ்சில் நாடு.. நான் பிறந்து வளர்ந்த மண். நாஞ்சில்நாடா... அது எங்கே இருக்குன்னு யோசிக்கறீங்களா? அது நம் இந்தியாவின் தென்கோடி முனையாம் குமரி மாவட்டத்தில்தான் உள்ளது. தற்போது குமரிமாவட்டம் முழுவதையுமே நாஞ்சில் நாடு என கூறிக் கொண்டாலும் குமரியின் தோவாளை அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களை உள்ளடக்கியது அன்றைய நாஞ்சில் நாடு. தமிழ்நாட்டுடன் இணையும் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக இருந்தது. நாஞ்சில்நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியம். வளம் கொழிக்கும் மண் வற்றாத நீர் என இயற்கை அள்ளிக்கொடுத்த பூமி. ஐவகை நிலங்களில் பாலையை தவிர மீதி நால்வகை நிலங்கலையும் தன்னகத்தே கொண்டது நாஞ்சில் நாடு. நெல்லும் தென்னையும் வாழையும் செழித்து வளரும். அதனால் சமையலில் தேங்காய் மற்றும் அரிசி அதிகமாக பயன்படுத்தப் படும். சிறுதானியங்களின் பயன்பாடு நாஞ்சில்நாட்டைப் பொறுத்தவரை குறைவுதான்.

நாஞ்சில்நாட்டு மக்களிடையே முன்பு ஒரு பழக்கம் வழக்கத்தில் இருந்தது. அதாவது தந்தையின் சொத்துக்கள் பிள்ளைகளைச் சேராது. மாறாக அவரது சகோதரிகளின் பிள்ளைகளுக்கே போய்ச்சேரும். அரசகுடும்பத்திலும் இதே முறைதான். இதை மருமக்கள் தாயம் அல்லது மருமக்கள்வழி என்பார்கள். 1927களில் இந்த வழக்கம் சில புரட்சிகளின் மூலம் மாற்றப்பட்டது. தற்போதும் அந்த சொற்கள் மட்டும் நிலை நிற்கிறது. என்னடா கல்யாண சமையல் சாதம்னு தலைப்பை வச்சுட்டு என்னென்னவோ சொல்லிட்டு இருக்காளேன்னு திட்டாதீங்கோ... இந்த பதிவை எழுத காரணமே இந்த மருமக்கள்வழி முறையின் கொடுமைகளைப் பற்றி கவிமணி தாத்தா எழுதிய நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்னும் கவிதை நூலில் வரும் சில வரிகள்தான். நாஞ்சில் சாப்பாட்டு வகைகளைப் பற்றி அழகாக சொல்லியிருப்பார். அதைப் படித்ததும் நாஞ்சில் கல்யாண சாப்பாடுதான் நினைவுக்கு வந்தது. அந்த வரிகள்

அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை ஏத்தன் சேத்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவையோடு படைப்பு போட
எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்
அரசனும் கூட ஆண்டியாவானே!

நாஞ்சில் பகுதியில் திருமண விருந்துகளில் பல மாற்றங்கள் வந்து விட்டாலும் மதிய விருந்தில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை. இன்னும் பாரம்பரிய பதார்த்தங்களே பரிமாறப் படுகின்றன. நாகரீக மாற்றங்களில் ஒன்றிரண்டு புதிய கூட்டுகள் சேர்த்துக் கொள்ளப் பட்டாலும் அது கல்யாண சாப்பாட்டில் ஒட்டாது தனித்தே நிற்பது போல் இருக்கும். காலை உணவாக பெரும்பாலும் இட்லி வடை சாம்பார் சட்னி கேசரி என்றிருந்ததில் தற்போது பூரியும் பொங்கலும் சேர்ந்து கொண்டுள்ளது. ரிசப்ஷனில் முன்பெல்லாம் காராபூந்தி, வடை அல்லது போண்டா, ஜாங்கிரி அல்லது லட்டு, பெரிய வீட்டு கல்யாணமாக இருந்தால் செவ்வாழைப்பழம் சாதாரண கல்யாணங்களில் கதலி அல்லது பூவன் பழம் இப்படித்தான் இருந்தது. தற்போது பாப்கார்ன் கவுன்டரில் ஆரம்பித்து பலவகை உணவுகள். அதெல்லாம் எல்லா இடங்களிலும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நாஞ்சில் கல்யாணங்களில் மதிய விருந்து... அது தனி தான்.

தலைவாழை இலையிட்டு முதலில் உப்பை வைப்பார்கள். அடுத்து நேந்திரன் சிப்ஸ் மற்றும் சக்கவரட்டி எனப்படும் நேந்திரங்காயை தடிமனாக வெட்டி எண்ணெயில் பொரித்து சுக்கு சேர்த்த வெல்லப்பாகில் பிரட்டி வைத்திருக்கும் இனிப்பு. இவை இரண்டும் கட்டாயமில்லை. ஆனால் தற்போது பெரும்பாலும் சேர்த்துக் கொள்கிறார்கள். அடுத்து ஒவ்வொரு கூட்டாக வரும். ஒவ்வொரு கூட்டும் இலையில் அதற்குண்டான இடத்தில் சரியாக பரிமாறப் பட வேண்டும் என்பது இங்கே எழுதப்படாத விதி. தலைவாழையின் நுனிப்பகுதியில் உப்பில் ஆரம்பித்து சிப்ஸ் சக்கவரட்டி, வாழைக்காய் துவட்டல், இஞ்சி கிச்சடி, மிளகாய் பச்சடி, மாங்காய் உப்புலோடு, நார்த்தங்காய் பச்சடி, தயிர் கிச்சடி, பைனாப்பிள் ஜாம், அவியல்... இவை அனைத்தும் இலையின் மேற்பகுதியில் பரிமாறப்படும். உப்பின் கீழே எரிசேரி, கத்லிப்பழம் அல்லது மட்டிப்பழம் பரிமாறப்படும். இதில் மட்டிப்பழம் குமரிமாவட்டத்தை தவிர வேறெங்கும் கிடைக்காது. இதன் மணமும் சுவையும் தனி. நாஞ்சில் மண்ணில் மட்டுமே இவ்வகை வாழை செழிப்பாக வளரும். நாஞ்சில் நாட்டில் அப்பளம் கிடையாது. உளுந்து பப்படம் குறிப்பாக குருவாயூர் பப்படம் பரிமாறப்படும். முதல் பந்தியில் மட்டும் ஆட்கள் வந்து அமரும் முன்னரே கூட்டு வகைகள் மட்டும் பரிமாறி வைக்கப்படும். ஆட்கள் உண்ண அமர்ந்ததும் சாதம் இட்டு முதலில் பருப்பும் நெய்யும் ஊற்றப்படும். அதன் பின்னால் சாம்பார் வரும். அடுத்து தேவைக்கேற்ப சாதம் மீண்டும் பரிமாறப்பட்டு புளிசேரி ஊற்றப்படும். இதற்கு ஸ்பெஷலாக தொட்டுக் கொள்ள ஓலன் பரிமாறப்படும். அடுத்து பாயசம். குறைந்தது இரண்டு வகை பாயசம். கல்யாண வீட்டாரின் வசதியைப் பொறுத்து ஐந்து பாயசங்கள் வரை இருக்கும். பருப்பு பாயசம் நேந்திரம் பழ சீசனாக இருந்தால் ஏத்தம்பழ பாயசம் இன்னும் நேந்திரன்பழ பாயசம், பலாப்பழ சீசனில் சக்கப்பழ பாயசம் என்னும் பலாப்பழ பாயசம், அடைப் பிரதமன், அரிசி பால் பாயசம் அல்லது சேமியா பால்பாயசம்... இவை எல்லாமே நாஞ்சிலின் ஸ்பெஷல் பாயசங்கள். இங்கே பாயசம் சாப்பிட்டவர்களுக்கு பிற இடங்களில் பாயசம் அவ்வளவாக ருசிக்காது. பாயசம் சாப்பிடுவதிலும் நாஞ்சில் மக்களுக்கென்று ஒரு பாணி உள்ளது. கண்டிப்பாக மூன்று பாயசம் என தெரிந்து விட்டால் பழம் இரு பாதியாக பிய்த்து வைத்துக் கொண்டு பருப்பு பாயசம் அல்லது சக்கப்பழ பாயசம் அல்லது அடைப்பிரதமன் இவற்றில் பழத்தைப் பிசைந்து பப்படமும் சேர்த்து சாப்பிடுவார்கள். கேட்கும் போது ஐய்யே... என்றிருந்தாலும் இதன் ருசி கண்டவர்கள் இப்படித்தான் சாப்பிடுவார்கள் :). ஏத்தம்பழ பாயசத்துக்கு பழமும் பப்படமும் ஒத்து வராது. தனியே சாப்பிடுவதுதான் அதற்கு மரியாதை. பால் பாயசம் கண்டிப்பாக இருக்கும். இதற்கு பழம் பப்படம் எல்லா சரி வராது. குமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் செய்யப்படும் பிரத்யேகமான போளி பால்பாயசத்தோடு பரிமாறுவார்கள். பூரண் போளி போல் அல்லாமல் மஞ்சள் நிறத்தில் கைவைக்கும் முன்னே உதிர்ந்து விடும் அளவில் ரொம்ப சாஃப்ட் ஆக இருக்கும். பட்ஜெட் கல்யாணங்களில் போளிக்கு பதிலாக சிறிது பூந்தி தூவப்படும். இரண்டுமே ருசிதான் என்றாலும் போளியின் மவுசு தனி.

அடுத்து மீண்டும் சாதம் கேட்டு கேட்டு பரிமாறப்படும். அடுத்து ரசம் அதைத்தொடர்ந்து சம்பாரம் எனப்படும் இஞ்சி மிளகாய் கறிவேப்பிலை உப்பு சேர்த்த மோர். எல்லாம் சாப்பிட்டு முடிக்கும் போது வயிறு திம்மென்றாகி விடும் :)

இவ்ளோ அயிட்டங்களும் சாப்பிட கொஞ்சம் ப்ராக்டீசும் வேணும். இங்கே பந்தி ஒரு ஒழுங்கு முறையில்தான் நடைபெறும். ஒருவர் சாம்பார் ஊற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு ரசம் வேண்டும் பாயாசம் வேண்டும் என கேட்க முடியாது. குழம்புகள் அதன் வரிசை முறையில் சீரான இடைவெளியில் வந்து கொண்டிருக்கும். அதனால் மற்றவர்களின் வேகத்திற்கேற்ப நாமும் சாப்பிட வேண்டி இருக்கும். நாங்க எல்லாம் பழகிடுவோம் :). வெளியூரில் இருந்து எங்கள் ஊர் கல்யாணங்களுக்கு வருபவர்கள் சற்றே தடுமாறுவார்கள். 20 முதல் 25 நிமிடங்களுக்குள் ஒரு பந்தி முடிந்துவிடும்.

கல்யாணங்களுக்கு குறைந்தது 5 வகை கூட்டு. அதிகப்படியாக 17, 19 , 21 என அந்தஸ்தை காட்ட வைப்பார்கள். ஆனால் எல்லா கல்யாணங்களிலும் துவட்டல் அவியல் எரிசேரி மாங்காய் உப்புலோடு மற்றும் நார்த்தங்காய் பச்சடி கட்டாயம் இருக்கும்.

துவட்டல் என்பது பாளையங்கோடன் அல்லது கதலி வாழைக்காய்கள் மெலிதாக வெட்டப்பட்டு உப்பும் மிளகும் சேர்த்து குழையாமல் வேகவைத்து வடிகட்டு தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த வாழைக்காய் மிளகுதூள் மஞ்சள் தூள் தாராளமாக தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் ரெடி.

அவியல்... நாஞ்சில் அவியல் மற்ற இடங்களின் அவியலை விட ரொம்பவே வித்யாசமானதாக இருக்கும். மற்ற இடங்களில் தயிர் சேர்ப்பார்கள். இங்கே புளிப்புக்கு மாங்காய் மட்டுமே சேர்க்கப்படும். தேங்காயும் தேங்காய் எண்ணெயும் தாராளமாக சேர்க்கப்படும். வாழைக்காய், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், தடியங்காய் எனப்படும் வெண்பூசணி, முருங்கைக்காய், சீனியவரை எனப்படும் கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் சேனை இவை மட்டுமே சேர்க்கப்படும். இப்போது வீடுகளில் வைக்கப்படும் அவியலில் மட்டும் கேரட்டும் சேர்ந்து கொண்டுள்ளது.

எரிசேரி... நேந்திரங்காயும் சேனையும் சேர்த்து செய்யப்படும் நாஞ்சிலின் ஸ்பெஷல் கூட்டு இது. எல்லா கறிகளிலும் தேங்காய் எண்ணெயும் தேங்காயும் மிக முக்கியம்.

மதியவிருந்து இப்படி என்றால் ரிசப்ஷனுக்கு பிறகு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமேயான இரவுச் சாப்பாடு இன்னும் ஸ்பெஷல். மதியவிருந்தைப் போல் அதிக கூட்டுகள் ஏதும் இருக்காது. மதிய விருந்தில் மீதமான கூட்டுகளோடு உருளைக்கிழங்கும் வெங்காயமும் சேர்த்து பொரியலும் இருக்கும். இதில் ஸ்பெஷல் ஐட்டம் தீயல். இந்த இரவுச்சாப்பாட்டுக்கு பெயரே தீயல் சாப்பாடுதான். சிம்பிளா சொன்னால் வத்தக்குழம்பு மாதிரி ஆனால் வத்தக்குழம்பு இல்லை. தேங்காயும் மிளகும் மிளகாய் வற்றலும் தனியாவும் சின்னவெங்காயமும் கறிவேப்பிலையும் சேர்த்து பிரவுன் நிறமாகும் வரை வறுத்து அரைத்து புளி சேர்த்து வேக வைத்த முருங்கைக்காய் கத்திரிக்காய் சேனைக்கிழங்கோடு சேர்த்து கொதிக்க வைத்து வெங்காய வடகமும் வறுத்து சேர்த்து செய்யப்படும் இந்த தீயலின் சுவையே அலாதி தான். காலை மதியம் ரிசப்ஷன் என நல்லா சாப்பிட்டு விழிபிதுங்கிக் கொண்ட வயிற்றின் செரிமானத்துக்கு ஏற்றது இந்த தீயல். தீயல் சாப்பாடும் சாப்பிட்டால்தான் திருமண விருந்தே பூர்த்தியாகும். இப்போது சாதததிற்கு பதில் இட்லியாக மாற்றி விட்டார்கள். இட்லியோடு சூடான இந்த தீயல் சூப்பரா இருக்கும். தீயல் சோறு அளவிற்கு இல்லைன்னாலும் வயதானவர்களைக் கருத்தில் கொண்டு இட்லியாக மாற்றப்பட்டு விட்டது :)

அடுத்தவாரம் முழுக்க நமக்கு இந்த சாப்பாடுதான். நெருங்கிய உறவினர் இல்லத் திருமணம்... :). கண்ணு வைக்காதீங்க மக்கா :)

1
Average: 1 (1 vote)

குளிரூட்டியை விரும்பாத உணவுகள்

சில உணவுப் பொருட்களை, 'ஏன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது!' என்பதற்கான காரணங்களைக் கூறும் ஒரு செய்தித் துணுக்கை இன்று படிக்க நேர்ந்தது.

படிக்கும் போது இருந்த என் சிந்தனை ஓட்டம் இங்கே... இது காப்பி பேஸ்ட் இடுகை அல்ல.

வாழைப்பழங்கள் சில சத்துக்களை இழந்துவிடும். கனிவதும் தாமதமாகும் என்கிறார்கள். இது எல்லாக் காய்கறிகளுக்கும் பொருந்தும் இல்லையா?

உருளைக் கிழங்குகள்... குளிரின் காரணமாக அதிலுள்ள மாப்பொருள் விரைவில் வெல்லமாகும் என்பது எனக்குப் புதிய தகவல்.

வெண்காயம் - முழுவதாக குளிரூட்டியின் உள்ளே வைத்தாலும் (நான் இப்படி வைப்பதில்லை.) அதன் விறைப்பு நீங்கி மெதுவே பூஞ்சணம் வளர ஆரம்பிக்கும் என்கிறார்கள். வெட்டிய பின் வைப்பதானால்... கட்டாயம் ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் காற்றிலுள்ள வேண்டாத எதையாவது உறிஞ்சிக் கொள்ளும். (இறுதியாக என் படுக்கையறையச் சுவரைப் பெய்ன்ட் செய்த பொழுது, எப்பொழுதோ வாரமஞ்சரி ஒன்றில் படித்த நினைவில் வெண்காயத்தை அரிந்து அறையின் நான்கு மூலைகளிலும் வைத்தேன். அறையில் புதிய தீந்தையின் வாடை அறவே இல்லை. அப்படியானால்... கரியைப் போல வெண்காயமும் உறிஞ்சும் தன்மை கொண்டது தானே?)

ஆவகாடோ / பட்டர் ஃப்ருட் - இவை மரத்தில் இருக்கும் வரை பழுப்பது கிடையாதாம். அதற்கான சுரப்புகளை உருவாக்கிக் கொள்ளும் தன்மை இராது என்பதை முன்பே அறிந்திருக்கிறேன். கிளையிலிருந்து தொடர்பு விட்டதன் பின்புதான் பழுப்பதற்கான செயற்பாடு ஆரம்பம். வெயில் படும் படி வைத்தால் பழுப்பது விரைவில் நடக்கும். அதன் பின் மேலும் கனிவதைத் தவிர்க்க வேண்டுமானால் குளிரூட்டியில் வைக்கலாம்.

உள்ளி / வெள்ளை வெங்காயம் / பூடு - குளிர், முளை விடுதலைத் தூண்டும். பூடு தன்மை மாறிப் போகும். குளிரூட்டியில் வாடை தொற்றும்.

தக்காளி - சுவை மாறும். தன்மை மாறும் - கெட்டித் தனம் விட்டுப் போகும். முற்றியவை கனிவது தாமதமாகும்.

தேன் - இயல்பாகவே கெட்டுப் போக முடியாத உணவு. வேறு உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கக் கூடியது - இதற்குக் குளிரூட்டி தேவயில்லை. தவறுதலாக வைத்து விட்டு... சரி அங்கேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்ட ஒரு சமயம் - சீசாவின் அடியில் சீனியைக் கொட்டி வைத்தது போல உறைந்து போயிருந்தது. வாய் அகலமான சீசா அது. இருந்தும் எடுக்க முனைந்த போது கரண்டி வளைந்தது; தேனை எடுப்பது சுலபமாக இருக்கவில்லை. தேனீக்கள் வளர்க்கும் ஸ்தாபனத்திலிருந்து வந்த தரமான தேன், எப்படி இப்படி ஆயிற்று! கலப்படமோ என்று குழம்பினோம். காரணம் குளிரூட்டிதான், கலப்படம் அல்ல என்பது இப்போது தெரிகிறது.

வெயில் காலம் ஆரம்பித்தால் இங்கு வர்த்தகப் பழம் வீட்டில் இராத நாள் இராது. இன்று அறிந்து கொண்ட தகவல் - குளிரூட்டியில் வைத்தால், 'antioxidant' & 'beta-carotene' அளவுகள் குறைந்து போகிறது என்பது. வெட்டிய பின்னால் துண்டுகள் மீந்துவிட்டால், மூடி வைத்துக் குளிரூட்டச் சொல்கிறார்கள்.

பூசணிக்காய் - வளர்ப்பவர்களுக்கான தகவல் - காற்றோட்டமான இருட்டான இடத்தில் (பேஸ்மண்ட்) வைக்கட்டுமாம். துண்டு போட்ட பின் - இங்கு அதிக நாட்கள் குளிரூட்டியில் தாங்குவது இல்லை.

தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் - திறக்காவிட்டால் குளிரூட்டி தேவையில்லை. திறந்த பின் மீந்து போனதை அதே நீரில் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் குளிரூட்டலாம். இதுவும்... மறுநாள் தீர்த்துவிடுவது நல்லது.

வெள்ளரி இனம் - குளிரூட்டினால் உடைந்து, அதன் காரணமாகக் கெட்டுப் போகும் சாத்தியம் அதிகம். பார்க்கும் போது தெரிவதில்லை. தொட்டால் விரல் உள்ளே நுழைந்துவிடும். :-)

இவற்றை விட, குளிரூட்டியில வைப்பதனால் கெட்டுப் போகக் கூடியவை.... மிளகாய் வகைகள், கரட், பழங்கள், ஜாம், சீரியல், சாலட் (இலைத் துணிக்கைகள் உடைந்து கேட்டுப் போகும்.) பீநட் பட்டர் (இறுகிப் போய் பூசுவது சிரமமாகிப் போகும்.) மென்மையான இலைகள் (உடைந்து போகும்.), ஆலிவ் எண்ணெய் (இதையும் யாராவது வைப்பார்களா!!) , காப்பி & காப்பிக்கொட்டை (சுவை குறையும்).

[இடுகையில் படங்களாகக் காண்பவை சென்ற வருடத்து விளைச்சலின் ஒரு பகுதி. இந்த வருடம் தக்காளி வளர்ப்பதாக இல்லை. இன்னும் ஃப்ரீசரில் நிறைய உறங்குகின்றன. கேல், லீக்ஸ் வெள்ளரியிலிருந்தும் நல்ல விளைச்சல் கிடைத்தது. கடையில் வாங்கிச் சமைப்பதை விட வீட்டில் வளர்த்துச் சமைக்கும் போது தான் அந்தக் காய்கறிக்கான உண்மையான சுவையை உணர முடிகிறது.]

நிச்சயம் உங்கள் பதில்களில் வேறு சில உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். காத்திருக்கிறேன். :-) அப்படியே எங்காவது எழுத்துப்பிழை கண்ணில் பட்டால் சொல்லி உதவுங்கள். இந்த இயந்திரம் தன் இஷ்டத்திற்குப் பிரித்து / இரடித்துத் தட்டி வைக்கிறது. திரும்பப் படித்தாலும் ஒன்றிரண்டு என் கவனத்திலிருந்து விட்டுபட்டு விடுகிறது. :-)

5
Average: 4.7 (7 votes)

கரடியனார் கண்ட பிறை!

கரடியனார் பிறை கண்ட மாதிரி... அபூர்வமாக இன்று 'தொட்டுக்கொள்ள...' வந்தேன் நான். :-)

கரடியனார்! எவ்வளவு மரியாதையான விளிப்பு!! :-)

அவருக்கும் பிறைக்கும் என்ன தொடர்பு! கரடிகள் இரவில் வெளியே வருவதேயில்லையா! அப்படித்தான் இது வரை நினைத்திருந்தேன். இன்று இணையத்தில் தேடியதில், அவை இரவில் உறங்கும் என்பதாக உறுதியாக நினைக்க முடியவில்லை. சில வகைகள் இரவில் உலவுமாம்; சில பகலிலும் இரவிலும் இரை தேடுமாம்.

கரடிக்குத் தேன் பிடிக்கும்... அமாவாசை தினம்தான் தேன் சேகரிப்புக்கு உகந்த தினம் என்பதாக என் சிறு மூளையில் பதிவாகி இருந்த தகவலும் தவறென்று இன்று தெரிந்து கொண்டேன். தேனீப் பண்ணை வைத்திருப்பவர்கள், மாதம் இரு முறை கூட அறுவடை செய்வதாகத் தெரிகிறது. கரடியனார் அமாவாசையில் உலா வந்தால்... பிறை காண மாட்டார். மீதி இரவுகளை உண்மையில் தூக்கத்தில் தான் கழிப்பாரா?

இந்த கரடியனார் பிறை காணும் கதை என்ன! நிச்சயம் அவரவருக்குத் தெரிந்த கதையைச் சொல்லுவீர்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். :-)

~~~~~
முதலாவது படத்தில் உள்ளது... எப்பொழுதோ செபாவின் பக்கத்து வீட்டுக் குட்டியருக்காகச் செய்த கரடிக் குட்டி, இல்லையில்லை... கரடியனார்! :-)

முன்பு ஒரு முறை முயற்குட்டி கேக் பற்றிய இடுகை ஒன்று வெளியிட்டிருந்தேன். இதுவும் கிட்டத்தட்ட அந்த முயல் அளவான குட்டிக் கரடி கேக். தேடுபவர்களுக்கு இலகுவாக.. டெடி கேக்! ;-)

தேவையாக இருந்தவை

கரடியனார் அச்சு :-)
ஃபொண்டன்ட் - ஒரு கொட்டைப் பாக்கு அளவு
வெள்ளைச் சீனி & பச்சை நிறம்
டூத் பிக்
பூக்கள் & இலைகளுக்கான அச்சுகள்
100's & 1000's
பட்டர் ஐஸிங்
சாக்லெட் சிப்ஸ் - ஒரு பிடி அளவு
பலட் நைஃப் - இல 1
ஸ்னாப் லொக் பை
கண்ணாடிக் கிண்ணம்
கரண்டி

கேக் - விரும்பிய கேக் கலவையை அச்சில் வேக வைத்து எடுக்கலாம். கேக்கை உதிர்த்து சிறிது ஜாம் கலந்து அதை அச்சில் இறுக்கமாக அடைத்து தட்டியும் எடுக்கலாம். என் விருப்பம் இதில் இரண்டாவது வகை தான். அளவுகள் நேரம், வெப்பநிலை எதைப் பற்றியும் கவலை இல்லை.

ஃபாண்டன்டைத் தேய்த்து பூக்கள் & இலைகளை வெட்டி, இறுக விடுங்கள். டூத்பிக்கைக் கொண்டு இலை நரம்புகளை வரைந்து கொள்ளலாம். உள்ளங்கையில் வெட்டிய பூவொன்றை வைத்து நடுவில் டூத் பிக்கின் தட்டையான பக்கத்தால் அழுத்திவிட, குழிவாக வரும். 100's & 1000's இலிருந்து விரும்பிய நிற மணி ஒன்றை எடுத்து பூவின் நடுவில் மகரந்தமாக வைத்து அழுத்தி விட வேண்டும்.

அரைத் தேக்கரண்டி அளவு பட்டர் ஐஸிங்கை தனியே எடுத்து வைக்க வேண்டும்.

சாக்லெட் ஐஸிங் - ஒரு மேசைக்கரண்டி சாக்லெட் சிப்ஸை கண்ணாடிக் கிண்ணத்திலிட்டு 20 செக்கன்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். வெளியே எடுத்து ஒரு கலக்குக் கலக்கி விட்டு, மீண்டும் 20 செக்கன்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். சாக்லேட் இளகி நன்கு கலக்க முடியும் போது (இந்த நிலையில் கிண்ணம் சூடாக இருந்தால் குளிர் நீர் கொண்ட பாத்திரத்தில் இறக்கி குளிர வைப்பது நல்லது.) 4 மேசைக்கரண்டி அளவு பட்டர் ஐஸிங் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். நிறம் - திருப்தியாக இல்லாவிட்டால் தேவைக்கு ஏற்ப சாக்லெட் சிப்ஸோ பட்டர் ஐஸிங்கோ கலந்து எடுக்கவும்.

தட்டில் கேக்கை வைத்து, பாலட் நைஃபால் மெல்லிதாக ஒரு படை ஐஸிங் பரவிக் கொள்ளவும். கரடியனார் அமைப்பு மாறிவிடாமல் சீராகப் பரவ வேண்டும். துகள்கள் பிரிந்து வந்தால் பொருட்படுத்த வேண்டியது இல்லை.

சற்று இறுக விட்டு, மீண்டும் ஒரு படை சாக்லேட் ஐஸிங் பூச வேண்டும். இதற்கு முன் செய்வதற்கு மூன்று சிறு காரியங்கள் உள்ளன.
1. பாலட் நைஃபைச் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
2. மீதம் உள்ள ஐஸிங் போதுமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
3. ஐஸிங் இளக்கமாக இல்லாவிட்டால், மைக்ரோவேவில் 10 செக்கன்கள் வைத்து எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். (இது... அளவையும் அவனையும் பொறுத்து மாறும்.)

இரண்டாவது பூச்சு பூசிய கையோடு, டூத்பிக்கினால் குட்டிக் கோடுகள் இழுத்தது போல வரைந்து விட்டால் ரோமம் வரைந்தாகி விட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம்... கோடுகளின் போக்கு.

செவிகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. வெளி வட்டம் மட்டும் வரைந்தால் போதும். மீதி இடங்களை வரைய வேண்டியதில்லை. பாதங்களும் அப்படியேதான். இந்தக் கரடியனார் உட்கார்ந்த நிலையில் இருந்தார். கால் ரோமத்தை மேல் நோக்கி இழுத்தேன். கைகளுக்கு - வளைத்து வரைந்தேன். முகம்... ஒவ்வொரு முறையும் மூக்கு நுனியிலிருந்து வெளி நோக்கி இழுத்தேன்.

இனி... தனியே எடுத்து வைத்த வெள்ளை ஐஸிங்கை ஸ்னாப் லாக் பையில் போட்டுக் கொண்டு, அதன் ஒரு மூலையை சின்..னதாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு, நகங்கள், கண், மூக்கு, வாய் வரைய வேண்டும். பிறகு மீசைக்கு சின்னதாகப் புள்ளிகள் வைத்தால் கரடியனார் முழு உருவம் பெற்று விட்டார். சொல்ல மறந்தேன்... ;) கண் விழிகளுக்கு ஒவ்வொரு கறுப்பு நிற மணிகளைப் பொறுக்கி வைக்க வேண்டும். 100's & 1000's - ல் பொருத்தமான நிறம் கிடைக்காவிட்டல், கடுகு இரண்டைப் பயன்படுத்தலாம்.

தட்டைச் சுத்தம் செய்து கொண்டு புல்லைப் பரவி பூக்களையும் இலைகளையும் வைத்தால் வேலை முடிந்தது.

புல்லுக்கான செய்முறை விளக்கம் காண -http://www.arusuvai.com/tamil/node/23576

~~~~~
கரடியனார் கண்ட பிறையைக் காட்ட இயலவில்லை.. முழு நிலவையாவது காட்டலாம்.. ;-)

இரண்டாவது படத்தில் ஒரு குட்டிமுயல் அச்சு தெரிகிறதா? அது சாக்லேட் அச்சு. வெள்ளை ஃபாண்டன்ட்டை அந்த அச்சில் அழுத்தி எடுத்து, காய வைத்தேன். வெளியே எடுப்பது சிரமமாக இருந்தது. வெள்ளை சாக்லெட் சிப்ஸை உருக்கி ஊற்றியிருந்தால் சுலபமாக இருந்திருக்கும் என்பது பின்பு வெளித்தது.

கேக்கை வட்டத் தட்டில் ஊற்றியிருந்தேன். நடுவில் பொங்கியிருக்க, அப்படியே வைத்து, இறுக்கமாகக் குழைத்த வெள்ளை பட்டர் ஐஸிங்கைப் பூசி பாலட் நைஃபால் கண்டபடி இழுத்துச் சுருட்டிவிட்டேன்.

நிலா நடுவில் முயல். இது... சில வருடங்கள் முன்பு, ஒரு நட்பின் பிறந்ததினத்தை ஒட்டி தயாரித்தது. நட்பு வேறு நாட்டிலிருக்கிறார்; பெயருக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருந்த காரணத்தால் சுலபமாக இந்த அலங்காரம். அந்த நட்பின் பெயரால் இந்தக் கேக், எம் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு அன்பளிப்பாகப் போய்ச் சேர்ந்தது. எங்கள் அதிபர் சொல்லுவார், 'எப்பொழுது ஒரு குடும்பத்திற்கு உணவுப் பொதி அனுப்புவதாக இருந்தாலும் அதனுள் குடும்பத்தின் சின்ன உறுப்பினர்களுக்காக ஒரு ட்ரீட் வைக்க வேண்டும். அல்லாவிட்டால் நாம் செய்வது பெரியவர்களுக்கான உதவியாக மட்டுமே இருக்கும்; பொதியைப் பிரிக்கும் சமயம் சின்னவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கக் கூடாது,' என்று.

5
Average: 5 (4 votes)

தக்காளி தளத்தளா

குண்டு தக்காளி

''குண்டு, குண்டு தக்காளி
சிவப்பு, சிவப்பு தக்காளி
தங்கமான‌ தக்காளி
தரமான‌ தக்காளி'' என்று கூவிக் கூவி , ஏலம் போட்டு தக்காளி விற்பார்கள். தாலி இல்லாத‌ கல்யாணமா? தக்காளி இல்லாத‌ சமையலா? என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

நமக்கு சமையலுக்கு அவசியம் தேவைப்படுவது தக்காளியும், வங்காயமும். இவைகளின் விலை வீழ்ச்சி அடைந்தால் பாவம் விவசாயிகள் என்று ஆதங்கம். விலை ஏறினால் பாவம் குடும்பத் தலைவிகள் என்று ஆதங்கம். ஆனால் தளத்தள‌ தக்காளியை பார்க்கும் போது தக்காளி சாம்பாரா?, தக்காளி குருமாவா? தக்காளி ஊறுகாயா? தக்காளி சாதமா? தக்காளி ரிச் புட் கிரேவியா? நு சிந்திப்பது சுகமான‌ சிந்தனை.

நாம் சுலபமாகவும், அவசரமாகவும் செய்வது தக்காளி சட்டினியே. இட்லி, தொசை, சப்பாத்தி, பூரிக்கு ஏன் எல்லா டிபன் ஐட்டத்திற்கும் ஏற்றது தக்காளி சட்டினியே. தக்காளி சட்டினி என்றால் அது பல‌ வகைப்படும். தக்காளி கடையல், தக்காளிக் குருமா, தக்காளி ஊறுகாய், தக்காளித் தொக்கு, தக்காளி வதக்கல், தக்காளி கிரேவி, தக்காளி சூப் கிரேவி என்று பல‌ விதம் இருக்கும்.

நாங்கள் தோழிகள் நால்வர். ஒரு நாள் பணி நிமித்தம் வேறு அலுவல‌
கத்திற்கு சென்றோம். மதிய‌ உணவு இடைவேளை. எல்லோரும் அவரவர் டிபன் பாக்ஸ் திறந்துக்கொண்டே ''நீ என்ன‌ உணவு கொண்டு வந்தாய்? உனது என்ன‌ சாதம்?, '' என்று கேட்க‌, எல்லோரும் கோரஸாக‌ ''தக்காளி சாதம்''' என்றோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். ஆனால் நான்கும் நான்கு விதம்.

தக்காளி சாதம் ‍‍___ 1

வாணலியில் எண்ணைவிட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம்தூள், கரிவேப்பிலை போட்டு வதக்கி, பொடியாக‌ நறுக்கிய‌ தக்காளி சேர்த்து வதக்கி தேவையான‌ உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி சாதத்தில் சேர்த்து கலந்து, கொத்தமல்லிதழையை பொடியாக‌ தூவி அலங்கரிக்க‌ வேண்டும். மிகவும் சுவையாக‌ இருந்தது.

தக்காளி பிரியாணி___2

குக்கரில் எண்ணை விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பூண்டு பேஸ்ட், இஞ்சி பேஸ்ட், வங்காயம், தக்காளி போட்டு தாளித்து தேவையான‌ தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்கும் போது அரிசி சேர்த்து, மூன்று விசில் வைத்து இறக்கவும். தயிர் பச்சடியுடன் சாப்பிட‌ மிகவும் சுவையாக‌ இருந்தது.

தக்காளி சாதம்___3

வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து தண்ணீர்சேர்க்காமல் அரைத்த‌ தக்காளி விழுதை சேர்த்து , அதில் கலப்பு இல்லாத் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க‌ வைக்க‌ வேண்டும். பச்சைவாசனை போக‌ கொதிக்க‌ விட்டு, நன்கு வறுத்து பொடித்த‌ கடுகுப் பொடியையும், வெந்தியப் பொடியை சிறிது சேர்க்கவும். இதை சாதத்தில் கலந்து தக்காளி சாதமாகும். இந்த‌ தக்காளி சாதத்துடன் வாழைக்காய் வறுவலுடன் சாப்பிட‌ நல்ல‌ சுவையாக‌ இருந்தது.

தக்காளி சாதம்____4

வாணலியில் தாரளமாக‌ எண்ணை விட்டு பட்டை கிராம்பு பொடியாக‌ சேர்த்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, பொடியாக‌ நறுக்கிய‌ வங்காயம் தக்காளியை விட்டு நன்கு வதக்கி வறுத்து பொடித்த‌ முந்திரி தூளை சேர்த்து, சிறிது தயிர் விட்டுக் கொதிக்க‌ விடவும். தேவையான‌ உப்பு மஞ்சள் தூள்சேர்க்கவும். நன்கு கொதித்து எண்ணை பிரிந்து கிரேவி தளத்தளவென்று இருக்கும் போது இறக்கிவிடவும். இந்த‌ கிரேவியை சாதத்துடன் கலந்தது ஒரு வகை தக்காளி சாதமாகும். இதை சிப்ஸ்வுடன் சேர்த்து சாப்பிட‌ மிகவும் சுவையாக‌ இருந்தது.
நாங்கள் சுவைத்து, அனுபவித்து சாப்பிட்ட‌ வகை வகையான‌ தக்காளி சாதத்தை நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் அறுசுவை சகோதரிகளே.

5
Average: 4.5 (12 votes)

கேட்காவிட்டாலும் தருவேன்

:-) "கேக்கு தா!" என்று யாரும் கேட்காவிட்டாலும் கேக் தருவேன். ;-)

எளிய இயந்திரங்கள் - இங்கு ஏழாம், எட்டாம் ஆண்டு மாணவர்களது விஞ்ஞான பாடத் தலைப்புகளில் ஒன்று. இலங்கையில் நான் கற்ற போதோ என் மகன் கற்ற போதோ இல்லாத விதமாக இருக்கிறது இங்குள்ள பாடத் திட்டம். இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப எல்லாமே மாற வேண்டி இருக்கிறது இல்லையா!

ஆனால் இந்தச் சில்லும் அச்சாணியும் மட்டும் என்றும் எங்கும் இருக்கும் என்று தோன்றுகிறது. தோற்றமும் தொழிற்பாடும் வேண்டுமானால் மாறலாம். சில்லுகள் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் இருந்திருக்கின்றன; மகாபாரத யுத்தத்தின் போதும் இருந்திருக்கின்றன; இன்றும் இருக்கின்றன. சுழலும் பூமி இருக்கும் வரை சில்லுகளும் சுழலும்.

விஞ்ஞான ஆசிரியரை நினைத்ததும் கேக்கிற்கு முதலில் நினைவு வந்தது சில்லும் அச்சாணியும்தான். :-) இவரது பிறந்தநாள் என்னுடையதற்கு முதல்நாள் வரும்.

இப்போ ஓய்வு பெற்று விட்டார் அவர். கலாநிதிப் பட்டம் பெற்றவர். முன்பு இங்குள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்திருக்கிறார். அவருக்குத் தெரியாத விடயங்களே கிடையாது. பலதும் கற்றவர்; உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். வயதின் காரணமாக விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்ட பின், சும்மா இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் பகுதி நேரம் வேலை பார்க்க நினைத்திருக்கிறார். சின்னவர்களோடு வேலை செய்யலாம் என்று தோன்றியிருக்கிறது.

அவரது வகுப்பு அத்தனை சுவாரசியமாக இருக்கும். ரசித்துக் கற்பிப்பார்; மாணவர்களும் ரசனையோடு கற்காமல் கற்பார்கள். தனியே விஞ்ஞானம் என்று மட்டுமில்லாமல் பாடத் தலைப்புடன் தொடர்பான பல விடயங்களையும் கதைகளாக எடுத்துச் சொல்லுவார். எப்படி அப்படி என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும். பாடத் திட்டம் எப்பொழுதுமே குறையில் இருந்ததில்லை. அந்ததக் காலத்திற்குள் முடித்திருப்பார். நிறைய விடயங்கள் அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். என்ன சந்தேகமானாலும் அவரிடம்தான் முதலில் கேட்கத் தோன்றும்.

இப்போ ஓய்வு பெற்றது கூட உண்மையில் ஓய்வு எடுப்பதற்காகவென்று இல்லை. :-) இன்றும் ஆசிரியர்கள் யாராவது சுகவீனமுற்றால் இவர் ரிலீவராக வருகிறார். இதைத் தவிர, Auckland Art Gallery இல் தொண்டு வேலையில் இணைந்திருக்கிறார். முதல் மூன்று மாதங்கள் அதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

இவர் போன்றவர்களோடு வேலை பார்த்த அனுபவம், எதிர்காலத்தைப் பற்றிச் சில திட்டங்களை என் மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஓய்வு + ரசிப்பு + மற்றவர்களுக்கு உபயோகம் = ஆரோக்கியமான மனம்! என் ஆசை நிறைவேறும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
~~~~~

ஒரு குட்டிக் கதை சொல்லிவிட்டு அதன் பின்பு கேக்கைப் பற்றிப் பார்க்கலாமா!

ஹாம்ஸ்டர் - வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கும் விலங்கு. அதை வாலில் பிடித்துத் தூக்கினால்... கண்கள் இரண்டும் பொத்தென்று கீழே விழுந்துவிடும். அந்த இடங்களில் இரண்டு குழிகள் மட்டும் இருக்கும். ;( ஆனால் ஒரு நல்ல விஷயம் - அந்தக் கண்களைப் பொறுக்கி மீண்டும் கட்குழியில் வைத்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும். ஆனால்... சிக்கல் என்னவென்றால்... இடது கண்ணை இடது குழியிலும் வலது கண்ணை வலது குழியிலும் சரியாக வைக்காவிட்டால் காரியம் கெட்டுவிடும். ;(

இந்தக் கதையை முதல் முதலாக கேட்க ஆரம்பிக்கும் போது சின்னதாக ஒரு சந்தேகம் வந்தது. இருந்தாலும் ஆசிரியர் முகத்தில் தெரிந்த தீவிரம்... தொடர்ந்து கேட்க வைத்தது. மாணவர்கள் எல்லோருமே வியப்பில் எல்லையில்... 'ஆ!!!' :-) ஹாம்ஸ்டரே வாயில் போகும். :-) கதை முடிந்த பின்னாலும் அவர்கள் அந்த நிலையிலிருந்து வெளியே வருவதாக இல்லை. மணி அடித்த போது ஆசிரியர் கேட்டார், "You all don't belive that story, do you!" சிலர், "ஆம்" என்றார்கள்; சிலர், "இல்லை" என்றார்கள்; சிலர் வௌவால் நிலையில் அரைக் கை உயர்த்தினார்கள். அடுத்த கேள்வி, "What does a hamster's tail look like? Does anyone know?" ;D உங்களுக்குத் தெரியும் இல்லையா! அதற்குத் தான் வாலே இல்லையே! :-) ஒவ்வொரு வருடமும் ஏழாம் ஆண்டுச் சிறார்களுக்கு இந்தக் கதையைச் சொல்லுவார். சின்னவர்களது உணர்ச்சிகள்... எப்படி இருந்தாலும் ரசிக்கலாம். :-)

[ட்ரேஸி:- என்னை ஹம்ஸ்டர் என்று நினைக்காதைங்க, வால் இருக்கிறது தெரியுதா! :-)
அப்போ படிக்கட்டுப் பகுதிக்கு பெய்ண்ட் அடித்துவிட்டுக் காபட் போட்டிருந்தோம். கொஞ்சம் தொட்டுவைக்க இருந்தது. எங்களுக்கு மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கும் குணம். :-) ஏறி மூக்கை மூக்கை ஆட்டி வாசனை பிடிக்கிறார்.]

~~~~~

சில்லும் அச்சாணியும் கேக்

கேக்கை மூடி நட்சத்திரங்கள் (ஸ்டார் நொஸில் இல - 27) வைத்தேன்.
சில்லும் அச்சாணியும் வரைந்தது, 'க்லிட்டர் ரைட்டிங் ஜெல்' கொண்டு.
பொருத்தமாக நீல நிறத்தில் மெழுகுவர்த்தி.

'மிக எளிமையாக இருக்கிறதே! வேறு ஏதாவது யோசித்துச் செய்திருக்கலாம்,' என்று உள்ளே சின்னதாக ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், இந்தக் கேக்கைப் பெற்றவர்தான் எல்லோரையும் விட கேக்கை அதிகம் ரசித்தவர். "I want my wife to see this. Am I allowed to take this home for our tea!" என்று கேட்டதும் மனது சட்டென்று இலகுவாகிற்று. அவரைத் தொடர்ந்து மீதி நட்புகளும் கேக்கை வீட்டிற்கு எடுத்துப் போகக் கேட்டார்கள்.

சின்னச் சின்னச் சந்தோஷங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது எம்மையறியாமல் எமக்கே பெரிய சந்தோஷங்களைக் கொடுத்துக் கொள்கிறோம் இல்லையா!

அந்த ஆசிரியரின் ஓய்வு எங்கள் பாடசாலைக்கு ஓர் பெரிய இழப்பு; எனக்கும் தான். ;(

5
Average: 5 (3 votes)

கேக்கு...தா!!

எப்போதோ படித்த ஜோக் ஒன்று...
மைக் மோகனுக்கு கேக் சாப்பிடும் ஆசை வந்தால் எப்படிக் கேட்பார்!!

மலையோரம் வீசும் காற்று...
மனசோடு பாடும் பாட்டு...
கேக்கு தா! கேக்கு தா! :-)

எங்கள் பாடசாலையில் ஒவ்வொருவர் பிறந்தநாள் அன்றும் காலைத் தேநீர் வேளையின் போது சின்னதாக ஒரு தேநீர் இருக்கும். ஒவ்வொருவர் சமையலில் சிலது எல்லோராலும் விரும்பப்படுபவை இருந்தன. அருட் சகோதரர் ஒருவர் நன்றாக மஃபின் செய்வார். சில சமயம் அஸ்பராகஸ் ரோல் கொண்டு வருவார். (அஸ்பராகஸ் ரோல் எனக்கு மிகவும் பிடிக்கும்.) ஒருவர் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாக - கரட், செலரி, குடமிளகாய்த் துண்டுகளோடு layered dip கொண்டு வருவார். எங்கள் பகுதித் தலைவர் கேக் கொண்டு வருவார். ஒருவர் எப்பொழுதுமே சாசேஜ் ரோல்ஸ் கொண்டுவருவார். (எண்பதைச் சமீபித்தவர். சேல் போகும் போது வாங்கி ஃப்ரீஸரில் அடுக்கிவிடுவாராம். அவசரத்திற்கு எடுத்து வெட்டி பேக் செய்தால் போதும். இயலாவிட்டால்!! ;) பாடசாலைக்குக் கொண்டு வந்து வெட்டி பால் பூசி அவனில் போட்டுவிடுவார்.)

கட்லட், ஜக்கட் பொட்டேட்டோஸ், பட்டீஸ், பேஸ்ட்ரி வீல்ஸ் என்று என் சமையல் மாறும். சுவை வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் நான் எதைக் கொண்டு போனாலும் அங்குள்ளவர்களுக்குப் பிடிக்கிறது. (வெள்ளையர் சிலர் நான் சாப்பிடுவதை விடக் காரமாகச் சாப்பிடுவார்கள்.) அதோடு கேக்குக்கான பூக்கள் இலைகள் செய்து எடுத்துப் போவேன். பாடசாலையில் ஒரு பெட்டியில் கேகுக்கான சின்ன மெழுகுவர்த்திகள், அவற்றுக்கான பூ வடிவ சொருகு குச்சிகள், பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் இருக்கும். பகுதித் தலைவர் கொண்டு வரும் கேக்கை அலங்கரித்து விடுவேன்.

எங்கள் சிலருக்கு கோடை விடுமுறையின் போது பிறந்தநாள் வருவதால் இந்தச் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களுக்குக் கொடுப்பினை இல்லை. என் ஐம்பதாவது பிறந்தநாள் வந்த வருடம் பாடசாலை வருடம் ஆரம்பித்த அன்று யாரிடமும் சொல்லாமல், நானே ஒரு சின்ன விருந்து தயார் செய்து எடுத்துப் போனேன். கூடவே... விடுமுறையில் விடுபட்டுப் போவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டி கேக் ஐஸ் செய்து எடுத்துப் போனேன். எல்லோரும் ஒரே சமயம் (வெட்டாமல்) வெட்டிக் கொண்டாடினோம். :-) அது எப்படியென்றால்... ஒவ்வொரு கேக்கிலும் ஒரு மெழுகுவர்த்தி - எரித்து, பாடி, கை தட்டி, வர்த்தியை அணைத்து... பொதுவாக பெரியதொரு கேக்கை வெட்டிச் சாப்பிட்டோம். அவரவர் தன் கேக்கை வீட்டிற்கு எடுத்துப் போனார்கள்.

மினி கேக் - ஒரு பெரிய தட்டில் கேக்கை பேக் செய்து எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக வெட்டினால் அவை மினி கேக்குகள் தானே! :-)

குட்டித் தட்டுகள் வேண்டுமே! சீடீக்கள் சிலவற்றில் kitchen foil சுற்றி ஒட்டினேன். இதில் இன்னொரு வசதி இருந்தது. பாடசாலைக்கு எடுத்துப் போக வசதியாக, உயரமான ப்ளாஸ்டிக் கிண்ணங்களைக் கொண்டு கேக்கை மூடி செலோடேப் போடக் கூடியதாக இருந்தது.

கேக்கை ஒரே அளவாக வெட்ட கட்டர் வேண்டுமே! Electric can opener கொண்டு ஒரு தகரப் பேணியை வெட்டிக் கொண்டேன். உள்ளே இருந்த தேங்காய்ப் பாலை ஒரு கண்ணாடிப் போத்தலுக்கு மாற்றிக் கொண்டு, பேணியைக் கழுவித் துடைக்க அருமையான கட்டர் கிடைத்தது. சில கேக்குகளை வெட்டும் போது பேணியை ஒரு இடத்தில் சற்று அதிகமாக அழுத்திவிட்டேன்; சரிந்தது போல் வந்திருந்தன.

ஐஸ்சிங் பூசும் முன் கைகளைக் கழுவிக் கொண்டு, ஒரு கேக்கைச் சுற்றிலும் ஈரக் கையால் ஒற்றி எடுத்தேன். தயாராக இருந்த ஒரு சீடீ தட்டின் மத்தியில் சிறிது ஐஸிங் தடவி வைத்தேன். கேக்கைச் சுற்றிலும் ஐஸிங் பூசிய பின் சீடீயில் வைத்து விட்டு, அடுத்த கேக் வேலையையை ஆரம்பித்தேன்.

இப்படியே crumb coating உடன் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு கேக்குகள் அனைத்தும் தயாராகின.

இந்த இடுகையில்... பூந்தோட்டச் சொந்தக்காரியான சாசேஜ் ரோல் மேக்கருக்காகத் தயாரித்தது பற்றி:- :-)

இரண்டாவது தடவை ஐஸிங் பூசும் சமயம், கை போன போக்கில் ஐஸிங்கை ஒற்றி ஒற்றி எடுத்திருந்தேன்.

இனி... இடுகையிலுள்ள முதலாவது படத்தைப் பார்க்க வேண்டும். :-)

முன்பு முயல் கேக்கிற்குப் பயன்படுத்திய அதே பூ அச்சைக் கொண்டு பூக்களை வெட்டியிருக்கிறேன். http://www.arusuvai.com/tamil/node/32768
மகரந்தம் & கேக்கின் அடியில் கரையாக - 100's & 1000's
இலைகள் - பச்சை நிறம் சேர்த்த பட்டர் ஐஸிங் (நொஸில் இல - 27)
காம்புகள் - பச்சை நிற பட்டர் ஐஸிங் (நொஸில் இல - 2)
சற்றுச் சரிவாக வெட்டிவிட்டேன் என்றேனில்லையா! உயரமான பக்கம் பின்னால் வரத் தக்கதாக வைத்து, பூக்களை முன்னோக்கி வைத்தேன். பிழை திருத்தப்பட்டுவிட்டது. :-)
இறுதியாக, பச்சை நிற மெழுகுவர்த்தியொன்றைச் சொருகினேன்.

மீதிப் படங்கள் கண்ணில் பட்டால் அடுத்த இடுகை இதே தலைப்பில் தொடரும்.

5
Average: 4.8 (5 votes)

என் இனிய முயலே!

இன்று உயிர்ப்பின் திருநாளைக் கொண்டாடுவோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

முயலுக்கும் உயிர்ப்பும் என்ன தொடர்பு!! நத்தாருக்கு சன்டா போல ஈஸ்டருக்கு முயலார்.

என் இன்றைய இடுகையின் நோக்கம் முயலார் கதையைச் சொல்வதல்ல. ஒரு குட்டி முயல் கேக் - இதை... சமையற் குறிப்பு என்பதை விட கேக் அலங்காரத்திற்கான செயல்முறைக் குறிப்பு என்று கொள்ளலாம். இந்தக் குட்டி கேக் கையளவுதான் (10 செ.மீ) இருக்கும். பார்க்கவே தெரியும்... ஒரு saucerஇல் இருக்கிறது என்பது.

தேவையானவை

முயல் அச்சு
ஃபொண்டன்ட் - ஒரு பிடி அளவு

வெள்ளைச் சீனி
பச்சை நிறம்
சிவப்பு நிறம்
மெல்லிய ப்ரஷ் / டூத் பிக்
பூக்கள் & இலைகளுக்கான அச்சுகள்
100's & 1000's
பட்டர் ஐஸிங்
ஸ்டார் நொஸில் (இல 27) - (உடலுக்கு)
இலை நொஸில் (இல 68 )- (செவிக்கு)
ரைட்டிங் நொஸில் (இல 2) - (மீசைக்கு)
பலட் நைஃப் இல 1
ஸ்னாப் லொக் பை

விருப்பமான கேக்கை அச்சில் வேக வைத்து எடுக்கலாம். கேக் பொப்ஸுக்குச் செய்வது போல கேக்கை உதிர்த்துத் தயார் செய்து அச்சில் இறுக்கமாக அடைத்து தட்டியும் எடுக்கலாம். இதில் இரண்டாவது சுலபம். அச்சு சிறியதாக இருப்பதால் ஒரு கணக்கு வைத்து வேக வைத்துப் பதமாக எடுப்பது எல்லாச் சமயங்களிலும் சரிவருவது இல்லை. எங்காவது மேடாக உள்ள இடத்தில் சற்றுத் தீய்ந்து போனால் சுரண்டவும் இயலாது.

இதற்கு ஐஸிங் அதிகம் தேவை வராது என்பதால் கிண்ணக் கணக்கோ நிறுவை அளவுகளையோ பின்பற்றவில்லை. இரண்டு மேசைக்கரண்டி மாஜரினில் சிறிது சிறிதாக அரித்த ஐஸிங் சீனியைச் சேர்த்துக் குழைத்து சில துளிகள் பாலும் சேர்த்துக் கலந்து பைப்பிங் பையில் நிரப்பிக் கொள்ளுங்கள். ஐஸிங் பதம்... எப்பொழுதும் போல, கரண்டியை வைத்து உயர்த்தினால் ஐஸிங் கூம்பாக எழுந்து நிற்க வேண்டும்.

மூன்று மேசைக்கரண்டி அளவு சீனியை பையில் போடவும். சில துளிகள் பச்சை நிறம் சேர்த்து, பையை அழுத்தி மூடிக் கையால் கலக்கினால் சீனியில் பச்சை நிறம் தொற்றிக் கொள்ளும். முள்ளெலி கேக் டெகரேஷன் குறிப்பில் விளக்கம் படங்களுடன் காணக் கிடைக்கும். http://www.arusuvai.com/tamil/node/23576

தட்டில் முயல் கேக்கை வைத்து, ஐஸிங்கை மெல்லிதாக முயலின் மேற்பரப்பு முழுவதும் கேக் மறையும் விதமாகத் தடவி விட வேண்டும். அச்சினால் கிடைத்த வளவுகள், மேடு பள்ளங்கள் ஐஸிங் வைப்பதனால் மறைந்து விடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு நட்சத்திரங்களைப் பைப் செய்து விடுங்கள். முன்னங்கால் & வாலுக்கு - தேவையான வடிவம் கிடைக்கும் வரை மேலே மேலே சின்னச் சின்ன நட்சத்திரங்களாக அழுத்த வேண்டும். ஒரேயடியாக பெரிய நட்சத்திரமாக வைக்கலாம் என்று நினைத்து அழுத்தினால் கெட்டுவிடும். மூக்கையும் சரி பார்த்துவிட்டு...

நொஸிலை (இலக்கம் 1) மாற்றி மாட்டிக் கொண்டு மீசையை வரையவும்.

இலை நொஸிலை மாட்டி கழுத்திலிருந்து மேல் நோக்கிக் கூராக வருமாறு இழுத்தால் செவி. இரண்டு தடவைக்கு மேல் வைக்க வேண்டாம்.

கண் - சிவப்பு நிறத்தை ப்ரஷ் அல்லது டூத்பிக்கினால் தொட்டு வரைந்துகொள்ளலாம்.

ஃபாண்டன்ட்டில் பூக்கள் இலைகளை வெட்டிக் கொள்ளுங்கள். இலைகளுக்கு நரம்புகள் - டூத்பிக்கினாலேயே அழுத்தி வரைந்துகொள்ளலாம். உள்ளங்கையைக் குவித்து, அதில் வெட்டிய பூவொன்றை வைத்து அதன் மத்தியில் ப்ரஷ் பின்பக்கத்தால் அழுத்தினால் அமைப்பாக வரும். 100's & 1000's இலிருந்து விரும்பிய நிற மணி ஒன்றை இடுக்கியினால் எடுத்து நடுவில் வைத்து அழுத்தி விடுங்கள்.

இனி பச்சைச் சீனியை முயலின் மேல் கொட்டாமல் கவனமாக சுற்றிலும் பரவி, இலைகளையும் பூக்களையும் வைத்துவிட்டால் வேலை முடிந்தது.

முயல் அச்சுக் கிடைக்காவிட்டால்!! தட்டையான கேக்கை, செதுக்கி முயல் வடிவம் கொண்டு வர வேண்டும். வெட்டிய பகுதிகள் ஐஸிங் பூசும் போது சற்று உதிரலாம். கையை நனைத்து உதறிக் கொண்டு வெட்டப்பட்ட இடங்களின் மேல் வைத்து நனைத்துவிட்டால் பிறகு உதிராது. க்ரம்ப் கோட்டிற்கு மேல் நட்சத்திரங்கள் வைப்பதால் கேக் துகள்கள் பிரிவது கேக்கின் அழகை எந்த விதத்திலும் பாதிக்காது.

இங்கு இது நீண்ட வார இறுதி. பெரிய வெள்ளி முதல் Easter Tuesday வரை விடுமுறை. நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கிறேன்.

Average: 5 (1 vote)

சிறுதானிய‌ தீபாவளி

தீபாவளி தலைப்புல‌ சொன்னதுல‌ என்ன‌ புதுசு இருக்கு. இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லக் கூடாது. அதுக்காக தான் இந்த‌ வலைப்பதிவு. முறுக்கு அதிரசத்தையே சிறு தானியத்துல‌ செய்ய‌ கத்து தரேன். கூடவே அல்வாவும். இது நமக்கு சிறுதானிய‌ தீபாவளியா இருக்கட்டும்.

1. வரகரிசி முறுக்கு:

1. 1/2 கிலோ வரகரிசி, 100 கிராம் பாசி பருப்பு, 100 கிராம் கடலைப் பருப்பு, 50 கிராம் உளுந்து இவற்றை லேசாக‌ வாணலில் வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
2. இந்த‌ மாவில் 50 கிராம் வெண்ணெய், எள் 2 ஸ்பூன், சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான‌ சத்தான முறுக்கு ரெடி.
குறிப்பு: இதை நமக்கு இஷ்டமான‌ மற்ற‌ அரிசியிலும் செய்யலாம். கேழ்வரகிலும் செய்யலாம்.

2. சாமை தினை அதிரசம்:

1. சாமை 1/2 கப், தினை 1/2 கப் இரண்டையும் 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக‌ அரைக்கவும்.
2. 1/2 கப் வெல்லத்தை மிக‌ சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பிடிக்கவும். (பாகு உருட்டு பதம் இருக்க‌ வேண்டும். உருட்டு பதம் என்றால் ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் போட்டு பின் அதை எடுத்து உருட்டும் அளவுக்கு வர‌ வேண்டும்)
3. இந்த‌ உருட்டு பதத்தில் அரைத்த‌ மாவை சேர்த்து கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து அப்படியே 2 நாளைக்கு புளிக்க‌ விட‌ வேண்டும்.
4. பின் எண்ணை தடவிய‌ வாழை இலையில் அதிரசமாக‌ தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க‌ வேண்டும்.

3. கம்பு கேழ்வரகு அல்வா:

1. கம்பு 250 கிராம், கேழ்வரகு 250 கிராம் இரண்டையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பாலெடுக்கவும்.
2. 250 கிராம் வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
3. அடிகனமான‌ கடாயில் பிழிந்து வைத்திருக்கும் பாலை ஊற்றி பச்சை வாடை போக‌ நன்கு கிளறவும்.
4. பின் வடிகட்டிய‌ வெல்ல‌ பாகை இதனுடன் சேர்த்து 1 ஸ்பூன் ஏலப்பொடி, மற்றும் 150 கிராம் நெய் விட்டு கைவிடாமல் கிளறி அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்த‌ முந்திரி சேர்த்து இறக்கவும்.

இன்னும் ஏதாவது வேணும்னா கேளுங்க‌ அடுத்த‌ வலைபதிவு போட்ருவோம்.

பலகாரம் தயார். அப்றம் என்ன‌? சூப்பரா தீபாவளிய‌ கொண்டாட‌ வேண்டியதுதான். சந்தோஷமா பட்டாசு வெடிங்க‌. முடிந்த‌ வரை பட்டாசில் காசை கரியாக்கமல், பட்டாசு செலவை குறைத்து அந்த‌ பணத்தை இல்லாதவர்க்கு கொடுக்கலாமே. எனக்கு கருத்து சொல்லலாம் வராது. அப்டியே கருத்து சொன்னாலும் கலாய்க்கறதுக்குனே சிலர் இருப்பாங்க‌. போதும். நான் சொல்ல‌ வந்தது இது தான். மறக்காம‌ 6 மணிக்கு முன்னாடி வெந்நீரில் குளிங்க‌. நல்லெண்ணை சீயக்காய் தேய்க்க‌ மறக்காதீங்க‌. அம்புட்டு தே. WISH YOU A ADVANCE HAPPY DIWALI

5
Average: 4.8 (5 votes)

தீபாவளி

அனைவருக்கும் முன்னெடுக்க‌ (advance) தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை நாம் தீபஒளி திருநாள் என்கிறோம். தமிழ்நாட்டை பொருத்தவரை நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக‌ கொண்டாடுகிறோம். அன்றைய‌ பொழுதில் லட்சுமி ஆனவள் தீபத்தினுள் அமர்ந்திருப்பாள். ஆகவே தீபத்தை வீடெங்கும் ஏற்றி தீப‌ ஒளி வீடெங்கும் நிறைந்திருக்க‌ தீபத்தின் மூலம் அம்பாளை வழிபட‌ வேண்டும். இது எல்லாருக்குமே தெரிந்த‌ ஒன்று.

தீபாவளி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, புது துணி, பலகாரங்கள், புதுபடம் ரிலீஸ். (ஆனா இப்போ விளம்பரத்துல‌ நகை எடுங்கனு சொல்றாய்ங்க‌, டிவி ஃப்ரிட்ஜ் வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, அறைகலன் (furniture) வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, இதுலாம் பரவாயில்ல‌ இதெல்லாம் ஆன்லைன்ல‌ ஷாப்பிங் பண்ணுங்கனு சொல்றாய்ங்க‌. அவங்கள‌ இவங்க‌ கலாய்க்கிறாங்க‌. இவங்கள அவங்க‌ கலாய்க்கிறாங்க‌. என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்கய்யா) இது ஒரு புறம் இருக்க‌ எனக்கு இப்போது நினைவுக்கு வருவது என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த‌ ஒரு முக்கியமான‌ விஷயம். தீபாவளியை எப்படி தொடங்க‌ வேண்டும் என்று. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள‌ ஆசைப் படுகிறேன்.

குளியல்:

கொஞ்சம் கஷ்டமான‌ வேலை தான். நாமும் கொஞ்சம் சிரத்தை எடுப்போம். சாதாரண நாட்க‌ளில் ப்ரம்ம‌ முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 முதல் 6 மணி வரையிலான‌ நேரத்தில் குளிர்ந்த‌ நீரில் குளித்து விட‌ வேண்டும். ஆனால் தீபாவளி அன்று அந்த‌ ப்ரம்ம‌ முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி சீயக்காய் நல்லெண்ணையை வைத்து பூஜை செய்து விட்டு வீட்டில் உள்ள‌ அனைவரும் அந்த‌ நல்லெண்ணையும் சீயக்காயும் தலையில் வைத்து தேய்த்து 6 மணிக்குள்ளாக‌ வெந்நீரில் குளிக்க‌ வேண்டும்.

நாம‌ தினமும் பச்ச‌ தண்ணில‌ குளிக்க‌ கஷ்டப்படுவோம்னு தீபாவளி அன்றைக்கு மட்டுமாவது வெந்நீரில் குளிக்க‌ தேவியானவள் நமக்காக‌ நாராயணனிடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறாள். ஹூ ஈஸ் தட் தேவி & நாராயணன் னுலாம் கேள்வி கேட்க‌ கூடாது. கருத்து சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

அப்றம் என்ன‌? இட்லி, வடை, தீபாவளி பலகாரம், பட்டாசு, புது துணினு எல்லாம் வெச்சி பூஜை செய்துட்டு பட்டாசு வெடிச்சி புது துணி உடுத்தி தீபாவளிய‌ கொண்டாட‌ வேண்டியது தான். நம்ம‌ பலகாரம் மத்தவங்க‌ வீட்டுக்கு கொடுத்து, அவங்களோடத‌ நாமும் உண்டு, உறவினர் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கூடி மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடலாம். (இப்போலாம் யார் உறவினர் வீட்டுக்குலாம் போறோம். டிவி தான் நம் உறவினர் மாதிரி டிவி முன்னாடியே உக்காந்துடறோம்.) அம்புட்டு தானானு கேக்க‌ கூடாது. தீபாவளி போனஸா கொஞசம் ஈஸியான‌ விசேஷமான‌ பலகாரம் சொல்லி தரேன்.

முறுக்கு:

1. பச்சரிசி 1 கிலோ வாங்கி கழுவி ஈரத்துடன் மெஷினில் கொடுத்து அரைக்கவும். (முறுக்குக்கு என்று சொல்லி அரைக்கவும்). பின் இதை வாணலில் போட்டு தீயவிடாமல் நன்கு வறுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். இப்படி செய்வதால‌ முறுக்கு வெள்ளையாகவே வரும்.
2. இது கஷ்டம் என‌ எண்ணுபவர்கள் பச்சரிசியை கழுவி நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. இந்த‌ அரிசியில் நான்கில் ஒரு பங்கு பொட்டுகடலை மாவு சேர்த்து (1 கிலோ அரிசிக்கு கால் கிலோ பொட்டுகடலை மாவு), ஒரு கைப்பிடி எள், 50 கிராம் வெண்ணெய் சேர்க்கவும்.
4. 1 மூடி தேங்காயை எடுத்து கட்டியாக‌ பால் பிழிந்து திரியவிடாமல் சூடேற்றி ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து அரிசி மாவுடன் சேர்த்து நன்கு பிசையவும். கட்டியாகவும் இருக்க‌ கூடாது. மிகவும் தளர்வாகவும் இருக்க‌ கூடாது. (தளர்வாக‌ இருந்தால் எண்ணை குடிக்கும்). இடியாப்ப‌ மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
5. இதை முருக்கு அச்சில் போட்டு மீடியம் சூட்டில் ஒரே தீயலில் வைத்து பொரித்து எடுக்கவும்.

2. அதிரசம்:

1. 1 கிலோ பச்சரிசியை நன்கு கழுவி ஈரமாகவே மெஷினில் கொடுத்து அதிரசத்திற்கு என்று அரைத்துக் கொள்ளவும்.
2. 1/2 கிலோ வெல்லம் (அ) சர்க்கரையுடன் 100 கிராம் தண்ணீர் சேர்த்து பாகு பிடிக்கவும். (பாகு உருட்டு பதம் இருக்க‌ வேண்டும். உருட்டு பதம் என்றால் ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் போட்டு பின் அதை எடுத்து உருட்டும் அளவுக்கு வர‌ வேண்டும்)
3. இந்த‌ உருட்டு பதத்தில் அரிசி மாவை சேர்த்து கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து அப்படியே 2 நாளைக்கு புளிக்க‌ விட‌ வேண்டும்.
4. பின் எண்ணை தடவிய‌ வாழை இலையில் அதிரசமாக‌ தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க‌ வேண்டும்.

இதுல‌ என்ன‌ புதுசு இருக்கு? இதான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லாதீங்க‌. அடுத்த‌ வலைபதிவில் இதையே சிறுதானியத்தில் செய்யலாம் வாங்க‌.

Average: 5 (1 vote)

அந்த‌ ஏழு நாட்கள்.

சுந்தரி ஐந்து நாள் போராட்டத்தை அழகாய் முடித்த‌ எனர்ஜியுடன் ஆறாம் நாள் மெனுக்கு யோசிக்கலானாள். யோசித்து, யோசித்து மூளையே தேய்ந்துவிட்டதுப் போல் இருந்தது. எங்கெங்கு நோக்கினும் பூரியும்+ சைடிஷுமாகவே கண்ணிற்கு தெரிந்தது. என்னடா நமக்கு வந்த‌ சோதணை என்று எண்ணி சோகமாக‌ வலம் வரும் மனையாளைப் பார்த்தான் கணவன். எதோ நம்மால் முடிந்த‌ உதவி என்று, நுரை ததும்பிய‌ சூடான‌ ஒரு டம்ளர் பில்டர் காபியை '''கார்த்தி, காஜல் அகர்வால்'''விளம்பரம் போல் காதலுடன் சுந்தரியிடம் கொடுத்தான். நன்றி பார்வையுடன் காபியை பருகலானாள் சுந்தரி. மாமியார் தன்னிடம் பொங்கல் கொத்சுக்கு வெங்காயம் நறுக்கட்டுமா என்று கேட்டவுடன் ;;;ஐடியா;;; என்று குதிக்கலானாள் சுந்தரி. இன்று ;வெங்காய‌ கொத்சு''''தான் சைடிஷ் என்றாள். நான்கு வெங்காயத்தை தோலுரித்து நறுக்கினாள். பூண்டையும் தோல் நீக்கி உரித்தாள். மிளகாயின் காம்பு நீக்கினாள். எல்லாத்தையும் எண்ணையில் வதக்கினாள். அதனுடன் தேவையான‌ உப்பு சேர்த்து அரைத்து எடுத்தாள். வாணலியில் எண்ணைவிட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் இட்டு தாளித்து அதனுடன் அரைத்த‌ வெங்காய‌ கலவையை சேர்த்து சுருள‌ வதக்கினாள். பூரியுடன் , வெங்காய‌ கொத்சுடன் டிஸ்பிளே செய்தாள். பாபு நமட்டுச் சிரிப்புடன் பூரியையும், வெங்காய‌ கொத்சுவையும் சாப்பிட்டான். தன்னையே கவனித்து வரும் குடும்பத்தினரை பார்த்தான். தன் தாயிடம் ''NOT BAD, BUT JUST PASS ''' என்றான். சுந்தரியின் முகம் சோர்ந்தது.

ஏழாம் நாள்__‍ பூரி+ காராபூந்தி குருமா.

பாரதப் போர் குருஷேத்திரத்தில் 18 நாட்கள் நடந்தது என்பது வரலாறு. பூரியின் போர் ஏழு நாட்கள் நடப்பதே நமது வரலாறு. ஐந்து நாள் வெற்றிக்குப் பிறகு ஆறாம் நாள் பின்னடைவு சுந்தரிக்கு பெரிய‌ கவலையாக‌ இருந்தது. வெற்றியா? தோல்வியா? என்பதே அவளது கவலை. எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள். ''காரா பூந்தி குருமா''வை மிகவும் கவனத்துடன் தயார் செய்யலானாள். தேங்காய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி விதையை எண்ணையில் வதக்கினாள். மக‌ நைசாக‌ அரைத்தாள். அதில் மஞ்சள் தூள், உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கினாள். வாணலியில் எண்ணையை விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்தாள். அதனுடன் அரைத்த‌ மசாலா கலவையை கொட்டி நன்கு கொதிக்க‌ வைத்தாள். காராபூந்தியை கொதிக்கும் குருமாவில் போட்டு கலக்கினாள். [[காரா பூந்தி என்பது லட்டுக்கு போடும் உதிர் பூந்தி, ஆனால் காரமாக‌ இருக்கும், ஸ்வீட் கடையில் கிடைக்கும்]]]]. குருமா மணக்க‌, மணக்க‌ கொதித்து வாசனை தூள் கிளப்பியது. நேற்று ஜஸ்ட் பாஸ் நு கவலையுடன் மதிப்பெண் கொடுத்த‌ மகனைப் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. கடைசி தேர்வு என்றாலே எல்லோருக்கும் ஒரே சந்தோஷமாக‌ இருக்கும் இருந்தாலும் இந்த‌ கடைசி தேர்வினை சரியாக‌ செய்து விட‌ வேண்டுமே என்ற‌ கவலையும் இருக்கும். இதுதான் இருதலைக்கொள்ளி எறும்புப் போல் என்ற‌ நிலை. அந்த‌ நிலையில் தான் இருந்தாள் சுந்தரி. பாபுவும் ஒரு பெரிய‌ மனிதன் தோரனையுடன் பந்தாவாக‌ வந்து அமர்ந்து சாப்பிடலானான். சுந்தரியோ முகமலர்ச்சியுடன் சந்தோஷமாக‌ இருப்பதுப் போல் காட்டிக்கொண்டாள். ஆனால் அவள் மனசோ டென்ஷனாக‌ இருந்தது. தாத்தா, பாட்டி, தந்தை, தாய் எல்லோருமே பரபரப்பாக‌ இருந்தார்கள். பாப்பா மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தை அல்லவா அது கவலை இல்லாமல் சிரிக்குது. டெலிஷியஸ், டேஸ்ட் குருமாவை ரசித்து, ருசித்து சாப்பிட்டான் மகன்.
தன் தாயின் அருகில் வந்த‌ மகன், தன் தாயைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். தன் தாயைத் தூக்கி தட்டாமாலை சுற்றினான். இங்கும் அங்கும்
பரபரவென்று ஓடினான். தன் தாயின் கையைப் பிடித்து,''YOU ARE SO SWEETMAA. YOU ARE A BUNDLE OF JOY MAA. YOU CARE FOR MY HAPPY MAA. NOW I AM VERY PROUD OF YOU MAA. I LOVE YOU SO MUCH AND I LIKE YOU VERY MUCH. LOT OF THANKS MAA;;; என்று ஆரவாரமாக‌ ஆனந்தக் கூத்தாடினான். தன் கையால் தானே செய்த‌ ''my
family kitchen Queen''என்னும் கீரிடத்தை தன் தாய்க்கு சூட்டினான். மாமியாரும், மாமனாரும் சுந்தரி கைக்கு வளையல் போட்டு, கைக் குலுக்கினர். கணவன் தன் பங்குக்கு பட்டுப் புடவையை பரிசளித்து அவள் கையில் முத்தமிட்டான். சுந்தரிக்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடியது. தானும் தன் குடும்பத்தினற்கு ஹைபை கொடுத்து குதுகலத்தை கொண்டாடினாள்.
இந்த‌ கதையில் இருந்து நான் தெரிந்துக் கொண்ட‌ நீதி_____ பெண்கள் தம் குடும்பத்தில் உள்ள‌ அனைவரையும் தம்பக்கம் ஜால்ரா போட‌ வைப்பதற்கு ஒரே சாய்ஸ் சுவையான‌ உணவு மட்டுமே'''

5
Average: 4.3 (3 votes)